Wednesday, April 4, 2012

விளையாட்டிலும் வருண தர்மமா?


வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா, உலகத்தரம் வாய்ந்த தனது "வில்லை' விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என, விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தின், பத்மடா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா ராணி தத்தா, டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், பாங்காங்க் கிராண்ட் பிரிக்சில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டியில், இந்தியா சார்பில் தங்கம் வென்றுள்ளார். வறுமை காரணமாக போதிய பண வசதி இல்லாததால், வில்வித்தையில் இருந்து ஒதுங்கி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்.
இதனிடையே, நிஷா ராணியின் வீட்டினைப் பழுது பார்க்க பணம் தேவைப்பட்டது. இதற்காக, வில்வித்தைப் போட்டிக்கு பயன்படுத்தப்படும், உலகத்தரம் வாய்ந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள, தனது வில் மற்றும் அம்புகளை இவர் விற்ற செய்தி இப்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேகன் கூறியது:
வறுமையால் இப்படி நடந்துள்ளது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,) மூலமாகத்தான் இந்த செய்தி தெரியவந்தது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயராக உள்ளோம். மாநில அரசுகள் இவ்விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். வீரர், வீராங்கனைக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள் தரவேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், வாழ்க்கை நடத்த உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. இவ்வாறு அஜய் மேகன் கூறினார்.
இந்தச் சேதியைப் படிக்கும்பொழுது குருதியெல்லாம் கொதிக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் இந்தியா தங்கம் பெறுவது என்பது குதிரைக் கொம்பே! அப்படி ஒருவர் பெற்றார் என்றால் அத்தகைய ஒருவரைத் தங்கத் தேரில் வைத்து ஊர்வலம் விட வேண்டாமா?
ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? வில் வித்தையில்தானே வென்றார். அப்படியென்றால் பார்ப்பனராக இருக்க முடியாதே - ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவராகத்தானே இருக்க முடியும்?  மகாபாரதத்தில்கூட வில் வித்தையில் தேர்ந்த ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரியார் காணிக்கையைப் பெற்று, அந்த வில் வித்தைக் கலையைக் கொச்சைப்படுத்தவில்லையா?
என்னதான் சுதந்திரம் பெற்றாலும், வருணாசிரமப் புத்தி என்ற ஒன்று இந்திய மண்ணின் குருதி ஒட்டத்திலிருந்து பிடுங்கி எறியப்படவில்லையே. அதன் அடையாளம்தான் வில் வித்தையில் தங்கம் வென்ற தாரகை நிஷாராணியின் வறுமை காரணமாகத்தான் பரிசாகப் பெற்ற பொருளை விற்க நேரிட்டது.
இதுவே கிரிக்கெட்டாக இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? பெரிய பணம் காய்ச்சி மரம் கிரிக்கெட்தானே.
அது பெரும்பாலும் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணோத்தமர்களின் விளையாட்டாயிற்றே! அதனால் தான் காயம் பட்டாலும் டெண்டுல்கரின் பெயர் ஆட்டக் குழுவில் இடம் பெறும். களத்தில் இறங்கி விளை யாடாமலேயே அவருக்குரிய பணம் வந்து குதிக்கும்.
சிராய்ப்பு ஏற்பட்டால் மருத்துவர் ஓடோடி வருவார்; சில நாள்களுக்கு முன் பெங்களூர் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது. அதில் வெங்கடேஷ் என்னும் வீரர் விளையாடும் பொழுதே மயங்கிக் கீழே விழுந்தார்; அவசர உதவிக்கு மருத்துவர் கிடையாது; ஆம்புலன்ஸ் கிடையாது. விளைவு மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே மரணம் அவரைக் கவ்விக் கொண்டது.
இதே கிரிக்கெட் விளையாட்டு என்றால் நகத்தில் காயம்பட்டாலும் மருத்துவக் குழு ஜெட் வேகத்தில் பறந்து வந்து விடுமே!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டில் மூன்றுமுறை தங்கம் வென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷைலஜா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு வேலை வாய்ப்புக் கிட்டவில்லை - என்ன கொடுமையாடா இது!
இந்திய மண்ணுக்குரிய ஹாக்கியின் இன்றைய நிலை என்ன?  மாத சம்பளம் வாங்குவதற்குள் படாதபாடுபடு கிறார்களே! தமிழ் மண்ணில்  மணம் வீசும் சடுகுடுவுக்கு இந்திய அரசு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும் என்ன? நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இந்தியாவில் தங்கம் வெல்ல வாய்ப்புள்ள விளை யாட்டுகளைத் தேர்வு செய்து, அதில் திறன் உள்ளவர் களைத் தேர்வு செய்து, இன்றைக்கு வளர்ந்து வந்துள்ள தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, அத்தகையவர் களுக்குப் பயிற்சி கொடுத்து ஊக்குவித்தால் தங்கங் களைத் தட்டிப் பறிக்க அதிக வாய்ப்புண்டே!
கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய நாடுகளில் எல்லாம் கிடையாதே! சீனா, அமெரிக்கா, ஜப்பான், ருசியா போன்ற பெரிய நாடுகளில் உண்டா?
வெள்ளைக்காரன் ஆண்ட நாடுகளில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசான விளையாட்டு!  அதனை இந்தியாவில் உள்ள வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் சிக்கெனப் பிடித்துக் கொண்டு பணத் தோட்டத்தில் மேய்பவராக இருந்து வருகின்றனர்.
விளையாட்டிலும்கூட வருண தருமமா? வெட்கம்! வெட்கம்!! மகா மகா வெட்கம்!!!


.
 

1 comment:

ப.கந்தசாமி said...

கிரிக்கெட் முழுவதும் அவாள்தான். தெரியுமோ நோக்கு?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...