Saturday, December 31, 2011

விடுதலையின் விழுமிய பணிகள்



டிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
விடுதலையின் விழுமிய பணிகள்
கழகத்தின் களப்பணி பேச்சாளர்களின் உரை வீச்சு


சென்னை, டிச. 29- சென்னை - பெரியார் திடலில், தந்தை பெரியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 24.12.2011 அன்று மாலை 4.30 மணிக்கு விடுதலையின் விழுமிய பணிகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கத்திற்கு பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் தலைமை வகித்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் முன்னிலை வகித் தார். கருத்தரங்கத்தின் தொடக்க உரையினை பேராசிரி யர் முனைவர் பு.இராசதுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார்.

விடுதலை சந்தித்த அடக்குமுறைகள் எனும் தலைப்பில் விடுதலை இதழ் பல்வேறு சமூகத் தளங்களில் ஆற்றிவரும் முன்னேற்றப் பணிகளைப் பற்றி வழக்குரைஞர் அ.அருள்மொழி, முனைவர் அதிரடி க.அன்பழகன், தஞ்சை இரா.பெரியார்செல்வன், இராம.அன்பழகன் ஆகியோர் கருத்துச் செறிவு மிக்க உரைகளை ஆற்றினர்.

கருத்தரங்கின் நன்றியுரையினை திராவிடர் மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி வழங்கினார்.

விடுதலை - இரவும் பகலுமாய் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகை

முனைவர் பு.இராசதுரை பேசியதாவது: ஆண்டாண்டு காலமாக, மன்னர் ஆட்சி காலம் முதற்கொண்டு பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலைதூக்கியே வந்தது. வீரம் மிகு மன்னர்கள் எல்லாம் கடவுள் தத்துவ மயக்கத்தில் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந் தனர். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் தலை எடுத்ததற்குப் பின், அவரது அருஞ் சமூகப் பணியினால் அடிமைத்தளை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

அறிவுப் புரட்சிக்கான வித்து முளைத்து விளைச்சல் தரத் தொடங்கியது. தந்தை பெரியார் ஏற்படுத்திய அறிவுப்புரட்சியின் ஆற்றல்மிக்க கருவி, கருத்துப் படைக்கலன்தான் விடுதலை ஏடு. 1935ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் வாரம் இருமுறை ஏடாகத் தொடங்கப்பட்டதுதான்  விடுதலை.

விடுதலை ஏடு வெளிவந்ததன் மகிழ்ச்சியை தனது குடிஅரசு இதழில் தந்தை பெரியார் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்த வேளையில் வெளிவந்துள்ளது விடுதலை ஏடு. விடுதலை வெளிவந்ததைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா, அது எப்படி வருகிறது என்று கவனிக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் எதிர்பார்த்த படி தமிழ்பத்திரிகை வந்துவிட்டது.

அதைத் துய்த்து தினசரிக்கு நிலைநிறுத்த வேண்டியது தமிழர்களின் கடமை என அறைகூவல் விடுத்தார். அன்றைய விடுதலை யின் ஆண்டுச் சந்தா 3 ரூபாய் 62 காசுகள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட விடுதலை ஏட்டினை நீதிக்கட்சியின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தந்தை பெரியாரால் தினசரி ஏடாக மாற்றம் பெற்று ஈரோட்டி லிருந்து காலணா விலையில் வெளிவரத் துவங்கியது.

பணச்சுமை, நிருவாக நட்டம் மிகுந்த நிலையில் 1962ஆம் ஆண்டில் விடுதலை ஏட்டினை அதற்கு மேல் நடத்திட முடியாது என்ற நெருக்கடியில்தான் இயக்கத் திற்கு வாராது வந்த மாமணியாய், நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் கிடைத்தார். அவரது பொறுப்பில் விடுதலையை ஒப்படைத்தார். தந்தை பெரியார். விடுதலை ஏட்டின் வெள்ளி விழாவின் போது விடுதலை சந்தா சேகரிப்புப் பணியாக இரண்டு மாத கால அவகாசத்தில் 2500 சந்தாக்கள் சேகரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

அப்படிப்பட்ட சந்தா சேகரிப்பு நிலையிலிருந்து இன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுப் பொது வாழ்வின் சிறப்பாக மூன்றே மாதங்களில் 50,000 விடுதலை சந்தாக்களை வழங்கிட முன் வந்துள்ளோம். விடுதலை சந்தா சேகரிப்பு என்பது வெறும் பத்திரிகை சந்தா சேகரிப்பு அல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை அவரது இயக்கப் பணியின் இன்றைய தேவையை, சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துக்கொண்டு சேர்க்கும் நீடித்த நிலைத்த கருத்துப் பிரச்சாரப் பணியாகும்.

