Wednesday, November 16, 2011

இந்தியாவில் பெண்கள் மீதான வன்புணர்ச்சி கொடுமைகள் 792 சதவிகிதம் அதிகரித்துள்ளது


சய்ரா குரூப்

கடந்த வாரம் வெளிவந்த சில புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்தன. கடந்த 40 ஆண்டுகளில் நம் நாட்டில் பாலியல் வன்புணர்ச்சி 800 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது தான் அது. உலகத்திற்குத் தலைமை தாங்க விரும்பும் ஒரு நாட்டில் காலம் செல்லச் செல்ல பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் நிலை நிலவ வேண்டும். ஆனால், முன்பு எப்போதுமே இல்லாதவாறு, பெண்களுக்கு ஆபத்து நிறைந்த ஒரு நாடாக இந்தியா இப்போது விளங்குகிறது.

தெற்கு டில்லியில் உள்ள தன் வீட்டில் இருந்து மாலை நேரங்களில் உலாவச் செல்வதும், அவ்வப்போது தன் நண்பர் களுடன் அலைபேசியில் பேசுவதும்  அந்தப் பெண்ணின் வழக்கம். அப்பகுதி யில் திருமணம் ஆகாத ஆண்கள் பலர் வாழ்ந்தனர் என்றாலும், தான் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை என்றே அந்தப் பெண் நினைத்தார்.

கடந்த ஆண்டில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இப்பெண் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இக்குற்றங்களைப் புரிந்தவனைக் கைது செய்து விசாரித்தபோது, அவன், என் முன்னாலேயே அந்தப் பெண் தன் அந்தரங்க விஷயங்களை அலைபேசியில் பேசுவாள். அப்படியானால் அவள் என்னுடையவளே என்றுதான் நான் நினைத்தேன் என்று கூறினான்.

அவன் கூறியது,  நவீன இந்தியாவைப் பற்றிய ஓர் உண்மையை காட்டுவதாக இருந்தது. இந்தியா என்னதான் தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும், பெண் களைப் பொறுத்தவரை அது சிறிதும் மாறவே இல்லை. இந்தியாவில் பெருகி வரும் குற்றங்களில்  வன்புணர்ச்சிக் குற்றமே, 1971 லிருந்து 792 சதவிகிதம் என்ற  பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று  தேசிய குற்றப் பதிவு நிறுவனம் தெரிவிக்கிறது.

வன்புணர்ச்சி கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக நடைபெறுகின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், இதில் வர்க்க பேதம் என்று எதுவுமே இல்லை. ஆணாதிக்க மனோபாவமே எப்போதுமே இக் குற்றத்திற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. இக்குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் சரி, முனைவர் பட்டம் பெற்ற மாணவரானாலும் சரி, ரிக்ஷா இழுப்பவரானாலும் சரி, அந்த மனோபாவத்தில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பல்வேறு சிக்கல் நிறைந்த சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன.

வன்புணர்ச்சிக் குற்றங்கள்  பற்றி இன்று அதிக அளவிலான விழிப்புணர்வு  இப்போது இருக்கிறது என்பதும்,    அதிக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன என்பதும் உண்மைதான். பாலியல் வன் கொடுமைக்குக் குழந்தைகள் உள்ளாக் கப்படுவது பற்றி அதிக அளவு தாய் மார்கள் புகார் அளிக்கின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் மீதான வன்புணர்ச்சிக் கொடுமைகள் அதிகரித் துக் கொண்டேதான் செல்கின்றன. பிற்போக்கு சக்திகள் இதில் ஈடுபட்டுள் ளன. தங்களின் சுதந்திரத்தை அதிக அளவில் உறுதிப்படுத்துபவர்களாக பெண்கள் இருக்கின்றனர்.

