Saturday, September 1, 2012

அலையாத்தி மனம்


அலையாத்தி மனம்
சுனாமி என்ற வார்த்தையை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் நாளுக்கு முன்னர் நாம் கேள்வியே பட்டதில்லை. ஆனால் அந்த பேரழிவிற்குப் பின் மிகப் பெரிய பிரச்சினைக்கு சுனாமியை எடுத்துக்காட்டாகக் கூறுவது வழக்கமாகி விட்டது. அதன் பின்னர் இப்போது 2011 டிசம்பர் 30 ம் நாள் சுழன்றடித்து சூறையாடிய 'தானே' புயல் தன் 'சக்தி' எப்படிப்பட்டது என்பதை சொல்லிவிட்டது.   ஆண்டு தோறும் பருவ மழைக் காலங்களில் தென்மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வப்போது தமிழ்நாட்டிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது, நமக்கு வராது ஏனென்றால் இது  'புண்ணிய'பூமி என்று நினைத்து சும்மா இருந்துவிட முடியாது. உலகில் எப்போதும் எங்கேயாவது ஓரிடத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறன்றன. நமக்கும் நடக்கிறது.

தகவல் தொடர்பு தொழில் நுட்பம் வளராத காலங்களில் ஒரு நிகழ்வு நடந்த மூன்றாம் நாள்தான் நமக்கு செய்தியே தெரிய வரும். ஆனால் இப்போது மூன்று நிமிடங்கள் என்பது அதிகம். இதனால் பதற்றம் வேகமாகப் பரவுகிறது என்பது உண்மைதான். ஆனால் மீட்புப் பணிகளும் வேகமாகச் செய்ய முடிகிறது என்பதும் உண்மையே.
முன்பு சுனாமி தாக்கிய பகுதிகளில் கடலூரும் ஒன்று. இப்போது 'தானே' புயலும் தன் பங்குக்கு கடலூரை சின்னாபின்னமாக்கி விட்டது. 'தானே' தாக்கிய மூன்றாம் நாள் நான் (கட்டுரையாளர்) அங்கு இருந்தேன். அதாவது புயல் மீட்புப் பணிகளுக்காக அலுவலகப் பணி மேற்கொண்டேன். ஒரு நிமிடம் இலங்கை யுத்தக் களத்திற்கு வந்து விட்டோமோ என்று அதிர்ந்து போனேன். இயற்கை தொடுத்த போர் அது. குண்டு வீச்சு நடந்ததா என்று அய்யம் ஏற்பட்டது. அந்தக் கொடுமையைச் சொன்னால் சொல்லில் அடங்காது;எழுதினால் ஏட்டில் அடங்காது; அது இருக்கட்டும்.   இது போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் பொருளாதார இழப்புகள் ஆகியவை பணத்தால் மதிப்பிடப் படுகின்றன. இயற்கையின் தாக்குதலுக்குள்ளான இடத்தில் தப்பிய மனிதர்களுக்கு ஏற்படும்  மன அழுத்தத்திற்கு  அரசும் தொண்டு நிறுவனங்களும் கொடுக்கும் பணம் சார்ந்த இழப்பீடுகள் போதுமா? (போதுமானதா என்பது வேறு கேள்வி)    சுனாமி போன்றவற்றின் தாக்குதலைக் குறைக்க அலையாத்தி(னீணீஸீரீக்ஷீஷீஸ்மீ )(அலைகளின் வேகத்தைக்  கட்டுப்படுத்தும்) மரங்களை வளர்க்கலாம் என்று சொல்கிறார்கள். அதற்கான செயல் வடிவம் எந்த அளவில் இருக்கின்றதென்று தெரியவில்லை. ஆனால், மனமாத்தி முறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் மன அலைகளின் வேகம் குறைந்து வாழ்க்கைப் படகை செலுத்த வசதியாக இருக்கும்.   இயற்கை இடர்பாடுகளால் நீங்கள்  உடல் ரீதியாகப் பாதிக்கப் படவில்லையென்றாலும் அது மோசமான உணர்ச்சிப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. மன அழுத்தம், புரியாத எண்ணங்கள், மன ஒருமுகப்படுத்த இயலாமை,முடிவெடுக்க இயலாமை,உண்ணும் உறங்கும் முறைகளில் பாதிப்பு, பாதிப்பு ஏற்பட்ட நினைவு நாட்களில் பதட்டம், அதே போன்ற நிகழ்வுகள் வேறிடங்களில் நடந்தாலும் அதிர்ச்சி, மற்றவர்களோடு பழகுவதில் சிக்கல், தலைவலி, குமட்டல், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
