Monday, November 21, 2011

கடவுள், ஜாதி, மத மூடநம்பிக்கைகள் ஒழிந்து சமத்துவ சமுதாயம் வளரும் வரை பெரியார் தேவைப்படுகிறார்


தமிழர் தலைவர் அரியதொரு விளக்கம்
13.11.2011 அன்று பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் சிங்கப்பூரில் நடைபெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உடன் சுப.வீரபாண்டியன் மற்றும் சுப.திண்ணப்பன் உள்ளனர்.
சிங்கப்பூர், நவ. 20- கடவுள், ஜாதி, மத மூடநம்பிக்கைகள் ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலரும் வரை பெரியார் தேவைப்படுகிறார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சிங்கப்பூரில் பெரியார் கண்ட வாழ் வியல் நிகழ்ச்சி 13.11.2011 அன்று நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு திரா விடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அது மட்டுமல்ல திருமணம் என்பது சம்பந்தப்பட்ட இரண்டு பேர் தலையிட வேண்டிய அவசியமே தவிர, மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இங்கு சுதந்திரம் இருக்கிறது. இந்திய நாட்டில் தமிழ்நாட்டில் செய்தித்தாள்களில் ஞாயிற்றுக்கிழமை விளம்பரம் வரும்.
யார் என்ன ஜாதி தெரியாது
இந்த ஜாதி பெண் இருக்க வேண்டும். இந்த கோத்திரப் பெண் இருக்க வேண் டும் என்று விளம்பரப்படுத்துவார்கள். சிங்கப்பூரில் ஜாதி பார்த்து திருமணம் செய்கிற பிரச்சினையே இல்லையே.
இங்கு யாருக்கு என்ன ஜாதி என்றே தெரியாது. ஆண்ஜாதி. பெண் ஜாதி அவ்வளவுதான் இருக்குமே தவிர, ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல் லக்கூடிய அளவுக்கு அந்த வாய்ப்புகள் வந்திருக்கிறது.
பெரியாருடைய கருத்துக்கு நல்ல கருத்தாக்கமும், நல் வடிவமும், எதிரொலி யும் பெற்றிருக்கிறது என்பதற்கு அடை யாளம் இதுதான். தந்தை பெரியார் அவர்களை அவர் கண்ட வாழ்வியலைக் காணலாம்.
தந்தை பெரியார் சிக்கனத்தை சேமிப்பை வலியுறுத்தினார். இன்றைக்கு சேமித்து எல்லோருமே தெளிவாக இருக்கிறார்கள்.
சேமிப்பால்தான் வீடு
இந்த நாடே சேமிப்புக்கு வாய்ப்பை உண்டாக்கியிருக்கிறது. அந்த சேமிப் பினால்தான் இவ்வளவு பெரிய வீடு. வீடு என்றால் நம்மாட்களுக்கு என்ன சொல்லிவிட்டார்கள். எங்கள் நாட்டைப் பொறுத்தவரை வீடு என்றால் அதை மேலே காட்டிவிட்டார்கள்.
அறம், பொருள், இன்பம், வீடு நீ இப்பொழுது பட்டினி கிடந்து செத் தால்தான் அங்கு மோட்சம் கிடைக்கும். திலோத்தமை, ரம்பை, ஊர்வசி எல்லாம் மோட்சத்தில் இருந்து டான்ஸ் ஆடு வார்கள். சாப்பாடு மலை, மலையாய் குவித்து வைத்திருப்பார்கள் என்று சொல்லி வைத்து விட்டனர்.
சிங்கப்பூரில் திருமணமாகிவிட்டதா? அவர்களுக்கு ஒரு வீடு. முதியோர்கள் ஆனால் அவர்களுக்கு தனி வாய்ப்பு. இது அவ்வளவும் எங்கிருந்து வருகிறது சேமிப்பு. இந்த சேமிப்புக்கு கரு யார் கொடுத்தது? மற்றவர்கள் எப்படி இருந் தாலும் அதைப் பற்றிக்  கவலை இல்லை. தமிழர்களே சேமியுங்கள். நீங்கள் எல்லா வற்றையும் செலவழித்து விடாதீர்கள் என்று சாதாரண தொழிலாளர்களாக இருந்த மக்களுக்கு 1954லே சொன்னார்.