இதனை ஏற்றுக் கொள்ள இயலாத ஆண்கள், அவர்களைத் தண்டிக்க இழிவான வழி களைப் பின்பற்றுகின்றனர். பெரும்பா லான வன்புணர்ச்சிக் குற்றங்கள் பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் தெரிந்தவர் களாலேயே செய்யப்படுகிறது என்பது இந்த சமுதாயத்தைப் பற்றிய இழி நிலையைத் தெரிவிப்பதாக உள்ளது என்று டில்லி ஜகோரி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அபா பய்யா கூறுகிறார்.

பல தொழில்களில் ஆண்களுக்குப் போட்டியாளர்களாகப் பெண்கள் வந்து விட்ட, பொருளாதார அளவிலும், உணர் விலும் தங்கள் சுதந்திரத்தை வெளிப் படுத்துபவர்களாக பெண்கள் ஆகிவிட்ட காரணங்களால், பெண்கள் மீதான ஆண் களின் தீய உணர்வு வளர்ந்து விட்டது.

புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர் களின் பெருக்கமும் இப்பிரச்சினையின் ஒரு பகுதி என்று  ஸ்வான் சேடான் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ராஜா மித்ரா கூறு கிறார். இவர்கள் போற்றும் மதிப்பீடு களும், கொண்டுள்ள மனோநிலையும் கலாச்சார மோதல்களுக்கு வழி வகுக் கின்றன.

சிறுநகரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு வரும் பெண்கள் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்வதில்லை. இதனால் அவர்கள் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர். ஆண்களுக்குப் பாலியல் தூண்டுதல் அளிக்கும் பத்திரிகைகள், படங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. தான் என்ன குற்றம் செய்தாலும், காவல் துறைக்கு பணம் கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆண்கள் நினைக்கின்றனர். காவல் துறையைப் பற்றிய மக்களின் பார்வையும் அப்படித் தான் இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

வன்புணர்ச்சி பற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தயக்கம், தவறுகள், இக்குற்றத்திற்கும், பாதிக்கப் பட்டவர்க்கும் ஆலோசனையும்  ஆறுதலும் கூறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் படாதது ஆகியவையே இக் குற்றங்கள் அதிகரிக்க வழி வகுக்கிறது என்று மித்ரா நம்புகிறார்.

வன்புணர்ச்சிக் கொடுமை யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு தலும் ஆலோசனையும் கூறுவது, அக் குற்றம் பற்றி புகார் அளித்து, வழக்கை நீதிமன்றத்தில் நடத்தவும், குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் உதவு கிறது.  ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே செய்து வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனோ தத்துவ முறையில் உதவும் சேவை குறைந்து கொண்டே வருகிறது என்று மித்ரா கூறுகிறார்.

இந்தியாவில் 2010 ஆம் ஆண்டில் பாலியல் வன்புணர்ச்சிக் குற்றம் சாட் டப்பட்டவர்களில் 27 விழுக்காட்டினர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது காவல்துறையைப் பற்றிய நல்ல தோற் றத்தைக் காட்டுவதாக இல்லை என்ப துடன் பாலியல் வன்முறை எண்ணம் கொண்டவர்களை ஊக்கப்படுத்துவ தாகவும் இருக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த பாலியல் வன்புணர்ச்சி வழக்கு ஒன்றில்  சமரசம் என்ற பெயரில் குற்ற வாளி விடுதலை ஆகி தண்டனை ஏது மின்றி சுதந்திரமாகத் தப்பி சென்று விட்ட நிகழ்ச்சியை தேசிய பெண்கள் ஆணைய முன்னாள் உறுப்பினர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.

