Monday, August 27, 2012

விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கி! கலைஞர் பெருமிதம்


  • 50 ஆண்டுகளாக விடுதலையைப் படிப்பவன் நான்!விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கி!பெரியார் விட்டுச் சென்ற கொள்கை உட்பட எல்லா உடைமைகளையும் காப்பாற்றுபவர் வீரமணியார்! வீரமணியார்!! வீரமணியார்!!!விடுதலை ஆசிரியராக அரை நூற்றாண்டுத் தொண்டாற்றிய தமிழர் தலைவரைப் பாராட்டி கலைஞர் பெருமிதம்!

சென்னை, ஆக.26- பெரியார் விட்டுச் சென்ற எல்லா உடைமைகளையும், கொள் கைகள் உட்பட எதையும் காப்பாற்றுகின்ற திறன் உடையோர் யார் யார் என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில் வீரமணியார்! வீரமணியார்!! வீரமணி யார்!!! என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் புகழாரம் சூட்டினார்.
சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை கலைஞர் அவர்கள் ஆற்றிய தலைமை உரை வருமாறு:-
தமிழ்ப் பெருங்குடி மக்களின்  -  திராவிடப் பெருங்குடி மக்களின்  தலைவர்களில் ஒருவராக  -  என்னுடைய  அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வராக  -  இன்றையதினம் ஏற்றுக்  கொண்ட பொறுப்பிலே அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்ற வராக  -  அதற்கான நாளைக் கொண்டாடுகின்ற நேரத்தில் -  இந்த விழாவின் தலைமகனாக அமர்ந்திருக்கின்ற  விடுதலை ஏட்டின் ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு  இளவல் வீரமணி அவர்களே,  இந்த விழாவில் பாராட்டுரை வழங்கிய  திரு.  பொன்னீலன் அவர்களே,  திரு. ரமேஷ் பிரபா அவர்களே,  திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களே,  பேராசிரியர் ஜெக்மோகன்சிங் வர்மா அவர்களே,  அறிமுக உரையாற்றிய அறிவுக்கரசு அவர்களே,  வரவேற்புரை ஆற்றிய கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, இணைப்புரை மொழிந்த டெய்சி மணியம்மை அவர்களே, நன்றியுரை ஆற்றிய தம்பி அன்புராஜ் அவர்களே,   தாய்மார்களே,  பெரியோர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,
கலைஞர் அவர்களுக்குச் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கிறார் விடுதலை ஆசிரியர்.
இன்று  நடைபெறுகின்ற இந்த விழா உங்களுக் கெல்லாம் என்ன உணர்வை ஊட்டியிருக்கிறதோ; அந்த உணர்வைவிட ஒரு படி மேலாக ஏன் ஆயிரம் படிகள் மேலாக எனக்கு உணர்வை ஊட்டி யிருக்கின்ற விழாவாகும். `விடுதலை, `குடியரசு, `பகுத்தறிவு என்றெல்லாம் ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்த அந்தக் காலம் தொட்டு இன்று அந்த ஏடுகளுடைய பயனை அனுபவித்துக்  கொண்டி ருக்கின்ற  இந்தக் காலம் வரையில் இந்த ஏடுகள் எவ்வளவு சங்கடங்களுக் கிடையே,  இடர்ப்பாடு களுக்கிடையே வெளிவருகின் றன, வெளிவந்தன என்பதை நினைவு கூர்ந்திடுவது தான், யாரை இன்றைக்கு நாம் பாராட்டுகிறோமோ, யாருக்கு வாழ்த்து வழங்குகிறோமோ அதற்கு உரிய பயனை தரக்கூடிய ஒன்றாக அமையும்.
விடுதலை ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கிறார் கலைஞர்.
என்னைப் பொறுத்தவரையில், இங்கே வந்த விருந்தினர்கள், பாராட்டிய அன்பர்கள் யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. என் வீடு இது;  (பலத்த கைதட்டல்). என் வீட்டிற்குள்ளேயே வந்து என்னு டைய தம்பியை - என்னுடைய ஆருயிர் இளவலை நான் பாராட்டுகிற நேரத்தில், என்ன உணர்வு எனக்கும், பாராட்டப்படுகின்ற வருக்கும் ஏற்படுமோ அந்த உணர்வில் இம்மியும் குறைவில்லாமல் இன்றைய தினம் நாங்கள்  பெற்றிருக்கிறோம் என்பதை துடிக்கின்ற எங்களது இதயங்களைக் கேட்டால் அது சொல்லும் (கைதட்டல்).
