Friday, August 31, 2012

டெசோ : தாக்கமும் ஆக்கமும்


டெசோ : தாக்கமும் ஆக்கமும்
ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேரும் போதெல்லாம் தமிழகத்திலிருந்து வரும் முதல் குரல் திராவிடர் கழகத்திடமிருந்துதான்! 2008, 1995, 1983 என்று வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் எவருக்கும் இந்த உண்மை தெளிவாகத் தெரியும். திராவிடர் கழகம் தனித்தும்,
ஒத்த கருத்துடைய அமைப்புகளை இணைத்துக் கொண்டும் ஈழத்தமிழர் நலனுக்கான குரலை தொடர்ந்து எழுப்பி வருகிறது. தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இச்செய்தியை எட்டச் செய்ததில் திராவிட இயக்கங்களின் பணியை யாரும் குறைத்துவிட முடியாது.

அதிலும் குறிப்பாக திராவிடர் கழகம் எந்தச் சூழலிலும், எந்த இன்னலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து களத்தில் இருக்கிறது. 1983-ல் ஈழ விடுதலை மாநாட்டை நடத்தியதிலிருந்து தொடர்ந்து எத்தனை எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், விளக்கக் கூட்டங்கள், மாநாடுகள்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் இந்த தொடர்ந்த செயல்பாடுகளுக்குக் காரணம் இந்த இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான இனநலமும், மனிதநேயமும் தான்! 1983-ல் மட்டுமல்ல, 1939-லேயே தந்தை பெரியார் அவர்கள் இது குறித்துக் கொண்டிருந்த கவலையை 1939 ஆகஸ்ட் 13-ஆம் நாள் குடிஅரசு வெளிக்காட்டுகிறது.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை சர்க்கார் கொடுமையாய் நடத் துவதையும் அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் இந்தக் கமிட்டி வன்மையாய்க் கண்டிக் கிறது. அதற்குத் தோழர்கள் ஈ.வெ.ரா., ராவ் பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்,  சவுந்தர பாண்டியன் ஆகியவர்களை இலங்கை சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது. (குடிஅரசு 13.8.1939)
இதனுடைய நீட்சியாகத் தான் திராவிட முன்னேற்றக் கழகமும் 1956 முதல் இப்பிரச்சினையில் கவனம் செலுத்திவருகிறது. 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற கொடுமைகளையொட்டி தமிழகத்தைத் திரட்டி போராட்டக் களத்தில் நிறுத்தியதும், போர்க் களத்தில் நின்ற போராளிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டியதும் இவ்வியக்கங்கள் செய்த பணியே! 1985-ஆம் ஆண்டு தமிழீழ ஆதரவாளர் அமைப்பு ஜிணிஷிளி என்ற பெயரில் கலைஞர் அவர்கள் தலைமையில் ஓர் அமைப்பினை உருவாக்கி, அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, பேராசிரியர் அன்பழகன், மதுரை பழ.நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து தமிழகம் முழுக்க சுழன்றடித்துப் பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு தமிழர்களைத் திரட்டினர்.
ஆண்டன் பாலசிங்கம், சந்திரகாசன் ஆகியோர் நாடு கடத்தப்படுவதைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட போராட்டமும், அன்றைய டெசோ மாநாடும் ஏற்படுத்திய தாக்கமும், ஊக்கமும் தான் ஈழத்தமிழர் பிரச்சினையை தமிழ்நாட்டுத் தமிழர்களின் கடமையாக ஆக்கியது. இது டெசோவின் முதல் அத்தியாயம்.
கொடுமையான முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான முன்னெடுப்புகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. மனித உரிமை என்ற அடிப்படையிலும், போர்க்குற்றங்கள் என்ற அடிப்படையிலும் இப்போது தான் இப்பிரச்சினை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அய்ந்தாம் கட்ட ஈழப் போராட்டம் என்பது உலக நாடுகளிடை யேயான அரசியலைப் புரிந்து கொண்டு அவற்றின் உதவியோடு மேற்கொள்ளப்படும் பன்னாட்டு அரசியல் போராட்டமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை காலம் உணர்த்தியுள்ளது. தனி ஈழம் தான் தீர்வு என்று தி.மு.க. தலைவர் கலைஞரும் அறிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் மீண்டும் டெசோ செயல்படவேண்டும் என்ற கருத்தினை கடந்த மார்ச் மாதத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்வைத்தார். கட்சி அரசியல் மாச்சரியங்களைக் கடந்து தமிழர் நலன் என்ற ஒற்றை நோக்கில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார். தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு மீண்டும் டெசோ உருவானது; விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களையும் இணைத்துக் கொண்டு விரிவானது.
