Friday, February 10, 2012

முல்லைப் பெரியாறு அணை பற்றிய அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் (7)

முல்லைப் பெரியாறு அணை பற்றிய அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் (7)


நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தோழர் பிரேமசந்திரன்
முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்ட விவரம்
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஆரம்பமானவுடன் தோழர் பிரேமசந்திரனின் பொய்ப் பிரச்சாரம் தொடங்கி விடும். இவர் ஒரு வழக் குரைஞர். ஆனால், தனக்கு அடிப்படை அறிவே இல்லாத அணையின் கட்டு மானம் மற்றும் நீரியல் சம்பந்தமான கருத்துக்களைத் தெரிவித்துத் தனது அறியாமையை அவ்வப்போது வெளிப் படுத்துவார். இவரது கருத்துக்களுக்கு தமிழக ஊடகங்களும், தொலைக்காட்சி களும், பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் வேதனையானது. புரிந்து கொள்ள முடியாத புதிர். நம்முடைய சாபக்கேடு. இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அடை மழை பெய்தால் 3 நாட்களில் அணைக்கு 16 TMC தண்ணீர் பெருகி அணை உடைந்து விடும் ஆபத்து உள்ளது. இது போன்ற நிகழ்வு 1943ஆம் ஆண்டில் நடந்தது என்றார். இவரின் கூற்றுப்படியே 3 நாட்களில் 16 TMCமழை வெள்ளம் என்பது நொடிக்கு 66 ஆயிரம் கனஅடி. அணையின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் கனஅடி. எனவே அணை உடைவதற்கான வாய்ப்பே இல்லை.
மேலும், இது போன்ற நிகழ்வு 1943இல் நேர்ந்துள்ளது என்கிறார். இது உண்மை யாக இருந்தால் 1943இல் இப்படியொரு நிகழ்வை அணை தாக்குப்பிடித்து நின்றிருக்கிறது. மேலும் தற்சமயம் அணை 1943-இல் இருந்த அணையை விட பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
11. முல்லைப் பெரியாறு அணையின் உண்மையான பலம்
கேரள அரசியல்வாதிகள் மட்டுமல்ல- கேரள பொதுப்பணித்துறை பொறியாளர் கள்கூட தங்களின் தொழில் நெறியாண் மையை மறந்து முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் திருப்பித் திருப்பிக் கூறி ஒரு முழுப் புளுகினை உண்மையாக்கப் பார்க் கிறார்கள். கேரள முதல்வர் தோழர் அச்சு தானந்தன் இந்த அணை சுண்ணாம்பு கான்கிரீட்டால் ஆனது. எனவே இதன் ஆயுள் 50 ஆண்டுகள்தான் என்கிறார்.
எந்த ஒரு கட்டுமானத்துக்கும் வாழ் நாள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் அக்கட்டுமானம் முறையாக சரியாகப் பராமரிக்கப்பட்டால் காலத்தை வென்று நிற்கும். பல கட்டுமானங்கள் அப்படி இன்றும் 200 ஆண்டுகள் 300 ஆண்டுகள் கடந்தும் வலிமையோடும், பாதுகாப் போடும் உள்ளன. சுண்ணாம்புக் கலவை யில் கட்டப்பட்ட பழைய கற்கோட்டைகள் 500, 600 ஆண்டு காலம் கடந்து நிற்பதை  இன்றும் நாம் காணமுடிகிறது. இன்றைய நாளில் இந்தியாவில் மட்டும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும் 143 அணைகள் இருக்கின்றன என்பது பட்டியலாக தரப்பட்டுள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழமன்னன் கட்டிய கல்லணையை ஆர்தர் காட்டன் பலப்படுத்தியதால் இன்றும் நாம் நவீனப்படுத்தி வலுப்படுத்தி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். முல்லைப் பெரியாறு அணை முன்னும் பின்னும் சுண்ணாம்பு சுர்க்கி கலவை கொண்டு கடின பாறைக் கற்களால் ஆன சுவர். நடுப்பகுதி சுண்ணாம்பு, சுர்க்கி, பாறைக்கற்களால் ஆன கான்கீரிட்டால் நிரப்பப்பட்டது. சுண்ணாம்பு கூட்டுக் கலவை கட்டுமானத்தில் விரிசலைத் தடுப்பதில் சிமெண்ட் கலவையைவிட சிறப்பானது என்பதால் இன்றும் கூட விரிசலைத் தடுக்கும் பணிகளில் சிமெண்ட் கலவைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துகிறோம்.
