Saturday, March 31, 2012

அண்ணா தி.மு.க. அண்ணாவைக் கொச்சைப்படுத்தலாமா?


ராமன் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதுவதா?


கழகத் தோழர்களே, மதச் சார்பற்ற  கொள்கை உடையோரே!
முதல்வர் கோரிக்கையை எதிர்த்து பிரதமருக்குத் தந்தி கொடுப்பீர்! 


தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைக் கண்டித்தும், இதனை எதிர்த்துப் பிரதமருக்குக் கழகத் தோழர்களும், மதச் சார்பற்ற கொள்கையுடையவர்களும் தந்தி கொடுக்க வேண்டும் என்று கோரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு முதல் அமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் ராமன்பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய மதிப்புமிக்க ராமர் பாலத்தின் முக்கியத்துவம் கருதி அதனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை தாமதமின்றி, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு, ஒரு பதில் மனு மூலமாக, தமது கருத்துக்களை தனியே, உச்சநீதிமன் றத்தில் தெரிவிக்கும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். (டாக்டர் நமது எம்.ஜி.ஆர். 29.3.2012 பக்கம் 1 மற்றும் இரண்டு).

நாடாளுமன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் இந்தத் திசையில் குரல் கொடுத்துள்ளனர். தி.மு.க. உறுப்பினர் கள் எதிர்த்துள்ளனர்.
அண்ணாவின் கொள்கை என்ன?

1) முதலாவதாக செல்வி ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய கட்சியின் பெயர் அண்ணா தி.மு.க. என்பதாகும்.

ராமன் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று கூறி டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா.

புலவர் குழந்தையின் இராவண காவியம் எனும் நூலுக்கு முன்னுரை அளித்த அறிஞர் அண்ணா அவர்கள்,

இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர்களுக்கு தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது.  தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இராவண காவியம் நூல்.

இராவணகாவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இராவணனைத் தேவனாக்க அல்ல -  தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே! (மேலும் முக்கிய பகுதிகளை இரண்டாம் பக்கம் காண்க)

அண்ணாவை அவமதிக்கலாமா?

அண்ணா தி.மு.க. என்று கட்சிப் பெயரையும், கொடியில் அண்ணா உருவத்தையும் பொறித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அண்ணாவின் சிந்தனைக்கும், கொள்கைக் கோட்பாட்டுக்கும் எதிராக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா நடந்து கொள்ளலாமா? இதன்மூலம் அண்ணாவை அவமதிக் கலாமா?

அண்ணா தி.மு.க.வில் அண்ணாவின் கொள்கைக் காக இருக்கும் அக்கட்சித் தொண்டர்கள், முன்னணி யினர் சிந்திப்பார்களா?

ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் செல்வி ஜெயலலிதா எந்தப் பக்கம்?

(2) இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்திரிப்பது என்று பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர், பி.டி. சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்களே -

அப்படியென்றால் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆரியர் பக்கம் நின்று திராவிடர்கள்மீது போர் தொடுக்கிறாரா?

சூத்திரன் சம்புகன் தவம் இருந்தான் என்பதற்காக ராமன் சம்புகனை  வாளால் வெட்டிக் கொன்றானே - அந்த ராமனுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டு விட்டாரா?

அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற இனச் சுட்டையும் கட்சியில் வைத்திருக்கும் காரணத்தால் தாய்க் கழகம் என்ற முறையில் திராவிடர் கழகம் இந்த வினாக் களை எழுப்புவதற்கு உரிமையும், கடமையும் பெற்றுள்ளது.

எந்த தொல்பொருள் ஆய்வு கூறியது?

(3) தொல் பொருள் ஆராய்ச்சி கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளாரே - எந்தத் தொல் பொருள் ஆய்வு 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்று கூறியிருந்தது?

முதல் பாலம் கட்டப்பட்டதே எகிப்தில்தானே - நைல் நதியில் அவ்வாறு கட்டப்பட்டது. கி.மு. 2650 இல் என்கிற போது 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்பது கடைந்தெடுத்த பொய்யல்லவா!

நாசா மறுத்துவிட்டதே!

அமெரிக்காவின் நாசா சொல்லியிருக்கிறது என்று ஒரு கதையைக் கிளப்பிய நேரத்தில் சேது சமுத்திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. இரகுபதி நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டபோது (26.7.2007) அன்று மாலையே நாசா பதிலையும் அனுப்பவில்லையா?

இந்தியா - இலங்கையிடையே உள்ள ஆதாம் பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று தெரிவித்து விட்டதே!

இதுபோன்ற மணல் திட்டு இராமேசுவரம் - இலங்கைக்கு இடையே மட்டுமல்ல; ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேலாக இருக்கிறதே - அதையும் ராமன்தான் கட்டினானா?

அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?

4) 2001 சட்டப் பேரவைக்கான அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதே செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டது என்ன?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச் சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம், இத்திட்டத்தின்படி ராமேசு வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் (2001  - அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 83-84).