மீண்டும் டெசோ உருவானதன் அதிர்வலை களை எங்கும் உணரமுடிந்தது. தமிழக எல்லையைக் கடந்து இந்திய அளவிலும், அதனையும் கடந்து சிங்கள ஆட்சியாளர்களிடமும் இதன் தாக்கம் தெரிந்தது. டெசோ மாநாடு என்று அறிவிக்கப்பட்டதும், சிங்கள புத்தபிக்குகள் இந்தியப் பிரதமருக்குக் கண்டனக் கடிதம் எழுதினார்களாம். இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம், அதேபோல இந்திய அரசும் நடந்து கொள்ள வேண்டும் என்பது போல் மிரட்டல் தொனிக்கும்படி இருந்ததாம் அக்கடிதம். இன்னொரு புறம் சிங்கள அமைச்சர்கள் டெசோ குறித்து, தங்கள் கண்டனத்தை வெறிக் கூச்சலுடன் பதிவு செய்தனர்.
சிங்கள இன வெறியர்கள் டெசோ இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகக் கூக்குரலிட்டனர். இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர மேனனும் இலங்கை சென்று பேசிவந்ததாகவும் தகவல்கள் வெளியாயின. தனி ஈழம் தான் தீர்வு என்று கலைஞர் சொன்னபோது, அதற்கு திமிரான பதிலும் வந்தது சிங்கள அமைச்சர் ஒருவரிடமிருந்து! இப்படியாக, டெசோ சிங்கள வெறியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், உள்ளூர் மேளங்கள் எப்போதும் போல் தனித்தனியாக அடித்துக் கொண்டிருந்தன. கலைஞர் டெசோ என்று மீண்டும் அறிவித்ததும், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனக் கொடுக்கு ஊடகங்களும் தங்கள் அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடங்கின.
உள்ளூர் அரசியலைக் கருத்தில் கொண்டு சில தலைவர்கள் கலைஞரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தனர். சில ஈழ வியாபாரிகள் டெசோவைக் கண்டு அலறினர். முதலில் மித்ரபேதம் செய்ய முயன்றனர். டெசோவினால் பலன் இல்லை என்றனர். டெசோ உண்மையானது இல்லை என்றனர். தமிழர் ஒற்றுமையைக் கருதாமல் தங்கள் சுயலாபத்துக்காக டெசோவிற்கும் கலைஞருக்கும் எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்தனர். அதனால் பார்ப்பன ஊடகங்களின் விளம்ப ரங்களைப் பெற்றார்கள்.
டெசோ : தாக்கமும் ஆக்கமும்
இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் டெசோ தான் தீர்மானித்த பாதையில் பயணத்தைத் தொடர்ந்தது. முதலில் விழுப்புரத்தில் மாநாடு என்று அறிவித்திருந்த டெசோ தலைவர் கலைஞர், டெசோ சார்பில் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தவுடன், ஆஹா... பார்த்தீர்களா! இவர்கள் இந்திய அரசுக்குப் பணிந்துவிட்டார்கள்! மாநாடு நடக்காது என்று கூத்தாடினார்கள். பின்னர் ஆகஸ்ட் 12 அன்று ஒய்.எம்.சி.ஏ திடலில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும் தலைவர்களைப் பங்கேற்கச் செய்ய திட்டமிட்டுச் செயலாற்றியது டெசோ. மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பன்னாட்டுப் பேராளர்களுக்கு அனுப்பப்பட்ட கருத்துருவை கலைஞர் வெளியிட்டபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில், தனி ஈழத்தைப் பற்றி கருத்து இருக்கிறதே தவிர, அதை இப்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக உத்தேசமில்லை. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது, அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது, அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவது, இவற்றில் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம், நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத்தான் இந்த மாநாட்டைக் கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாகக் கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில் அறவழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுதான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய திட்டமாகும்'  என்று குறிப்பிட்டார். டெசோவை எதிர்த்து, அதனால் பலன் இல்லை என்று கூப்பாடு போட்ட சிலர், கலைஞர் தனி ஈழம் என்பதைக் கைவிட்டுவிட்டார் என்பது போல திரிக்கத் தொடங்கினர்.
பன்னாட்டுப் பேராளர்களும், வட இந்தியத் தலைவர்களும் கலந்து கொள்ளும் மாநாட்டில் ஜனநாயகப்பூர்வமாக எதுவும் விவாதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும், வாழ்வுரிமை மீட்பு என்பதை முன்னிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து, ஒத்துழைப்பையும் பெற்று பன்னாட்டின் ஆதரவைப் பெற முயற்சிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், முதலில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பது சார்ந்தும் தனி ஈழ ஆதரவுத் தீர்மானம் என்பது தனியே இடம்பெறவில்லை. ஆனால் கிடைத்தது வாய்ப்பென்று, தமிழீழத்தை கருணாநிதி கைவிட்டுவிட்டார்; ஈழம் இல்லாமல் எதற்கு டெசோ மாநாடு? என்று பொங்கினார்கள்.