மனதில் உறுதி வேண்டும். எங்கேயும் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பதால் அந்த எதிர்பாராததை எதிர்கொள்ள முன் தயாரிப்பு செய்துகொள்வது நல்லது. அடிக்கடி வெள்ளம் ஏற்படும் கடல் மற்றும்  நதிக்கரையோர மக்கள் தங்கள் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது குறித்து எப்போதும் கவலைப் படுவது உண்டு. அவர்களின் நிலையற்ற வாழ்க்கை மிகவும் கவலைக்குரியது. வெள்ளம் வரப்போகிறது என்ற அபாய அறிவிப்பு அவர்களுக்கு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் பயத்தையும் உண்டாக்குகிறது. பயம் பதற்றத்தைச் சமாளிக்கும் எளிய பயனுள்ள வழிகளைத் தெரிந்துகொள்வோம். இது வெள்ள நேரத்தில் மட்டுமல்லாமல் எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்கள் உடல், மன நலனுக்கு ஏற்றதாக இருக்கும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். வெள்ள அபாய நேரத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உங்கள் கால்நடைகள், செல்லப் பிராணிகள் ஆகியவையும் பாதுகாப்பாக இருக்க ஒரு திட்டத்தை வைத்திருப்பது அவசியமாகும். அண்மைய இயற்கைப் பேரிடர்கள் சொல்லிக் கொடுத்தப் பாடம் அதுதான். அரசோ, மற்றவர்களோ உங்கள் உதவிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். கிடைக்கக்கூடிய போக்குவரத்து சாதனம், உங்களுக்கு உதவக்கூடிய உறவினர், தங்குமிட விவரங்கள் வேறு தனியார், அரசு சார்ந்த உதவும் அமைப்புகளின் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது அபாய நேரத்தில் உங்கள் பதற்றத்தைக் குறைக்கும்.
உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். இது போன்ற நேரங்களில் உண்மையை விட புரளி வேகமாகப் பரவுவதுண்டு. ('தானே' புயல் தாக்கிய சில நாட்களில் கடலூரில் சுனாமி புரளி பரவியதால் கடலோர மக்கள் ஒரு இரவு முழுவதும் ஒரு உயரமான பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தனர்.) அதனால் உண்மையான தகவல்களைச் சேகரியுங்கள். அது உங்கள் அபாய நிலையின் அளவைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் வீண் அலைச்சலைக் குறைக்கும். உள்ளூர் செய்தி நிறுவனங்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள்,மக்கள் செய்தித் தொடர்பு அலுவலகங்கள் ஆகியவற்றின் அலுவலர்கள் கூறும் செய்திகள் உண்மையாக இருக்கும். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. ஒரே செய்தியை பல பேர் பல முறை கூறுவதால் அபாயத்தின் அளவு அதிகமாகத் தெரிய வாய்ப்புள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
குடும்ப உறுப்பினர்களிடமும் நண்பர்களிடமும் தொடர்பிலேயே இருங்கள்.இது உங்கள் வலிமையின் ஆதாரம். ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதும் உதவி செய்து கொள்வதும் உங்கள் மன நலனுக்கு ஏற்றது. நல்ல உடல் நலனைப் பராமரிப்பது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை - சரியான அளவு சரிவிகித உணவு, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவை எந்த விதமான அச்சுறுத்தலையும் சமாளிக்கக் கூடியது. ஆரோக்கியமான உடல் எண்ணங்களில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு வெள்ளம் போன்ற அபாய நேரங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும்.
குழந்தைகளோடு நெருக்கமாக இருங்கள்.