அப்படிப்பட்ட விடுதலை ஏட்டின் வளர்ச்சி பன்மடங்கு பெருகி தமிழ்ச் சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கு உண்டான பணிகளுக்கு ஆக்கம் சேர்த்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விடுதலை -
சமூகப் பணிக்கான போர்வாள்
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் எழுதிய கவிதையை மேற்கோள் காட்டி அத்தகைய சமூகப் பணிக்கான போர்வாள் விடுதலை ஏடு என எடுத்துரைத்து அதன் வளர்ச்சிக்கு மேலும் வலுகூட்ட வேண்டும் என்றார். வருகைதந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விடுதலை - வெறும் செய்தித்தாள் அல்ல கருத்து இதழ்

முனைவர் நம்.சீனிவாசன் பேசியதாவது: பயிற்சி வகுப்புகளும், கருத்தரங்குகளும் அறிவு ஆட்சி செய்யும் களமாகும். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள் தொட்டு கருத்துப் பிரச்சாரத்திற்கு இந்த அறிவியல் வடிவம் பயன்பட்டு வருகிறது.

விடுதலை நாத்திகக் கருத்துகளைத் தாங்கி வரும் ஒரே நாளிதழ். இது செய்தித்தாள் அல்ல; கருத்து இதழ். ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும், தமிழ்மக்களுக்குச் சமுதாயத்திலும், அரசிய லிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக்கூடியது மான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பயன்படும் பத்திரிகை விடுதலை என்று விடுதலை ஏட்டின் இலட்சியப் பணியினை தந்தை பெரியார் தெளிவுபடுத்துகிறார்.

சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றைத் தமிழ் மக்களிடத்தே வலியுறுத்தி வளர்த்தல், தீண்டாமைக் கொடுமை ஒழிப்பு, வேத, சாஸ்திர, புராண இதிகாசங்களை எதிர்த்து ஒதுக்குதல், புரோகிதம் புறக்கணிப்பு, கடவுள் மதக்கற்பனைகளை மறுத்தல், பெண்ணடிமை நீக்கம், கைம்பெண் மணம், மணவிலக்கு உரிமை, சுயமரியாதை முறை வாழ்க்கை ஒப்பந்தம், வடமொழி, இந்தி மொழிகளின் தீங்குகளைத் துடைத் தெறியக் கிளர்ச்சிகள் மேற்கொள்ளுதல், வடநாட்டாரின் வல்லாட்சி கூடாதென அறவழிப்போராட்டங்களை நடத்துதல், அனைத்துச் ஜாதிப் பிரிவினருக்கும் கல்விச் செல்வம் கிட்டுமாறு செய்தல், அரசுப்பணிகளில் வகுப்பு வாரி உரிமை வழங்கும் சட்டம் இயற்றல் இவற்றையெல்லாம் வழங்குவதற்கான முயற்சிகள், சிறை வாழ்க்கையையும் ஏற்க அணியமாயிருத்தல் முதலிய தன்மான இயக்கக் கொள்கைகள்-திட்டங்கள் தொடர்பாக கருத்துகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் விடுதலையே என்று பேராசிரியர் இறையனார் விடுதலையின் பாதை இலக்கணத்தை வரையறை செய்கிறார்.

விடுதலை என்ற சொல் எந்த பொருள் உடையது.
ஜாதியிலிருந்து விடுதலை
மதத்திலிருந்து விடுதலை
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
வறுமையிலிருந்து விடுதலை
ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை
சுரண்டலிலிருந்து விடுதலை
பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து விடுதலை
பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை
என்று பரந்து விரிந்த பொருளைக் கொண்டிருக்கிறது விடுதலை.