டெசோவால் பலன் இல்லை என்றவர்கள், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தைப் பற்றிக் கவலைப்படுவானேன்? வீணான மாநாடு என்று சொன்ன பிறகு, அதில் தனி ஈழத் தீர்மானம் போட்டால் மட்டும் ஆதரிக்கவா போகிறார்கள். (தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்று, பெயரிலேயே தன் நோக்கத்தைக் கொண்ட அமைப்பு தனியாகத் தீர்மானம் போடவில்லையே தவிர, ஒவ்வொரு தீர்மானத்திலும் அது குறிப்பிட்டிருப்பதென்ன என்பதைப் பிறகாவது புரிந்துகொண்டிருப்பார்களா? தீர்மானம் குறித்துத் தொடக்கத்தில் கவலைப்பட்டவர்கள், இடம் கிடைத்ததென கட்டுரை தீட்டியவர்கள் - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவேயில்லை! அவ்வளவு நாணயம்!!)
பன்னாட்டு அறிஞர்கள் வர மாட்டார்கள் என்றார்கள். இலங்கையிலிருந்து யாரும் வரக்கூடாது என்றார்கள்.  டெசோ மாநாடு இலங்கை இறையாண்மைக்கு எதிரானது எனவும், இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன சிங்கள அரசின் கருத்தை வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்கள் இங்குள்ள சில தமிழின காப்பாளர்கள்(!) என்போர்.
டெசோ : தாக்கமும் ஆக்கமும்மாநாட்டுப் பணிகள் வெகு தீவிரமாக நடக்க நடக்க, அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு, தனது பார்ப்பனியத்தைக் காட்டத் தொடங்கியது. மாநாடு நடக்க இருந்த கடைசி நாட்களில் ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் என்று ஒருவரைப் பிடித்து மாநாடு நடத்த தடை வழங்க வேண்டும் என்று வழக்குப் போட வைத்தது. மாநாட்டால் மருத்துவமனை நோயாளிகளுக்குத் தொல்லை ஏற்படும் என்று வழக்காம்! அங்கே விஜய் டிவியின் விழாக்கள் நடந்தபோதும், அய்.பி.எல் கிரிக்கெட் தொடக்க விழா நடந்தபோதும் ஆ.ஊ.சங்கத் தலைவர் ராமச்சந்திரன் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்கத் தோன்றுகிறதா? விடுங்கள், அம்பை நோவானென்?
வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொண்டது டெசோ. ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடத்துவது பற்றி காவல்துறை முடிவு செய்யட்டும் என்று முதலில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விடிய விடிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அனுமதி இல்லை என்றது சென்னை காவல்துறை. மேல்முறையீட்டுக்குச் சென்றது தி.மு.க. மாநாட்டை எப்படியும் நடத்தியே தீர்வது என்று மாற்று இடமாக அண்ணா அறிவாலயத்தை அறிவித்து தயாரிப்பு வேலைகள் நடந்தன.
பன்னாட்டுப் பேராளர்களுக்கு விசா கிடைக்காது; ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று வெளியுறவுத் துறையிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது என்று ஈழத்தை ஆதரிப்பதாகச் சொல்வோர் ஈழம் கூடாது என்று மத்திய அரசு சொல்வதாகக் கூறி மகிழ்ச்சியடைந் தார்கள். ஈழம் இல்லாமல் ஒரு ஈழ ஆதரவு மாநாடா என்று கேலி செய்தார்கள். வரலாற்றுக் காரணங்களை முறையாக எடுத்துச் சொல்லி, இந்திய அரசின் உள் துறையிடமிருந்தே ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடையில்லை என்று அனைவருக்குமான அனுமதியையே எழுத்து வடிவில் பெற்றுத் தந்தது டெசோ. படிப்படியாக அத்தனைத் தடைகளையும் தகர்த்து, கடைசியில் மாநாடு நடக்க வேண்டிய அதே நாளில் விடுமுறை என்பதையும் தாண்டி நீதிமன்றத்தின் கதவைத் தட்டி, நீதியைப் பெற்றுவந்தது தி.மு.க! ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலையில் அக்கார்ட் விடுதியில் தொடங்கியது மிக முக்கியமான ஆய்வரங்கம். பன்னாட்டுப் பேராளர்களும், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட முக்கிய இந்தியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குபெற்றனர். சிங்கள அரசின் கடுமையான கண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை நாடாளுமன்ற தமிழ் எம்.பி.க்கள் வராவிட்டாலும், சிங்களவராயினும் இடதுசாரித் தலைவரான விக்ரமபாகு கருணரத்னே கலந்துகொண்டார். திட்டமிட்ட வண்ணம் காலையில் வெற்றிகரமாக நடந்த ஆய்வரங்கத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற ஆணையோடு அதே ஒய்.எம்.சி.ஏ அரங்கில் மாநாடு தொடங்கியது.
