Friday, December 30, 2011

ஒவ்வொரு நாள் இரவும் எத்தனை மணி நேரம் நீங்கள் தூங்கவேண்டும்?


ஒவ்வொரு நாள் இரவும் எத்தனை மணி நேரம் நீங்கள் தூங்கவேண்டும்?
ஒவ்வொரு நாள் இரவும் எட்டு மணி நேரத்துக்கு மேல் உறங்குவது மிகவும் ஆபத் தானது என்று தெரியவருகிறது.
தினமும் எட்டு மணிக்கும் மேல் உறங்கும் ஒரு வயது வந்தவர், தினமும் ஆறு முதல் ஏழு மணி வரை உறங்குபவர்களை விட இளம் வயதிலேயே இறந்து விடுகிறார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டேனியல் கிரிப்கே 11 லட்சம் மக்களிடம் மேற்கொண்ட ஒரு ஆறு ஆண்டு ஆய்வு முடிவு களை 2004 இல் வெளியிட்டார். இந்த ஆய்வுக் காலத்தில் தினமும் எட்டு மணியும் அதற்கு மேலும் உறங்கியவர்களிலும், நான்கு மணிக்குக் குறைவாக உறங்கி யவர்களிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிக எண்ணிக்கையில் இறந்து போயுள்ளனர் என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
சராசரி ஆங்கிலேயர் தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை இரவில் உறங்குகின்றனர். இது நமது பாட்டன், பாட்டிகள் உறங்கியதை விட ஒன்றரை மணி நேரம் குறைவானது. 1900 இல் சராசரி உறக்கம் என்பது ஒன்பது மணி நேரம் கொண்டதாக இருந்தது. தூக்கமின்மை அல்லது தூக்கக்குறைவினால் குறுகிய காலத்திற்கு பொதுஅறிவுத் திறன் (IQ) இழப்பு ஏற்படுவதுடன், நினைவாற்றல் மற்றும் காரணகாரிய நியாயங்களை உணரும்  ஆற்றல் ஆகியவையும் குறைந்து போகின்றன.
லியோனார்டோ டாவின்சி தன் வாழ்நாளில் பாதி அளவைத் தூங்கியே கழித்தார்.  அய்ன்ஸ்டீனைப் போலவே அவரும் பகல் பொழுதுகளில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திலும் பதினைந்து நிமிடங்கள் குட்டித் தூக்கம் போட்டார். ஆங்கில அகராதியை முதன் முதலாக எழுதி உருவாக்கிய ஜான்சன் நண்பகலுக்கு முன்பாக எப்போதுமே எழுந்தது இல்லை. பிரஞ்சு தத்துவ ஞானி பாஸ்கலும்   பெரும்பாலான பகல்  நேரத்தை படுக்கையில் உறங்கியே கழித்துள்ளார்.
இதற்கு நேர் மாறாக, அதிக ஆண்டுகள் உயிர்வாழ்வது என்ற புகழ் படைத்துள்ள யானை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமே உறங்குகிறது. வாலற்ற, பெரிய காதுகள் கொண்ட, மரத்தில் வாழும் ஆஸ்திரேலிய விலங்கான கோலாசுகளும் ((Koalas) தினமும் 22 மணி நேரமும் உறங்குகின்றன; ஆனால் பத்து ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. எறும்புகள் தினமும் ஒரு சில நிமிடங்களே உறங்குகின்றன. ஒரு சராசரி மனிதர் படுத்தபிறகு உறங்குவதற்கு ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார்.  சாதாரணமான ஆரோக்கியமுள்ள ஒருவர் ஒவ்வொரு நாள் இரவிலும் 15 முதல் 35 முறை விழித்துக் கொள்கிறார். தூக்கமின்மை, அதிகமாக குறட்டை விடுவது, பகலில் தன்னையறியாமல் கட்டுப்படுத்த முடியாமல்  தூங்குவது (narcolepsy) , தூக்கத்தில் மூச்சுவிடாமல் நிறுத்துவது மற்றும் அமைதியின்றி காலாட்டிக் கொண்டிருப்பது ஆகியவை உள்ளிட்ட  84 வகையான உறக்கக் கோளாறுகள் உள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடக்கும் சாலை விபத்துகளில் 20 விழுக்காடு விபத்துகள் ஓட்டுநர்கள் தூங்கிவிடுவதால் ஏற்படுபவை. இதைத் தடுத்து நிறுத்துவதற்கான சிறந்த வழி,  உங்கள் தலைமுடியை காரின் மேல்புறத்துடன் கட்டிவிடுவதுதான். அதற்கும் அடுத்த சிறந்த வழி ஒரு ஆப்பிளை சாப்பிடுவது. இது உணவு செரிமானத்தைத் தூண்டுவதால், மெல்ல வெளிப்படும் ஆற்றலை அளிக்கிறது. குறுகிய காலத்துக்கு மட்டுமே விழிப்புடன் இருக்கச் செய்யும் காப்பியை விட இது மிகவும் பயன் நிறைந்தது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...