எனவேதான் தந்தை பெரியார் கண்ட வாழ்வியல் என்பது மற்றவர்கள் பயன் படுத்தியதைவிட சிங்கப்பூரியர்களாக இருக்கின்ற நீங்கள் பயன்படுத்திக்கொண் டிருக்கிறீர்கள்.
சிங்கப்பூர் பெரியார் கண்ட வாழ்வியல்  விழாவில் சிறப்பு விருந்தினர் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்  விக்ரம் நாயர் அவர்களுக்கு பெரியார் சமூக சேவை மன்ற தலைவர் வீ. கலைவச்செல்வம் நினைவு பரிசு வழங்கினார்.  (சிங்கப்பூர் - 13.11.2011)
பெரியார் கண்ட வாழ்வியல்
பெரியார் கண்ட வாழ்வியலுக்கு அற்புதமான எடுத்துக்காட்டான நாடாக இருக்கின்றீர்கள். இலக்கியமானாலும் தன்மான உணர்வு இங்கு அதிகமாக இருக்கிறது.
போதாத காலம்
பொதுவாக இங்கு எழுத்தாளர்களாக இருந்தாலும் கருத்தாளர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் யாருக்காகவும் எளிதிலே தலைவணங்கிப் போவதில்லை.
அதே நேரத்தில் தேவையில்லாத பிரச் சினைகளில் தாங்கள் ஈடுபட்டுக்கொண் டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நேரத்தை மதிக்கிறீர்கள். இங்கே கூட 6.30 மணிக்கு நிகழ்ச்சி என்றால் உடனே தொடங்கினீர்கள். பெரியாருடைய வாழ் வியலில் ரொம்ப மிக முக்கியமானது நேரத்தை மதிப்பது. காலம் போதவில் லையே என்று கருதுகிற சமுதாயம்தான் வளரும். காலம் போதவில்லை. ஆனால் நம்மாள்களுக்கு சிந்தனையில் தலை எழுத்தை உண்டாக்கி விட்டான்.
ஏதாவது கேட்டால் என்ன செய்வ துங்க, போறாத காலம்ங்க என்று சொல் லுவான். காலம் போதவில்லையே என்று நினைக்கிறவர்களை எண்ணிப் பாருங் கள். எனக்குப் போதாத காலம் என்று எண்ணுகின்றான். இவனுடைய தோல் விக்கு என்ன காரணம்? உண்மையான காரணத்தை இவன் கண்டறிவதில்லை. இப்படிப் பட்ட காலத்தில் பெரியார் இன்னமும் தேவையா? என்று நீங்கள் நினைக்கலாம்.
பெரியார் தேவையா?
நேற்றுகூட மாணவச் செல்வங்கள் அற்புதமாக கேள்வி கேட்டார்கள். இப் பொழுதுதான் எல்லாம் வந்துவிட்டதே. வளர்ந்து விட்டதே. பெரியார் தேவையா? என்று கேட்கிறார்கள்.
இன்னமும் மூடநம்பிக்கைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் மூடநம்பிக்கை. அந்த மூடநம்பிக்கை தன்னம்பிக்கையை அழிக்கிறது. அந்த மூடநம்பிக்கைக்கு இடமில்லாமல் மக்களை மாற்ற வேண்டும் என்பதற்காக பெரியார் தேவைப்படுகிறார். பெரியார் எப்போதும் தேவைப்படுவார். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
சிங்கப்பூரில் சார்ஸ் என்ற நோய்  வந்தது. அதே போல பறவைக் காய்ச்சல் என்று ஒன்று வந்தது. சிங்கப்பூர் பொரு ளாதாரத்தையே கொஞ்சநாள்கள் ஆட்டி படைத்தது. பத்தாண்டுகளுக்கு முன்னாலே.
சரி அதற்குரிய மருந்துகள் இருந்தன. அந்த நேரத்திற்கு மட்டும்தான் மருத்துவ மனை என்று நினைக்க முடியுமா? மருத்துவமனை எப்பொழுதும் தேவை. மருத்துவர்கள் எப்பொழுதும் தேவை. மருந்து எப்பொழுதும் தேவை. பெரியார் எப்பொழுதும் தேவை. (கைதட்டல்).