இரட்டைக் குழல் துப்பாக்கி
விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்றைக்கு பத்திரிகை உலகத்தில் திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுகின்ற - திராவிட இயக்கத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இரண்டு மாபெரும் சக்திகளாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணருவார்கள். நான் விடுதலையிலே நம்முடைய இளவல் வீரமணி அவர்களைப் போல 50 ஆண்டு காலம் ஆசிரியராக  இருந்தவன் என்று மார்தட்டிக் கொள்கின்ற அந்தப் பெருமையை பெறாவிட்டாலும்கூட, விடுதலை பத்திரிகையை தினந்தோறும் படிக்கின்ற ஒருவன் நான் (கைதட்டல்). அதைப் படித்த பிறகு தான் அடுத்த பத்திரிகையை எடுப்பது என்கின்ற  வழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவன் நான்.
இன்னும் சொல்லப் போனால், சில நேரங்களில் அவசரத்தின் காரணமாக விடுதலை இதழிலே வருகின்ற பிழைகளைக் கூட -  எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு பிழைகளைக் கூட உடனடியாக நான் அதைத் திருத்தி தொலைபேசி மூலமாக உரியவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பிழையை திருத்திக் கொள்ளுங்கள், கருத்துப் பிழை அல்ல, எழுத்துப் பிழை என்று குறிப்பிடத் தவறாதவன். அந்த அளவிற்கு இன்றைக்கும் விடுதலையோடு சொந்தம் கொண்டாடிக் கொண்டு, உரிமை ஏற்படுத்திக்  கொண்டு வாழ் பவன் நான்.  (கைதட்டல்)
தி.மு.கழக ஆட்சியில் பல்வேறு  துறைகளில் வளர்ச்சி
இன்றைக்கு இங்கே பேசிய நம்முடைய நண்பர் பன்னீர் செல்வம் அவர்கள், சில செய்திகளை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே பொருளாதாரத் துறையிலே, தொழில் துறையிலே, வேறு பல மறு மலர்ச்சித்  துறைகளிலே ஏற்பட்ட வளர்ச்சி விகிதாச் சாரத்தை நாம் பதிய வைக்கத் தவறிவிட்டோம் என்று குறிப்பிட்டார்கள். நாம் பதிய வைக்கக் கூடாது என்று அல்ல, பதிய வைப்பதற்கு நம்மிடத்திலே பிரபலமான பத்திரி கைகள் இல்லை என்பதுதான்.
எந்த வானொ லியோ, தொலைக்காட்சியோ அப்படி நாம் பதிய வைப்பதற்கு பயன்படாமலே ஆகிவிட்டன என்பதுதான் முக்கியமான காரணமேதவிர, பதிய வைக்கக் கூடாது என்பதல்ல. இருந்தாலும் எனக்குள்ள மகிழ்ச்சி, பன்னீர் செல்வம் போன்ற வர்கள் பதிய வைக்க வேண்டிய காரியங்கள் கழக அரசிலே நிரம்ப உண்டு என்பதை உணர்ந்து, அப்படி பதிய வைக்கத் தவறிவிட்டோம் என்று நம்மிடம் கூறாமல் கூறி அந்தக் குறையை எடுத்துக் காட்டினார்களே அதுவே நமக்கு நிறைவான ஒன்று என்று நான் கருதுகின்றேன்.
திராவிட இயக்கத்தினுடைய பல கருத்துக்கள் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னது, பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னது, என்னுடைய அருமை இளவல் வீரமணி அவர்கள் எடுத்து இயம்பி வருவது இவைகளெல்லாம் நாங்கள் நடத்துகின்ற ஏடுகளோடு  நின்று விடுகின்றன.
உண்மைதான். காரணம், இது மற்றவர்களால் வெளியிடப்படாமல் இருட்டடிப்புக்கு  உள்ளாக்கப் படுகிறது. அதையும் இங்கே குழுமியிருக்கின்ற நீங்கள் உணர்ந்து கொண்டால் மாத்திரம் போதாது, நம்முடைய பன்னீர் செல்வத்தைப் போன்றவர்கள் தங்களுக்குள்ள வாய்ப்புக்களை, வசதிகளை, தங்களுக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி அதை நாட்டுக்கு ஏட்டாளர்களுக்கு இதழாளர்களுக்கு  எடுத்துச் சொல்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதைத்தான் நான் இந்த விழாவிலே ஒரு வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்; எனக்காக அல்ல, நாட்டுக்காக. சமுதாயத்திற்காக. இந்தச் சமுதாயம் ஏற்றம் பெற வேண்டும் என்ப தற்காக. ஒரு ஆட்சி எந்த அடிப்படையிலே உருவா கிறது, எந்த அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறது, தொண்டாற்றுகிறது என்பதை தொகுத்துச் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதைப் போல், பத்திரிகைகாரர்களுக்கும் இருக்கிறது.
