Saturday, February 4, 2012

இங்கிலாந்து நாட்டின் முதல் பிரதமர் யார்?



சர் ஹென்றி காம்பல் பானர்மேன் என்பவர்தான் இங்கிலாந்து நாட்டின் முதல் பிரதமராவர். அவர் 1905 இல் பதவியேற்றதற்கு அய்ந்து நாட்கள் கழிந்த பிறகுதான் பிரதமர் என்ற சொற்றொடர் அதிகார பூர்வமாகப் பயன் படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் அவ்வாறு கூறுவது இழிவுபடுத்துவதாக இருந்ததாகும்.
முதல் அதிகார பூர்வ பிரதமர் என்று பொதுவாக அங்கீரிக்கப்பட்ட சர் ராபர்ட் வால்போல் இந்தப் பெயரை எப்போதுமே பயன்படுத்தவில்லை. அவரும் அவருக்குப் பின்னர் வந்தவர்களும் கருவூலத்தின் முதல் பிரபுக்கள் என்றுதான் தங்களை அழைத்துக் கொண்டனர்.  1905 டிசம்பர் 10 வரை காம்பல் பானர்மேனும் அவ்வாறுதான் தன்னை அழைத்துக் கொண்டார். முதன் முதலாக இப்பெயரை அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வெளியிடப்பட்ட அரசு ஆணையில் யார்க் ஆர்ச் பிஷப்புக்கு அடுத்த அதிகார நிலையில் பிரதமர் வைக்கப்பட்டார்.
சர் ஹென்றி கேம்பல் பானர்மேன் (1836-1908) ஹென்றி கேம்பல்லாகப் பிறந்தவர். பானர்மேன் என்ற பெயர் 1871இல் அவரது பெயருடன் சேர்க்கப்பட்டது. 1905இல் பதவியில் இருந்த ஆர்தல் ஜேம்ஸ் பால்ஃபோர் பதவி விலகியபிறகு கேம்பல் பானர்மேன் இங்கிலாந்தின் முதல் அதிகாரபூர்வ பிரதம மந்திரியாக ஆனார். வழக்கத்திற்கு மாறான பலம் பொருந்தி அவரது அமைச்சரவையில் எதிர்காலத்தில் பிரதமராக வந்த இருவர் (அஸ்குவைத்தும், லாயிட் ஜார்ஜூம்) சேர்க்கப்பட்டிருந்தனர். 1906 பொதுத் தேர்தலில் அவர் லிபரல் கட்சிக்காரர் களுக்குத் தலைமை தாங்கி  ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தார்.
தாராளக் கொள்கை கொண்டவர் என்பதை விட அவரை தீவிரக் கொள்கை கொண்டவர் என்றே கூறலாம். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுவதையும், அயர்லாந்துக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதையும்  அவர் ஆதரித்தார்.  முதியோர் ஓய்வூதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபட்டார். போயர் போரில் இங்கிலாந்து நாட்டு வீரர்கள் விலங்காண்டித்தனமாக நடந்து கொண்டதைக் கண்டித்தார். தென் னாப்பிரிக்காவுக்கு சுயஆட்சி உரிமையை அளிக்க ஏற்பாடு செய்தார்.  வேலை நிறுத்தம் செய்யும் உரிமையைத் தொழிலாளர்களுக்கு அளித்த 1906 வர்த்தக வழக்கு சட்டத்தை நிறைவேற்றினார்.
தேர்தலுக்குப் பின் ஓராண்டு கடந்து 1907இல், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவருக்கு 1908இல் இரண்டாவது முறை மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் தனது பதவியை விட்டு விலகினார். அவரை அடுத்து அஸ்குவித் பிரதமராக ஆனார். அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து டவுனிங் தெரு 10ஆம் எண் கொண்ட பிரதமர் இல்லத்திலேயே அவர் இறந்துபோனார்.
அவர் பேசிய இறுதி சொற்கள்: இதுவே எனது முடிவு அல்ல.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...