Tuesday, July 24, 2012

நதி நீரோட்டமும், தேசிய நீரோட்டமும்!


முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி உச்சநீதிமன்றம் ஒரு ஆணையை நேற்று வழங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணியை மேற்பார்வையிட தமிழ்நாடு சார்பில் ஒரு பொறியாளரும், கேரளா சார்பில் ஒரு பொறியாளரும், மத்திய பணிகள் ஆணையம் சார்பில் நியமிக்கப்படும் ஒரு பொறியாளரும் இடம் பெறவேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் காணப்படும் மற்றொரு அம்சமாகும்.
காவிரி நீர்ப் பிரச்சினையானாலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையானாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் மனப்பான்மை சம்பந்தப்பட்ட அரசுகளுக்குக் கிடையாது என்ற நிலையில் இந்தத் தீர்ப்பைக் குறித்து தமிழ்நாட்டு மக்கள்  எந்த முடிவுக்கும் வருவது என்பது கேள்விக்குறியே!
27-2-2006 அன்று இதே உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்ததே - அதனைச் செயல்படுத்தியதா கேரள அரசு? அப்படி செயல்படுத் தாத கேரள அரசின் மீது உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ எடுத்த நடவடிக்கை என்ன?
மாறாக ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், 142 அடிக்குத் தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையில் உயர்த்தக்கூடாது என்கிற வகையில் கேரள மாநில அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியதே (Kerala Irrigation and Conservation Act - Amendment 2006). இந்தச் சட்டமீறல் மீது உச்சநீதிமன்றம் இதுவரை குறைந்த பட்சம் விமர்சிக்கவில்லையே!
கருநாடக மாநிலத்திலும் அப்படிதான் நீதிமன்ற தீர்ப் புக்கு எதிராக ஓர் சட்டம் இயற்றப்பட்டது (பங்காரப்பா முதல் அமைச்சர்) அதுவும் கண்டு கொள்ளப்படவில்லையே!
அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது - அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நீதி மன்றத்திலேயே கேரள மாநில அரசின் தலைமை வழக்கறிஞரும் ஒப்புக் கொண்டுவிட்டாரே. இதற்கு மேலும் கேரள அரசு சிறு குழந்தை போல் ஒட்டாரம் பிடிப்பது ஆட்சி அமைப்பு முறைக்கு அழகல்லவே!
வெளிப்படையாகப் பிரிவினை பேசினால்தான் சட்டப்படி குற்றம் - இப்படி மறைமுகமாகப் பிரிவினையைத் தூண்டும் வகையில் ஒரு மாநில அரசு நடந்து கொண்டால் அது மட்டும் குற்றம் இல்லையா?
நீதிபதிகள் குழுக்களை எத்தனை முறைதான் நியமிப்பது? அப்படி நியமனம் செய்யப்பட்ட அத்தனைக் குழுக்களும், 142 அடி நீரைத் தாராளமாகத் தேக்கலாம் என்றுதானே உறுதிப் படுத்தியிருக்கின்றன.
இதில் மேலும் ஒரு தகவல் உண்டு. 1241 அடி நீளத்தில் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்ட இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 172 அடி உயரம் கொண்டது. இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி! திடீரென வரும் வெள்ளத்தைச் சமாளிக்கவே 152 அடி என்று வரையறை செய்யப்பட்டது - தொழில் நுட்ப ரீதியாக.
அணையை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது (25-11-1979) ரூ.21 கோடி செலவில் பெரியாறு அணையைப் பலப்படுத்த வேண்டும் - அந்தச் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதே!
இவ்வளவுக்கும் அப்பொழுது மத்திய நீர்வளத்துறை தலைவராக இருந்தவர் கே.சி.தாமஸ் என்ற கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். அணை பலப்படுத்தப்பட்ட பிறகு நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு, தன் செலவில் அணையைப் பலப்படுத்தியது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனாலும் கேரளம் 142 அடி அளவுக்கு நீர் மட்டத்தை உயர்த்து வதற்கு சம்மதிக்கவில்லை.
அடாவடித்தனம்! அடாவடித்தனம்!! அடாவடித்தனம்!!! இதற்கு மேல் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? நேற்றைய உச்சநீதிமன்ற ஆணையில் கூட பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும்போது, கேரள அரசின் சார்பில் பொறியாளர் ஒருவர் இடம் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை சாக்காகக் கொண்டு எந்தெந்த வகைகளில் எல்லாம் சண்டித்தனம் செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
சுருக்கமாகச் சொன்னால் நதி நீரோட்டம் - இந்தியத் தேசிய நீரோட்டத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டது. 22 காரட் தேசியவாதிகளும், சர்வதேசியவாதிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 16-31



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...