நாம் எங்களுடைய ஏடுகளைப் பற்றிய வளர்ச்சியைப் பற்றிச் சொல்ல  வேண்டுமேயானால்  இன்றைக்கு விடுதலை 4 பக்கங்களில் வண்ண முகப் போடும், வண்ண எழுத்துக்களோடும், இன்னும் சொல்லப் போனால் பல்வேறு விஞ்ஞான புதுமை களை எடுத்துச் சொல்கின்ற ஏடாகவும் இன்றைக்கு  விளங் குகின்றது.  நான் ஆசிரியர் அவர்களிடத்திலே சொன்னேன்,  இப்பொழுதெல்லாம் விடுதலையை இயக்கத்திலே ஆர்வம் கொண்டவர்கள் மாத்திர மல்ல, உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள வேண் டும் என்று கருதுகின்றவர்களும், உடற்கூறுகள் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றவர்களும், மருத்துவத் துறை யிலே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் அக்கறை செலுத்துபவர்களும்  படிக்கக் கூடிய ஏடாக விடுதலை ஏடு மாறி வருகிறது என்று நான் அவர்களிடத்திலே சொன்னேன்.
இதைச் சொல்வ தால், இந்தச் செய்திகளோடு நீங்கள் விடுதலையைப் பார்த்து நிம்மதி அடைந்து விடக் கூடாது. இவைகளோடு ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்ற செய்திகளும் நம்முடைய சமுதாயத்தை சீரழிக்கின்ற உயர் ஜாதியின ருடைய ஆணவங்கள், அட்டகா சங்கள், அவர்களுடைய நிதானமற்றப் போக்குகள், அவர்களுடைய நெறியை நம்முடைய நெறியோடு கலப்பதற்கு நடத்துகின்ற நரித் தந்திரங்கள் இவை களையும், அதே நேரத்தில் நம்முடைய ஏடுகளின் மூலமாகச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின் றோம். அதை முரசொலி முடிந்த வரை செய்யும்.
விடுதலை நிச்சயமாக எப்போதும் செய்யும். முரசொலி முடிந்த வரை செய்யும் என்று சொல் வதற்குக் காரணம், அது ஒரு முழுக்க முழுக்க அரசியல் கட்சியினுடைய ஏடாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செய்திகளை எடுத்துச் சொல்கின்ற ஏடாகவும் அது நடைபெறுகின்ற காரணத்தால், அப்படி பழகி விட்ட காரணத்தால் முடிந்த வரையில் என்று சொன்னேன். விடுதலை அப்படியல்ல. எடுத்த எடுப்பிலேயே சனாதனத்தை, மதத்தை, மதவெறியை, மடாதிபதிகளின் கொட் டத்தை இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி, அவைகளையெல்லாம் அடையாளம்  காட்டி எச்சரித்த, எச்சரித்துக் கொண்டிருக்கின்ற புரட்சி ஏடுதான் விடுதலை இதழ்  என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
புரட்சி என்றால் என்ன பொருள்? புரட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் மாத்திரம் அது புரட்சி ஆகிவிடாது.  (கைதட்டல்)  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று சொன்னால் தான் பொருந்துகிறது.   எல்லோரையும் புரட்சிக் கவிஞர் என்று சொல்லி விட்டால், அது பொருந் தாது.   அதைப் போல புரட்சி ஏடாக விளங்குவது விடுதலைப் பத்திரிகை.
அந்த விடுதலைப் பத்திரிகை அளவுக்குக் கூட இல்லாமல்  நான் 1942ஆம் ஆண்டு  முரசொலி என்கிற கையேட்டைத் தொடங்கி, அதை  துண்டு அறிக்கைகளாக  வெளியிட்டு  எல்லோரி டத்திலும் இனாமாகவே  அதை வழங்கி  -  வரட்டுமே  வடலூர் வள்ளலார்   என்ற தலைப்பிலே  ஒரு கட்டுரை!   சிதம்பரத்திலே வர்ணாசிரம மாநாடு நடைபெற்ற போது, அதை எதிர்த்து ஒரு கட்டுரை.   இவைகள் எல்லாம்  முரசொலியில் எழுதிய  காலம் ஒன்று உண்டு.
