Tuesday, November 1, 2011

நல்ல நட்புக்கு கன்பூஷியசின் அறிவுரை


நல்ல நட்புக்கு கன்பூஷியசின் அறிவுரை



நம்மில் பலரும் சுயநலத்திற்கே முன்னுரிமை தருகிறோம். காரணம், நமக்குள் சில கருத்துகள் காலங்காலமாக ஆழ்மனதிலேயே பதியும்படி ஆகிவிட்டது.
எடுத்துக்காட்டாக, ஏதாவது ஒருவர் நம்மிடம் வந்து உதவி கேட்டால், தனக்கு மிஞ்சினால் தான் அய்யா தான தருமம். எனக்கே திண்டாட்டம் இதில் நான் எங்கே உனக்கு உதவிட முடியும் என்று பட்டென்று பதில் கூறுவோர் பலரை நாம் பார்த்துள்ளோம்.
அடிப்படையில் மனிதர்கள் சுயநலவாதிகள் என்கின்ற போதிலும், சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கை வாழும் நாம் மற்றவர்களுக்கு உதவிடும் வாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பது சாலச் சிறந்தது என்கிறார் சீன நாட்டு அறிஞர் கன்பூஷியஸ்
கன்பூஷியஸ் கருத்து நமக்கு ஒரு ஊக்க மாத்திரை என்கிற தலைப்பில் மிக அருமையான நூல் ஒன்றை சில மாதங்களுக்குமுன் சிங்கப்பூரில் வாங்கிப் படித்தேன்.
கருணை உள்ள மனிதன் என்பவன் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுமுன் மற்றவர்களுக்கு உதவிடவே முன் வருவான்; தனது சாதனைகள் பட்டியலில் எதை எதையோ சாதிக்கவேண்டும் என்று எண்ணும் மனிதர்கள் இதையே அதாவது மற்றவர்களுக்கு உதவுவதையே முன்னுரிமை கொடுத்து செயல்படுதலையே தனது சாதனைகளில் தலையாயது என்று கருதிடவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் சீனத்துப் பேரறிஞர் கன்பூஷியஸ்.
நம்முடைய சுயநலம் என்பது நம்முடன் பிறந்த ஒன்று எனினும் பிறர்நலம் பேணுதல் மூலம் நாம் தாழ்ந்து விடுவதில்லை; வீழ்ந்து விடுவதில்லை. மாறாக, அவர்களில் பலர் அதனை நினைவுகூர்ந்து நமக்கு உதவிடவேண்டிய சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலேயேகூட அவர்கள் முன்வந்து உதவிகளைச் செய்து இக்கட்டான நெருக்கடியிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றக் கூடும் என்பதே கன்பூஷியசின் கருத்து ஆகும்.
இப்படி பிறருக்கு உதவிடும் மனிதநேயமும், கருணையும் கொண்ட மனிதன் ஒரு தனி மரம் அல்ல; ஒரு தோப்பு போன்றவரே! எப்படியெனில், அவரைச் சுற்றி அவர் அறியாமலேயே பல மரங்கள் அடர்த்தியாக அவருக்கு உதவிட படர்ந்து, வளர்ந்தோங்கி நிற்கும் - அவர் கண்ணுக்குத் தெரியாமலேயே!
உங்களுக்கு இரண்டு பேர் தெரிகிறார்கள்; உங்களுடன் பழக வருகிறார்கள். ஒருவர் மிகவும் தன்னலம் பேணுபவர். சுயநலவாதி என்பது தெரிகிறது. மற்றொருவர் எதிலும் மிகவும் கவனமாக இருந்து உதவிடவேண்டிய நேரத்தில் உதவிடுவதோடு, தனது நிலையையும் தாழ்த்திக் கொள்ளாமல் சுயமரியாதையோடு வாழுபவர். இந்த இரண்டு நபர்களில் நீங்கள் யாரை உங்கள் நண்பராகத் தேர்ந்தெடுக்கவேண்டும்? தேர்ந்தெடுப்பீர்?
கன்பூஷியஸ் கூறுகிறார்:
இரண்டாவது - அதாவது பிறருக்கு உதவிடும் சுயநலத்தை பின்னுக்குத் தள்ளிய அந்த நபரையே உங்கள் நண்பராகத் தேர்வு செய்யுங்கள். காரணம், இந்த நண்பர் ஒரு காந்த சக்தி போன்றவர். எவரையும் எளிதில் ஈர்க்கும் தன்மையை உடைய ஈர்ப்பாளர் ஆனபடியால், அவரது கருணை பொங்கும் சொற்களாலும், மனிதநேயம் முத்துக் கனிந்த செயல்களாலும், நீங்களும் கூட சிறப்பாகப் பயன் அடைவீர்கள்!
முதலில் சொன்ன (சுயநலவாதியே) காந்தசக்தி அல்ல; ஏகாந்த சக்தி. யாரையும் அண்டவிடாதவராகவே இருப்பர். சில தாவரங்கள் தனது அடியில் எந்த செடி கொடியும் முளைக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறதல்லவா? அதுபோன்றதே!
எனவே, அத்தகையவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...