Wednesday, November 16, 2011

இடஒதுக்கீட்டில் முட்டுக்கட்டைகள்


இடஒதுக்கீட்டில் முட்டுக்கட்டைகள்



இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கு வழி வகை செயயப்பட்டு இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு உட்பட அதனை செயல்படுத்துவதில் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் பிர்மாவின் முகத்தில் பிறந்த ஜாதியினரால் போடப்பட்டன.

வேலை வாய்ப்புக்கு வழியைத் திறந்திருந்தாலும் கல்விக்குக் கதவடைப்பு செய்யப்பட்டு இருந்தது என்பது எத்தகைய ஏமாற்று வேலை! தந்தை பெரியார் அவர்களின் வெகுண்டெழுந்த கிளர்ச்சியாலும் அதற்குத் தமிழினத் தலைவர்கள் அனுசரணையாக இருந்ததாலும்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் 1951இல் கொண்டு வரப்பட்டு, கல்வியிலும் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டது.

ஆனாலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 1990 ஆம் ஆண்டு வரை கல்வியிலும் சரி, வேலை வாய்ப்பிலும் சரி மத்திய அரசு துறைகளில் இடஒதுக்கீடு செய்யப்படாதது சட்ட விரோதமானது மட்டுமல்ல, மோசடியுமாகும்.

நேரு பிரதமராக இருந்தபோது காகாகலேகர் தலைமையில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் அளிக்கப்பட்டும், அவை என்னாயின என்பது எவருக்குமே தெரியாது.

பி.பி. மண்டல் அவர்களின் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையம் ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, பத்தாண்டுகள் திராவிடர் கழகம் போராடியதன் விளைவாக (42 மாநாடுகள்; 16 போராட்டங்கள்) 1990 ஆகஸ்டில் சமூக நீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது மத்திய அரசுத் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு பிரகடனப்படுத்தப் பட்டது. 

அதனை எதிர்த்தும் உயர்ஜாதிக் கூட்டம் உச்சநீதிமன்றம் செல்ல, 1992இல் தான் செயல்பாட்டுக்கு வரமுடிந்தது. ஆனால் கல்வியில் இடஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கல்விக்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டுவர அரும்பாடுபட வேண்டியிருந்தது. கொள்கை ரீதியாக ஒத்துக் கொண்டாலும் 27 விழுக்காடு இடங்களை எடுத்த எடுப்பிலேயே கொண்டு வர மாட்டார்களாம். 

ஆண்டுக்கு ஒன்பது சதவிகிதம் என்று மூன்று ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டு, இப்பொழுது அது ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று ஓடி விளையாடுகிறது நடுவண் அரசு. (கல்வித்துறை உயர் ஜாதிக்காரர்களின் கையில் இருக்கக் கூடாது என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்து)

இப்படி சொல்லப்பட்டாலும் எல்லாத் துறைகளிலும் இடஒதுக்கீடு கிடையாதாம். பல துறைகள் இதற்கு விதி விலக்காம்! பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கும், தொல்லை களுக்கும் அளவே கிடையாது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட்டது - அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளுக்கு  வழி செய்யப்பட வேண்டாமா?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நாடாளுமன்றக் குழு 21 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இதுவரை நியமிக்கப் படவில்லை. இது ஏன்? பார்ப்பனரான சோம்நாத் சட்டர்ஜி மக்களவைத் தலைவராக இருந்தபோதும் சரி, தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த மீராகுமார் இப்பொழுது சபா நாயகராக இருக்கும் இக்கால கட்டத்திலும் சரி 50-க்கும் 60-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பேசியும், மனுக்களைக் கொடுத்தும் அப்போதைக்குத் தலையை ஆட்டுவதோடு சரி, அதற்குப் பிறகு  எள் மூக்கு முனை அளவுக்குக்கூட செயல்பாடு கிடையாது. பிரதமரிடத்திலும் பல முறை முறையிட்டதுண்டு - அங்கும் அதே நிலைதான்!

அதேபோல தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்ற ஒன்று உள்ளது. அந்த அமைப்புக்குச் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் கிடையாது.

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது. இந்த மூன்றிலும் தாழ்த்தப்பட்டோருக்கு சட்ட ரீதியான நிலைப்பாடுகள் உண்டு.

ஏன் இந்த இரட்டை அளவுகோல் தெரியுமா? அதுதான் பிரித்தாளும் தந்திரம்.

சமூகநீதிப் பிரச்சினையில் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் இணைந்து செயல்படக்கூடிய ஒரு நிலை, எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்பட்டு விடக் கூடாது. இவர்கள் இரு பிரிவினரும் இணைந்தால் எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஆரிய ஆதிக்கப் புரியினரின் அஸ்திவாரம் நொறுங்கிப் போய் விடுமே!

இந்த நிலையினை இவர்கள் இரு பிரிவினரும் உணர்ந்து ஒன்றுபட்டு நின்றால் இரு தரப்புக்கும் கோடிக் கோடி நன்மைகள் உண்டே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...