Sunday, August 26, 2012

ஆகஸ்டு 15 அல்ல - ஆகஸ்டு 25 - விடுதலை விழா!



ஆகஸ்டு 15 அல்ல - ஆகஸ்டு 25 - விடுதலை விழா!
இயக்க வரலாற்றில் நேற்று (25.8.2012) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழா என்றும் பேசப்படக்கூடியது.
ஒரு ஏட்டை முன்னிறுத்தி எடுக்கப் பட்ட இலட்சிய விழா அது. அந்த ஏட்டில் அரை நூற்றாண்டுக்காலம் ஆசிரியராக இருந்தவர்தான் உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
நேற்று காலையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. எஸ்.மோகன் அவர்கள் தெரிவித்த கருத்து முக்கியமானது. இது வரை அதிகபட்ச காலம் ஏடு ஒன்றுக்கு ஆசிரியராக இருந்தவர் ஹெரால்டு மேக்மில்லன் என்பவர்தான். அவர் இருந்தது கூட 27 ஆண்டுகளே! ஆனால் நமது வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகளையும் கடந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டாரே!
இந்த உண்மையும், தகவலும் வரலாற் றில் இடம்பெற்றுவிட்ட நவரத்தினப் பதிப்பே.
விடுதலை ஏடு என்பது சாதாரண செய்தி ஏடு (NEWS PAPER) அல்ல; மாறாகக் கருத்துக் கருவூலம் (VIEWS PAPER) ஒருவாரம் கழித்துக்கூட படிக்கலாம். காரணம் காலத்தை வெல்லும், சுணை யினைக் கொண்டது.
தமிழ்நாட்டை மூவேந்தர்கள் எல்லாம் ஆண்டனர். பெரும்பாலும் ஆரிய அடிமை களாக கல்வி என்ற பெயரால் சமஸ் கிருதத்தைச் சொல்லிக்கொடுக்கும் நிறுவனங்களை ஏற்படுத்திக் கெ()டுத்த வர்களாகத்தான் அவர்கள் இருந்தனர்.
பதினோறாம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட் டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர் கட்கும் மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.
வேதங் களும், சமஸ்கிருத இலக்கணமும், (ஆசிரியருடையது) மீசாம்ச வேதாந்த தத்துவங்களுமே அங்கு சொல்லித் தரப்பட்டன!.. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனத்திலும் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்கு அளிக்கப்பட்டது. 260 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் அங்கு இருந்தனர்.
இதிகாசங்களும், மனுதர்ம சாஸ்திரமும் அங்குக் கற்பிக்கப்பட்டன. பன்னிரெண்டாம் நூற்றாண்டு சோழ அரசர்கள் திருவாவடு துறையில் ஒரு கலைமன்றம் கண்டனர். அங்கு (வட மொழியில் உள்ள) சாரகசமிதை, அஷ் டாங்க இருதய சமிதை என இரண்டு பாடங்கள்! தமிழ் வேந்தர் ஆரியத்திற்கு அடி பணிந்ததற்கு இன்னும் என்ன சான்று தேவை?
(தமிழன் தொடுத்த போர் மா. இளஞ்செழியன்)
பார்ப்பனர்களுக்கு மானியமாக நிலங்களை அள்ளிக்கொடுத்தனர். மங் கலம், மங்கலம்என்று வருகின்ற ஊர்கள் எல்லாம் தமிழ்வேந்தர்களால் பார்ப்பனர் களுக்குத் தூக்கிக் கொடுக்கப்பட்ட இனாம் பகுதிகள்   தமிழர்களின் பெயர்கள், தமிழ்நாட்டுக் கோவில்களின்  பெயர்கள், ஊர்ப்பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாகிவிட்டன. தமிழ்நாடு என்பது பார்ப்பனக் கூடாரமாகிவிட்டது.
இந்த நிலையில் தான் திராவிடர் இயக்கம் என்ற எழுச்சி சகாப்தம் காலத்தின் கட்டாயப் பிரசவமானது. அதுவே தன்மான இயக்கத்தை சூரியக் கோளான தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கி ஒரு தலைகீழ் அதிரடிப் புரட்சியை முக்கால் நூற்றாண்டில் நடத்திக்காட்டினார்.
மக்கள் மனதில் மண்டிக்கிடக்கும் மடமைக்களை வேரோடு பிடுங்கி எறிந்து பிரச்சாரக் களத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளை, இதழ்களை ஆயுதமாக பயன்படுத்தினார்.
அவர் நடத்திய திராவிடன், குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை போன்ற ஏடுகளின் பெயர்களே தனித்தன்மையானவை! (தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் என்று பேசும்தலைப் பிரட்டைகள் இவற்றைத் தெரிந்துகொள் ளட்டடும், தனித்தமிழ்ப் பெயர்கள் மட்டுமல்ல - அந்த பெயரிலேயே தம் கொள்கைகளைத் தவழ விட்டுள்ளாரே!)
