Wednesday, November 23, 2011

அய்யா... அய்யா... என்ற அவலக்குரல்


- கி. வீரமணி
அய்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்தில் சோகமே உருவாக தலைவர்கள்...
அய்யா அவர்கள் ஒரு கட்சித் தலைவராகிய - நாட்டின் பொதுச்சொத்து எனும் உண்மை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
அனைத்துக் கட்சிக்காரர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமிழினப் பாதுகாவல ருக்குக் காட்டிய மரியாதை சரித்திரத்தில் அழிக்க முடியாத அத்தியாயம்.
பிற்பகல் 2-50. தாங்கொணாத் துயரக் கொடுமையின் உருவமாய் அன்னை மணியம்மையார் அய்யாவின் உடல்மீது சாய்ந்து நினைவிழந்தார்கள்.
என்னால் தாங்க முடியாத துயரத்தில் உங்கள் அடிமையை விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே அய்யா! என்று நான் அய்யா அவர்களின் காலைப் பற்றிக் கொண்டு புலம்பிப் புலம்பி அழுதுவிட்டேன். தந்தை பெரியார் உடல் இராஜாஜி மண்டபத்தில் உள்ள மேடைமீது வைக்கப்பட்டபோது நான் மயங்கி விழுந்துவிட்டேன். அருகில் இருந்தவர்கள் தூக்கிச் சென்று மயக்கம் தெளிய வைத்தனர்.
எங்களுடன் அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மன்னை நாராயணசாமி, ஈ.வெ.கி.சம்பத்  ஆகியோர் அய்யாவுடன் வேறு காரில் வந்தனர். பெரியார் அவர்களின் வருகையை எதிர்பார்த்து முதலமைச்சர் கலைஞரும், அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்தில் காத்திருந்தனர்.
தந்தை பெரியார் இறந்த செய்தி அறிந்து முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், இரங்கல் செய்தியில், அய்யா அவர்கள் 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த பகுத்தறிவுச் சிங்கம். கடைசி மூச்சுவரை சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது. இன்று தமிழ்நாடு தன்மான உணர்வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர் அவர்.
அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோபலட்ச பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது. எங்களை எல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டியின் இந்தப் பிரிவுபற்றி என்ன சொல்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன். இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தப் புரட்சிக்காரரை இழந்துவிட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களது இரங்கல் செய்தியில், யாருக்கும் அஞ்சாமல் எதற்கும் அஞ்சாமல் தமிழகம் எங்கணும் வீரநடை போட்டுவந்த பகுத்தறிவுச் சிங்கம் இன்று சாய்ந்துவிட்டது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் பெரும் துக்கத்தையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கர்மவீரர் காமராசர் அவர்கள் குறிப்பிட்ட இரங்கல் செய்தியில், நமது நாட்டின் லட்சோபலட்சம் மக்களால் பெரியார் என்று பாசத்துடன் அழைக்கப்பட்டு வந்த ஈ.வெ.இராமசாமி இன்று நம்மை விட்டு மறைந்தார். அன்னாரது மறைவு பொது வாழ்க்கைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், தமிழ்நாட்டில் சமூக விழிப்புணர்வு ஏற்பட அவர் ஆற்றிய பணி, அவர் வகித்த பாத்திரம் மிகப்பெரியது. அவர் மாபெரும் தேசபக்தர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
தி.மு.க. அமைச்சர் ராசாராம் அவர்கள், புதுக் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.பழனிசாமி, குடியரசுக் கட்சி ஏம்.ஏ.முனுசாமி. நீதிக்கட்சி கே. பரமசிவம் அவர்கள், புதுவை முதல்வர் பரூக் அவர்கள் இரங்கல் செய்தி அனுப்பி இருந்தார்கள். தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. காஞ்சியில் கடையடைப்பு, தி.க., தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில், ஏழு நாட்கள் பறக்கவிடப்பட்டன.
ஜனாதிபதி, பிரதமர் அவர்கள் ஆளுநர் கே.கே. ஷாவுக்கு இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார்கள். அண்டை மாநிலமான கர்நாடகம், ஆந்திரம், பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர்கள் இரங்கல் செய்தி அனுப்பி இருந்தார்கள்.
