Monday, November 14, 2011

அரசு என்ன செய்கிறது? அரசு இடத்தில் கோவில் கட்டி கொட்டமடிக்கும் சாமியார்!


தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல் பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் டைலர் வேலை செய்து வந்தார். தொழிலை ஒழுங்காக செய்யாத தினால் போதிய வருவாய் இல்லாமல் போனது. குடும்பம் நடத்தவும், குடிக்கவும் பணம் இல்லையே என்ற எண்ணத்தில் திரிந்து கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் இரவில் தன்மீது பத்திரக் காளியம்மன் குடிகொண்டிருப்பதாக ஆர்ப்பரித்து ஆட்டம் போட்டு அறிவிப்பு செய்திருக்கிறார். மக்களும் நம்பினர்.

அதன் விளைவாக சிந்தல்பாடி செல்லும் வழியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 32 அடி உயரத்தில் பார்ப்பவர்கள் பயப் படும் அளவிற்கு நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு வேலால் ஒருவனைக் கொல்வது போல ஒரு சிலை செய்து வைத்து, அதன் அருகில் சாமியாருடன் அவருடைய கூட்டாளிகளும் தங்குவதற்கான ஓய்வில்லம் ஒன்றையும் கட்டிக்கொண்டு பக்தி வியாபாரம் செய்து வருகிறார்.

அமாவாசை, பவுர்ணமி நாள்களிலும், திங்கள், வெள்ளிக்கிழமை நாள்களிலும் சிறப்பு பூஜை செய்வதும், அருள்வாக்கு சொல்வதும், கேட்ட வரங்கள் கிடைக்கச் செய்வதாகவும், குழந்தை இல் லாத பெண்களுக்குக் குழந்தை வரம் செய்வதாகவும் கூறி ஏமாற்றி வரும் முருகன் சாமியார் பற்றி அறிந்து கொள்ள சிறப்பு பூஜை தினத்தன்று சென்றிருந்தேன். கோவிலின் வெளியில் கையில் கட்டுப்போட்டு, கையை கழுத்துக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு பக்தி பரவசத்துடன் பக்தர்களின் வருகைக் காக காத்திருந்தார் சாமியார் முருகன்.
நான் போனதும் பூஜைக்காக வந்திருக்கும் வசதி படைத்தவராக இருக்கும் என்று நினைத்து என்னிடம் தங்களுக்குப் பூஜை செய்யட்டுமா, குறி சொல்லட்டுமா என்று கேட்டார். (சர்வ சக்தி படைத்த சாமியால் நான் நாத்திகன் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.) நான் ஒரு பத்திரிகை நிருபர் என்று கூறியதும் ஒரே பூரிப்பு! சாமி பத்திரகாளி பற்றியும் இங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் வேலையைத் தொடர்ந்தார்.

இவரைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்பதற்காக அப்பகுதியில் குடியிருக்கும் பெண் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.  சாமியார் முருகனுக்கு என்ன ஆனது? கையைக் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறாரே? என்றதும், அப்பெண், இந்த சாமியார் முருகன் பயங்கரமான குடிகாரன். இதனால் இவன் டைலராக இருந்தபோது யாரும் இவனிடம் துணி தைக்கக் கொடுக்கமாட்டார்கள்.


அதனால் தன் மீது பத்திரகாளி வந்திருப்பதாகக் கூறி ஊர் மக்களை நம்ப வைத்து  ஏமாற்றி கொள்ளை யடித்து வருகிறான். குறி கேட்க வருபவர்களிடம் உங்களுக்குக் கெட்டது நடக்கப் போகிறது, அதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால என் சன்னதிக்கு இவ்வளவு கொடு என்று கூறி பயமுறுத்தி கொள்ளையடித்து பணக்காரனாகி விட்டான்.

இப்போதும் பகலில் பூஜை; இரவில் பாட்டில் பாட்டிலாக சாராயம் குடித்துவிட்டு ஜாமபூஜை செய்கிறேன் என்று சொல்லி, பிள்ளை வரம் வேண்டி வருபவர்களைக் கெடுப்பதுதான் அந்த சாமியாரின் வேலை. அழகான பெண்கள் இவனி டம் வந்துவிட்டால் போதும், ஒரு முறைக்கு பல முறை வரச் சொல்லி வார்த்தைகளாலேயே மயக்கி அந்தப் பெண்ணைக் கெடுத்துவிடுவான். கணவனுடன் வரும் பெண்களை கணவனை வெளியில் உட்காரவைத்துவிட்டு தனிமை பூஜை என்று கூறி தண்ணீர் ஊற்றி அழைத்துச் சென்று பல மணி நேரம் கழித்து அனுப்புவான்.