விஞ்ஞானிக்குக் கவலை இல்லை
சமூக விஞ்ஞானி என்று தந்தை பெரியார் அவர்களை சொன்னார்கள் பாருங்கள். விஞ்ஞானிகள் மற்றவர்கள் தங்களைப் பாராட்டுவார்களா? என்று நினைத்து எதையும் கண்டுபிடித்துச் சொல்வதில்லை. உலகம் உருண்டை என்று சொன்னவனுக்கு என்ன பரிசு கிடைத்தது முதலில். சிறைக்குள்தான் தள்ளினார்கள். கடைசிவரைக்கும் உருண்டை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
இன்றைக்கு மிகப் பெரிய அளவுக்கு மாறுதல் கண்டு பிடித்துவிட்டார்கள். ஆகவே விஞ்ஞானிகளுக்கு ஆரம்பத்தி லிருந்து கெட்ட பெயர்தான் வந்திருக் கிறது. எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சமூக விஞ்ஞானியாக இருந்து மிகப்பெரியதொரு மாற்றத்தை உருவாக்கிக் காட்டினார்கள். ஆகவே மருந்து கண்டு பிடித்தது அந்த விஞ் ஞானிக்காக அல்ல. ஏன் மருந்து சாப்பிடுகின்றோம்? இல்லை, இல்லை மருந்து சாப்பிடு கின்றவர் வருத்தப்படுவார் என்பதற்காக சாப்பிடுகின்றோமா? அல்லது மருந்து வியாபாரம் ஆகும் என்பதற்காக சொல் வோமா? இல்லை மருந்து என்பது நம் முடைய நோய்க்காக. நம்முடைய அறியா மைக்காக. நம்முடைய துணிச்சலுக்காக. மூடநம்பிக்கை வராமல் இருக்க வேண்டு மானால் தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.
கடவுளை மற! மனிதனை நினை!
ஏன் கடவுளைப் பற்றிச் சொன்னார் கள்? மதத்தைப் பற்றி பேசினார்கள் என்றால் எல்லாவற்றையும் குறுக்கே போட்டு நம்மை கீழே தள்ளினார்கள். அதனால் தந்தை பெரியார் சொன்னார்.
எனக்குத் தனிப்பட்ட முறையிலே யார் மீதும் கோபம் கிடையாது. எனக்கு மனிதன் மேல் பிரியம். கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் அடுத்த வரி சொன்னார் பாருங்கள். மனிதனை நினை என்று சொன்னார். ஏனென்றால் மனிதனை மறந்துவிட்டு, ரொம்ப பேர் கடவுளை நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். சாப்பிடாத கல்லுக்குப் பாலை ஊற்றிக்கொண்டிருக்கின்றான். அதே நேரத்தில் மனிதர்கள் பட்டினி கிடக் கிறார்கள். மனிதர்கள் பசியால் துடிக் கிறார்கள். தற்கொலை செய்துகொள் கிறார்கள். தன்னுடைய பிள்ளை இப் படித் துடித்துக்கொண்டிருக்கின்ற பொழுது எந்த தந்தை பார்த்துக்கொண் டிருப்பார் என்று சொன்னார்கள். நம்முடைய சுப.வீரபாண்டியன் அவர் கள் பேசும்பொழுது ஒன்றைச் சொன்னார்.
பெரியாரிடம் கேட்ட கேள்வி
பெரியாரிடம் கேள்வி கேட்டால் அவர் மாதிரி பளிச்சென்று பதில் சொல்லுகிறவர் வேறு யாரும் கிடையாது. அவர் ஒன்றும் யோசனை பண்ணமாட் டார். கம்ப்யூட்டர் பொத்தானைத் தட்டினால் பளிச்சென்று பதில் கிடைக் கிறதோ அது மாதிரி சொல்லுவார்.
ஒருமுறை பெரியாரிடம் ஒருவர் கேள்வி கேட்டார். பெரியார் சிதம்பரத் தில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண் டிருக்கிறார். வயதான ஒரு தீட்சிதர் சிதம் பரத்தில் உயர் ஜாதிக்காரர். தீட்சிதர்களி லிருந்து எல்லோரும் உட்கார்ந்து பெரி யாருடைய பேச்சைக் கேட்கிறார்கள். ஒரு வயதான பெரியவர் பெரியாரு டைய பேச்கைக் கேட்க பொதுக்கூட்ட மேடைக்கு முன்னாலே உட்கார்ந்து கேட்கின்றார்.
