Tuesday, November 1, 2011

கூத்தங்குடி அழகு இராமானுஜனும் அண்ணா தின்ற அப்பளமும்!


கடந்த 13ஆம் தேதி (ஆகஸ்ட் 2011) காலை நான் மறைந்து விட்ட பல பொது நலத் தோழர்கள், பிரமுகர்கள், கழக வீரர்கள் இல்லத்திற்குச் சென்று அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, நானும் வாழ்விணையரும், தோழர் களும் திரும்பினோம்.

திருவாரூரில் எனது நீண்ட நாள் நண்பரான லெனின் கோவிந்தராஜ் அவர்கள் மறைந்து விட்டார். (அவரும் சின்னக்குத்தூசி அவர்களும் மிகவும் நெருங்கிய தோழர்கள் ஆவார்கள்). எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதி தனது உள்ளத்தைக் கொட்டுவதற்கு; சீரிய திராவிடர் இயக்க பெரியார் - அண்ணா - கலைஞர் பற்றாளரான லெனின் கோவிந்தராஜ் அவர்கள் தவற மாட்டார்கள். அவரது மறைவு திராவிடர் இயக்கப் பேராதரவாளர்களின் இழப்புப் பட்டியலில் இடம் பெறுவதாகும்.

அவரது வாழ்விணையர், பிள்ளைகள் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் கூறும் முகத்தான் அங்கே சென்றபோது, சில நண்பர்கள் பல புத்தகங்களை எனக்கு அளித்தார்கள். திருவாரூர் நண்பர் திரு ஜி. வரதராஜன், (இவர் Waves foundation managing trustee) ஒரு புத்தகம் தந்தார்.

காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள் என்ற தலைப்பில் திரு. கூத்தங்குடி அழகு இராமானுஜன் அவர்களால் எழுதப்பட்ட அற்புதமான நடைச் சித்திரங்களின் தொகுப்பு. சுவையூட்டும் நிகழ்வுகள் - நறுக்குத் தெறித்த நல்ல தமிழ்நடை.
இப்படி ஓர் அற்புதமான எழுத்தாளரின் எழுத்தோவியத்தைப் பயணத்தில் படித்து, களைப்பை தீர்த்துக் கொண்டேன். சென்னை ஆலந்தூர் பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் வெளியிட்ட மிக அருமையான வாழ்விலக்கியம் இது! அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

சோழ வள நாடு சோறுடைத்து என்பதுபோலவே சோழவள நாட்டின் கருத்தாளர் உடைத்து என்பது புது மொழி; காவிரிச் செல்வர்களான அக்கருத்தாழ மிக்க எழுத்தாளர்களில் ஒப்பற்ற ஒருவராக திரு. கூத்தங்குடி அழகு இராமானுஜம் அவர்கள் திகழுகிறார்கள். அவரது அந்த சிறுசிறு எழுத் தோவியங்கள் எங்களை பிரமிக்க வைத்தன!

கைக்கெட்டும் குட்டைச் சுவர்களில் கரித்துண்டுகளால்  கிறுக்கிக் கொண்டிருந்தவனின் எழுத்துக்கள் இது எனத் தன்னடக்கத்தோடு கூறும் இந்த கூத்தங்குடி அழகு இராமானு ஜன் அவர்கள் 72 வயதிலும் ஊதுபத்தி கள் தயாரிப்பை கைத் தொழிலாக கொண்டுள்ளவர் என்கிற தகவல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!

அவரது துடிப்பு மிகுந்த எழுத்துக்கள் எம்மைப் பெரிதும் ஈர்த்தன. அவரது நூலை வெளியிட்ட இஸ்லாமிய சகோதரர் குறிப் பாக ஷேக் அப்துல்லாவுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றிக் கடன் பட்டுள்ளது.

அதில் அப்படி என்ன உங்களைக் காந்தமாக இழுத்தது என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ சாம்பிளுக்கு ஒரே ஒரு எழுத்தோவியம் (தலைப்புகளே அருமையானவை).