நமது நீதிமன்றத் தீர்ப்பு களில், சட்டங்களுக்கு விளக்கம் அளிப் பது மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்மீது நிர்ப்பந்தம் அளிப்பது என்ற வகையில், ஒன்று போலவே தொடர்ந்து நீதி வழங்கப்படுவதில்லை என்பதையே இது காட்டுகிறது. குற்றம் புரிந்தவர்களையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் பல வழக்குகளில் நிர்பந்தப்படுத்தப்பட்டுள் ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவ்வாறுதான் நமது நீதி மன்றங்களின் போக்கு இருக்குமென்றால், அது மோசமானதாகவே இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

மேல்நாடுகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என் பதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. ஆனால் இங்கே கிராமப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களில் இந்தக் கவலை இருப்பதுடன், அவர்கள் குடும்பம் சமூகத் தால் புறக்கணிக்கப்படும் என்ற அச்சமும் நிலவுகிறது என்று மித்ரா கூறுகிறார்.

இந்த போக்கு தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று பாதிக்கப் பட்டவர்களின் எதிர்பார்ப்பை ஊக்கமிழக் கச் செய்வதாக உள்ளது. சில வன் புணர்ச்சி வழக்குகள் நடத்தப்பட்ட முறையைக் கண்டு மும்பை தன்னார்வத் தொண்டு நிறுவனமான மஜ்லிசின் இயக் குநரும் வழக்கறிஞரும் ஆன ஃப்ளேவியா அக்னீஸ் தனது பெருங்கோபத்தை வெளிப் படுத்துகிறார். மருத்துவ ஆதாரங்கள் காணாமல் போய்விடுகின்றன.

தங்க ளுக்கு என்ன நேர்ந்தது என்பதை முழுமையாக உணர்ந்திருக்காத நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண்களிடம் அவர்களை அவமானத்தால் கூனிக் குறுகச் செய்யும் கேள்விகளை குற்றவாளி தரப்பு ஆண் வழக்கறிஞர்கள் கேலியாகக் கேட்கின்றனர். அரசு வழக்கறிஞர்களும் இத்தகைய கேள்விகளைக் கேட்கின் றனர். வழக்கில் தொடர்புடைய எவர் ஒருவ ராவது தனது கடமையைச் சரியாகச் செய்யா விட்டாலும், வழக்கு தோற்றுப் போகிறது என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவில் நடக்கும் வன்புணர்ச்சிக் குற்ற வழக்குகள் விலங்காண்டித்தனமாக இருப்பதை மித்ரா ஒப்புக் கொள்கிறார். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு வழக்கு தொடர விரும்பும் பாதிக்கப்பட்ட வர்களிடம் அவர்களது வழக்கு பலமாக இல்லை என்பதால் தொடர வேண்டாம் என்று கீழ்நிலை காவல் துறை அதிகாரிகள் ஊக்கமிழக்கச் செய்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு, குற்றங்கள் பற்றிய புகார் களின் எண்ணிக்கை அதிகரித்து வருதல், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களைக் கூட அறிந்திராத டில்லி மாநகரக் கலாச்சாரம், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வன்புணர்ச்சி செய்வது, 97 சதவிகித குற்றம் புரிந்தவர்கள் பாதிக்கப்பட்டவர் களுக்கு தெரிந்தவர்களாகவே இருப்பது போன்ற  சமூகக் காரணங்களையே குறை கூறுகிறார் டில்லி காவல் துறையின் கூடுதல் உதவி ஆணையர் ராஜன் பகத். பாதிக்கப்பட்டவருக்கு அறிமுக மற்றவர்கள் குற்றம் புரிவது வியக்கத்தக்க வகையில் குறைந்து வருகிறது என்று அவர் கூறு கிறார்.  மிகக் குறைவான வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படு வதற்கும் இதுவே காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

எதிர்காலம் இருண்டதாகவும், அச்சம் நிறைந்ததாகவும் இருக்கிறது. பலதலை முறைகளாக பெண்கள் மீது காட்டப்படும் பாகுபாடு காரணமாக இந்தியாவின் நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பெண்களின் மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில், ஏமாற்றமும், வெறுப்பும், பெண்கள் மீதான வன்முறையும் அதிகரிக் கவே செய்யும் என்று பொதுநலத் தொண் டர்கள் கவலைப்படுகின்றனர்.
(நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா-13.11.2011 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...