Saturday, August 18, 2012

திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்ட தீர்மானங்கள்


  • சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக! 
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம்!
  • டெசோ மாநாட்டுத் தீர்மானங்களுக்கு வரவேற்பு!
  • அடுத்த கட்ட செயல்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம்!
திராவிடர் கழகத்தின் தீவிரப் பிரச்சாரத் திட்டம்!
சிறப்புத் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்
திருச்சி. ஆக.18- திராவிடர் கழகத்தின் தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள் உட்பட பதி னொரு முக்கிய தீர்மானங்கள் திருச்சிராப் பள்ளியில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
18-8-2012 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, திருச்சிராப்பள்ளி புத்தூர் பெரியார் மாளிகை டி.டி.வீரப்பா நினைவரங்கில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் தலைமை யில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள்.
இரங்கல் தீர்மானம் 1 : (3ஆம் பக்கம் காண்க)
தீர்மானம் எண். 2 :   புலம் பெயர்ந்துள்ள அகதிகளின் நல்வாழ்வு
முன்மொழிந்தவர்:  கி.வீரமணி,                        தலைவர், திராவிடர் கழகம்.
(அ)  இலங்கை அரசின் இனப்படுகொலை காரண மாகவும் அங்குள்ள சிங்களப் பேரினவாத அரசின் ஈழத் தமிழரின் வாழ்வுரிமைப் பறிப்பு காரணமாகவும், புலம் பெயர்ந்து தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டின் இதர பூபாகங்களுக்கும் அகதிகளாய் அரசுகளால் புகலிடம் தந்து பராமரிக்கப்பட்டு வருகிறவர்களுக்கு மேலும் பல வசதிகள், மேற்கல்வி வாய்ப்புகள் உட்பட அனைத்தும் அவர்கள் இருக்கும் வரை நமது அரசுகள் தரவேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
(ஆ) அப்படிப் புலம் பெயர்ந்து வந்துள்ள அகதிகளை ஈழத் தமிழ் சகோதர, சகோதரிகள் அந்த முகாம்களை விட்டு வெளியேறி, வேறு வெளி நாடுகளுக்குச் சென்று தங்கள் வருங்கால வாழ்வை அமைத்துக் கொள்ள விரும் பினால் அதை சட்டப்படி அனுமதிப்பதுதான் நியாயமாகும்.
அவர்களை ஏதோ சிறைக் கைதிகள் போல வெளியேறுபவர்களை நமது காவல்துறை மீண்டும் பிடித்துக் கொண்டு, முகாம்களுக்குக் கொண்டுவரும் போக்கு விரும்பத்தக்கதல்ல. இந்தப் போக்கை அரசுகள் மாற்றிக் கொண்டு, விரும்பி வெளியேற அவர்களுக்கு உரிமை தரத் தயங்கக் கூடாது என்று இக்குழு நமது அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண். 3 : டெசோ சார்பில் சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானங்களுக்கு வரவேற்பு
முன்மொழிவோர்: சாமி. திராவிடமணி (த.செ.கு.உ)
12-8-2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட் டில் காலங்கருதி நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களையும் இப்பொதுக்குழு வரவேற்று, அவற்றைச் செயல்படுத்துவ தற்கான அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண். 4 : பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கோவில் கட்டத் தடை விதித்திடுக!
முன்மொழிவோர்: பழனி புள்ளையண்ணன் (த.செ.கு.உ)
மானமிகு கலைஞர் அவர்களின் ஆட்சியில் நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவப் புரங்கள் உருவாக்கப்பட்டன. ஜாதி ஒழிப்பு, சமத்துவக் கண்ணோட்டம், மதச் சார்பின்மை இவற்றைப் பேணிக் காப்பதற்கான முன்னேற்றத் திட்டமாகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் எந்த வித மதத் தொடர்பான வழிபாட்டுச் சின்னங்களும் (கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் உட்பட) இருக்கக் கூடாது என்கிற விதி தெளிவாக, திட்டவட்டமாக இருந்தும், சில இடங்களில் கோயில்களைக் கட்டும் வேலையில் இறங்கி இருப்பது - தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தப்படு வதோடு, பெரியார் நினைவு சமத்துவப்புரத்தின் நோக்கத்திற்கு மாறாக இத்தகைய முயற்சிகளில் ஈடுபடு வோர்களை பெரியார் சமத்துவபுரக் குடியிருப்பு களிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் தமிழ் நாடு அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது. மேலும் பெரியார் நினைவு சமத்துவப்புரங்களை நாடெங்கும் மேலும் உருவாக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை திராவிடர் கழகப் பொதுக் குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 5 : சேது சமுத்திரத் திட்டம் - செயல்படுத்துக!
முன்மொழிவோர்: ச. இன்பலாதன் (த.செ.கு.உ)
அ) தமிழ்நாட்டின் நீண்ட காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை புராணக் கற்பனைக் கதாநாயகன் ராமன் கதையை முன்னிறுத்தி முடக்குவது மதச்சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கும் விரோதம் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பிரச் சினையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை இப்பொதுக் குழு வரவேற்கிறது.