இந்தப் பகுதியில் தெளிவாகக் காணப்படுவது என்ன?

(அ) சேது சமுத்திரத் திட்டம் தேவையானதுதான்.

(ஆ) இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் - அது மணல் மேடுகள், பாறைகள்தான் (இராமன் பாலம் அல்ல)

இவ்வளவு தெளிவாக தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்ட பிறகு, அதற்கு முற்றிலும் எதிராக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டதன் பின்னணி என்ன?

மதச்சார்பின்மையைச் சிதைக்கலாமா?

5) மதச்சார்பின்மை என்பதுதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டப்படியான நிலை. இதில் மதவாதத்தைத் திணிப்பது எப்படி சரி?

அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து மத சம்பந்தமான கடவுள் படங்களையும் நீக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி அரசின் மதச் சார்பின்மை என்னும் கொள்கைக்கு மதிப்பைக் கூட்டினாரே!

அந்த அண்ணா பெயரைத் தாங்கும் கட்சியின் பொதுச் செயலாளர் மதச் சார்பின்மைக்கு விரோதமாக இந்துத்துவாவின் கதாநாயகனான ராமனுக்காகக் கொடி தூக்கலாமா?

வரலாறு என்பது வேறு - இதிகாச புராணங்கள் என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இந்த நிலையில் இதிகாசங்களையும் புராணங்களையும் விஞ்ஞான ரீதியான ஒரு திட்டத்தில் திணித்துத் தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் கடமை என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (51ஏ(எச்).

இந்த நிலையில் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக நடந்து கொள்வது சட்டப்படியாகவே குற்றமாயிற்றே!

மாநில அரசோ, மத்திய அரசோ, நீதிமன்றமோ விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக சிந்திக்க முடியுமா? செயல்படத்தான் முடியுமா?

வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. இருக்க முடியுமா?

(6) இதே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு வந்தபோது நீதியரசர் ரவீந்திரன் அவர்களால் எழுப்பப் பட்ட வினாக்கள் முக்கியமானவை.

நாம் பூமியைத் தாயாக வணங்குகிறோம். அதனால் அதனைத் தொட முடியாது என்று அர்த்தமல்ல. இமய மலையை நாம் வணங்குகிறோம். அதனால் இமால யத்தைத் தொட முடியாது என்று அர்த்தம் அல்ல.

கோவர்த்தன மலையை நாம் வணங்குகிறோம், அதனால் கோவர்த்தன மலையை எதுவும் செய்ய முடியாது என்று அர்த்தமா? என்ற வினாக்களை எழுப்பிய நீதியரசர் ரவீந்திரன் இன்னொரு அர்த்தமிக்க வினாவையும் தொடுத்தாரே -

ஒரு வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. நீளத்திற்கு இருக்குமா? என்பதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வியாகும். இந்த அறிவார்ந்த வினாவுக்கு ஜெயலலிதாவோ, சு.சாமியோ, அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்குரை ஞர்களோ, பி.ஜே.பி. உள்ளிட்ட சங்பரிவார்க் கூட்டமோ இதுவரை பதில் சொன்னதுண்டா?

ராமராஜ்ஜியம் உருவாக்கத் துடிக்கும் கும்பல்!


ராமராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்றுகூறிக் கொண்டு அலைகிற கூட்டத்தின் பிரதிபிம்பமாகவும்,  மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா சிந்திக்கிறார் - செயல்படுகிறார் என்பதற்கு அடையாளம்தான் பிரதம ருக்கு இவர் எழுதிய அதிகாரபூர்வமான கடிதம் ஆகும்.

பிரதமருக்குத் தந்தி கொடுங்கள்!

இந்த நிலையில் கழகத் தோழர்களே, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களே, பகுத்தறிவாளர்களே, அறிவியல் சிந்தனை கொண்டோரே, மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை  கொண்ட நண்பர்களே, கட்சிகளைக் கடந்து தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு இசைவு தரக் கூடாது - மதச் சார்பற்ற தன்மையோடு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று பொருள்படும்படியாக தந்திகளை இலட்சக்கணக்கில் பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மதச் சார்பற்ற கொள்கையுடைய அத்தனைக் கட்சித் தலைவர்களும் கண்டித்து அறிக்கை கொடுக்க வேண்டும். அகில இந்திய அளவிலும் பிரதமருக்குக் கடிதங்களை எழுத வேண்டும்.

இதில் நாம் நமது கடமையைச் செய்யாவிட்டால், ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று புறப்பட்டுள்ள மனுதர்மவாதிகளுக்கு வலிமையை உண்டாக்கிக் கொடுக்கிறோம் என்று பொருள்.

மதச்சார்பின்மையைக் காப்போம்!

பாபர் மசூதியை இடித்தது சரிதான் என்பதற்கு இசைவு கொடுத்து விட்டோம் என்று பொருளாகும். இதனைத் தடுத்தே தீர வேண்டும்.
மதவெறி மாய்ப்போம்!

மனிதநேயம் காப்போம்!

மதச் சார்பின்மையைக் கட்டுவோம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.


.
 3

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...