Friday, February 10, 2012

முல்லைப் பெரியாறு அணை பற்றிய அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் (4)

  • நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
    2. முல்லைப்பெரியாறு அணையில் என்னதான் பிரச்சினை?
    முல்லைப் பெரியாறு நதி மற்றும் அணை அமைந்துள்ள இடம் குறித்து தமிழ்நாட்டில் விவரம் தெரியாத தெரிந்து கொள்ள விரும்பாத மக்களிடம் நிலவும் பொதுவான கருத்து இது.
    அணையும், நதியும், கேரளாவில் உள்ளன. அதில் நமக்கு என்ன உரிமை இருக்கிறது? கேரள அரசைக் கெஞ்சிக் கேட்டு அவர்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்வது தானே முறை. மேற்கண்ட கருத்தினை மெத்தப்படித்த மேதாவிகள் தமிழக அரசின் ஆட்சிப்பணியில் உயர் பதவியில் இருந்தவர்கள் கூட, தொழில் நுட்ப அறிவோ தளஅமைப்போ வரலாற்று அறிவோ இன்றி வழி மொழிந்து கொண் டிருக்கிறார்கள். எதுவும் நன்மையாக நடக்காது என்றும் எதிர்மறையாகவே எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விவரம் தெரிந்த - நாட்டுப் பற்று மொழிப்பற்றுடைய வரலாறு அறிந்த தமிழினப் பாதுகாப்பு உரிமையாளர்கள் முல்லைப்பெரியாறு அணையில் நமக்கு முழு உரிமையும் உண்டு என்றும் 142அடி 152அடி வரைத் தண்ணீரைத் தேக்கி 5 மாவட்டப் பாசனத்தைப் பேண வேண் டும் எனவும் விடாது உரிமை முழக்கம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் மிகச் சிறுபான்மையினர் எனினும் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இடையில் எல்லாம் தெரிந்ததாகவும் தமிழ்நாட்டு நலனில் மிகவும் அக்கறை கொண்டதாகவும் அவ்வப்போது காட்டிக் கொள்ளும் தமிழக அரசு (அது எந்தக் கட்சியைச் சார்ந்ததாக இருந்தாலும்) - அதுவும் உள்ள வாக்கு வங்கியை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும்  எதிரிக் கட்சிகளுக்கு (உண்மையைச் சொன் னால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் என்று எதுவும் இல்லை - எல்லாமே எதிரிக் கட்சிகளே இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் இவர்களின் லாவணிக் கச்சேரியினை நாம் அனு மதிக்கப் போகிறோம்?) இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே அவ்வப் போது வெற்று அறிக்கைகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கிறது. சிக்கலை எளிதாக அவிழ்ப்பதற்கோ - தமிழ் நாட்டிற்குப் பயன்தரும் எந்த உருப் படியான நடவடிக்கையோ முன் நின்று முயன்று எடுக்காமல் காலத்தைக் கடத் திக் கொண்டிருக்கிறது. அரசு அக்கறை யின்றி மெத்தனமாக இருப்பதால் அணைக்குப் பொறுப்பான உயர்நிலைப் பொறியாளர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
    தற்போதைய மாநில எல்லையின்படி கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் குமுளி நகரின் நுழைவாயிலில் தமிழக எல்லை முடிந்து விடுகிறது.