நாயக்கரே நீங்கள் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் சாமியைப் போய் கல் என்று சொல்லுகின்றீர்களே!என்று ஆத் திரத்தோடு கேட்டார்.  உடனே பெரியார் என்ன சொன்னார் என்றால் அதற்கு என்ன காரணகாரியம் பெரிய தத்துவ விளக்கமெல்லாம் அவர் சொல்லவில்லை.
வாங்க! உங்களை கூட்டிக்கொண்டு போகிறேன். சிதம்பரம் கோவிலில் நடராஜர் இருக்கிறார். என் தடியால் தட்டிக்காட்டுகிறேன். அது கல்லா-இல்லையா என்பதைக் தட்டிக்காட்டு கிறேன் என்று சொன்னார். உடனே அந்த தீட்சிதர் சமாளித்துக்கொண்டு சொன்னார். அது கல்லுதாங்க. ஆனால் அது சாதா ரண கல் இல்லைங்க. மந்திரத்தை உள்ளே விட்டிருக்கிறோம். எல்லா கல்லு மாதிரி யும் அது கிடையாது. (கைதட்டல்-சிரிப்பு).
மந்திரம் சொல்லி கும்பாபிசேகம் எல்லாம் பண்ணி அதற்கப்புறம்தான் வைத்திருக்கின்றோம். அதனால் மந்தி ரத்தை உள்ளே விட்டதால் கடவுள் ஆகியிருக்கின்றார். இந்த படிக்கல்லையும் அதையும் ஒன்றாக நினைக்கக் கூடாது என்று சொன்னார்.
உடனே பெரியார் சொன்னார். அய்யா பெரியவர் சொல்லுகிறமாதிரி இந்த கல்லுக்குள் மந்திரத்தை விட்டால் கட வுளாக்கலாம் என்று சொல்லுகின்றீர்கள். ரொம்ப சந்தோஷம் ரொம்ப சந்தோஷம் அதே மந்திரத்தை எங்களிடம் விட வேண்டியதுதானே. அவன்தான் ரொம்ப வருஷமா கீழ்ஜாதிக்காரனாக, பள்ள னாக, பறையனாக ஒதுக்கி வைத்திருக் கின்றீர்கள்.
அவர்களும் உடனடியாக ரொம்ப சுலபமாக மேல் ஜாதியாகி விடுவார்களே. அதன் பிறகு நமக்குள் தகராறே இருக் காதே. எல்லா மனிதர்களாகத்தானே இருப்போம் என்று சொன்னவுடன் அந்த தீட்சிதர் பதில் சொல்லவில்லை. அது மாதிரி பளிச்சென்று பதில் சொன்னார். அய்யா அவர்களிடம் கேள்வி கேட்க ஒருவர் எழுதிக்கொண்டிருந்தபொழுது பேனா நிப்புமுனை உடைந்து போய் விட்டது என்று சொன்னவுடனே பெரியார் அவருடைய பேனாவை எடுத்துக் கொடுத்து கேள்வி கேட்க எழுதுங்கள் என்று கொடுத்தார். பெரியாருடைய மாணவன் என்று நான் சொல்லுவதற்கு காரணமே சில இடங்களில் நான் சொல்லியிருக்கின்றேன்.
முட்டாள்தனம் உனக்கே சொந்தமா?
அமெரிக்காவில் மூடத்தனமான ஒரு செய்தி வந்தது. அமெரிக்கா வளர்ந்தநாடு. அந்த நாட்டில் இவ்வளவு முட்டாள் தனமான ஒரு செய்தி வந்திருக்கிறதே என்று பார்த்தேன். விடுதலை அலுவல கத்தில் அய்யா அவர்கள் இருக்கின்றார். பக்கத்து அறையில் இருக்கின்றார். அவர் தங்குகின்ற இடமும் அதுதான்.
உடனடியாக நான் இந்த செய்தியைப் பார்த்துவிட்டு பெரியார் ஆச்சரியப் படுவார் என்ற நினைத்துக்கொண்டு அய்யா அவர்களிடம் எடுத்துச் சென் றேன். அய்யா அவர்கள் என்ன பரபரப் பாக வருகிறீர்கள் என்று கேட்டார்.