சென்னை ராஜாஜி மண்டபத்தில் யாவரும் தெளிவாக எளிதில் காணும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த பீடத்தில் நீங்கா துயில்கொண்ட தந்தை பெரியார் அவர்களின் புகழ் உடல்     24.-12.-1973 பிற்பகல் 4 மணிக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

வேலூரில் இருந்து தந்தை பெரியார் அவர்களின் புகழ் உடல் அய்யா அவர்களின் வேனில் ராஜாஜி மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
சத்துவாச்சாரி, ஆற்காடு ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,ஒச்சேரி, தாமல், சுங்குவார் சத்திரம் சிறீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் பல்வேறு ஊர்களிலும் வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள், கழகத் தோழர்கள், தாய்மார்கள், மாணவர்கள், அலுவலர்கள் திரளாகக் கூடி நின்று வாழ்வித்த வைக்கம் வீரருக்கு மலர் மாலைகள் சூட்டி தங்கள் மரியாதையைத் தெரிவித்த வண்ணமாகவே இருந்தனர்.
அய்யா அவர்களது உடலுடன் அமைச்சர்கள் ப.உ.ச., மன்னை, டாக்டர் இராமச்சந்திரா, டாக்டர் ஜான்சன் ஆகியோர் உடன் வந்தனர். சரியாக பிற்பகல் 4 மணிக்கு அய்யா அவர்களின் அழியாப் புகழ் உடல் ராஜாஜி மண்டபத்தை வந்தடைந்தது.
போலீஸ் உயர்மட்ட அதிகாரிகள் அய்யா அவர்களின் உடலை மேடைக்குச் சுமந்து வந்தனர். கருஞ்சட்டைத் தோழர்கள் தமிழினத்திற்குத் தோள் கொடுத்த தலைவரின் உடலைத் தோள்கொடுத்துத் தாங்கி ராஜாஜி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த பீடத்திலே வைத்தனர்.
தமிழ் மக்களின் இதயத்திலே வேர்விட்டு, பழுத்த கனியாகிய அய்யா அவர்களின் உயிர்நீத்த உடலைக் கண்ட மக்கள் கூட்டம்  _ ராஜாஜி மண்டபத்தையே மக்கட் கடலால் மிதக்கவிட்ட தமிழினக் கூட்டம் அய்யா...  அய்யா... என்று கதறிக் கூக்குரலிட்ட அவலக்குரல் இதுவரை சரித்திரம் கண்டிராத நிகழ்ச்சியாகும். தமிழினத்தின் தொழுகை தொழுகை, எங்கு பார்த்தாலும் இனத் தலைவரின் உடல் நோக்கி கைகள் தொழுத வண்ணமாகவே இருந்தன. அழுதல், புலம்பல், கூக்குரல், கண்ணீர் வெள்ளம் இவற்றிற்கிடையே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கழகக் கொடியோடு ஆள் உயர ரோஜா மாலையும் மலர் வளையமும் வைத்து தன் ஆற்றொணாத் துயரத்தைக் கொட்டி அழுது தங்களை ஆளாக்கிய ஆசானுக்கு இறுதி மரியாதை தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மாண்புமிகு டாக்டர் நாவலர், ப.உ.சண்முகம், மாதவன், க.இராசாராம், கண்ணப்பன், என்.வி. நடராசன், மன்னை நாராயணசாமி, அன்பழகன், ராமச்சந்திரன், ஆதித்தனார் ஆகிய தமிழக அமைச்சர் பெருமக்கள், திரு. ஈ.வெ.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், சென்னை நகர ஷெரிப் கெ.எஸ். நாராயணன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.டி.சுந்தரவடிவேல், சிவாஜிகணேசன், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி. இராமமூர்த்தி, சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி. நடராசன், ஏ.பி.சனார்த்தனம் எம்.எல்.சி., தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவர் இராமசுப்பிரமணியன், தமிழக அரசு செயலாளர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் இன்னும் இனத்தால் ஒன்றுபட்ட லட்சக்கணக்கான தமிழர் கூட்டம் உள்ளத்தால் ஒன்றுபட்டு நாமும் ஒரு இனம் என்ற மரியாதையைத் தேடித் தந்த தலைவர் பெரியார் அவர்களின் உடலுக்கு மலர் வளையங்களும் மலர் மாலைகளும் சூட்டிச்சூட்டி மரியாதை தெரிவித்து, கதறிக் கதறி அழுத வண்ணமே இருந்தனர்.