    பெரியாறு அணை குமுளியிலிருந்து 16கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அணையும் அணையின் நீர்பரப்பும் கேரளாவில் உள்ளன. ஆனால் அணை தமிழகத்திற்கு சொந்தமானது. அதன் இயக்கம் மற்றும் பராமரிப்பு தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக் காக குமுளியிலிருந்து 5 கி.மீ தொலை வில் உள்ள தேக்கடியில் (இது ஒரு சுற்றுலா தளம்) தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் ஓர் உட்கோட்டமும் மூன்று பிரிவு அலுவலகங்களும் அவர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன. இவை கம்பத் தில் உள்ள பெரியாறு அணை கோட்டத் தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
    3. தேவிகுளம் பீர்மேடு மலையாள பூமியான விந்தை வரலாறு
    முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகள் அடங்கிய பீர்மேடு - தேவிகுளம் வட்டம் கி.பி 12ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் இருந்த பகுதி. அதன் பிறகும் சேர நாட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பூஞ்சார் சமஸ்தானம் என்னும் பூனையாறு தமிழ் சமஸ்தானம். முல்லைப் பெரியாறுக்கும் அதனைச் சார்ந்த வனப் பகுதிக்கும் உண்மையான உரிமையுடைய வர் பூனையாற்றுத் தம்பிரான். திரு விதாங்கூர் மகாராஜா அல்ல. இதன் முழு விவரம் தெரியாது அப்போது மதுரையை ஆண்ட ஆங்கில அரசு இப்பகுதி திரு விதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது எனத் தவறாகக் கருதி பெரியாறு அணை கட்டி 155 அடிக்கு தண்ணீர் தேக்கினால் நீர் பிடிக்கக்கூடிய பரப்பான 8591 ஏக்கருக்கு குத்தகை ஒப்பந்தம் போட திருவிதாங்கூர் மன்னரை அழைத்தது. தனக்கு சம்பந்தமில்லாத 8591 ஏக்கரை தனது பகுதியாக அறிவித்து அங்கு ஒரு அணையைக் கட்டி நீர்பிடிப்புப் பகுதிக்குரிய குத்தகைப் பணமாக ஆண்டுக்கு ரூ.40000 அளிக்க ஆங்கில அரசு முன் வந்ததும் திருவிதாங்கூர் மன்னர் புதையல் கிடைத்ததைப் போல மகிழ்ந்து 999 ஆண்டிற்கான குத்தகை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்.  எனவே, குத்தகை ஒப்பந்தம் போடப் பட்ட நாள் 29-10-1886 அன்றே முல்லைப் பெரியாறு அணையின் சிக்கல் தொடங் கியது எனலாம். (பின்பு 1970 ஆண்டில் குத்தகைத்தொகை ரூ.257789 ஆக உயர்த்தப்பட்டது).
    1956 ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது 90 விழுக்காடு தமிழர் வாழ்ந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு பகுதி ஏற்கெனவே மேற்கண்ட ஒப்பந்தத்தால் திருவிதாங்கூர் சமஸ்தானப்பகுதியாக அறிவிக்கப்பட்டி ருந்ததால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின், வட்டமாக அறிவிக்கப்பட் டது. அதன்பிறகு அமைந்த பட்டம் தாணுப் பிள்ளை அரசிலிருந்து தோழர் அச்சு தானந்தன் அரசுவரை மலையாளிகளை அப்பகுதியில் குடியேற்றி, தமிழர்களை சிறுபான்மையராக ஆக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. எனினும் இன்றும் அப்பகுதியில் 60 விழுக்காடு தமிழர்கள் வாழ்கின்றனர்.
    முல்லைப் பெரியாற்றில், பெரியாறு நதி தமிழ்நாட்டில் சிவகிரி மலையில் உற்பத்தி யாகி தமிழ் நாட்டில் 16கிமீ ஓடி முல்லை யாற்றுடன் கலக்கிறது.
    முல்லைப் பெரியாறு வடிநிலத்திற்கான நீர் வரத்துப் பகுதியில் கனிசமான பகுதி தமிழ் நாட்டில் உள்ளது. இது கேரளாவும் ஏற்றுக்கொண்ட உண்மை. எவ்வளவு விழுக்காடு என்பதில்தான் முரண்பாடு. எனவே முல்லை பெரியாறு வடிநிலப் பகுதி கேரளாவும், தமிழகமும் இணைந்த பன் மாநில வடிநிலப்பகுதி. இதனடிப்படையில் முல்லைப் பெரியாறு நீரினைப் பெறுவ தற்கு தமிழ் நாட்டிற்கு முழு உரிமை உண்டு.
    4. முல்லைப் பெரியாறு கட்டப்பட்டது இடுக்கி அணையும் கட்டப்பட்டது.