அவற்றில் விடுதலை ஏடு 1935ஆம் ஆண்டு தொடங்கி - தடை நச்சாறுகளை நசுக்கி எறிந்து, துரோகக் காடுகளை எரித்துத்தள்ளி, நன்றி என்ற ஒன்றை அறியாத தமிழ்மக்களின் பரிதாப நிலை யையும் புறந்தள்ளி, நெருக்கடி நிலைத் தணிக்கைகளையும் நெட்டித்தள்ளி, செம்மாந்து தலைநிமிரும் படைக்கு தனி சொந்தக்காரனாக விடுதலை வீரன் அரிமா மீது சவாரி செய்து கொண்டு இருக்கிறான்.
விடுதலை என்ற பெயர் வேதப் பித்தர் களின் விலாவில் வேல் பாய்ச்சுகிறது. ஆரியப் பண்பாட்டு வேலிகளை வேரோடு வீழ்த்தி வருகிறது.
சமூகநீதிக் களத்தில் சமர்ப்புலியாய்த் துடித்தெழுந்து சமுதாயத்தில் அடிக்குழி யில் தள்ளப்பட்ட மக்களையெல்லாம் மேலே கொண்டு வரும் பாரந்தூக்கியாக அல்லவா அது செயல்பட்டு வருகிறது! வருகிறது!
இன்னும் சமூக நீதித்திசையில் எட்டப்பட வேண்டிய இலக்குகளில் வெற்றி பெற இந்தியத் துணைக் கண்டத்திலே எதிர்பார்க்கப்படும் பூமி - தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணல்லவா!
விடுதலை எனும் வீரனின் கரங்களில் எப்பொழுதும் பாதுகாப்பு மற்றும் முன் தாக்கும் ஆயுதங்கள் கண்மூடாமல் விழிப் புடை எரிமலையாய்க் கனன்று கொண்டே இருக்கும்.
தந்தை பெரியார் அவர்களின் தன்மான எழுச்சிக் கர்ப்பத்தில் தரித்த அந்த போர்வீரனின் தளகர்த்தராக அரை நூற்றாண்டாக இருக்கும் பெருமைக்குரிய சாதனை முகட்டில் கம்பீரமாய் வெற்றிச் சிரிப்புடன் நிற்கும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களை திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரும், இதழ் உலகில் தனி சிம்மாசனம் போட்டு வீறு கொண்ட பார்வையுடன் வீற்றிருக்கும் மானமிகு கலைஞர் அவர்களும், தமிழின ஊடக விற்பன்னர்களும், நீதியரசர்களும் பாராட்டுவது மிகப் பெரும் பொருத்தம் தானே!
அத்தகைய நாள் தமிழினத்தின் திருநாள்தானே! தமிழன் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டாமா? என்றார் விடுதலை பணிமனை திறப்பு விழாவில் (1965)  காவி உடை தரித்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். அதில் ஒரு கட்டமாகத் தான் விடுதலைக்கு 50 ஆயிரம் சந்தாக்களைச் சேர்த்து 50 ஆண்டுகள் விடுதலைப் பணியாற்றிய தலைவரிடம் அளித்து மகிழ்ந்தனர் கழகக் கண்மணிகள் (24.12.2011)
விடுதலையை அரசு நூலகங்களி லிருந்து விடுதலை கொடுக்க எத்தனித்தவர்கள் இதற்குப் பிறகாவது திருந்த வேண்டும். எதிர்ப்பு என்பதும் தடை என்பதும் எங்களுக்குக் கிடைத்த சர்க்கரைப் பொங்கல். இதனைத் தான் எங்களுக்குச் செல்லமாய் ஊட்டினார் ஈரோட்டு ஏந்தல்.
சில ஆயிரம் அரசு சந்தாக்களுக்குத் தடை என்றால் அவற்றைவிட பல மடங்குப் பெருக்கி 50 ஆயிரம் புதிய தமிழர்கள் அல்லவா விடுதலை க்கு வாசகர்களாகக் கிடைத்துள்ளனர்.
எத்தனையோ எண்ண அலைகள் அலை மோதுகின்றன. நெருக்கடி காலத்தில் நெருப்பு நாக்கைக்காட்டி விடுதலையை பொசுக்கி விடலாம் என்று மனப்பால் குடித்து வியூகம் வகுத்தனரே முடிந்ததா?
வீரத்தாய் அன்னை மணியம்மையார் அதனை ஊதி அழித்தாரே!