விடுதலையின் சாதனை சாதாரணமானதல்ல. தமிழ் அறிஞர்களையும், மடாதிபதிகளையும் மக்களுக்குச் சேவை செய்ய அழைத்த பெருமை விடுதலைக்கு உண்டு. சைவத்தின் உச்சியில் தான் உண்டு, தன் சைவம் உண்டு என்று தவமிருந்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரை 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்து களமிறக்கியது விடுதலை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை யும் மக்கள் மன்றத்திற்கு அழைத்து வந்ததும்-தந்தை பெரியாரும், விடுதலையும்தான். அதனை அடிகளாரே ஒப்புக்கொண்டு பேசியதுண்டு.

மாநில அரசுப் பணியில் நடைமுறையில் இருந்த ஊழியர்களுக்கான ரகசியக் குறிப்பை எதிர்த்து அந்த நடைமுறையினை நீக்கிய ஏடு விடுதலை. ஜாதி வெறியர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட சத்துணைவுக் கூட பெண் சமையல் பணி யாளருக்கு ஆதரவாக கண்டித்து எழுதி மாவட்ட ஆட்சியர் மூலம் பணியிட மாறுதல் ஆணையினை ரத்து செய்திட வைத்தது விடுதலை ஏடுதான்.

இப்படி சமுதாய மேம்பாட்டில் விடுதலை ஏட்டின் பங்கு பற்றிய விடுதலையின் விழுமிய பணிகள் எனும் கருத்தரங்கம் பகுத்தறிவுக் கருத்துப் பரவலுக்கு மேலும் வலுவூட்டும். உரையாற்றுவோரின் கருத்து வீச்சு களப் பணியில் எதிரொலிக்க வேண்டும். தமிழர் வீடுதோறும் விடுதலை என்பது நடைமுறை இயல்பு எனும் நிலையினை உருவாக்கிட நாம் பாடுபட வேண்டும் எனக்கூறி கருத்தரங்கை தொடங்கி வைப்பதும், உங்களைப் போல் கேட்டு மூளைக்குள் பதித்து வைப்பதும் என் பணியாகும். கருத்தரங்கினை மகிழ்ச்சியோடு தொடங்கி வைக்கிறேன்.

விடுதலை - உரிமை மீட்புப் பணி

முனைவர் இராம.அன்பழகன் பேசியதாவது: தமிழர் தம் இயற்கைச் செல்வமீட்பு, பொருளாதார மேம்பாட்டுப் பணியில் விடுதலை ஏட்டின் பணி மகத்தானது. நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதில், தமிழக மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் மாநில அரசுக்கு ராயல்டி கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையினை முதன் முதலாக எடுத்து வெற்றியைப் பெற்றது விடுதலை ஏடு. பெரும்பாலான மக்கள் ராயல்டி என்பதன் பொருள், உரிமை பற்றிய விளக்கம் பெற்றது விடுதலை ஏட்டின் வாயிலாகத்தான். கிடப்பில் போடப்பட்டிருந்த  சேது கால் வாய் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் ஆரம்பக் காலம் முதல் பெரும்பங்கு வகித்தது விடுதலை தான்.

முல்லைப் பெரியாறு நீரில் தமிழகத்திற்கான உரிமை யினை தக்க வைக்கும் தரு விடுதலை. சபரிமலைக்குப் போகும் பக்தர்களை உரிமை வேட்கை கொள்ளச் செய்து பக்தி மாலையை எடுத்துப்போட்டுவிட்டு போராட வைத்தது விடுதலை நாளிதழ். சேர வேண்டிய ஒப்பந்த அடிப்படையிலான நீர்ப் பங்கீட்டு உரிமை என தொடர்ந்து வலியுறுத்தி தமிழர்தம் உரிமை மீட்புப் பணியில் உரக்கக் குரல் எழுப்பி வருவது விடுதலை ஏடு. தமிழர்தம் உரிமை மீட்பு விடியலுக்கான தனித்துவமான, சிறப்புமிகு போர்க்கருவி விடுதலையே.