    முல்லைப் பெரியாறு அணை 1886இல் தொடங்கி 1895இல் கர்னல் பென்னிகுக் என்ற ஆங்கிலேய பொறியாளரால் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் முழுக் கொள்ளளவு 10.50 TMCயாகவும் (ஒரு TMC என்பது 1000 X 106 கன அடி = 100 கோடி கனஅடி) முழுக் கொள்ளளவில் நீர்மட்டம் 152 அடியாகவும் வடிவமைக் கப்பட்டுள்ளது. இதையும் தாண்டி 155 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கவும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1979வரை 85 ஆண்டுகள் எந்தச் சிக்கலும் இல்லாது இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் 1976 ஆம் ஆண்டு கேரளாஅரசு முல்லைப் பெரியாற்றில் இந்த அணைக்குக் கீழே 50 கி.மீ தொலை வில் இடுக்கி என்ற அணையினைக் கட்டியது. கேரளா அரசின் மிகப்பெரிய நீர்மின் திட்டம் இடுக்கி நீர்மின் திட்டம் 1970-இல் திட்டமிடப்பட்டு 1976இல் கட்டி முடிக்கப்பட்டது. 1200 அடி நீளமும் 555அடி உயரமும் கொண்ட ஆர்ச் வடிவ அணை. இது கட்டப்பட்ட பிறகு கேரள அரசின் மின் உற்பத்தி 150 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது ஒரு மின் உற்பத் திக்காக மட்டும் மின் தேவையை சமாளிக்கக் கட்டப்பட்ட நீர் மின் திட்ட அணையாகும். இதன் கொள்ளளவு முல்லைப் பெரியாறு அணையைப் போல் 7 மடங்கு. அதாவது 70 TMC. இவ்வணை கட்டி முடிக்கப்பட்ட பின்பு 3 ஆண்டுகளில் எதிர்பார்த்த அளவுக்கு அணைக்கு நீர்வரத்து இல்லை. எனவே தேவையான அளவு மின் உற்பத்தியைச் செய்யமுடிய வில்லை. எனவே கேரள அரசின்பார்வை முல்லைப் பெரியாறு அணையில் பதிந்தது. அதற்காகத் திட்டமிட்டு ஒரு சூழ்ச்சியைக் கையாண்டது.
    1979இல் கேரளாவின் முதன்மையான செய்தியிதழான மலையாள மனோரமா முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டது என ஒரு புரளி யினைக் கிளப்பியது. எனவே அதில் 152 அடி வரை தண்ணீரைக் தேக்கினால் அணை உடைந்து பெருத்த சேதம் ஏற்படும் என மக்களிடையே பீதியைக் கிளப்பி அதனடிப்படையில் கேரள அரசின் பிடி வாதத்தால் மத்திய நீர்வள ஆணையத் தின் தலைவர் திரு.K.C.தாமஸ் என்பவர் அணையைப் பார்வையிட்டார். அணையைப் பார்வையிட்ட போது வலுவாக இருக் கிறது எனக் கூறியவர். பின்பு திருவனந்த புரம் சென்று அணை வலுவாக இருக்கிறது என்றாலும் சில பலப்படுத்தும் பணிகள் செய்தால் நல்லது என்று தம்முடைய மாநிலப் பற்றினை வெளிப்படுத்தினார்.
    5. பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை
    இது குறித்து திருவனந்தபுரத்தில் 25.11.1979 அன்று இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தின. பேச்சுவார்த் தையின் முடிவில் அணையை 3 கட்டங் களாகப் பலப்படுத்துவது என்றும் அது வரை நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைப்பது எனவும் தீர்மானிக் கப்பட்டது. ஏன் 136அடி என்றால் அணை யின் வெள்ள நீர்போக்கியின் தள மட்டம் (Sill level) 136 அடி அதில் 16 அடி திறப்புக் கதவுகள் வைத்து 152 அடியாகக் தண் ணீர் தேக்கப்படுகிறது. காப்பு திறப்புக் கதவுகளை உயரத்தி நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைக்கலாமே ஒழிய அதற் குக் கீழே குறைக்க முடியாது.
    (தொடரும்)


    .
     1

    தொடர்புடைய செய்திகள்:
    இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
    இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...