ஏறக்குறைய 75 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் இந்தத் திட்டத்தின் வழித்தடத்தை மாற்றுவது கால விரயமும், மக்களின் வரிப் பண விரயமும் ஆகும் என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுவதோடு, ஏற்கெனவ் நீரி என்ற தொழில் நுட்ப நிறுவனம் ஆய்வு செய்து தெரிவித்த அந்த 6 ஆவது வழித் தடத்திலேயே விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க. அண்ணாவின் கொள்கைக்கே விரோதமாக ராமர் பாலம் என்று சொல்லி, அதனை இடிக்கக்கூடாது என்றும், அதனை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறுவது பொருத்தமற்றதும், அண்ணாவின் பெயரைக் கொச்சைப் படுத்துவதும் ஆகும் என்பதையும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
பிரச்சினையை விஞ்ஞான மனப்பான்மையோடு  அணுக வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தி உள்ளதையும் (51A (h) ) இப்பொதுக்குழு அனைவருக்கும் சுட்டிக் காட்டுகிறது.
ஆ) காவிரி நீர், முல்லைப் பெரியாறு நீர்ப்பாசனப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் பிடிவாதத்தோடு தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைக் கிடைக்காமல் செய்து வரும் கருநாடகம், கேரள மாநில அரசுகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசையும், நீதிமன்றங் களையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இ) நதி நீர் இணைப்பு எனும் பிரச்சினையில் குறைந்த பட்சம் தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 6 : பிள்ளையார் ஊர்வலங்களும், மதக் கலவரங்களும்
முன்மொழிவோர்: க.பார்வதி  (த.செ.கு. உறுப்பினர்) இந்துத்துவா சங்பரிவார்க் கூட்டத்தினர் சிறுபான்மையினருக்கு எதிராக மதக்கலவரங்களை உண்டாக்க பிள்ளையார் ஊர்வலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு மாறாக 40 அடி, 100 அடி உயரத்திற்குப் பிள்ளையார் பொம்மைகள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படு கின்றன.
இரசாயனக் கலவையால் வண்ணங்கள் தீட்டப்பட்ட பிள்ளையாளர் பொம்மைகளைக் கடலிலும், நீர் நிலைகளிலும் கரைப்பதால் நீர் மாசு, சுற்றுப்புறப் பாதிப்பு ஏற்படுவதால் அரசு விதிக்கும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என்றும், கூடுமானவரை, இது போன்ற மதக் கலவரங்களை விளைவிக்கும் மத ஊர்வலங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 7 : தமிழ்த் தேசியமும் இதன் பார்ப்பனத் தன்மையும்
முன்மொழிவோர்: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)
திராவிடர் இயக்கத்தையும் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தியும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தும் வரும் தமிழ்த் தேசியம் என்று சொல்லி பார்ப்பன எதிர்ப்பை மழுங்கடிக்கும் சக்திகளிடம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று திராவிடர் பெருமக்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. பார்ப்பனர் எதிர்ப்புதான் பார்ப்பனர் ஆதிக்கத்தைத் தகர்த்து, பார்ப்பனர் அல்லாத மக்கள், தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் முதலானோர் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிமைகள் பெறவும், முன்னேறவும் முடிந்ததற்கு அடிப்படை முக்கியக் காரணமாக இருந்தது - இருந்தும் வருகிறது. பார்ப்பனரல்லாத மக்கள் இத்துறைகளில் மேலும் முன்னேற வேண்டிய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனர் எதிர்ப்பைப் பலகீனப்படுத்த முயலுவது என்பது ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகம் என்பதையும் இப்பொதுக்குழு தெளிவு படுத்துகிறது.
பார்ப்பனர் பின்னணியோடு நடமாடும் தமிழ்த் தேசியம் எனும் முகமூடி அணிந்து வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், திராவிடர்களாகிய தமிழர்களை (இரண்டும் ஒன்றுதான் என்றாலும் வரலாற்றுக் கண்ணோட்டதோடு ஆரியப் பார்ப்பனர் என்பதற்கு எதிரிடையான வரலாற்றுச் சொல் திராவிடர் என்பதே!)  இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது. இந்த வகையில் மக்களிடம் கருத்தரங்கம் உட்பட தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண். 8 : சமூக நீதி
முன்மொழிவோர்: திருமகள் (தலைமை செயற்குழு உறுப்பினர்)
சமூக நீதி பெறுவதில் ஜாதியை அடிப்படை அலகாகக் கொள்வது பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்களால் என்பதை மறந்து, மருந்தில் குறிப்பிட்ட அளவுக்கு விஷம் கலக்கப்படுவதற்கு ஒப்பானது அது என்பதையும் புரிந்து கொள்ளாமல், ஜாதிதான் எங்களின் முக்கிய அடையாளம் என்று முழுமைப்படுத்தி, ஜாதிய பெருமைகளைப் பேசி கட்சிகளைக் கட்டும் போக்கு . . . . பார்ப்பனீயம் விதைத்த வருணாசிரம தர்மத்துக்கு உரம் ஊட்டி வளர்ப்பதாகும் என்பதை இப்பொதுக்குழு திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது- அப்படி செய்து கொண்டால் வன்முறையால் அது தடுக்கப்படும் என்று சிலர் கூற முற்படுவது அசல் பிற்போக்குத் தனமும், பின்னோக்கிச் சமூகத்தை இழுத்துச் செல்லும் கேவலமும் ஆகும் என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
பார்ப்பனிய இந்துத்துவ வருணாசிரம தன்மையில் பார்ப்பனர்களைத் தவிர்த்த அத்தனை ஜாதியினரும் சூத்திரர்கள்தான் என்பதை உணர்ந்து (மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திரன் என்றால் விபசாரி மகன் என்பது உட்பட ஏழு கேவலமான பொருள்களைக் கொண்டதாகும்). அதனை ஒழிக்கப்பாடுபடாமல் ஜாதி பெருமையைப் பேசி, ஜாதியைக் கட்டிக் காப்பதன் மூலம் சூத்திரத் தன்மையை ஏற்றுக் கொள்ளும் கேவலம்தான் மிஞ்சும்  என்பதை உணருமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர் களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்ளுகிறது.