நடிகர் சிவாஜி கணேசன் மலர் வளையம் வைத்துவிட்டு, பெரியார் காலடியில் தலைவைத்துக் கதறி அழுதார். தந்தை பெரியார் அவர்களே! கல்வி உரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த நாங்கள் எல்லாம் கல்வி உரிமையும் உத்தியோக வாய்ப்பும் பெற்றது உங்கள் தொண்டால் அல்லவா? என்ற நன்றி உணர்வோடு ஆயிரமாயிரம் அரசு ஊழியர்கள் அய்யா அவர்கட்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.
நான் அய்யாவின் உடலின்மேல் கழகக் கொடியால் போர்த்தி கூவி அழுத காட்சியையும், அன்னை மணியம்மையார் அய்யா அவர்களின் அருகே வந்து கைகூப்பி வணங்கி ஆற்றொணாத் துயரச் சுமையைத் தாங்க முடியாது நின்ற காட்சியையும் கண்டு மக்கள் வெள்ளம் துயரத்தின் எல்லையில் உணர்ச்சி மயமாக ஓவென்று கதறினர், புலம்பினர்.
ஆண்கள் கூட்டத்திற்குச் சமமாக பெண்கள் கூட்டம் பெருக்கெடுத்துக் காணப்பட்டது. பெண்ணடிமையைத் தீர்த்த தந்தை என்பது மட்டுமல்ல, பெரியார் என்ற பட்டத்தையும் அய்யா அவர்கட்கு வழங்கிய இனமும் பெண் இனம்தான். அய்யா அவர்களை நன்றியோடும் உரிமையோடும் பெண்கள் அணி அணியாகத் திரண்டு வந்து தங்கள் நன்றிப் பெருக்கைக் கண்ணீர்ப் பெருக்கோடு கலந்துவிட்டனர்.
மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் லட்சோபலட்சக் கழகத் தோழர்கள் - கருஞ்சட்டைப் படைத் தொண்டர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்து தங்கள் ஒரே தலைவருக்கு இறுதி மரியாதை தெரிவித்து எங்களை எல்லாம் அனாதையாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்களே அய்யா என்று குமுறிக் குமுறி அழுது இதயச் சுமையை வெளிப்படுத்தினர்.
இனிமேல் இதைவிடக் கொடிய துயரம் எங்களைத் தீண்டவே முடியாது அய்யா, தீண்டவே முடியாது என்று நெஞ்சம் வெடிக்க நெக்குருகி நின்ற கழகத் தோழர்களுக்குள் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று புலப்படாமல் அதிர்ச்சிக்கு ஆளாகிப் புரண்டனர்.
இனி யாருக்கு விழா எடுப்போம்? எங்கள் வீட்டில் எந்தத் திருவிழாவைக் கொண்டாடுவோம்? என்று திசை தெரியாமல் கழகத் தோழர்கள் துவண்டார்கள்; துடித்தார்கள்.
பிற்பகல் 5.30 மணிக்கு அமைச்சர் அன்பில் அவர்கள் டில்லியிலிருந்து நேரே ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். மீளாத் துயிலேறி நின்ற மனிதாபிமானச் சிற்பியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கோவென்று கதறினார்.