நன்றாக எனக்கு நினைவு இருக்கிறது.  வருணமா?  மரணமா?  என்ற தலைப்பில்  ஒரு கட்டுரை.  எதற்காகத் தெரியுமா?  சிதம்பரத்திலே  உள்ள பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி,  வர்ணாஸ்ரம மாநாட்டை நடத்தினார்கள்.  அந்த மாநாட்டை எதிர்த்து  முரசொலி என்கிற அந்தத் துண்டு தாளில் நான் எழுதிய நீண்ட அறிக்கை  -  நீண்ட கட்டுரைக்குத் தலைப்பு தான்  வருணமா?  மரணமா? என்பதாகும்.
பரணி  பல  பாடிப் பாங்குடன்
வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்
சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச்
சோதாக்கள் சில கூடி
வருணத்தை நிலை நாட்ட     வகையின்றிக் கரணங்கள் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே  மானங் காக்க
மறத்தமிழா  போராடு!  (கைதட்டல்)
இதிலே ஆயிரம் துண்டு அறிக்கைகள் தயாரித்து சிதம்பரம் வீதிகளிலே விநியோகிக்கச் சொன்னேன்.    அன்றையதினம்  நான் சிதம்பரம் செல்ல வேண்டும்.  காரணம், என்னுடைய திருமணம் முடிந்து  முதல் இரவு நாள்.  அதற்கு நான் சிதம்பரம் செல்ல வேண் டும்.   திருவாரூரில் ரெயில் ஏறி, என்னுடைய நண்பன் தென்னனோடு  சிதம்பரத்தில் இறங்கினேன்.    புகை வண்டி நிலையத்திலேயே  போலீசார் வந்து,  நகருக்குள் போகக் கூடாது என்றார்கள்.  ஏன் என்று கேட்டேன்,  உங்களுக்கு  144 தடை உத்தரவு.   காரணம் இந்த நோட் டீஸ்.  மாநாட்டிற்கு எதிராக,  வர்ணாஸ்ரம மாநாட் டிற்கு எதிராக நான் எழுதி அச்சிட்டுத் தந்த  வருணமா? மரணமா?  என்ற  அந்த நோட்டீசை வைத்து சிதம்பரத்திற்குள் நுழையக் கூடாது என்றார்கள்.
என்னோடு வந்த  தென்னன்,  அய்யா அவருக்கு இன்றைக்கு முதல் இரவு, தயவு செய்து விடுங்கள் என்று சொல்லியும்,  போலீசார் விடவில்லை.   திரும்பி மறு ரெயிலிலே  ஏறி திருவாரூர்  வந்து  சேர்ந்தோம்.   முதல் இரவு இப்படி முடிந்தது.   (சிரிப்பு)  ஏன் இதைச் சொல்கிறேன்  என்றால்  ஒரு பத்திரிகையில் கருத்துக்களை வெளியிடக் கூட எவ்வளவு  கர்ணக் கடூரமான, கடுமையான அடக்கு முறைகள்  வைதீகத்தைக் காப்பாற்ற இருந்தன என்பதை எடுத்துச் சொல்லத்தான்  இதை நான் நினைவூட்டுகின்றேன்.
இயக்கத்தை எப்படி எல்லாம் வளர்த்தோம்?
அதற்குப் பிறகு  இப்படி பல கஷ்டங்கள்  - பத்திரி கையை நடத்த முடியாமல்!   நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களும், நானும்  அப்போதெல்லாம்  தந்தை பெரியார் அவர்களின் கட்டளைப்படி  சுற்றுப் பயணம்  - கூட்டங்களுக்குச் செல்வோம்.   அந்தக் கூட்டங்கள், மாணவர்கள் சுற்றுப் பயணம் என்ற பெயரால் நடை பெற்றது.   அப்படி நடைபெற்ற அந்தச் சுற்றுப் பயணங் களில்  அவரும் நானும்  எங்களோடு  ஈரோடு சுப்பையா போன்ற வர்களும்   கலந்து கொண்டு  மக்களுக்கு  விழிப்பு ணர்வை ஏற்படுத்தக் கூடிய  தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொல்கின்ற பெரும் பணியிலே நாங்கள் ஈடுபட்டோம்.   இவைகளைச் சொல்வதற்குக் காரணம், இந்த இயக்கத்தை  சுலபமாக யாரும் வளர்த்து விடவில்லை.
இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு  ஏதோ சொன்னோம், எழுதினோம், பேசினோம் என்ற அளவோடு யாரும் இருந்து விடவில்லை.   அடிகள் பட்டிருக்கிறோம், தாக்குண் டிருக்கிறோம்,  காயப்பட்டிருக்கிறோம், கல்லடி பட்டிருக்கிறோம்,  இன்னும் சொல்லப் போனால்  நாம் கண்ணெனப் போற்றிப் பாராட்டு கின்ற  தந்தை பெரியார் அவர்கள் மீது  சில காலிகள் கடலூரிலே செருப்பையே வீசினார்கள்.