அண்ணா தின்ற அப்பளம் என்ற அருமையான சிறு நிகழ்வின் இலக்கியப் படிப்படிப்பு இதோ:

குன்றைப் போன்ற
தலைவர் குழந்தை போல
விடைபெறும்போது,
அந்த வார, திராவிட
நாடு பத்திரிகையை
அரங்கண்ணலிடம்
கொடுத்துச்
சென்றார்.
சிறுபொழுது சென்றது.
திராவிடநாடு இதழ்
பிரிக்கப்பட்டது. ஒரு உறை
கீழே விழுந்தது.

பேரறிஞர் அண்ணா,திராவிட நாடு என்ற வாரப் பத்திரிகை நடத்தினார். இதழ்கள் தோறும் கடிதம் எழுதுவார். படிக்கும் நம்மில் புதுமைகள் பதிப்பார். அனைவரும் அதையே விரும்பிப் படிப்பர். எங்கள் பள்ளிப் பருவத்தில் அதனைப் படிக்க வாரம் ஒருமுறை வள்ளுவர் படிப்பகம் செல்வோம்.

அப்பத்திரிகையின் துணையாசிரியர் இராம. அரங்கண்ணல், கோமல்காரர், குறுநகை சிந்துவார். இனிக்கப் பேசுவார். நட்பைப் போற்றுவார். ஊர்ப்பற்றில் திளைப்பார். உறவில் குழைவார்.

1958ஆம் ஆண்டு என்று நினைக் கிறேன். கோமல் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். நானும், என் நண்பனும் பார்க்கும் ஆசையில் ஊருக்குப் போனோம். அவன் பெயர் அங்கப்பன், கழகப் பற்று உடையவன். நான், தமிழ்ப் பற்றால் கழக மேடைகளை வலம் வருபவன்.

அரங்கண்ணல் வீட்டில் இல்லை. உடல் நலம் சரியின்மையால் திருவாரூர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். மதியப் பொழுது உணவை எண்ணி கோம லுக்குப் பக்கத்தேயுள்ள திருக்கோபுர வாசலில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றோம்.

பவானி அம்மையார் சிரித்த முகத் துடன் வரவேற்றார். விசுப்பலகையில் அமரச் சொன்னார். அமர்ந்தோம். என்னை மட்டும் உள்ளே அழைத்தார். அங்கப்பன் யாரென வினவினார். அவர்கள் வீட்டுச் சூழலில் வறுமை தெரிந்தது. நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி.

முன்னறிவிப்பின்றிச் சாப்பாட்டு நேரத்தில் விருந்தினரோடு வந்திருப்பது அவர்களுக்கு சுமைதரும் எனப் புரிந்தது. மடமை செய்தவனாய் மனம் வருந்தியது.

உடனே ஒரு பொய்யைச் சொன்னேன். அம்மா, அங்கப்பன் யார் வீட்டிலும் சாப்பிட மாட்டான். உங்கள் ஊர்க் கோவில் பிரசாதம் சாப்பிட ஆசைப்பட்டான். அதனால்தான் அழைத்து வந்திருக் கிறேன், என்றேன்.

இதோ வாங்கி வரச் சொல்கிறேன், என்றார்கள். வேண்டாம். நாங்களே கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாங் கிக் கொள்கிறோம், என்றேன். இருவரும் புறப்பட்டோம். கோவிலை வலம் வந்தோம். சிவாச்சாரியாரிடம் பட்டைச் சோறும், தேன்குழலும் கேட்டோம். படையல் சோறு வந்தது. அவர் கேட்ட தொகையைக் கொடுத்தோம். சாப்பிட்டோம்.