மேலவைத் தலைவர் மாண்புமிகு சி.பி.சிற்றரசு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் கு. காமராஜ், சட்டப் பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன், புதுவை முதல்வர் மாண்புமிகு பருக் மரைக்காயர், துணை சபாநாயகர் சீனிவாசன், தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி., தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் பி.இராமச்சந்திரன், செயலாளர் திண்டிவனம் இராமமூர்த்தி, கருத்திருமன், டி.கே.பகவதி எம்.எல்.சி., டாக்டர் கிருஷ்ணசாமி, எம்.ஜி. இராமச்சந்திரன், கே.ஏ. கிருட்டிணசாமி எம்.பி., எஸ்.டி.சோமசுந்தரம் எம்.பி., முரசொலி மாறன் எம்.பி., இரா.செழியன் எம்.பி., கோவை செழியன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மணலி கந்தசாமி எம்.எல்.ஏ., மூக்கையாத் தேவர் எம்.எல்.ஏ., ஏ.ஆர்.பெருமாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். இராஜேந்திரன் எம்.பி., நடிகமணி டி.வி.நாராயணசாமி, துரைமுருகன் எம்.எல்.ஏ., ஏ.வீராசாமி எம்.எல்.ஏ., என். கிட்டப்பா எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏ.எஸ்.கே. அய்யங்கார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணன், சென்னை மாநகராட்சி ஸ்பெஷல் ஆபீசர் அந்தோணி அய்.ஏ.எஸ்., மாவட்ட நீதிபதி சத்தியேந்திரன், ரிசர்வ் பாங்கு ஊழியர் சார்பாகவும்  விடுதலை பணிமனையின் சார்பாக அனைத்து ஊழியர்களும் தனித்தனியாக தங்கள் சார்பிலும் மலர் மாலைகள் சூட்டி வணங்கி இறுதி மரியாதையைத் தெரிவித்துக் கொண்டனர்.
தொழிற்சங்கத் தலைவர் குசேலர், முன்னாள் மேயர் கணேசன், ராசாராம் எம்.எல்.ஏ., இளங்கோவன் எம்.எல்.ஏ. ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மதுரை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய முத்து எம்.எல்.சி. அவர்கள் மலர் மாலை சூட்டி எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே அய்யா! என்று கோ என்று கதறினார். பக்கத்தில் இருந்த தோழர்கள் அவரைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். அமைச்சர் சத்தியவாணி முத்து அய்யா அவர்களின் காலைப் பிடித்துக் கொண்டு கதறிக் கதறி அழுதார். மலர் மாலை சூட்டி தனது இறுதி மரியாதையை இன ஏந்தலுக்குத் தெரிவித்தார்.
புதுவை மாநில அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகம், சி.ஆர்.நரசிம்மன், கா. சுப்ரவேலு எம்.பி., புதுவை சிவம் எம்.பி., விழுப்புரம் சண்முகம் எம்.எல்.ஏ., உலகநம்பி எம்.பி., முதல்வரின் துணைவியார் தயாளு அம்மையார், அமைச்சர்  மாண்புமிகு எஸ்.ஜே. சாதிக்பாட்சா, கந்தப்பன் எம்.எல்.ஏ., தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எல்.கணேசன் எம்.எல்.ஏ.,  அறிவழகன் எம்.எல்.சி., மாரிசாமி  எம்.பி., சட்டக் கல்லூரி முதல்வர் பழனிசாமி, பராங்குசம் எம்.எல்.சி., கல்கி சதாசிவம், ஈரோடு அங்கப்பச் செட்டியார், அமைச்சர் மாண்புமிகு ஓ.பி.இராமன், நடிகவேள் எம்.ஆர்.இராதா, டாக்டர் ஹண்டே எம்.எல்.ஏ., சினிமா அதிபர் எம்.ஏ.வேணு, நடிகர் காகா ராதாகிருட்டிணன், நடிகை விஜயகுமாரி, பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், செயராமன் எம்.எல்.ஏ., சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் அழகிரிசாமி, திருப்பத்தூர் இராமசாமி எம்.எல்.ஏ., பாண்டிச்சேரி வி.சுப்பையா, ஏ.என். சட்டநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம். கலியாணசுந்தரம்  எம்.பி., என்.ஜி.ஓ. சங்கச் செயலாளர் சுப. சீதாராமன், காட்டூர் கோபால் எம்.எல்.சி., ஆடுதுறை இராசமாணிக்கம் எம்.எல்.ஏ., தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி., (பட்டாடை போர்த்தி கலங்கிய கண்களுடன் இறுதி மரியாதை செலுத்தினார்) தமிழ்நாடு கால்நடை உதவியாளர் சங்கத்தின் சார்பாக சங்கத் தலைவர் இரா. இரத்தினகிரி, ஜஸ்டிஸ் நடராசன், கவிஞர் எஸ்.டி.சுந்தரம், முன்னாள் போலீஸ் கமிஷனர் குழந்தைவேலு, பவுத்த பிக்குகள், நாகை இராசமாணிக்கம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.எம்.யூ. தோழர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.எம். நாராயணசாமி பிள்ளை, து.ப.அழகு முத்து எம்.எல்.ஏ., நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு.,