அந்தச் செருப்பை எடுத்து  தந்தை பெரியார் அவர்கள்,  இன்னொரு செருப்பையும் தேடிப் பாருங்கள், கிடைத்தால் இரண்டையும் சேர்த்து மாட்டிக் கொள்ளலாம் என்று சொல்கின்ற அளவிற்கு   தந்தை பெரியார் அவர்கள்  தன்னுடைய பெருந்தன் மையைக் காட்டினார்கள்.  சாதி வெறியர்களை அடையாளம் காட்டினார்கள்.  பெரியார் இல்லாவிட்டாலும் வீரமணி இருக்கிறார்
இப்படியெல்லாம் இந்த இயக்கத்தை நாங்கள் வளர்த்தோம். அப்படி வளர்க்கப்பட்ட இந்தப் பேரியக்கம்  இன்றைக்கும்  மற்றவர்கள் பார்த்து அஞ்சுகின்ற அளவிற்கு நடை போடுகிறது என்றால், காட்சி அளிக்கிறது என்றால்,  பெரியார் இல்லா விட்டாலும்  என்னுடைய இளவல்  வீரமணியைப் போன்றவர்கள்  (கைதட்டல்)  இருக்கின்ற காரணத் தினாலேதான்.  பெரியார் விட்டுச் சென்ற  எந்த உடை மைகளையும்,  கொள்கை உட்பட எதையும்  காப் பாற்றுவதற்கு திறன் உடையவர் யார் யார் யார்  என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில்  - வீரமணியார்!  வீரமணியார்!  வீரமணியார்!  என்பது தான்.
அத்தகைய  அரும் பெரும் ஆற்றலாளர்  என்னுடைய அன்புக்குரிய இளவல் வீரமணி அவர்கள் .  அண்மையிலே  நம்முடைய டெசோ மாநாடு நடைபெற்ற நேரத்தில் -  விரைவில் திரும்பி விடுவேன் என்று சொல்லி  அமெரிக்கா  சென்றார்.   ஆனால்  அவர்  சொன்னபடி விரைவிலே திரும்ப வில்லை.   என்ன காரணம் என்று  நானும் விசாரித் துக் கொண்டிருக்கிறேன்.   தம்பி அன்புராஜைக் கேட்டாலும் அல்லது பூங்குன்றனைக்  கேட்டா லும்  வந்து விடுவார் என்று சொன்னார்களே தவிர,  எதையோ மறைத்து  இவர்கள் பேசுகிறார்கள் என்பதை நான் உணர்ந்து  கொள்ள முடிந்தது.    அதற்குப் பிறகு தான் வீரமணி அவர்கள்  அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து என்னைச் சந்தித்த போதுதான் நடந்தவைகளை சொன்னார்.   நாம் பெற்ற பேறு!
நடந்தவைகளாக அவர் சமாதானமாகச் சொல்லப்பட்டது, இனி  என்றைக்கும் நடப்பவை களாக இருக்கக் கூடாது என்கின்ற   அந்த உணர்வோடுதான்  அந்தச் செய்திகளைக் கேட்டேன்.   அவர்  மீண்டும் நம்மோடு வந்து இன்றைக்கு அவரு டைய  அய்ம்பதாவது  விடுதலை ஆசிரியாகப் பொறுப்பேற்றிருந்த விழாவை நடத்துகின்ற அளவிற்கு இருக்கிறார்  என்றால்   இது நாமெல்லாம் பெற்ற பேறு  என்றுதான் சொல்ல வேண்டும்.  (கைதட்டல்)
அத்தகைய பேறு நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கின்றது.   அவர் வாழ வேண்டும்.  எனக்கும் அவருக்கும்  வயது வித்தியாசம் உண்டு.   என்னை விட இளையவர்.   இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும்.  வாழப் போகிறவர்  (கைதட்டல்)  அப்படி அவர் வாழ்கின்ற நேரத்தில்  - தமிழ் நாட்டிற்கு,  தமிழ்ச் சமுதாயத்திற்கு,  அடித்தட்டு மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற வேண் டும்.
அந்தப் பணிக்கு  நான் இருந்தால்,  நானும் அவருக்கு உதவியாக இருப்பேன்  என்று கூறி  இன்றைய விழாவில் பங்கெடுத்துக் கொண்டதை  ஒரு பெரும் பேறாகக் கருதி அவருக்கு  என்னுடைய  வாழ்த்துக்களை மேலும் மேலும் குவித்து விடைபெற்றுக் கொள்கிறேன். -இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


ஆகஸ்ட் 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...