ஒன்றுமில்லைங்கய்யா. அமெரிக்கா வில் இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது. அமெரிக்காவிலேயே இப்படி பெரிய மூடநம்பிக்கை இருக்கிறது. அதைத்தான் அய்யா அவர்களிடம் காட்டலாம் என்று வந்தேன் என்று சொன்னேன்.
ஓகோ, அப்படியா? என்னைப் பாராட் டுவார் என்று நினைத்துக்கொண்டு சொன்னேன். நான் வேகமாகப் போய் காட்டினேன். அய்யா அவர்கள் ரொம்ப நிதானமாகச் சொன்னார். முட்டாள் தனம் என்ன உனக்கே சொந்தம் என்று நினைத்தாயா? அது உலகத்திற்கே சொந் தம். ஏன் அமெரிக்காவில் முட்டாள் இருக்க மாட்டானா? என்று கேட்டார்.
- (சிரிப்பு-கைதட்டல்).
ஆகவே நாட்டில் முட்டாள்தனம் எங்கேயிருக் கிறதோ அங்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார். மூடநம்பிக்கை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார்.
வளர்ச்சி
பெரியார் என்பது மருந்து, பெரியார் என்பது விஞ்ஞானம். பெரியார் என்பது மின்னொளி. சமுதாயம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. முதலில் காட்டுமிராண்டியாக மனிதன் இருந்தான். காட்டு மிராண்டியாக இருந்த மனிதன் நாடோடியாக இருந்த மனிதன் விவசாயம் வேளாண்மையைக் கண்டுபிடித்தான்.
வேளாண்மைக் கண்டுபிடித்தவுடன் அடுத்தக் கட்டம் அவன் தொழில்புரட்சி வந்தது. எந்திரங் களை  கண்டுபிடித்தான்.
தொழில் புரட்சிக்கு அடுத்த கட்டம் இன்றைக்கு தகவல், தொழில்நுட்பம் வந்தாகிவிட்டது. தகவல் தொழில்நுட் பம் உலகம் பூராவும் வந்தாகிவிட்டதே. அடுத்த கட்டம் என்னவென்றால் தகவல் தொழில் நுட்பத்தால் உலகம் பூராவும் ஒரு மூலையில் இருப்பது இன்னொரு பக்கத்தில் வந்தாகிவிட்டதே.
தந்தை பெரியாருடைய அறிவைப் பாருங்கள். இனிவரும் உலகம் என்ற நூலில் சொல்லியிருக் கின்றார். இனிவரும் உலகம் என்பது ஒரு சிறிய நூல் ஒரு திருமணத்தில் ஆற்றிய உரைதான். அதிலே அய்யா அவர்கள் சொன்னார். இனிமேல் வருகிற காலத்தில் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்றால் எல்லோருடைய கையிலும் தொலைபேசி இருக்கும்.
அது மட்டுமல்ல. காணொலி இருக்கும். வீடியோ கான்பரசிங் என்று சொல்கிறார்கள் பாருங்கள். காணொலி அதிலேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வார்கள்.
ஒரு ஆசிரியர் போதும்
ஒரு ஆசிரியர் போதும் பத்தாயிரம் பேருக்கு சொல்லிக்கொடுப்பார். எப்பொழுது 80 ஆண்டுகளுக்கு முன்னாலே மற்றவர்கள் நினைக்க முடியாத காலத்தில் பெரியார் சொன்னார். இன்றைக்கு அதை முழுக்கப் பார்க்க வேண்டும் என்றால் அதை சிங்கப்பூரில் பார்க்கலாம்.
எங்கள் நாட்டில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு வகுப்புகள் நடைபெறுகிறதே. அத்தணை ஆசிரி யர்கள் தேவை இல்லை. மாணவர்கள் இருப்பார்கள். வகுப்புகள் இருக்கும். ஆசிரியர்கள் தேவை இல்லை. பெரியார் எப்படி இவைகளை எல்லாம் சிந்தித்தார். அவர் ஒரு சுதந்திர சிந்தனையாளர் அவர் எந்த பள்ளிக்கூடத்திற்கும் போகவில்லை. எந்த கல்லூரிக் கும் போகவில்லை. எந்த பட்டமும் பெறவில்லை.