தீர்மானம் எண். 9 : சுற்றுச் சூழல் பாதுகாப்பு
முன்மொழிவோர்: சிவ.வீரமணி (புதுச்சேரி மாவட்ட தலைவர்)
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர்களுக்குப் பிறந்தநாள் விழாவை எடுக்கும் கழகத் தோழர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மரக் கன்றுகளை நடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். புவி வெப்பம் என்ற அச்சுறுத்தல் எதிர் காலத்தையே கேள்விக் குறியாக்கி வருவதால் சமுதாய அறிவியல் இயக்கமான திராவிடர் கழகம் இதில் முக்கிய கவலை எடுத்துக் கொள்வது அவசியமாகும். நாட்டின் கனிம வளம், ஆற்று மணல் கொள்ளை என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இவற்றை அரசுடைமை ஆக்கி தனியார் கொள்ளைகளைத் தடுக்க வேண்டும என்று மத்திய, மாநில அரசுகளை இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண். 10 : சமூக நீதியின் தற்கால நிலை
முன்மொழிவோர்: ப.சங்கரநாராயணன் (குமரி மாவட்ட தலைவர்)
சமூக நீதிப் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து பல குளறுபடிகளைச் செய்து வருகிறது. பிற்படுத்தப் பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு என்று ஆணையிருந்தும் மத்திய அரசு துறைகளில் இன்னும் 6 சதவிகிதத்தைக் கூடத் தாண்ட முடியாத நிலை.
அதே போல கல்வியில் 27 விழுக்காடு இடம் என்று சட்டம் இயற்றப்பட்டு மூன்றாண்டுகளில் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற வகையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு, அந்தக் காலத்தை மேலும் நீட்டித்துக் கொண்டே போவது நாட்டின் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, உரிமை மீறல் என்பதை இப்பொதுக் குழு மிகுந்த வேதனையோடு சுட்டிக் காட்டுகிறது. உடனடியாக மத்திய அரசின் கல்வித் துறையில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான 27 விழுக்காடு அளிக்கப் பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட  வேண்டும் என்றும் இப்பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
பல மாநிலங்களில் நுழைவுத் தேர்வு அறவே இல்லை என்ற நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முடிவு செய்திருப்பதைக் கைவிடவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மத்திய அரசின் தன்னந்தனியான முடிவுகளும், அவ்வப்பொழுது இது போன்று எடுக்கும் முடிவுகளும் மத்திய - மாநில அரசுகளுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கும் காரணத்தால், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்திருத்தம் மேற்கொண்ட பிறகும், உத்தரப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றால் அம்மாநிலத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதன் பிரதிபலிப்பாக நாடாளு மன்றமே கொந்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உறுதி செய்யப்படும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 11 : கழகப் பிரச்சாரத் திட்டங்கள்
முன்மொழிவோர்: டெய்சி மணியம்மை (மாநில மகளிர் பாசறை தலைவர்)
தொலைக்காட்சிகளும், ஏடுகளும், இதழ்களும் விஞ்ஞானம் பெற்றெடுத்த குழந்தைகள் என்பதை மறந்து விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாகப் பச்சையாக, அருவருக்கத் தக்க மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் நாள்தோறும் பரப்பி வருவது சமுதாயத்துக்கு இழைக்கப் படும் மாபெரும் துரோகமாகும். இவற்றை முறியடிக்க மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு,  பகுத்தறிவுச் சிந்தனை, மனிதநேயம், ஒப்புரவு, சமத்துவ எண்ணம் இவற்றை மேம்படுத்தும் வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது. மாவட்ட  வாரியாக சிறப்புப் பிரச்சாரத் திட்டம் (Package Scheme)
(1) மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சி
(2) அறிவியல் கண்காட்சி
(3) புத்தகச் சந்தை
(4) தெருமுனைக் கூட்டம்
(5) உறுப்பினர் சேர்க்கை
(6) ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல்
இத்தகு ஒருங்கிணைந்த திட்டங்களை மாவட்டம் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் 5 நாட்கள் ஒதுக்கி அலை வீச்சு போல பிரச்சாரம் செய்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.
இளைஞர்களை இயக்கத்தின்பால் ஆற்றுப் படுத்தும் பணிக்கு முன்னுரிமை அளிப்பது என்று தீர்மானிக்கப் படுகிறது.
அ) கரும்பலகைப் பகுத்தறிவுப் பிரச்சாரம்
ஆ) பெரியாரியல் பயிற்சி முகாம் இவற்றை விரிவுபடுத்துவது
(ஈ) பெரியார் வீர விளையாட்டுக் கழகங்களை விரிவு படுத்துவது
(உ) வாய்ப்புள்ள இடங்களில் பெரியார் படிப்பகங்களை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
(ஊ) மாணவர் விடுதிகளில் மாணவர் கழகக் கிளைகளை அமைப்பது, மாணவர் அணி, இளைஞர் அணிகளுக்குத் தனித் தனியே  உறுப்பினர்கள் சேர்க்கை.
(எ) மகளிருக்குப் பேச்சுப் பயிற்சி - மகளிர் தனிப் பிரச்சாரம் ஏற்பாடு
இத்திட்டங்களை ஒழுங்குபடுத்த - செயல்படுத்த தனி மேற்பார்வை அமைப்பு (Package Scheme)  ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