விருதுநகர் வி.வி.இராமசாமி, சென்னை மாவட்ட நீதிபதி சிதம்பரம், முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலம், பாபநாசம் கணபதி, எம்.எல்.ஏ., ஈரோடு சின்னசாமி, எம்.எல்.ஏ., கோவை இராமநாதன், எம்.எல்.சி., சாமிநாதன் எம்.பி., சக்தி கு.கதிர்வேல், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் பண்டரிநாதன், தொழிலதிபர் கோவை வி.பாலகிருஷ்ணன், (விஜயலட்சுமி மில்ஸ்). தஞ்சை நடராசன் எம்.எல்.ஏ., குளித்தலை கந்தசாமி எம்.எல்.ஏ., ஈ.ஆர்.கிருஷ்ணன் எம்.பி., பழனியம்மாள் எம்.எல்.ஏ., சினிமா டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்.மன்றாடியார், நெடும்பலம் என்.எஸ்.இராமலிங்கம், பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் ஆகியோரும், தமிழ்நாடு டிப்ளமா இன்ஜினியரிங் சங்க சார்பாகவும், தமிழ்நாடு இன்ஜினியர் சங்க சார்பாகவும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.
டி.என். அனந்தநாயகி எம்.எல்.ஏ., தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர் இராமையா, செயலாளர் ஏ.கே. சண்முக சுந்தரம், புலவர் ந. இராமநாதன், மரூர் என்.தர்மலிங்கம் எம்.எல்.ஏ., சிட்டிபாபு எம்.பி., நாகூர் அனிபா எம்.எல்.சி., தில்லை வில்லாளன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கக்கன், பெங்களூர் பேராசிரியர் தர்மலிங்கம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் வகாப் ஜானி எம்.எல்.சி, டி.செங்கல்வராயன் தமிழ்நாடு பிரதம நீதிபதியார், திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம், சென்னை மாவட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சங்கம், கிண்டி கோபால் எம்.எல்.ஏ.,
ஏ.வி.பி. ஆசைத்தம்பி, புதுவை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியார், தமிழ்நாடு முடி திருத்துவோர் மயிலைக் கிளைச் சங்கம், விசுவநாததாஸ், முடிதிருத்துவோர் சங்கம்,  டாக்டர் விஜயலட்சுமி, பொன். சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., பி அண்ட் சி தொழிலாளர்கள் சங்கம், தியாகராய நகர் காய்கறி விற்பனையாளர் சங்கம், அய்.சி.எப். லேபர் யூனியன், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பத்மநாதன், ஈசன் இன்ஜினியரிங் குரூப் நிறுவனம், கோ.சி.மணி எம்.எல்.சி., கல்வித்துறை இயக்குநர் திரு. சிட்டிபாபு, சினிமா டைரக்டர் ஏ.எல்.சீனிவாசன், இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் அல்போன்ஸ், பூண்டி நீரியல் ஆய்வுக்கூட ஊழியர்கள், அதன் இயக்குநர் இன்ஜினியர் குமாரசாமி, புதுவை முன்னாள் அமைச்சர் வெங்கடசுப்பாரெட்டியார், தாழை மு. கருணாநிதி எம்.எல்.ஏ.,கருப்பையா மூப்பனார், இந்து அறநிலைய கமிஷனர் கே.எஸ்.நரசிம்மன், ஜோதி வெங்கடாசலம், இன்னும் பல்வேறுபட்ட தொழிற்சங்கக் கிளைகள், திராவிட கழகக் கிளைகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் கிளைகள் சார்பாகவும், ஏட்டில் எடுத்து அடக்கமுடியாத எண்ணிறைந்த கழகத் தோழர்கள் அலுவலர்கள், பொதுமக்கள் சார்பாகவும் மலர் மாலைகளும் மலர் வளையங்களும் குவிக்கப்பட்டு ஆற்றொணாத துயரப் பெருஞ்சுமையோடு இறுதி மரியாதையை இன ஏந்தலுக்குத் தெரிவித்த வண்ணமாகவே இருந்தனர்.
- நினைவுகள் நீளும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...