மக்கள் கொடுத்த பட்டம்
பெரியார் என்பது மக்கள் கொடுத்த பட்டம் அதனால்தான் பெரியார் நமக்குக் கிடைத்தார். பெரியார் தனது சுதந்திர சிந்தனையை என்றைக்கும் விட்டது கிடையாது. ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டார் பாருங் கள். சிறிய வயதில் ஆரம்பித்தது கடைசிவரைக்கும் அப்படியே இருந்தார். அதே மாதிரி அய்யா அவர்களிடம் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். எங்களை மாதிரி இருப்பவர்கள் கூட விவாதிப்போம்.
பெரியார் தவறாக நினைக்க மாட்டார்
சர்வாதிகாரமாக இயக்கத்தை நடத்திய தலைவர் தான். ஆனால் அதே நேரத்தில் எங்களைப் போன்ற தொண்டர்கள் உள்ளே விவாதிக்கும் பொழுது கடுமையாக எதிர்த்து வாதம் பண்ணு வோம். குரலை உயர்த்திக்கூட பேசுவோம். தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார் அய்யா. அவருக்குத் தெரியும். இவனுக்குப் பிடிவாதம் அதைத் தெளிவாக நம்பிக்கொண்டிருக் கின்றான். அதனால் குரலை உயர்த்திப் பேசுகிறானே தவிர, நமக்கென்று இதில் மரியாதையை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று கருதுவார்.
அய்யா அவர்கள் போலி மரியாதையைப் பற்றியே  கவலைப்பட்டது கிடையாது. அய்யா முன்பு ஒருவர் வந்து பார்த்து உட்கார்ந்தார். கால் மீது கால்போட்டுக்கொண்டு உட்கார்ந்தார். பல பேர் பல மாதிரி உட்காருவது நமக்குத் தெரியும். அய்யா அவர்களுடன் கூட இருந்த தொண் டருக்கு ஆத்திரம். என்னய்யா பெரியார் முன்னாலே இவர் காலைத் தூக்கி போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக் கின்றாய். என்னய்யா. இப்படி உட்கார்ந்திருக்கின்றாய். முதலில் காலை எடய்யா, தலைவரை மதிக்க வேண்டும் என்று தொண்டருக்குக் கோபம். தலைவரை மதிக்க வேண்டும் என்று தொண்டருக்குக் கோபம். இதைப் பார்த்து புரிந்துகொண்டார். அவரிடம் என்னப்பா சொன்னாய் என்று கேட்டார். இல்லைய்யா அய்யா முன்னாலே இப்படிக் காலைத் தூக்கிக் கொண்டு போட்டிருப்பது எங்களுக்கு கஷ்டமாக இருந்தது.
அது யார் கால்? அவருடைய கால்தானே (சிரிப்பு-கைதட்டல்). அவர்கால் மீது இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக் கின்றான். அதைப் போய் நீ ஏனய்யா தடுக்கிறாய் என்று கேட்டார். அவர் காலை கீழே வைப்பதில் தான் மரியாதை என்றால் அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை. அந்த மரியாதையை ரொம்ப நாள் நான் காப்பாற்ற முடியாது. அதற்கு என்று ஒரு மரியாதை இருந்தால்தான் அது நிற்கும் என்று கருதுகின்றார்.
(17.11.2011 சிங்கப்பூர், தமிழர் தலைவர் கி.வீரமணி உரையில் இருந்து)
பூரண பகுத்தறிவாதி
எல்லாவற்றிலும் நடைமுறைக்கு ஏற்ப சிந்திக்கக் கூடிய ஓர் தலைவர். பகுத்தறிவுவாதி. பூரண பகுத் தறிவுவாதி. எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
நேற்று நான் சொன்னேன். இன்றைக்கும் நான் வலியுறுத்திச் சொல்லுகின்றேன். யார் சொன்னாலும் நீங்கள் உங்கள் அறிவைப்பயன்படுத்துங்கள். உங்களுடைய அறிவு என்ன சொல்லுகிறதோ-அதைப் பயன்படுத்துங்கள் என்று சொன்ன பொழுது ஒரு மாணவர் எழுந்திருந்து கேட்டார். நீங்கள் சொல்லுவதை நம்புவதா இல்லையா? என்று கேட்டார். அப்பொழுது பளிச்சென்று தந்தை பெரியார் சொன்னார். நான் சொல்லுவதையும் நம்பாதே. உன் அறிவு என்ன சொல்லுகிறதோ அதை நம்பு என்று எடுத்துச்சொல்லிவிட்டு சொன்னார்.