கட்டுப்பாடான மக்கள் திரண்ட இன உணர்வுக் கூட்டத்தின் மத்தியில் காலையில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. போர்க்குற்றங்கள், பண்பாட்டுக் கூறுகள் அழிப்பு, தமிழர்களிடம் இருந்து வன்பறிப்புக்கு ஆளாகும் நிலங்கள், சிங்களக் குடியேற்றம், அகதிகள் மறுவாழ்வு, அய்.நா. அவை மூலம் வாக்கெடுப்பு, தமிழர்களுக்கான முடிவை தமிழர்களே எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காஷ்மீர் பரூக் அப்துல்லா தலைமையில் இயங்கும் தேசிய மாநாட்டுக் கட்சி, மகாராஷ்டிரா சரத் பவாரின் தேசீயவாதக் காங்கிரஸ் கட்சி, இராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் லோக் ஜனசக்தி கட்சி (பீகார்) இப்படி பலரும், இலங்கை அரசின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது கலந்து கொண்ட சிங்கள இனத் தலைவர் மனிதநேயர் நவ சம சமாஜ கட்சி எம்.பி. விக்ரம பாஹு கருண ரத்னே, ஆம்நெஸ்டி இண்டர்நேஷனல் சார்பில் கலந்துகொண்ட ஆனந்த் குருசாமி, நைஜிரியா, துருக்கி, மொராக்கோ, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட பன்னாட்டுப் பேராளர்களும், வடபுலத் தலைவர்களும் உரையாற்றினர். உணர்வுடன் கூடிய மக்கள் மத்தியில், தங்கள் நாடுகளிலும் மாநிலங்களிலும் டெசோ பணிகளை முன்னெடுக்க வேண்டும்; மக்களுக்கு விளக்க வேண்டும்; ஆதரவு திரட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கூடிக் கலைந்த மாநாடாக அல்லாமல், எதிரிகளின் கூட்டைக் கலைக்கும் மாநாடாக நடைபெற்றது டெசோ. சிங்களர்களும், பார்ப்பனர்களும் டெசோ-வின் வலிமையை நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் அவர்களின் துடிப்பு நன்கு வெளிப்பட்டது. தமிழகத்திற்கு வெளியில் டெசோவை ஆபத்தானதாகவும், தமிழர்களுக்கு மத்தியில், டெசோவைக் கேலி செய்தும் தொடர்ந்து தங்கள் பிரச்சாரத்தை நடத்தின.
டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயற்பாடு களை வலுப்படுத்த வேண்டும். தனி ஈழத்தை உருவாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றும் "டெசோ'வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஐ.நாவில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட ஈழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதைப் பார்க்கவேண்டும். என்று சிங்கள இனவெறி அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். மேலும், கொழும்பில் இந்திய தூதரின் இல்லத்துக்கு முன்பாக "தேசிய இயக்கங்களின் ஒன்றியம்" என்ற பெயரில் சிங்களவர்களுடன் ஒன்று திரண்டு, டெசோ தலைவர் கலைஞர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரது உருவ பொம்மைகளை தீ வைத்துக் கொளுத்தி தங்களது இனவெறியை வெளிப்படுத்தினர்.
மாநாட்டில் கலந்துகொண்டு துணிச்சலாக தனது கருத்துகளை வெளிப்படுத்திய சிங்கள இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு மீண்டும் இலங்கை திரும்ப முடியாவண்ணம் அச்சுறுத்தல்கள் செய்யப்பட்டன. தற்போது இந்த கோரிக்கையை வற்புறுத்தி, இந்த பிரிவினைவாதிகளின் போர்வை யில் சென்னையில் மாநாடு நடைபெற்றுள்ளது. தேசப்பற்றுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கக் கூடாது. தனி ஈழக் கொள்கைக்கு எதிராக, நாட்டு மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று மகிந்த ராஜபக்சே பதறினார். டெசோ தனது அடுத்த கட்டப் பணிகளை மிகத் தெளிவாகத் தொடங்கியது. ஆக்கபூர்வமான தீர்மானங்கள் உலக அரங்கில் அய்.நா. முதல் பற்பல நாடுகள், ஜன சமூக அமைப்புகள், இந்திய அரசின் செயல்பாட்டை விரைவுபடுத்திடும் பணிகளை எல்லாம் இனி செய்ய வேண்டும்.