சிறப்போடு வாழ்ந்த பவானி அம்மை யார் குடும்பம் வறுமையில் சிக்கி, ஆலயப் பணி புரிவதைச் சிவாச்சாரியார் மூலம் தெரிந்து கொண்டேன். மனச்சுவையோடு நடந்தேன். நினைவில் கொள்ளத்தக்க தொரு மகிழ்வான நிகழ்வு அன்று நிகழும் என்பதை அறியாதவனாய் மீண்டும் கோமலுக்கே வந்தேன்.

மருத்துவமனையில் இருந்த அரங் கண்ணல் திரும்பி இருந்தார். என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

பேசிக் கொண்டிருந்தோம். மணி மாலை நான்கு. ஒரு மகிழுந்து வந்து நின்றது. அண்ணாவும், தஞ்சாவூர்த் தி.மு.க. செயலாளரும் இறங்கி வந் தனர். நாங்கள் பிரமித்து எழுந்தோம். வணக்கம் கூறினோம்.

சிரித்தபடியே பதில் வணக்கம் கூறி வந்தமர்ந்த அண்ணா, அரங்கண்ண லின் உடல் நலம் கேட்டார். ஆறுதல் கூறினார். பத்திரிகை பற்றிப் பேசிக் கொண்டார்கள். வேறு வேறு செய்திகள் பேசினர். மறுவாரம் வந்துவிடுவதாக அரங்கண்ணல் சொன்னார். இயல் பாகத் தஞ்சாவூர் வர நேர்ந்திருக்கிறது.

அங்கிருந்து அரங்கண்ணலைப் பார்க்கும் அவாவில் கோமல் வந்திருக் கிறார். பேசிக் கொண்டிருந்தபோது பதிமூன்று வயதுப் பெண் ஒரு தட்டில் பொரித்த அப்பளங்களும், கூழ் வடகமும் கொண்டு வந்தாள்.

அரங்கண்ணல் திரும்பிப் போகச் சொன்னார். திரும்பிப் பார்த்தார் அண்ணா. பெண் உள்ளே போய் விட்டாள். என்ன அது, கொண்டு வரச் சொல். அண்ணா சொன்னார். மாலையில் நான், பொரித்த அப்பளமும், கூழ் வடகமும் விரும்பிச் சாப்பிடுவேன். அதை எடுத்து வந்து விட்டாள், என்றார் அரங்கண்ணல்.

நீ சாப்பிடுவதை நான் சாப்பிடக் கூடாதா? என்றார் அண்ணா.

உங்களுக்குப் பலகாரம் செய்யச் சொல்லியிருக்கிறேன் என்றார் அரங்கண்ணல்.

வேண்டாம்ப்பா. நேரம் இல்லை, என்றார் அண்ணா.

பொரித்த அப்பளமும், கூழ்வடகமும் வந்தன. அவற்றைத் தின்ற அண்ணா அவற்றின் சுவையை மிகவும் பாராட்டி னார். காஃபி பருகினார். நகரச் செய லாளரும் நாங்களும் அதைத் தின்று மகிழ்ந்தோம். உடன் புறப்பட்டார் அண்ணா.

வரும்போது அப்பளம் தயாரித்து எடுத்து வா, என்றார். குன்றைப் போன்ற தலைவர் குழந்தை போல விடை பெறும்போது, அந்த வார, திராவிட நாடு பத்திரிகையை அரங் கண்ணலிடம் கொடுத்துச் சென்றார்.

சிறுபொழுது சென்றது. திராவிட நாடு இதழ் பிரிக்கப்பட்டது. ஒரு உறை கீழே விழுந்தது. ரூபாய் நோட்டுக் களோடு சிறு காகிதத் துணுக்கும் இருந்தது. அதில், செலவுக்கு வைத் துக் கொள். உடல் நலமானதும் வந்து சேர், என்று எழுதப்பட்டிருந்தது. நெகிழ்ந்துப் போனார் அரங்கண்ணல்.

வாழ்க, கூத்தங்குடி அழகு இராமா னுஜன்! வளர்க அவரது இலக்கியப் பணி!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...