ராமசாமி ஒரு பிற்போக்குவாதி
இன்றைக்கு நீங்கள் என்னை ரொம்பப் பாராட்டு கிறீர்கள். நான் புரட்சிகரமான சிந்தனை உள்ளவன் என்றெல்லாம் பாராட்டுகிறீர்கள். என்னுடைய கருத்துகள் ரொம்ப அற்புதமான கருத்துகள் என்று. இருநூறு வருடம் கழித்து ராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி இருந்தான் என்றால் நான் அதிசயப்படமாட்டேன்.
ஏனென்றால் அன்றைக்கு கால வளர்ச்சியில் அவ்வளவு தூரம் அவர்கள் வேகமாகப் போவார்கள். அதை நாம் அனுமதிக்க வேண்டும். இவ்வளவு தாரளமாக சிந்தித்த ஒரு மனிதநேயர் வேறு யாரும் கிடையாது.
தந்தை பெரியார் கண்ட வாழ்வியல் என்பது மிக முக்கியம். அதே போல நன்றி என்பது பயனடைந்த வர்கள் காட்ட வேண்டிய பண்பு. உதவி செய்ப வர்கள், அதை எதிர்பார்க்கக் கூடாது. உதவி செய்தவர்கள் அதை எதிர்பார்த்தால் அது சிறுமை குணம் என்று சொன்னார்.
யாரையும் தாழ்த்தக்கூடாது.
எனவே வாழ்க்கையில் நன்றி. வாழ்க்கையிலே துணிச்சல். வாழ்க்கையிலே தன்னம்பிக்கை. வாழ்க் கையிலே மற்றவர்களை மதிப்பது என்பதெல்லாம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி பெரியார் கண்ட வாழ்வியல் அற்புதமான அறிவியலை ஒட்டிய வாழ்வியல், மனிதநேயத்தை ஒட்டிய வாழ்வியல், யாரும் யாரையும் தாழ்த்தக்கூடாது. யாரும் யாருக்கும் உயர்ந்தவர்கள் கிடையாது. சமத்துவ சமுதாயம் உருவாகி வளர்ச்சி அடைந்த சமுதாயமாக வளர வேண்டும். பற்று என்பது இதிலே அதிலே என்பதைவிட பற்று என்பது முழுக்க முழுக்க மனித சமுதாய வளர்ச்சிக்குப் பற்று அறிவுக்குப் பற்று, அறிவு வளர்ச்சியிலே பற்று, மனிதநேயத்திலே பற்று கொண்டவர்கள் என்பதை கூறி வாய்ப்பளித் தவர்களுக்கு நன்றிகூறி மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய பெரியார் சமூகசேவை மன்றத்திற்கு நன்றிகூற என்னுடைய அன்பான வாழ்த்துகளை எடுத்துச்சொல்லி, அடுத்த கருத்தரங்கம், பெரி யாருடைய தாக்கங்கள் எழுத்துத்துறையிலே, இலக்கியத்துறையிலே அறிவியல் துறையிலே சிங்கப்பூருக்கு எப்படி பயன்பட்டது என்பதை எடுத்துக்கூறி நடைமுறைப்படுத்துவதற்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், இங்குள்ள எழுத்தாளர்கள் அமைப்பினர் வந்திருக்கிறார்கள். பெரியார் சமூகசேவை மன்றம் என்று பல்வேறு அமைப்புகளை எல்லாம் அழைத்து மிகச்சிறப்பான ஒரு கருத்தரங்கத்தை நல்ல நூலாக்கமாக ஆக்கிக் காட்டுவோம் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
பெரியார் சமூக சேவை மன்ற தலைவர் வீ.கலைச்செல்வம் - மலையரசி ஆகியோருக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.
பெரியார் சமூக சேவை மன்ற பொருளாளர் நா.மாறன் - கவிதா ஆகியோருக்கு சோம.இளங்கோவன் சிறப்பு செய்தார்.
பெரியார் சமூக சேவை மன்ற செயலாளர் க.பூபாலன் - பர்வீன்பானு ஆகியோருக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...