11.1. இவ்வணையில் செய்யப்பட்ட பலப்படுத்தும் பணிகள்
) 1930-32 ஆண்டுகளில் (கேரளா அரசு உருவாவதற்கு முன்னதாகவே) அன்றைய சென்னை அரசாங்கம் அணையில் ஏற்படும் நீர்க்கசிவினைக் குறைப்பதற்காகவே கூழேற்றம் (Grouting) என்ற முறையில் 80 துளைகள் போட்டு 40டன் சிமெண்ட் கரைசலை உயர்ந்த அழுத்தத்துடன் செலுத்தியது. இதனால் வினாடிக்கு 0.26 கன அடியாக இருந்த கசிவு (7.36 லிட்டர்ஃவிநாடி) வினாடிக்கு 0.03 கன அடியாகக் (0.85 லிட்டர்/விநாடிக்கு) குறைந்தது. பின்னர் 1933 ஆம் ஆண்டு சிமெண்ட் காரைக் கலவை யினை - பலத்துடன் ஒட்டுதல் (Guniting) என்ற முறையில் அணையின் வெளிப் புறத்தில் மெல்லிய எஃகு வலையை அமைத்து கற்காரை அடித்துப் பலப்படுத் தப்பட்டது. இதன்பயனாகஅணையின் நீர்மட்டம் 152 அடி முழுக் கொள்ளளவு மட்டமாக இருந்த போது - நீர்க்கசிவு வினாடிக்கு 0.269 கன அடியாகத்தான் (7.62 லிட்டர் ஃ வினாடிக்கு) இருந்தது. இதனை மேலும் குறைக்க வேண்டும் என்பதற்காக 1960ஆம் ஆண்டில் கூழேற்றம் (Grouting) முறையிலே 502 டன் (10400 மூட்டைகள்) சிமெண்ட் கரைசல் உயர் அழுத்தத்துடன் செலுத்தப்பட்டது. இவை எல்லாம் கேரளா அரசின் தலையீடு/வேண்டுகோள் இன்றியே செய்யப்பட்டன. இந்த வலுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளால் 1924-1933-1940-1961 -1977 ஆகிய ஆண்டுகளில் அணை யின் நீர்மட்டம் 152 அடியாக எட்டியபோது அணை உறுதியாகவே நின்றது. அதன்பிறகு 1979 வரை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுடன் அணை வலு வுடன் எந்த விதக்குறைபாடுமின்றி இயங்கி வருகிறது. பின்பு கேரள அரசின் நெருக்கடியில் மத்திய நீர்வள ஆணை யத்தின் பரிந்துரையின்படி மேற்கொள்ளப் பட்ட பலப்படுத்தும் பணிகளின் விவரங் கள் பின் வருமாறு.
11.2. அணையின் மேல் RCC கான் கிரீட் தொப்பிப் போர்வை அமைத்தல்
முல்லைப்பெரியாறு அணை ஒரு கிரேவிடி அணை அதாவது அணையில் தேக்கப்படும் நீரின் அழுத்தம் மற்றும் நில அதிர்ச்சி ஆகியவற்றை தன்னுடைய எடையின் பலத்தால் தாங்குவது. ஆகவே அணையின் எடையைக் கூட்டுவதற்கு அணையின் மேற்பரப்பில் 21 அடி அகலத் திற்கு 3 அடி கனத்திற்கு அணையின் மொத்த நீளத்திற்கும் RCC காங்கிரீட் தொப்பிபோல் போர்வை போடப்பட்டது. இதன் மூலம் அணையின் எடை மீட்ட ருக்கு 35டன் அதாவது மொத்த எடை 12000 டன்கள் அதிகப்படுத்தப்பட்டது.
வேலை முடிக்கப்பட்ட நாள் 03/1981 செலவு ரூ 118 லட்சம்.