ஒத்த கருத்துள்ள அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டாலும்கூட தனித் தலைமையோடும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாடுபட உறுதியோடு முயற்சிக்க வேண்டும். வீண் விமர்சனங்களில் பொது எதிரியான ஹிட்லரிசத்தின் தர்பாரில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள்ளாகி யுள்ளவர்களை மீட்டெ டுத்து மான வாழ்வு, உரிமை வாழ்வு வாழ வகை செய்ய வாரீர்! என்று மீண்டும் அழைப்பு விடுத்தார் கி.வீரமணி. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, டெசோவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும்,  கலைஞரின் விளக்கக் கடிதத்தையும் நேரில் கொடுத்தனர். தனது விளக்கக் கடிதத்தில்,
1. மாநாடு முடிவு செய்தபடி இலங்கையிலுள்ள தமிழர்கள் கோரி வரும் அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்ய அவர்களுக்கு உரிமைகள் வழங்கும் தீர்மானத்தை அய்.நா. பொதுச் சபையிலும், அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலும் கொண்டு வர வேண்டும்.
2. அதைத் தொடர்ந்து இந்திய அரசால் முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக அய்.நா. அமைப்பின் இதர உறுப்பு நாடுகளைக் கொண்டுவர சாத்தியமான அனைத்து ராஜிய உக்திகளையும் எடுக்க வேண்டும்.
3. இந்தியாவில் வாழும் அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை அல்லது நிரந்தர வசிப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.
4. தமிழர்களுக்கான மறுவாழ்வு உதவியாக இந்திய அரசு வழங்கிய ரூ.500 கோடி மற்றும் இதர பொருள் உதவிகள் இப்பணிகளுக்காக முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை அனுப்ப வேண்டும்.
5. சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் விடுதலை. வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தாய்நாடு திரும்புதல், தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மீட்டல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்தல், மருத்துவ வசதிகள் விரிவாக்கம் மற்றும் 10 ஆவது தீர்மானத்தில் கோரியவாறு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை உட்பட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் அதன் முன்னணிப் பாத்திரத்தை வகித்தல்;
6. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவை மீண்டும் எடுத்தும் தனுஷ்கோடி அல்லது மண்டபத்தில் இந்திய கடற்படை தளம் அமைத்தல் (தீர்மானம் 11) ஆகியவை மூலமாக இலங்கைக் கடற்படை தாக்குதல்களிலிருந்து இந்திய மீனவர்களைக் காப்பாற்ற முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
7. இந்த மாநாடு கோரியவாறு (தீர்மானம் 12) இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிப்பதைத் தவிர்த்தல்.
டெசோ : தாக்கமும் ஆக்கமும்
என்பவற்றைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் டெசோ தலைவர் கலைஞர். அடுத்த கட்டமாக அய்.நா. அவையின் மனிதநேய அமைப்பின் தலைமையிடமான ஜெனீவாவுக்கு நேரில் சென்று இக்கோரிக்கை யினையும், டெசோ மாநாட்டுத் தீர்மானங்களையும் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
எந்தப் பணியை யார் முன்னெடுத்தால்  பலன் தருமோ, அவரே அதனை முன்னின்று செய்ய வேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையை இந்தியாவில் டெசோ முன்னெடுக்கும்போது அது கவனம் பெறுவதாக மட்டுமல்லாமல், கவனமாகச் செய்ய வேண்டிய வற்றைச் செய்வதாகவும் நடக்கிறது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளின்படி, தமிழர் நலன் என்ற ஒற்றை நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல், சமுதாய இயக்கங்களும் இணைந்து இதற்கு வலிமை சேர்க்க வேண்டும்.
- சமா.இளவரசன்


2 comments:

ttpian said...

அது சரி:
டெல்லி கடைசி வரை இலங்கையை சேர்ந்த
தமிழ் குட்டமைப்புக்கு விசா தரவில்லை!
ஏன் டெல்லிக்கு எதிராக ஒரு தீர்மானம்
போட்டிருக்கலாமே?

ttpian said...

அது சரி:
டெல்லி கடைசி வரை இலங்கையை சேர்ந்த
தமிழ் குட்டமைப்புக்கு விசா தரவில்லை!
ஏன் டெல்லிக்கு எதிராக ஒரு தீர்மானம்
போட்டிருக்கலாமே?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...