உங்கள் குழந்தைகள் தேவையில்லாத செய்திகளைக் கேட்பதைத் தடுங்கள். நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் சொலுங்கள். (சுனாமியின் போது கடலூரில் ஒரு தாயும் ஏழு வயது பெண் குழந்தையும் வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டு மின் கம்பத்தை தாயும் மின் கம்பியை குழந்தையும் பிடித்துக்கொள்ள ,(மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது) அவர்கள் காப்பாற்றப்படும் வரை அந்தக் குழந்தைக்கு அந்தத் தாய் தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தாராம்.-இதை அவர்களே சொல்லக் கேட்டேன்.)
நம்பிக்கையுடன் இருங்கள்.
அரசு ஊழியர்கள், மீட்புக் குழுவினர், ராணுவம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவை ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களுடைய நடவடிக்கைகள் போதிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் என்பதை நம்புங்கள். நீங்கள் ஏற்கனவே இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருந்தால் அந்த அனுபவத்தை வைத்து இப்போதைய சூழ் நிலையை சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.
உதவியை நாடுங்கள்.
பயம் பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது நீடித்த பின் விளைவுகளால் மற்றவர்களுடன் பழகுவதில் அல்லது வேலையில் அக்கறையின்மை போன்ற சிக்கல்கள் இருந்தால் உரிய பயிற்சி பெற்ற மன நல வல்லுனரின் உதவியை நாடுங்கள். அவர்கள் உங்களின் இயல்பான வாழ்க்கைக்கு மீள உதவுவார்கள்.
நில நடுக்கத்தால் ஏற்படும் மன நடுக்கம்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது லேசாக நம்மை நடுங்க வைத்துக் கொண்டிருப்பது நில நடுக்கம். 2001 ஜனவரி 26 ம் நாள்  குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பம் மிகப்பெரும் சேதம் விளைவித்து சில கிராமங்களை முற்றிலுமாய் அழித்து விட்டதை கண்ட போது அனைவர் மனதிலும் ஓர் அச்சம் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் வடக்கே ஆயிரம் கி.மீ. தாண்டி பிளந்த பூமி தெற்கே திருவையாறு வரை நிலத்தை அசைத்திருக்கிறது. அதைத் தவிர இப்பொழுது பாதுகாப்பான பகுதி என நம்பிக் கொண்டிருந்த சென்னையிலும் அவ்வப்போது  ஐந்து விநாடி பூமி அசைவு.   நில நடுக்கம் ஏற்பட்ட இடங்களில் நம்முடைய குடும்பத்தாரோ, உறவினரோ, நண்பர்களோ இருந்தால் அவர்களுடைய பாதுகாப்பு நிலைமைப் பற்றி அறிந்தோ கொள்ள அதைப் பற்றிய செய்தியை மிகுந்த கவலையுடன் கவனிப்பது இயற்கையே. ஆனால்...
நாம் என்ன செய்ய வேண்டும்?
செய்திகளுக்கு இடைவேளை,  இடைவெளி இல்லாமல் செய்திகளைக் கேட்பது அழுத்தத்தை மிகவும் அதிகப்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் நில நடுக்கம் பதிக்கப்பட்ட இடத்தில் இருந்தாலும் சற்று இடைவெளி விட்டு செய்திகளைப் பாருங்கள். அந்த இடங்களில் அவ்வளவு விரைவாக செய்தி திரட்ட முடியாது என்பதாலும் தகவல் தொடர்புக் கருவிகள் பழுதடைந்திருக்கும் என்பதாலும் உடனடி செய்தி கிடைக்க வாய்ப்பில்லை. நிதானமாக இருங்கள்.
உங்கள் அன்றாட செயல்களைத் தொடருங்கள்.
வழக்கமான வேலைகளைச் செய்வதன் மூலம் தொடர்ந்து நிலநடுக்கம் பற்றிய செய்திகள் கேட்பதையும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதையும்  தவிர்ப்பதால் பதற்றம் சற்றுக் குறையும்.
உடலை நல்ல ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்வதால் உணர்ச்சிகளை நல்ல நிலையில் நிர்வகிக்க முடியும்.
எதையும் எதிர் பாருங்கள்.
ஒரு பூகம்பம் ஏற்படுத்தும் பயங்கரமான பேரழிவு எந்த விதமான செய்தியையும் கொண்டுவரலாம். என்றாலும் நேர்மறையான எண்ணத்துடனே இருங்கள். நம்பிக்கையுடனும் பக்குவத்துடனும் அடுத்து வரும் நாட்களை எதிர் நோக்குங்கள்.
உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
பல்வேறு நிறுவனங்கள் பூகம்பத்தில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு பல வகைகளிலும் உதவி செய்கின்றன. அவர்களுக்கு பணமாகவோ உடல் உழைப்பின் மூலமோ உதவி செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல மாறுதல் (ஆறுதல்) கிடைக்கும்.
நம்பிக்கையை கை விடாதீர்கள்.
துன்பம் நிறைந்த அனுபவத்தால் மனதை பக்குவப் படுத்திக் கொண்டதன் மூலம் மரியாதைக்குரிய வளர்ச்சியை அடைய முடியும். இதன் மூலம் தன் வலிமையைத் தெரிந்துகொள்ள முடிவதுடன் வாழ்வதற்கு அர்த்தத்தை ஏற்படுத்த முடியும்.
உளவியலாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
சாதாரணமாக அளிக்கப்படும் அறிவுசார்ந்த, நடத்தை சார்ந்த, அறிவு-நடத்தை இணைந்த, இணைந்து பழகும் முறை, மனிதாபிமான நடத்தை, உள வலிமை படுத்தல் ஆகிய முறைகளில் ஒன்றையோ சிலவற்றை இணைத்தோ சிகிச்சை அளிப்பதன் மூலம் தனிஆளோ தம்பதியரோ குடும்பமோ பயனடையும்.ஹிப்னாடிச சிகிச்சை அளிப்பதன் மூலம் வலிகள், பதற்றம்,பிறழ் மனநிலை ஆகியவை பெரிய அளவில் குணமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உளவியலாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தம்,உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள், உயிர் பிழைத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மீட்புக் குழுவினருக்கும் அவர் களுடைய உணர்ச்சி நிலை, கோபம், அழுத்தம், துயரம் ஆகியவற்றைப் புரிந்து நடந்து கொள்ள உதவுகிறார்கள்.
பேரிடர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வாழ ஊக்கப்படுத்துகிறார்கள். சிறிய ஆரம்பத்திலிருந்து படிப்படியாக நீண்ட நாள் இலக்கை அடையும் வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
பேரிடரின் தாக்கத்திலிருந்து குழந்தைகள் மீண்டு எதிர்கால வாழ்வை அமைத்துக் கொடுப்பதைப் பற்றிய பெற்றோரின் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
குடியிருப்பில் உடன் வசிப்பவர்கள், தொண்டர்கள் மற்றும்  ஊழியர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டை நீக்க உதவுகிறார்கள். உயிரிழந்த குடும்பத்தினர்,உறவினர் ஆகியோரைப் பற்றிய கவலைகளை மறக்க உதவுகின்றனர். பேரிடரிலிருந்து தப்பியவர்களுக்கு பயம்,பயங்கரக் கனவுகள்,உறுத்தலான மன நிலை,குழப்பம் போன்ற விளைவுகள் ஏற்படுவது இயல்பே எனவும் தக்க சிகிச்சையின் மூலம் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் தெளிவுபடுத்தி அதற்கான ஆவன செய்கிறார்கள். குழந்தைகளுக்குச் சிறப்பாகப் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு  தக்க வழி காட்டுகிறார்கள். நீண்ட கால உதவியை எங்கே எப்படி பெறுவது என்பது போன்ற வழிகாட்டி ஆலோசனையைத் தருகிறார்கள்.
திடீரென்று ஏற்படும் இழப்புகளை  "இயற்கையின் கோணல் புத்தி" என்று தந்தை பெரியார் சொல்வார். பேரிடர் நிகழ்வுகளில் ஏற்படும் துயரங்களைத் தாங்கிக் கொள்ள பகுத்தறிவைப் பயன் படுத்த வேண்டும்.ஏற்கனவே பட்டறிவு (பட்ட அறிவு) உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இனி இப்படியொரு நிகழ்வு ஏற்படக்கூடாது என்பது விருப்பமாகும் . நிகழ்ந்தால் எப்படித் தாங்கிக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வது நம் பொறுப்புமாகும்.
- க.அருள்மொழி

செய்திகளை பகிர்ந்து கொள்ள

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...