சிறப்புத் தீர்மானம்

முன்மொழிவோர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச் செயலாளர்)
தன்னலம் பாராமல், தமிழர்களின் மேம்பாட்டிற் காகவே உழைத்துக் கொண்டிருக்கும் நம் தமிழர் தலைவர் ஆசிரியர்  மானமிகு கி.வீரமணி அவர்களின் உடல் நிலையைப் பேணிக் காப்பது நம் ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அதனை முன்னிட்டு அதற்காக ஒரு நிதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நம் எண்ணத்தை தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம் வெளிப்படுத்திய போது அதனை நம் தலைவர் அவர்கள்  ஒப்புக் கொள்ளவில்லை. இசைவு தரவில்லை. அவரை மேலும் வற்புறுத்தியதன் பேரில், அப்படியானால் அவ்வமைப்பு தனக்கு மட்டும் அல்லாமல் மற்ற தகுதியுள்ள (Deserving) திராவிடர் கழகத் தோழர்களின் உடல் நலம் பேணுவதற்கும் அந்நிதி பயன்படவேண்டும் என்று கூறினார். தனிக்குழு தேர்வு செய்து உள்ளபடியே வசதியற்ற, தேவைப்படும் கழகத்தவர்க்கு உதவிட,  வாய்ப் பினை  ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கண்ட தீர்மானத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் முன்மொழிய ஒரு மனதாக திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.



கழக பொதுக் குழுவில் தமிழர் தலைவர் அறிவிப்பு

திருச்சி பெரியார் மாளிகையில் இன்று (18.8.2012) காலை 10 மணியளவில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்ததாவது:
திராவிடர் கழகத் துணைத் தலைவர்: கவிஞர் கலி. பூங்குன்றன்
செயலவைத் தலைவர் :  சு. அறிவுக்கரசு
நான்கு பொதுச் செயலாளர்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழர் தலைவர் அறிவித்தார்.





இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...