விடுதலை - பகுத்தறிவுப் பணி

தஞ்சை பெரியார்செல்வன் பேசியதாவது: மற்ற ஏடுகளிலிருந்து விடுதலை ஏடு முற்றிலும் மாறுபட்டது. ஜோதிடம், ராசிபலன், சொல்லாத ஏடு விடுதலை. மத பண்டிகைக்களுக்கு விடுமுறை விடாத ஏடு விடுதலை. அய்ரோப்பிய நாத்திக அறிஞர் லெவி பிரகல் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும் பொழுது, உலகில் நாத்திகக் கொள்கையினை தாங்கி பரப்பிவரும் ஒரே நாளேடு விடுதலை எனக் குறிப்பிட்டது உலக பத்திரிகை உலகில் விடுதலை ஏட்டின் தனியிடத்தை சிறப்பிடத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

பார்ப்பனர்களின் வஜ்ஜீராயுதம் ஊடகங்கள். அத் தகைய ஊடகத்துறையில் பல வித எதிர்ப்புகளையும் தாண்டி பீடு நடைபோட்டு வருகிறது விடுதலை. டில்லியில் பிள்ளையார் பால் குடிக்கிறார் எனும் செய்தி யினை கன்னியாகுமரி வரை எடுத்துச் சென்ற பார்ப்பனர் களின் செயலை தமிழர் தலைவரின் பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனும் அறிவிப்பால் மூடநம்பிக்கையை முறியடித்த பெருமை விடுதலைக்கு உண்டு. பகுத்தறிவின் அடிப்படையில் மனிதநேய உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக தொடர்ந்து குரல் கொடுத்து நடை முறைக்கு பாடுபட்டு வருகிறது விடுதலை.

அய்யப்ப மகரஜோதி - அப்பட்டமான பொய், மோசடி என பிரச்சாரம் செய்ததில் அரசே மகரஜோதி என்பது மனிதசெயல்தான் என ஒப்புக்கொள்ளச் செய்தது விடுதலை. மலைபோன்று நிலைத்துவிட்ட மூடநம்பிக்கையை பகுத்தறிவு உளிமூலம் செதுக்கிய பெருமை விடுதலைக்கு உண்டு. மூடநம்பிக்கை பலூனை, பகுத்தறிவு ஊசிகொண்டு குத்தி செயலிழக்கச் செய்து வலு விழக்கச் செய்தது விடுதலை என்பது வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல, தொடர்ந்து வரும் நிகழ்வுகளாகும்.

விடுதலை - இனமானப் பணி

முனைவர் அதிரடி க.அன்பழகன் பேசியதாவது: திராவிடர்களுக்கு குரல் கொடுக்க திராவிடர்களிடம் இன உணர்வினை இன மேம்பாட்டு எதிர்பார்ப்பினை ஊக்கப் படுத்திய ஏடு விடுதலை. தமிழர் தலைவர் வீரமணி அவர்களை விடுதலை ஏட்டின் ஆசிரியர் பணியினை ஏற்றிட தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தபொழுது, இந்து ஆங்கில நாளேடு தலையங்கமாக எதை எழுது கிறதோ அதற்கு எதிராக எழுதினாலே நமது கருத்து வெளிப்பட்டு விடும் எனப் பொருள்படும் வகையில் ஆசிரியருக்கு அறிவுறுத்தியது ஒன்றே போதும்; அதுவும் விடுதலையின் இனமானப் பணிக்கு எடுத்துக் காட்டாக அமைந்துவிட்டது.

மேலும் இராஜாஜி விடுதலையும், நாயக்கரும் (பெரியார்) எனது அன்பான எதிரிகள் எனக் குறிப்பிட்டது விடுதலை திராவிடர் இனம் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஏடு என்பதற்கு விளக்கமாக அமைந்துவிட்டது. கலைஞர் ஒரு முறை காய்ச்சலால் உடல்நலம் குன்றிய நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார், தான் கடவுளிடம் விடுத்த வேண்டுகோளால் கலைஞருக்கு காய்ச்சல் வர செய்துவிட்டார் எனும் சிறிதும் மனிதநேயமற்ற மதவாதி யின் செயலை, ஆரிய ஆதிக்க அடையாளத்தை தோலுரித் துக் காட்டியது விடுதலை ஏடு.