இது தெரியாத மக்கள் இவனிடம் பணத்தையும் கொடுத்து, கற்பையும் இழந்து செல்கிறார்கள். என்ன செய்வது? நாங்கள் எல்லாம் அவனுக்குப் பயந்து போய் உள்ளோம் என்றார்.  ஏன் பயப்படுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, இங்கு வருபவர்களிடம் நாங்கள் ஏதும் பேசக்கூடாது. வரும் பக்தர்களிடம் ஏதாவது சொன்னால், இங்கு குடி இருக்க மாட்டாய் என்று மிரட்டு கிறான். இவனுக்குத் துணையாக கொள்ளை யடித்துப் பிழைக்க எட்டு, பத்து ரவுடிகளை பூசாரிகள் என்று கூறி தன்னுடன் வைத்திருக் கிறான் என்றார்.

கையில் கட்டு எதனால் வந்தது? என்று கேட்டதற்கு அந்தப் பெண்ணுக்கு அப்படி ஒரு ஆனந்த சிரிப்பு. இதே போல திருவிழா நாளில் பூமிதி என்று தீக்குழியில் இறங்கும்போது கடத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் நெருப்பில் தவறி விழுந்துவிட்டாள். சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகிப் போனது. நெருப்பில் விழுந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவளைப் பார்க்க சாமியார் முருகன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பாலத்தின் மேலும், மரத்தின் மீதும் மோதி கையொடிந்து போனது. கோவை கங்கா மருத்துவ மனையில் ரூ.பல லட்சம் செலவு செய்தும் சரியாகவில்லை. வலது கை செயலிழந்துவிட்டதால் கைக் கட்டுடன் சாமியார் காட்சியளிக்கிறார் என்றார்.


கோவிலைச் சுற்றிப் பார்த்தபோதுதான் தெரிந்தது, கோவில் கட்டப்பட்டிருக்கும் இடம் நெடுஞ்சாலைக்குரியது என்று. அன்று (ஆடி 18) திருவிழாவிற்கென அமைக்கப் பட்டிருந்த ஒலிபெருக்கி, ஒளிவிளக்கு, கடவுள் படம் தாங்கிய மின் விளக்குகளான பெரிய டவர் அனைத்திற்கும் சுமார் 250 அடி தூரத்தில் உள்ள ஒரு கிணற்று மின் மோட்டார் இணைப்பில் இருந்து மின்சாரம் திருடி திருவிழா நடத்துவது தெரியவந்தது.

11 மணி அளவில் பூஜை ஆரம்பமானது. செயல் இழந்த கையை மறைத்துக் கட்டிக் கொண்டு மரக்கட்டை மேல் நிற்க இருவர் தூக்கி வந்தனர்.  திருமணம் ஆக வேண்டிய பெண்கள், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் என அனைவரையும் சாலையில் படுக்கவைத்து (கவிழ்ந்து) அவர்கள் மீது ஏறி தாண்டி வந்தார் சாமியார் முருகன். வந்த வேகத்தில் ஒரு கோழியைக் கடித்து ரத்த வாயுடன் நெருப்பில் இறங்க ஆயத்தமானார்.

ஆனால் சாமியாருக்கு முன்8 பேர்களுக்கு உடை நனைய தண்ணீரை ஊற்றி நடக்க வைத்தார்கள். அவ்வாறு செய்ததால் நெருப்பு சற்று தணிந்தது.  அதன் பின் சாமியார் நெருப்புக் குழியில் இறங்கி ஓடினார். அவர் ஓடிய வேகத்தில் தண்ணீரில் காலை வைத்துக் கொண் டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஈரத்துணியுடன் தண்ணீர் சொட்டச் சொட்ட நெருப்புக் குழியில் இறங்கிய தால் கால்கள் வைத்த 3 இடங்களில் மட்டும் நெருப்பு அணைந்துவிட்டது. அதனால் மற்றவர்கள் எளிதில் இறங்கினார்கள்.

மொத்தத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கோயிலைக் கட்டிக் கொண்டு மின்சாரம் திருடி திருவிழா நடத்தி மக்களின் அறியாமையை முதலாக்கி பணம் பார்ப்பதுடன், பிள்ளை வரம் தருவதாகக் கூறி பெண்களை பதம் பார்க்கும் சாமியார் முருகன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா- அல்லது கைகட்டி வாய்மூடி காலில் விழுந்து ஆசி வாங்குமா என்பது தெரியவில்லை.

(தீ மிதி அறிந்தவர் என்பதால் என்னுடன் வந்த செய்தியாளரிடம் இது ஏமாற்று வேலை என்றேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. அப்படி என்றால் தீக்குழியில் இறங்கிக் காட்டு என்றார். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் (பக்தர் களைக் போல் ஓடாமல்) நெருப்புக் குழியில் இறங்கி நடந்து காட்டினேன். அதுதான் தந்தை பெரியார் கொள்கை கொடுத்த துணிச்சல்.)

- அ.தமிழ்ச் செல்வன், விடுதலை செய்தியாளர், தருமபுரி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...