Thursday, August 30, 2012

பிள்ளைகள், அட்டையா? பனை-தென்னையா?


தென்னயப் பெத்தா இளநீரு! பிள்ளையப் பெத்தா  கண்ணீரு!! என்று நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ஒரு கவிஞர் தனது கருத்தாழத்தைக் காட்டினார்!
நம் நாட்டுக் கூட்டுக் குடும்ப முறையில், பிள்ளைகள் - இளமைப் பருவத்தில் கட்டுப்பாட்டுடன் வளர்க்க முடிந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டிருக்கிறது!
அமெரிக்கா போன்ற மற்ற வெளிநாடுகளில் இந்தக் கூட்டுக் குடும்ப முறை - குறிப்பாக - இந்து அவிபக்தக் குடும்ப முறை-  என்பதே கிடையாது!
16 வயது வரை வளர்த்து, ஆளாக்கி அதற்கான கல்வி தந்து பிறகு, அவரவர்கள் தனித்தனியே சம்பாதித்துத் தம் காலில் தாம் நிற்கவேண்டும் என்பதுதான் அங்கே உள்ள முறை.
இது அவர்களுக்குத் தக்க பாடமாக அமைந்து, அவர்களுள் பொறுப்புணர்ச்சியை விதைத்து  அவ்வளர் இளம் பிராயத்தினரை வாழ வைக்கிறது.
இளம் மாணவப் பருவத்தில் கூட, விடுமுறைகள், ஓய்வு நேரங் களில் கூட பகுதி நேரப் பணிகளின் மூலம் பணத்தைச் சம்பாதித்து சேமித்துதான் தத்தம் வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைக்கிறார்கள் இளைஞர்கள். வாழ்வதோ, வீழ்வதோ - எல்லாம் அவரவர் உழைப்பு, திறமையைப் பொறுத்ததே - அங்கு!
ஆனால் இங்கே....?
அப்பா அம்மாதான் இந்த பிள்ளை களைத் தொட்டில் - கட்டில் - பிறகு கடைசி இடுகாடு சுடுகாடு வரை தூக்கிச் சுமக்க வேண்டும்.
திருமண வயதில் மணமுடித்து, பேரப் பிள்ளைகளுக்கு நல்வரவு கூறி - நாளும் அந்த கூடுதல் சுவையையும் - மகிழ்ச்சியையும் போதை யாக்கிக் கொண்டு - மற்ற கஷ்டங் களை மறந்துவிடும் வாழ்க்கை வினோத ஆயுள் தண்டனை இந்தப் பெற்றோர்களுக்கு!
நன்றி உணர்ச்சியோடு, முதுமையடைந்த பெற் றோர்களை (பொது இல் லங்களுக்கு அனுப்பி, பரா மரிக்க வைத்துவிடாமல்) தங்களுடன் வைத்துப் பாசம் காட்டும் பிள்ளைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அருகி வருவது வேதனைக்குரியது; அதை விடக் கொடுமை என்ன தெரியுமா?
கொழுத்த சம்பளம் பெற்ற பிறகும் கூட, பெற்றோர்கள் ஓய்வூதியக்கார நிலை அடைந்தவர்கள் என்றாலும் கூட, தங்களது பிள்ளைகுட்டிகளுக்கு சீர் வரிசை செய்து, அவர்களது கல்வி, பராமரிப்பையும் இவர்களிடம் ஒப் படைத்துவிட்டு, அவர்கள் கை நிறைய , பை நிறைய சம்பளம் வாங்கி வங்கியில் போட்டு வாழுவது - இன்றைய கணினி யுகப் புரட்சியின், காட்சியின் மாட்சி!
எவ்வளவு வெட்கக்கேடானது!
காலங்காலமாக வாழ்ந்து நமக்காக ஓடானார்களே அவர்களை உயர்த்தி வைத்து, அவர்களுக்கு நாம் தென்னையாய், பனையாய் இருந்து பயனளிப்போம் என்று எண்ணிடாமல், உறிஞ்சிடும் அட்டைகளாக வாழ்வது எவ்வளவு கொடுமை!
பென்ஷன் பணத்தை மொத்த மாக வாங்கி அந்தப் பணத்தைப் பிடுங்கி தாங்கள் வீடு வாங்கிக் கொண்டு அந்த பெற்றோருக்கு வீடு மேலே வாங்கித் தர முன் னோட்டமாக முதியோர் இல்லத் தைத் தேடி அனுப்பும்   நல்ல உள் ளங்கள்(?) நாளும் பெருகலாமா?
நாகரிகம் - பண்பு - என்பது பிறர் துன்பத்தினைக் கண்டு மகிழ்வதா? ஏன் செய்தால் என்னவென்று உரிமை (அதற்கு மட்டும்) கொண்டாடுவதா? படிப்பு வளருகிறது! பிடிப்பு தளருகிறது! வருமானம் பெருகுகிறது! தன் மானம் அருகுகிறது!
அந்தோ! என்னரும் தாய் மண்ணே!
உறிஞ்சும் அட்டைகளின் கண்ணீரில் மிதந்து அணைகட்டி  பெருமைப்படுவதா வாழ்க்கை?
- கி.வீரமணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...