விடுதலை ஏட்டின் இனப்பற்றினை டவுட் செய் யும் சில ஏடுகள் அவுட் ஆகிவிடும் நாள் தூரத்தில் இல்லை. அந்த தூரத்தின் தொலைவை குறைக்கும் பணி விடுதலை ஏட்டின் பரந்துபட்ட வாசிப்பில்தான் நிறைவேறும். திராவிடர் இனமும் மேம்படும்.

விடுதலை - சமூகநீதிப்பணி


வழக்குரைஞர் அ.அருள்மொழி பேசியதாவது: விடுதலை ஏட்டிற்கு எதிர்ப்பு வந்தபொழுது தந்தை பெரியார் எழுதுகிறார். தனிப்பட்ட ஜாதியை எதிர்க்கவோ, மதத்தை துரத்தவோ, தனி மதத்தை துவக்கவோ விடுதலை எடு தொடங்கப்படவில். இந்த நாட்டிற்குச் சொந்தமான ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை குறிப்பிடுவ தற்கு ஒரு பெயர் கூட இல்லை. பலநூற்றாண்டுகளாக நிலவிவந்த இந்த இழிவை போக்க வந்த ஏடு விடுதலை எனக்கூறினார்.

சமூகநீதித்தளத்தில் விடுதலை ஏடு அளப்பரிய சாதனை புரிந்துள்ளது. அவ்வப்போது இடஒதுக்கீட்டின் நடைமுறை குறைபாடுகளை, எதிர்ப்பாடுகளை குறித்து எழுதி சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது. எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளில் 10 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த வர்கள். மொத்த நீதிபதிகளில் ஏறக்குறைய சரிபாதிப்பேர் பெண் நீதியரசர்கள்.

இத்தகைய நிலைமை இந்தியாவின் எந்த உயர்நீதிமன்றத்திலும் இல்லை. சமூகநீதிக்குச் சாதகமாக அரசியல் அதிகாரத்தில் உள்ளோரை, மக்கள் மன்றத்தின் கருத்தைத் திரட்டுவதன் மூலம் பக்குவப் படுத்தி, நேர்செய்து, கொண்டு சென்ற பணியில் விடுதலை ஏடு பெரும்பங்கு வகிக்கிறது.

1980களில் தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டுள்ள இந்தியன் வங்கியில் பெரும்பாலான அதிகாரப் பொறுப்பில் பார்ப்பனர்கள் இருந்து அக்கிரகார வங்கி எனச் சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டதை பாராளுமன்றத்தில் பேச வைத்தது நிவர்த்தி செய்தது விடுதலை ஏடு. சமூகத்தின் அடித்தள மக்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி வாய்ப்புகளில் உரிய இடம் பெறுவதற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வினை நீக்கப் பாடுபட்டது விடுதலை நாளிதழ்.

இன்னும் சொல்லப்போனால் நுழைவுத் தேர்வு நுழைவதற்கு முன்பே அதன் பாதக அடையாளங்களை எடுத்துக்கூறிய ஏடு விடுதலைதான் ரூ.9000 வருமான வரம்பு ஆணையை விலக்கிக்கொள்ள வைத்தது. தமிழகத்தில் 69 விழுக்காடு, சட்ட வடிவ இடஒதுக்கீட்டுக்கான ஏற்பாடு, மண்டல் குழு பரிந்துரை நடைமுறையாக்கம் என விடுதலையின் பங்கு, வரலாற் றுச் சுவடுகளாய் தடம் பதித்து நிற்கிறது. வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுத்துவரும் விடுதலை ஏட்டிற்கு  நன்றி. விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவருக்கு நன்றி.

கருத்தரங்கின் உரை வீச்சால் கருஞ்சட்டைப் பட்டாளத்திற்கு நினைவூட்டலும் ஊக்கமும், இன உணர்வாளர்களுக்கு புத்தாக்கமும் ஒருங்கே கிடைத்தது, வருகை தந்த அனைவரும் பரந்துபட்ட தளத்தில் விடுதலை ஏட்டின் விழுமிய பணி பற்றிய செய்தி மழை யில் நனைந்து சென்றனர். கருத்து வீச்சால் எழுச்சியும் பெற்று மகிழ்ந்தனர்.

திராவிடர் கழக மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி நன்றி கூறிட கருத்தரங்க நிகழ்வு நிறைவு பெற்றது.
- தொகுப்பு வீ.குமரேசன் 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...