ஆசிரியருக்கு 50 ஆண்டுத் தொண் டுக்கான பாராட்டு விழாவுக்குள் இந்த வரலாற்றுப் பொன்மலர்கள் எல்லாம் பொக்கிஷங்களாகப் பூத்துக் குலுங்கு கின்றன.
50 ஆண்டு விடுதலைக்கு ஆசிரியர் மானமிகு கி.வீரமணி என்றால், நான் 50 ஆண்டு விடுதலை வாசகன் என்று உரிமை கொண்டாடினார் மானமிகு கலைஞர். பெரியார் இல்லை. ஆனால் வீரமணி நம்மிடையே   இருக்கிறார் என்று சொன்ன வர் சாதாரண தலைவரல்ல. திராவிட இயக்கத்தில் இன்று இருக்கும் மூத்த தலைவரின் முத்திரைக் கருத்து இது.
இது என் வீடு - சொந்த வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று அவர் சொன்னார் என்பதில் மிக ஆழமான பொருள் உண்டு.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து இறக் குமதி செய்யப்பட்ட விக்டோரியா - 820 என்ற புதிய அச்சு இயந்திரத்தை தந்தை பெரியார் முன்னிலையில் இயக்கி வைத்தவர் முதல்வர் கலைஞராயிற்றே! (4.11.1969).
இன்று இரு தலைவர்கள் மீதுதான் ஆரியம் தன் அம்புறாத் தூணியிலிருந்து அம்புகளைக் குறி பார்த்து வீசுகின்றது. அப்படி வீசுவதைத்தான் தனது குருதி ஓட்டமாகவும்  பிறவியின் பயனாகவும் கருதிக் கொண்டு இருக்கின்றது.
கால் பட்டால் குற்றம், கைபட்டால் குற்றம் என்ற பாணியில் பாஷாணத்தில் துவைத்து பத்திரிகைகளை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இவை ஒன்று போதாதா? இவர்கள் இருவரும்தான் நம்மினத்தின் நம்பிக்கை நட்சத்திரத் தலைவர்கள் என்பதற்கு
விடுதலை விழா - அதன் ஆசிரிய ருக்கும், தாய்க் கழகத்தின் தலைவருக்கு பாராட்டு விழா - அதற்கு திமுக தலைவர் பங்கேற்றது  என்பது ஏதோ இரு கட்சிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்டதா?
இவ்விழாவில் உதிர்க்கப்படும் ஒவ் வொரு சொல்லையும் உன்னிப்பாகக்  கணித்துக் கொண்டு இருப்பர் நம் இன எதிரிகள்!
இது நம் மக்களுக்கு எங்கே புரியப் போகிறது? நண்டுகளாகத்தானே ஒருவர் காலை இன்னொருவர் இழுத்துக் கொண்டு இருப்பர்.
விடுதலைக்குப் பாராட்டுத் தெரிவித்த கலைஞர் அவர்கள் நம்முடைய பணிகள் பற்றி முக்கியமான ஒரு தடத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
நம்முடைய சமுதாயத்தைச் சீரழிக் கின்ற உயர் ஜாதியினருடைய ஆண வங்கள், அட்டகாசங்கள், அவர்களுடைய நிதானமற்ற போக்குகள், அவர்களுடைய நெறியை நம்முடைய நெறிகளோடு கலப்பதற்கு நடத்துகின்ற நரித் தந்தி ரங்கள்பற்றி நம் ஏடுகளின் வாயிலாகச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின் றோம் - என்று கலைஞர் அவர்கள் அழுத்தமாகக் கூறினாரே  இத்தகைய கருத்துக்களை - உணர்வை ஊட்டும், ஈட்டி முனைகளை - திராவிடர் என்ற சொல்லைக் கட்சிகளின் பெயர்களில் பொறித்துக் கொண்டிருக்கும் கட்சிகளின் தலைவர்கள் வாயிலிருந்து வர முடியுமா? வந்திருக்கிறதா?
முடிந்தவரை முரசொலி செய்கிறது. விடுதலை அப்படியல்ல; எடுத்த எடுப் பிலேயே சனாதனத்தை மதத்தை மத வெறியை மடாதிபதிகளின் கொட்டத்தை எல்லாம் எடுத்துக்காட்டி, அவைகளை யெல்லாம் அடையாளம் காட்டி எச்சரித்து, எச்சரித்துக் கொண்டிருக்கிற புரட்சி ஏடுதான் விடுதலை இதழ் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை
மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை அப்பட்டமாக அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் மானமிகு கலைஞர் அவர்களால் தான் இப்படி யெல்லாம் சொல்ல முடியும்.
