Tuesday, November 1, 2011

கில்லடின் கொலைக் கருவி எங்கு, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?


தெரிந்துகொள்வோம்
இன்று ஒரு புதிய தகவல்:


கில்லடின் கொலைக் கருவி எங்கு, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
யார்க்ஷயர் நகரில் வாழ்ந்த ஹாலிஃபேக்ஸ் என்பவர்தான் முதன் முதலில் கில்லடின் கொலைக் கருவியை உருவாக்கிப் பயன்படுத்தினார். அவர் கண்டுபிடித்த கருவியில் பதினைந்து அடி கொண்ட மரத் தூண்கள் இருபக்கத்திலும் இருக்க, அவ்வறைகளுக்கு இடையே உள்ள ஈயத்தால் ஆன குறுக்குச் சட்டம் இருக்கும். அச் சட்டத்தின் மீது தொங்கவிடப்பட்டு இருக்கும் இரும்புக் கோடாரி ஒரு கயிறு மற்றும் உருளை ஆகியவற்றால் செயல்பட வைப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.
1286 மற்றும் 1650 ஆம் ஆண்டுகளுக்கிடையே இக் கருவியினால் குறைந்தது 53 மனிதர்கள் கொல்லப் பட்டதாக அதிகாரபூர்வமான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இடைக்காலத்தில் வாழ்ந்த ஹாலிஃபேக்ஸ் தனது துணி வியாபாரத்தில் பெரும் செல்வம் ஈட்டினார். துணி ஆலைகளுக்கு வெளியே சட்டங்களில் மீது விலை உயர்ந்த துணிகள் உலர வைக்கப்பட்டன. திருட்டு என்பது அப்போது ஒரு பெரிய பிரச்னையாக இருந்ததால், திருட்டைத் தடுக்க பயன் நிறைந்த ஒரு வழி நகர வர்த்தகர்களுக்குத் தேவைப் பட்டது. அதன் காரணமாக ஹாலிஃபேக்ஸால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த கொலைக் கருவி. மெய்டன் என்று அழைக்கப்பட்ட இதே போன்ற மற்றொரு கொலைக் கருவி பின்னர் ஸ்காட்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரெஞ்சுக்காரரான ஹாலிஃபேக்ஸின் கருத்தினால் தூண்டப்பட்டு அவர்கள் அக்கருவியைக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அதற்கு வேறு பெயர் சூட்டிக் கொண்டனர்.
பொதுஇடங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை வெறுத்த, மெல்லிய மனம் கொண்ட மனிதநேயர் டாக்டர் ஜோசப் இக்னாக் கில்லடின் என்பவர். பிரெஞ்சு தண்டனைச் சட்டத்தை மனித நேயம் மிக்கதாக ஆக்கும் வகையில், ஒரு சீர்திருத்த திட்டத்தை தேசிய சட்டசபை முன் அவர் வைத்தார். கொலைத் தண்டனையை ஓர் இயந்திரம் கொண்டு  நிறைவேற்றும் ஒரே மாதிரியான நடைமுறை ஒன்றை அவர் பரிந்துரைத்தார்.
அவரது திட்டங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. என்றாலும் திறமையான முறையில் கொலை தண்டனையை நிறைவேற்றுவது என்ற கருத்து மட்டும் தொடர்ந்து ஆலோசனையில் இருந்து வந்தது. அறுவை சிகிச்சை மருத்துவர் அகடமியின் செயலாளரான டாக்டர் அந்தோணி லூயிஸ் என்பவர் டாக்டர்  கில்லடினின் கருத்தை எடுத்துக் கொண்டு அதை சீர்செய்தார். அவர்தான் முதன் முதலாக கில்லடின் என்னும்  சாய்வான வெட்டும் கத்தியைக் கொண்ட கொலைக் கருவியை  1792 இல் உருவாக்கினார். அக்கருவி முதலில் லூசெட்டி என்றுதான் அழைக்கப்பட்டது. ஆனால் எப்படியோ இக்கருவியுடன் கில்லட்டினின் பெயர் ஒட்டிக் கொண்டது. அவரது குடும்பத்தினரின் கடும் ஆட்சேபத்தையும் மீறி அது நிலைகொண்டுவிட்டது. டாக்டர் கில்லடின் தான் கண்டுபிடித்த கருவியாலேயே கொல்லப் பட்டார் என்று வழங்கும் நாடோடிக் கதை உண்மையற்ற கட்டுக் கதையாகும். தோளில் வந்த பிளவைக் கட்டியினால் அவர் 1814 இல் இறந்தார்.
கில்லடிக் கருவிதான் ஜனநாயக முறையில் கொலை தண்டனை வழங்க  பிரான்ஸ் நாடு முழுவதிலும் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அது பயன்படுத்தப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில், 15,000 மக்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர். இதற்கும் மேலாக மக்களைக் கொல்வதற்கு ஜெர்மனி நாஜிகள் இதனைப் பயன்படுத்தினர்.  1938 மற்றும் 1945 ஆண்டுகளுக்கிடையே அவர்களால் 40,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. ஓர் இளம் பெண்ணைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த ஹமிதா ஜன்டோபி என்ற துனிசியா நாட்டில் இருந்து குடியேறியவர்தான் பிரான்சில் இறுதியாக கில்லடின் கருவியால் கொல்லப்பட்டவர் ஆவார். இறுதியாக பிரான்ஸ் நாட்டில் 1981 இல் மரணதண்டனையே நீக்கப் பட்டது.
இக்கருவியில் துண்டிக்கப்பட்ட தலை எவ்வளவு நேரம் சுயநினைவுடன் இருக்கும் என்று சரியாக சோதனை செய்து பார்ப்பது இயலாத செயலாகும். அய்ந்து முதல் பதின்மூன்று வினாடிகள் வரை சுயநினைவு இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ 
பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...