11.3. கேபிள் ஆங்கரிங் (Cable Anchoring) செய்தல்
இது முன்தகைவுறு கற்காரை (Prestressed Concrete) என்றும் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண் டது. அணையின் முன் பக்கச் சுவரில் 5அடி தள்ளி அணையின் மேலிருந்து 4 விட்டத்தில் கீழே அடித்தளப்பாறை யினுள் 30 அடி வரை செங்குத்தாக துளைகள் இடப்பட்டு. இதனுள் 7மிமீ விட்டமுடைய மிகு தகைவுடைய 34 உறுதியுட்டிக் கம்பிகள் ஒரே கட்டாக கட்டப்பட்டு செலுத்தப்பட்டன. கம்பிகளின் பிடிமானத் திற்காக முதலில் 20 அடி உயரம் வரை கான்கீரிட் போடப்படுகிறது. பிறகு கம்பிகள் மேலிருந்து 120 டன் விசை செலுத்தி இழுக்கப்படுகிறது. இழுக்கப் பட்ட நிலையில் துளைகளில் கான்கீரிட் செலுத்தி நிரப்பப்பட்டு (Anchor) மூடப் படுகின்றது. இதன் மூலம் அதிக அழுத் தக் கம்பிகளும் துளையில் நிரப்பப்பட்ட கான்கிரீட்டும் சேர்ந்த 120 டன் அழுத்தத் தில் அணையை அடித்தளத்துடன் இறுக் கிப் பிடித்துக் கொள்ளும், இது போன்று 95 கேபிள் துளைகள் 9 அடி இடை வெளியில் அணையின் முழு நீளத்திற்கும் போடப்பட்டுள்ளன. இந்த வகை கேபிள் ஆங்கர்கள் நில அதிர்ச்சியில் ஏற்படக் கூடிய அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலை முடி வுற்ற நாள்: 12/1981 செலவு: ரூ 44 லட்சம்.
11.4. கான்கிரீட் துணை அணை
அணையின் பின்புறத்தில் 33 அடி அகலத்தில் அடித்தளத்திற்கு கீழ் 10 அடியிலிருந்து தொடங்கி மேலே 145 அடிவரை அதாவது கான்கிரீட் தொப்பியை உள்ளடக்கி RCC கான்கிரீட் போடப் பட்டுள்ளது. பழைய அணையும் புதிய அணையும் மிகுந்த தொழில் நுட்ப உத்தியோடு இணைக்கப்பட்டு ஒரே கட்டுமானம் போல் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முல்லைப் பெரியாறு அணை புதிய கட்டுமானத்துக்கு இணையான பலம் பெற்றுள்ளது. இந்த புதிய கட்டுமானத்தில் 10 அடி மட்டத்திலும் 45 அடி மட்டத்திலும் அணையின் நீர்க்கசிவினைப் பதிவு செய்வதற்காக வடிகால் நுழைவழிகள் (சிறுசுரங்க வழிகள்) அமைக்கப்பட் டுள்ளன. நீர்க்கசிவு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அளவிடப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பணி முடிவுற்ற நாள்: 5/1994 செலவு ரூ.843 லட்சம்.
11.5. கூடுதல் நீர் போக்கி
பெரியாறு அணையில் ஏற்கனவே 36 x 16 அளவில் 10 நீர் போக்கிகள் கட்டுப் படுத்திகள் உள்ளன. இவற்றின் மூலமாக வினாடிக்கு 86000 கன அடி நீரினை வெளியேற்ற முடியும். இவை போதாது என கேரள அரசு தெரிவித்ததால் மத்திய நீர்வள ஆணையத்தில் அறிவுரையின் பேரில் கூடுதலாக 40 x 16 அளவில் மூன்று நீர் இயக்கக்கதவுகள் (Regulators) அமைக்கப்பட்டன. இவற்றின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 36000 கனஅடி ஆக தற்சமயம் அணையின் நீர் வெளியேற்று திறன் 13 நீர் இயக்கக் கதவுகளின் மூலமாக 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடியாகும். பணிமுடிவுற்ற நாள் 6/1990 செலவு ரூ. 244 லட்சம்.
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...