Wednesday, May 23, 2012

தற்கொலைகள்!


இந்தியத் துணைக் கண்டத்தில் ஆண்டு ஒன்றுக்குத் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிக் குதிக்கிறது.  மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் 20 விழுக்காடு.

2009இல் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் 223.

பொதுவாக இந்தத் தற்கொலை முடிவுக்குக் காரணங்கள் என்னென்ன?

காதல் தோல்வி 54%

இனம் தெரியாத வேதனை 26%

தாழ்வு மனப்பான்மையால் ஆங்கிலம் தெரியாமையால் 15%

உடன் மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதால் 3%

கேலிக் கொடுமையால் (ரேக்கிங்)  2% இப்படியாகக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றைக் களைவதற்கு அரசு அளவிலோ, கல்வி நிறுவனங்களோ மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டாமா?

கல்வியாளர்களை அழைத்து அவர்களின் கருத்துக் களைக் கேட்க வேண்டாமா? ஓர் உயிர் கோழைத் தனமாக இழக்கப்படுவது குறித்து கவலைப்பட வேண்டாமா?

போவது ஓர் உயிர் என்றாலும்; அதனால் பாதிக்கப்படுவது ஒரு குடும்பம் ஆயிற்றே!

நம் நாட்டுக் கல்வி முறை மாணவர்களை வயிற்றுப் பிழைப்புக்கான லைசென்ஸ்தாரராகத் தயாரிக் கின்றனவே தவிர துணிச்சல், தன்னம்பிக்கை, புதியன கண்டுபிடிக்கும் ஆர்வம் இவற்றை நோக்கிக் கொண்டு செலுத்தப்படுவதில்லையே!

மனப்பாடம் செய்து வாந்தி எடுத்து மதிப்பெண் பெற்றால் போதும் என்ற நிலை ஆரோக்கியமானது தானா?

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலுக்குப் படித்த (civil) விழுப்புரம் - கருவேப்பிலைப் பாளையத்தைச்சேர்ந்த தைரியலட்சுமி என்ற மாணவி விடுதியில் தூக்கு மாட்டிக் கொண்டு மரணத்தை அழைத்துக் கொண்டு விட்டார் என்ற செய்தி எத்தகைய அதிர்ச்சிக்குரியது!

தமிழ் வழியில் படித்துக் கொண்டிருந்த அந்த மாணவி  பொறியியல் கல்லூரி முதலாமாண்டு தேர்வில் தோல்வி களைக் கண்ட நிலையில் (போதிய மதிப்பெண்கள் பெறவில்லை) இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

முதல் தலைமுறையாக பெரிய நகரங்களுக்கு வந்து படிக்கும் கிராமப்புற இருபால் மாணவர்களுக்கென்று தனிக் கவனம் தேவை என்பதை இந்த மரணம் உணர்த்தவில்லையா?

பன்னிரெண்டாம் வகுப்பு வரை தாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்கள் திடீரென்று தொழில் நுட்பம் தொடர்பான படிப்பினைப் படிக்கும்பொழுது திணறும் ஒரு நிலை ஏற்பட்டதாகவே கருதப்பட வேண்டும்.

மேனிலைப் பள்ளி வரை தமிழ் பயிற்று மொழி;  கல்லூரிகளில் ஆங்கில வழிப் பயிற்று மொழி என்கிற நிலைப்பாடுகளும் இருந்து வருகின்றன. தமிழில் படித்தவர்கள் மேல்படிப்புக்கு வரும் பொழுது, அதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டாமா?

இன்னும் நம் நாட்டில் தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முதல் தலைமுறையாகப் படிப்போருக்கும் இடையில் உள்ள ஏற்றத் தாழ்வை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

சமூக நீதி என்ற பெயரால் இடஒதுக்கீடு ஏன் என்று கேட்பவர்கள் இந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழல், சுற்றுச் சூழல் வளமாக, வாய்ப்பாக இல்லாதவர்கள் மேல் படிப்புக்கு வரும்பொழுது ஏற்படும் இந்தச் சிக்கலுக்குப் பரிகாரம் என்ன?

பெயர் தைரிய லட்சுமி! செயலோ கோழை லட்சுமியாக அல்லவா  செயல்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டில் மட்டும் 84 மாணவ மாணவியரும் 2012 சனவரி முதல் இதுவரை 15 மாணவ - மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றால் - இதற்குக் காரணம் நம் கல்வி முறையில் இருக்கும் குறைபாடா? சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளின் பின்னணியா?

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இருபால் மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடத்திட ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருந்து வரும் ஒடுக்கப்பட்ட இருபால் மாணவர்களை அணுக்கமாகக் கண்காணித்துத் தக்க நேரத்தில் உரியது செய்யப்பட வேண்டும்.

மாணவர்களின் தற்கொலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது! அரசும், கல்வித் துறையும் சிந்திக்குமாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...