Thursday, December 29, 2011

மடியில் கனம்!

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று உத்தமப் புத்திரர்கள்போல குரல் கொடுத்த பிஜேபி மதவாதக் கூட்டத்தின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.

பிஜேபி - சங்பரிவார் கும்பலின் பின்னணியில் அன்னா ஹசாரே என்ற காந்திக் குல்லாய் ஆசாமி முன்னிறுத்தப்பட்டார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் ஊழல் என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தைத் திட்டமிட்ட வகையில் செய்ய வைத்து, அதன் அரசியல் லாபம் என்ற பலாச்சுளையை பிஜேபி ருசிப்பதுதான் இதன் திரைமறைவுப் பொம்மலாட்டம்.

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு அரசமைப்புச் சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவதற்கான சட்டத் திருத்த மசோதாவை பி.ஜே.பி., எதிர்ப்பது ஏன்?

ஊழலை ஒழிக்கும் ஒரு அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பது அவர்கள் பார்வையில் நல்லதுதானே? அதனை ஏன் எதிர்க்க வேண்டும்? இதன் மூலம் பி.ஜே.பி.யின் ஊழல் ஒழிப்பு நிறம் கலைந்து விட்டது என்று காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி கூறியிருப்பது மிகவும் சரியானதே!

பி.ஜே.பி.யின் இந்தச் செயல்பாடு குறித்து அன்னா ஹசாரே உட்பட அவர் சார்ந்த குழுவினர் ஏன் கருத்துத் தெரிவிக்கவில்லை? ஏன் மவுன சாமியார் கள் ஆகி விட்டனர்? என்ற கேள்வி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

ஹசாரேகூட ஊழலை ஒழிப்பதில் உண்மையான நாட்டம் கொண்டிருப்பது உண்மை என்றால் முதலில் பிஜேபி ஆளும் கருநாடகத்தில் அல்லவா தொடக் கத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஏன் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங் களைத் தேர்வு செய்கிறார்? கோணிப்பைக்குள் இருக்கும் பூனை வெளியில் வந்தது என்பதுபோல ஹசாரே இப்பொழுது வெளிப்படையாக வேடம் களைந்து வெளியில் குதித்து விட்டார். காங்கிரஸ் தான் என் ஒரே எதிரி என்று கூறியதன் மூலம் அவரின் அரசியல் பின்னணி அம்பலமாகி விட்டது.

ஊழல்கள்மீது விசாரணை நடத்தும் குழுவுக்கு அரசமைப்புச் சட்ட அதிகாரங்களைக் கொடுத்து விட்டால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பிஜேபி யினர்தாம்.

பிரமோத் மகாஜன் (அவர் மரணம் அடைந்து விட்டார்), அருண்ஷோரி என்று ஒரு நீண்ட வரிசை உண்டு.

அடுத்தவன் மனைவியை தன் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் அசிங்க மான ஆசாமிகளுக்கு பிஜேபியில் பஞ்சம் இல்லை.

முதலாளிகளிடம் பெரும் பணம் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அவர்களுக்காகக் கேள்விகள் கேட்பதிலும் முதல் இடம் பிஜேபிக்குத்தான்.

பரிசுத்த யோவான் என்று குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆட்சியின் யோக்கியதை என்ன? கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு ஊழல்கள் அம்மாநிலத்தில் தலைவிரிகோலமாய் நிர்வாண ஆட்டம் போடுவதாக குஜராத் மாநிலத்து ஊழல் தடுப்பாணையம் புள்ளி விவரங்களோடு புட்டு புட்டு வைத்து விட்டதே!

வருவாய் உள்ளாட்சி அமைப்புகள் - நர்மதா மற்றும் நீர் ஆதாரங்கள், சாலைகள் மற்றும் கட்டடங்கள், நகர்ப்புற மேம்பாடுகள் ஆகிய துறைகளில் பெரும் ஊழல்கள் நடந்திருப்பதாக அந்த ஆணையம் அறிக்கையாகத் தந்துள்ளதே!

2010ஆம் ஆண்டில் மட்டும் 1180 அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. 2008ஆம் ஆண்டில் 376 அதிகாரிகள், 2009இல் 949 அதிகாரிகள், 2010இல் 1180 அதிகாரிகள்மீது ஊழல் புரிந்ததன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியிருந்தும், மோடி அரசு முக்காடு போட்டுக் கொண்டு இருப்பது ஏன்?

குஜராத் மாநிலத்தில் ஜன் லோக்பால் அமைப்புக்கு நீதிபதியைக்கூட நியமனம் செய்யாத அரசாயிற்றே!

இந்த யோக்கியர்கள்தான் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ளர்களாம்! வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

அரசமைப்புச் சட்ட ரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அதில் வெகுவாக பாதிக்கப்படப் போகிறவர்கள் பி.ஜே.பி.யினர் என்பதுதான் - இதற்கான சட்டத் திருத்த மசோதாவை எதிர்ப் பதற்கான முழு முதற் காரணம்! ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு கதையாகி விட்டது பிஜேபியைப் பொறுத்தவரை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...