Friday, February 10, 2012

முல்லைப் பெரியாறு அணை பற்றிய அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் (5)

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
திருவனந்தபுரத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் தமிழகம் சார்பாகக் கலந்து கொண்டவர்கள்:
மாண்புமிகு முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமைச் செயலர் பத்மநாபன், பொதுப்பணித்துறை சிறப்புச் செயலர் திரு.டீ.விஜயராகவன், பொ.ப.து. செயற் பொறியாளர் உன்னிகிருஷ்ணன் மதுரை ஆட்சியர் சிரியாக், நீர்ப் பாசனத்துறை அமைச்சர் இ.ராஜா முகமது.  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் கையெழுத்திட ராஜா முகமது மறுத்துவிட்டார். அவருடைய எதிர்ப்பு பொருட்படுத்தப்படவில்லை. மத்திய நீர்வள ஆணையத்தின் (Central Water Commission) பரிந்துரையின்படி கேரள அரசு பொறியாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகள் தமிழக அரசு பொதுப்பணித்துறையால் 3 கட்டங்களாக 1981இல் தொடங்கி 1994இல் முடிவுற்றன.
பணி நடந்த காலங்களில் கேரள அரசும் கேரள வனத்துறையும் அளித்த தொல்லைகளை விவரித்தால் தனியாக இன்னொரு நூல் வெளியிட வேண்டியிருக்கும். அப்போதும் கூட தமிழகஅரசு விழிப்போடு செயற்படவில்லை. மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரையின்படி கேரள அரசின் ஒப்புதலின்படி அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு அணையின் மேட்டுப்பகுதியில் அமைந்துள்ள சிறிய அணை (பேபி டேம்) பலப்படுத்துப் பணி 1997இல் தொடங்கிய போது இப்பணியையும் முடித்துவிட்டால், அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்த வேண்டிவரும் என்பதால் கேரள அரசு வனத்துறையை ஏவி கற்பனையான காரணங்களைக் கூறி, அணையின் பணிகளைத் தடுத்து வனப் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி பொதுப் பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் மீதும், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீதும் பீர்மேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். எஞ்சிய சிறிய பணியை முடிக்கவிடாது தடுப்பதுடன் அதனைக் காரணம் காட்டி அணையின் நீர் மட்டத்தை உயர்த்த மறுக்கின்றனர். தமிழக அரசின் பணிவான வேண்டு கோள்கள் மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தும் கேரள அரசை ஒரு சிறிதும் அசைக்கவில்லை. அப்போதும் கூட தமிழகஅரசு வலிமையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
6. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் உச்சநீதிமன்றத்தில்
பொறுமை இழந்த தமிழக முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கங்களால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாதென கேரள அணை பாதுகாப்பு சங்கங்களால், கேரள உயர்நீதிமன்றத் திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் உச்ச நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டு கேரள அரசும், தமிழக அரசும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மத்திய அரசு 10 பேர் அடங்கிய வல்லுநர் குழுவை நியமித்தது. நிபுணர் குழுவில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அனுபவம் வாய்ந்த பொறியியல் வல்லுநர்கள் அடங்குவர். வல்லுநர் குழு 10.10.2000ல் அணையைப் பார்வையிட்டு 04.11.2000 அன்று மத்திய அரசிடம் தம்முடைய அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன்பிறகு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மத்திய அரசு மத்திய மண்வள ஆய்வுக் குழு Central Soils & Materials Research Station (CSMRS) வல்லுநர்களை அனுப்பி அணையில் கட்டுமானப்பணிப் பொருட்களின் மாதிரி களை எடுத்து சோதனைக் கூடங்களில் சோதனை செய்து அறிக்கை சமர்ப் பித்தது.
உச்சநீதிமன்றத்தின் விசாரணை 2006 ஆம் ஆண்டு வரை நீண்டது. கேரள அரசின் வாதங்கள் அனைத்தும் விதண்டாவாதம் எனவும், அணையின் பலத்தைப் பொறுத்தவரை வல்லுநர் குழுக்கள் அளித்த அறிக்கையின்படியும் 27.02.2006 அன்று உச்ச நீதிமன்றம் துணிச்சலாக ஒரு நியாயமான தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின் சுருக்கம்.  வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அணையின் நீர் மட்டத்தை உடனடியாக 142 அடிக்கு உயர்த்தலாம். பேபி அணையை பலப் படுத்திய பிறகு 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையைப் பலப் படுத்தும் பணிக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்ற இந்த நல்ல தீர்ப்பைப் பெற காவிரி தொழில்நுட்பக் குழுவினைச் சார்ந்த Er.A.
