Monday, June 11, 2012

பாடத் திட்டத்தில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பைக் கொச்சைப்படுத்துவதா?


மத்திய அமைச்சர் கபில்சிபலிடமிருந்து மனிதவள மேம்பாட்டுத்துறையை மாற்ற வேண்டும்
தமிழர் தலைவர் அறிக்கை


தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பைக் குறித்து 12ஆம் வகுப்புப் பாடத்தில் கொச்சைப் படுத்திக் கார்ட்டூன் போடப்பட்டு இருப்பதைக் கண்டித்தும், தொடர்ந்து கல்வி - சமூக நீதித் துறையில் பல்வேறு குளறுபடிகளைச் செய்து கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் கபில்சிபலிட மிருந்து மனிதவள மேம்பாட்டுத் துறையை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு அறிவியல் பாடத் புத்தகத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப் பினைக் கேலி செய்யும் கார்ட்டூன் இடம் பெற்றுள்ளது.
இந்தியைப் பற்றிப் புரிதல் இல்லாமல் மொழிப் பிரச்சினையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை நடத்தினார்கள் என்கிறது அந்தக் கேலிச் சித்திரம்.
உண்மை என்ன?
உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகள் ஏன் நடைபெற்றன என்பதைப் புரிந்து கொள்ளாதது என்.சி.இ.ஆர்.டி. என்ற அமைப்பு தானே தவிர தமிழ்நாட்டு மக்களோ, மாணவர்களோ, திராவிடர் இயக்கத்தினரோ அல்ல.
சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவே!
1937இல் சென்னை மாகாணத்தின் பிரதமராக வந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் தான் முதன் முதலில் இந்தியைத் தமிழகப் பள்ளிகளில் புகுத்தினார். இந்தியாவில் வேறு மாநிலங்களில் அப்பொழுது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அங்கெல்லாம் இந்திப் புகுத்தப்படவில்லை.
ஆச்சாரியார்தான் குயுக்தியாக சென்னை மாநிலத்தில் இந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் தொடக்கக் கட்டமாக இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று வெளிப் படையாக தம் பார்ப்பன உள்ளக் கிடக்கையை வெளிப் படுத்தினார்.
தந்தை பெரியார் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் அணி வகுத்து நின்றனர். இந்தி என்பது பார்ப்பனீய - சமஸ்கிருத கலாச்சாரத் திணிப்பு என்பது வரலாற்றுக் கண் கொண்டு பார்ப்பவர் களுக்குத் தெரியக் கூடிய உண்மையாகும்.
இந்தி தமிழ்நாட்டில் திணிக்கப்படும் ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்நாடே எரிமலையாகக் கொந்தளித்து எழுந்திருக்கிறது.
தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டம்
உச்சக் கட்டமாக தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தையே (1.8.1955) தந்தை பெரியார் அறிவித்தார். அதைக் கேட்டு இந்தியாவே குலுங்கியது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி புகுத்தப்படாது என்று பிரதமர் நேரு அவர்களின் சார்பாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் காமராசர் அவர்கள் அளித்த உறுதி மொழியின் பேரில், போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியார்.
அண்ணாவின் இரு மொழி சட்டம்
அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக குறுகிய காலம்தான் இருந்தார் என்றாலும், அந்தக் கால கட்டத்தில் தமிழ்நாட்டில் இரண்டே மொழிகள்தாம் தமிழும், ஆங்கிலமும்தான்; இந்திக்கு இடமில்லை என்று சட்டமே இயற்றப்பட்டு விட்டதே!
இந்தப் பின்னணிகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக என்.சி.இ.ஆர்.டி. பள்ளி மாணவர்கள் மத்தியில் பொய்யான நச்சு விதைகளை விதைக்கலாமா?
பாடத் திட்டம் என்றால் தகவல்களைத் தெரிவிக்கலாம். தங்களின்  கருத்துக்களைத் திணிக்க முயலக் கூடாது என்பது அடிப்படையாயிற்றே!
அண்ணல் அம்பேத்கர் பற்றி...
அண்ணல் அம்பேத்கர் அவர்களை கொச்சைப்படுத்திக் கார்ட்டூன் வெளியிட்டதன் காரணமாக எழுந்த புயல் அடங்குவதற்குமுன், இப்பொழுது இந்தப் புயலையும் கிளப்பி விட்டுள்ளனர். உடனடியாக இந்தி எதிர்ப்பைக் கொச்சைப்படுத்திய இந்தப் பகுதி நீக்கப்பட வேண்டும்; இதற்குக் காரணமானவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
கபில்சிபல் விலக வேண்டும்
கல்வியிலும் - அதன் தொடர்பான சமூகநீதியிலும், பாடத் திட்டங்களிலும் பல குளறுபடிகள் நடந்து வருவ தற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆவார். பார்ப்பன சிந்தனைக்கு ஆட்பட்டு சமூகநீதிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். மனித வள மேம்பாட்டுத்துறை - அவரிடமிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நமது முக்கியமான வேண்டுகோள்.
இந்தி எதிர்ப்புத் தொடர்பான பகுதியை நீக்காவிடின் அடுத்த கட்டப் போராட்டம் குறித்துக் கழகம் யோசிக்கும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...