அரசியல் தனமாக சில்லறை இலாபங்களுக்காக திராவிடர் கழகத் தலைவரையோ, திமுக தலைவரையோ கொச்சைப்படுத்தும் வகையில் கோபுரத் தில் ஏறிக் கூவும் தமிழின அன்பர்கள், இயக்கத்தின் அடிநாதக் கொள்கை என்ற கோட்பாட்டுப் பார்வையோடு - ஆசாபாச சேற்றுக் குளியலைத் தவிர்த்து, கூர்மையாகக் கவனித்து, கணிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால் அப்புறம் என்ன   பெரியார்? அப்புறம் என்ன அண்ணா? அப்புறம் என்ன இனமானம்? அப்புறம் என்ன திராவிட என்ற கட்சி முத்திரை?
கலைஞர் அவர்களின் உரை முத்தின் ஒளி என்ன சொல்லுகிறது?
தமிழர்களே, தமிழர்களே, விடு தலையையும் முரசொலியையும் தவறாமல் வாங்குங்கள்! தவறாமல் படியுங்கள்!! என்ற வேண்டுகோள் அந்தவுரையில் ஒலிக்க வில்லையா!
அதினிலும் மேலாக திராவிட இயக் கத்தைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக திராவிடர் கழக திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கட்டாயம் இந்த ஏடுகளை வாங்கிட வேண்டும், படித்திட வேண்டும் என்ற கட்டளைகூட மிகுந்து நிற்கவில்லையா?
எதிரி ஏடுகள் ஒரு பக்கம் ஈட்டியைத் தூக்கிக் கொண்டு நிற்கின்றன என்றால் அந்தக் கும்பலோடு கூட்டு சேர்ந்து குழுப் பாட்டுப் பாடும் எட்டப்ப ஏடுகளாகவும் இதழ்களாகவும்கூட நம் இன ஏடுகள் குதித்துக் கொண்டு செயல்படுகின் றனவே! வெட்கக்கேடு அல்லவா!
தன்மானம் யாரால் வந்தது? இன மானம் ஊட்டப்பட்டது யாரால்? மொழி மானம் புயலாய்க் கிளம்பியது எப்பொழுது?
கல்வி உரிமை கிடைத்தது எந்தக் கால கட்டத்தில்? உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கும் அருகதைக்காக கொடி தூக்கி யவர்கள் யார்? சிறைக் கோட்டம் சென்றவர்கள் எவர்?
பெண்ணடிமை தகர்ந்தது எப்படி? பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது எந்த ஆட்சியில்? அவர்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் வாய்க்கப் பெற்றது எவரால்?
சூத்திரன் என்பதை சுவையான சுமையாகக் கருதி மகிழ்ந்த மக்கள் மத்தியில் (சூத்திரன் என்றால் வேறு ஒன்றும் இல்லை. வேசி மகன் என்ற பொருள்) சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! என்ற சாட்டையை நம் கையில் கொடுத்துச் சுழற்றக் கற்றுக் கொடுத்த தலைவர் யார்? இயக்கம் எது?
இவை எல்லாம் மீண்டும் தலைகுப்புறக் கவிழ வேண்டுமா? இன்னும் மனுதர்ம மூக்கணாங் கயிறு பூட்டப்பட்ட பொதி மாடுகளாக நாம் ஆகப் போகிறோமா?
தமிழ் செம்மொழி ஆனால்  வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று எழுதுவது தினமலர் பார்ப்பன ஏடு அல்லவா! வணிக விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்றால் மொழி நக்சலிசம் என்று எழுதுவது பார்ப்பன இதழ் துக்ளக் அல்லவா!
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றால் கிடந்தது கிடக் கட்டும் கிழவனைத் தூக்கி மணையில் வை  என்று கதைக்கும் கல்கி பார்ப்பன இதழ் அல்லவா!
இந்த வரிசையில் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. இவைகளைத் தெரிந்து கொண்டால்தான் நாம் தமி ழர்கள் - தன்மானம் உள்ளவர்கள். உணராவிட்டால் சூத்திரர்கள்தாம் - பஞ்சமர்கள் தாம்!
இவற்றை ஒலிக்கும் சங்கநாதம் தான் தமிழர் தலைவருக்கு - விடுதலை ஆசிரியருக்கு நேற்று நடத்தப்பட்ட விழா!
பாராட்டு - தனிப்பட்ட எனக்கல்ல என்று தமிழர் தலைவர் கூறியதில் தன்னடக்கம் மட்டுமல்ல; தந்தை பெரியார் கற்றுக் கொடுத்த பொது நலமும், தொண்டறமும் இனநலமும் தலைதூக்கி நிற்கின்றன.  இன்றைய கால கட்டத்தில் இந்த விழா ஒரு திருப்புமுனைவிழா.
தமிழா இனவுணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு - இதுவும் தமிழர் தலைவர் கொடுத்த முழக்கம் தானே!
(வளரும்)
- கலி. பூங்குன்றன் 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...