Thursday, December 29, 2011

கூட்டுத் தேனீக்கள்


வணக்கத்துக்குரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்,         

கடந்த சனிக்கிழமை கடந்து மட்டும் செல்லவில்லை, கனவிலடங்கா சரித்தி ரத்தையும் படைத்துவிட்டு சென்றுள்ளது. பகுத்தறிவு பகலவன் கண் அயர்ந்த நாள், தந்தை பெரியார் நம்மை விட்டு பிரிந்த, அந்த மறக்கலாகா நாளில் வரலாறு மெச்சும் நிகழ்வால் சரித்திரத்தில் ஓர் இடம் பதிக்கப்பட்டுள்ளது. ஆம், அய்ம்பதாயிரம் சந்தாக்கள் என்று நினைவில் நிறுத்திய ஒரு குறிக்கோளை 50,036 சந்தாக்கள் என்று முட்டி மோதி எழும்பியுள்ளது இன்று. அறிவு ஆசான் அவர்களின் கொள்கை என்ற கூட்டின் தேனீக்கள், அவையில் போட்ட திட் டத்தை, மனதில் வகுத்த இலக்கை சாத் தியமாக்கி, இந்த உலகிற்கே ஓர் எடுத்துக் காட்டாய் விளங்கி பறக்கின்றன.

இதுவரை நம்மை இகழ்ந்தவர்கள், நம் தேனீக்களின் ரீங்கார ஓசையினால், அவை கூட்டுப் புழுக்கள் அல்ல, கூட்டுத் தேனீக்கள் அன்றோ! என்று பதறி திணறி, வாயடைத்துப் போயுள்ளனர். தேன் கூட்டில்,  நம் தமிழர் தலைவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டிருந்து செயல் படுகின்றன இந்த "பெரியார் தேனீக்கள்".

ஓயாமல் உழைப்பது தான் தேனீக்கள் என்று அழைக்கபடுவது மட்டுமல்லாமல், தலைமையை சுற்றி கட்டுப்பாடுடன் செயல்படுவதும் தேனீக்கள் என்று அழைக்கபெறுகின்றன.  அவ்வகை தேனீக்களின் விழாவாகத்தான் அன்று (24.12.2011) களைகட்டியது, இயக்கத் தின்நாசாவான பெரியார் திடல். மன்னர் காலத்து ராஜவீதியை இருபுறமும் சாரை சாரையாக யானைகள்நின்று அலங்கரிப்பது போல, திடல் மைதானத்தை கருஞ்சட்டை படையினரை நிறைத்த வாகனங்கள் அலங்கரித்தன.

தோழர், தோழியர் மற்றும் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக, நிகழ்த்திய சாதனையை காண களமிறங்கியிருந் தனர். முதுபெரும் எழுத்தாளார் மானமிகு சோலை அவர்களின் வீரமணி ஒரு விமர்சனம் என்று, மேலும் உழைத்திடுவீர் என்று ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு மணி கட்டிய அந்த அருமையான படைப்பிற்கு பாராட்டு விழா கொண் டாடப்பட்டது. படுத்துறங்காமல் படித்து முடித்தோம் இல்லையா! அதன்பெயரில் பாராட்ட வேண்டியது நம் கடமை என்று நம் தலைவரின் சொற்களுக்கு ஏற்ப பாராட்டி சிறப்பிக்கப்பட்டார் சோலை அய்யா அவர்கள்.  

நமது தன்மான தலைவரை இவ்வளவு காலம் உடல் ரீதியாகவும், சமூக ரீதியாக வும் நோய்க் கிருமிகள் அண்டாமல், தங்காமல் தாங்கிய மருத்துவ பெருந் தகைகள் பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர். அதிலே, தம் இல்லற மருத்துவ பெருந் துணையாய் வாழ்கின்ற திருமதி.மோகனா வீரமணி அம்மா அவர்களும், உணர்ச்சி பெருகிய பலத்த கரவொலிகளுக்கு இடையே சிறப்பு செய்யப்பட்டார்.            இவை மட்டுமா, விடுதலை என்னும் நம் ஏவுகணையை பாதுகாக்க ஒரு பெருந்தொகையை வைப்பு நிதியாய் சேர்த்து வைக்கலாம் என்ற அறிவிப்பு, காற்றிலிருந்து மறைவதற்குள், கழகத் தாரின் நிதிகள் குவிந்தன.

ஒன்றா, இரண்டா மொத்தமாக 5 லட்ச ருபாய்கள். ஈரோட்டுச் சிங்கத்தின் கொள்கைகள் உலகமயமாக வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் கொண்டுபோய் சேர்க்கப்பட வேண்டும், என்ற நம் தலைவரின் இலட் சியத்தை நிறைவேற்றவும், ‘’Cross Country Race’’ என்ற ஒலிம்பிக் ஓட்டத்தில் விடுதலைச் சுடரை ஏந்திய பயணத்தை தொடரவும், கருஞ்சட்டை காலாட்படை யினர் காற்றாய் சுற்றுவோமாக.

தந்தை பெரியாருக்கு பின், பெரி யாரின் தொண்டர்களுக்குநான் அடிமை யாகிவிட்டேன் என்று அந்த தகத்தகாயத் தலைவரின் சொற்களை, சொப்பனங்கள் என்று எண்ணிவிடாமல், எண்ணிலடங்கா ஏற்றங்களை ஏற்ப்படுத்த வாரீர்! வாரீர்!! அய்ம்பது ஆயிரம் சந்தாக்களை அள்ளி விட்டோம், அன்னை மணியம்மையாரின் அரும்பிறந்தநாள் வரை நமக்கு காலம், தன்னை நீட்டித்துக்கொடுத்துள்ளது. நமக்கு மகிழ்வே. 

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். - என்ற வள்ளுவ வாக்கிற்கேற்ப நம் பணியை தொடர்வோமாக. நம் ஆசிரியரின் 80-ஆம் ஆண்டு பிறந்தநாளில் விடுதலை என்ற சமுதாய மின்தூக்கிற்கு ஒரு லட்சம் சந்தாக்கள் வழங்க வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்ட வேண்டாமா? ஒரு லட்சமா! என்று வியந்தால் எப்படி?. 1 லட்சமல்ல, ஒருகோடி சந்தாக்கள் கூட நாம் அளிக்கலாம். அளிக்கமுடியும்.

எப்படி? இன்று, சில தேனீக்களாய் உழைத்தநாம், நாளை பல தேனீக்களாக உருமாறி, ஆழிப்பேரலை போல் அடங்காபணி ஆற்றி, சந்தா சேகரித்தால், இது சாத்தியமே. நாம் சேகரிப்போம் என்பதும் நிச்சயமே. மீண்டும். மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்! நம்மால் முடியாதது, யாராலும் முடியாது! யாராலும்  முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!  - என்று தலை வரின் சொற்றொடரை மதித்து, பெரியாரின் மாணவனின் வழிகாட்டுதலில் தேனீக் களாய் பறப்போம்! உழைப்போம்!! பணி முடிப்போம்!!! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இரா. திலீபன், கண்ணந்தங்குடி கீழையூர், உரத்தநாடு.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...