மோகனகிருஷ்ணன் - Er.D. அரிராம் தலைமையிலுள்ள பொறி யாளர் குழுமம் (மற்றும் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் பொறி.ஆர். மணிவண்ணன்) தம்முடைய முழு உழைப் பையும் திறமையையும் பயன்படுத்தியது என்பதை இச்சமயத்தில் பெருமையுடன் குறிப்பிட வேண்டும். ஆனால் தமிழக அரசோ இவர்களைப் பாராட்டவுமில்லை பெருமைப்படுத்தவும் இல்லை என்பதை மிக்க வருத்தத்தோடு குறிப்பிட வேண்டி யுள்ளது. எனினும் இவர்களின் அயரா உழைப்பு அனைவராலும் பாராட்டப்பட வேண்டும்.
தமிழக அரசின் மெத்தனம்: ஒவ் வொரு தமிழனும் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய நாள் 27.02.2006 உண்மையின் வெப்பத்தைத் தாங்காது கேரள மாநிலம் முழுவதும் கொதித்து எழுந்தது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேலூர் விவசாயிகள் மாத்திரம் தங்களுக்குள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
7. கேரள அரசின் மற்றுமொரு சூழ்ச்சி
நமக்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட் டுள்ளது என மகிழ்ந்த தமிழக அரசு அன்றைய தேதியில் தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டு விட்டதால் உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பின் அடிப்படையில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கையை தேர் தலுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் போட்டது. இது ஒரு நொண் டிச் சாக்கு, தேர்தலுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தலுக்கும் எந்த விதத் தொடர்புமில்லை தமிழக மக்களை ஏமாற்றும் வழக்கமான பல்லவி. ஆனால், கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு  ஏற்கெனவே 2003இல் போடப்பட்ட கேரள நீர்பாசன மற்றும் நீர்பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்து கேரள சட்டமன்றத்தில் முன்மொழி கின்றது. தோழர் அச்சுதானந்தன் தலை மையிலான எதிர்க்கட்சி கூட்டணி, மிகுந்த ஆரவாரத்துடன் அதனை ஆதரித்து கேரள சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி களின் முழு ஆதரவுடன் சட்டமாகிறது.
அதன்படி கேரளாவில் உள்ள 22 அணைகளின் முழுக்கொள்ளளவு மட்டத்தை வரையறுப்பதற்கு கேரள அரசிற்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. கேரள அரசு நினைத்தால் அந்த மாநிலத் தில் உள்ள எந்த அணையும் செயல் பாட்டையும் நிறுத்தி விடலாம். இதில் மற்ற எந்த அரசும் மற்றும் நீதிமன்றங்களின் ஆணையும் குறுக்கிட முடியாது. 15.03.2006 அன்று கேரள சட்டமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா சட்டமாக்கப் பட்டது.   இதன்படி கேரளாவில் உள்ள 22 அணையில் முதலாவது முல்லைப் பெரி யாறு அணை என்றும், அதன் அதிகபட்ச நீர் மட்டம் 136 அடி எனவும் சட்டப்பதிவு செய்தது. இதன் பிறகு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 2006இல் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலினை செய்ய தாக்கல் செய்த மனு, உச்சநீதி மன்ற பெஞ்சால் சூலை 2006இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் கேரளாவின் நீர்ப் பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு சட்ட திருத்தம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் அதனை நடைமுறைப்படுத்த தடை செய்வதாகவும் உள்ளதால், அதனை நீக்கக் கோரி தமிழக அரசால் உச்ச நீதி மன்றத்தில் 31.03.2006 அன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது உச்சநீதிமன்றம் எடுத்த நடவடிக் கைகள் திரைப்பட நகைச்சுவை நிகழ்வு களாக அமைந்ததை வேதனையோடு குறிப்பிட வேண்டியுள்ளது.
8. மீண்டும் பேச்சுவார்த்தை மீண்டும் ஒரு வல்லுநர் குழு!
இரு மாநில அரசின் முதல்வர் களையும் இப்பிரச்சினையை சுமுகமாகப் பேசித் தீரத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. 30 ஆண்டு காலமாக பேசிப் பேசி எந்தப் பயனும் இல் லாமையால் தானே உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். ஆனாலும் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர் களையும் கலந்து ஆலோசித்து அனை வரும் பேசிப்பார்க்கலாம் எனக் கருத்துத் தெரிவித்ததால் 29.11.2006இல் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் தலைமையில் டெல்லியில் அவரது அலுவலகத்தில் இரு மாநில முதல்வர் களும் இருமாநில பாசனத்துறை அமைச் சர்களுடன் இரு மாநிலத் தலைமைப் பொறியாளர்கள், தலைமைச் செயலர்கள் பொ.ப.துறைச் செயலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்திய நீர்வள ஆணைய பொறியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
(தொடரும்)


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...