Friday, November 11, 2011

ஒழுக்கம்...?


ஒழுக்கம்...?


அண்மையில் நாளேட்டின் வாயிலாக நெஞ்சம் துடிக்கிறதே எனும் தலையங்கம் படித்தேன். நம் நாட்டில் உள்ள பாமர மக்களும் மற்ற நாட்டு மக்களைப் போல் படிப்பறிவு உள்ளவர்களாகவும், பட்டறிவு உள்ளவர் களாகவும், பகுத்தறிவு உள்ளவர் களாகவும், பக்குவப்பட்டவர்களாகவும் உருவாக வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கை யாகும்.

ஆனால், எதைக்கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக் காதே என்று கூறுவதுதான் மனுதர்மம். இக்கொடுமையினைக் கண்ட பெரியார் அக்னிப் பிழம்பாய் கொதித் தெழுந்து பாமர மக்களிடையே கல்வியின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறி நாடெங்கும் மக்களிடையே பெரும் பிரச்சாரம் செய்தார்.

பெரியார் காரணமாகவும், கல்வி வள்ளல் காமராசர் காரியமாகவும் இருந்து செயல்பட்டதின் விளைவாக, பட்டிதொட்டி எல்லாம் ஆயிரக்கணக் கான பாடசாலைகள் திறக்கப்பட்டு பாமரமக்கள் கல்வி அறிவு பெற இவ் விரு தலைவர்களும் அடிகோலினர்.

பெரியாரின் இடைவிடாத பிரச் சாரத்தின் பயனாய், மக்கள் அனை வரும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஆர்வமுடன் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தனர். இதன் வாயிலாக பெருந்தலைவர் காமராசர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கல்வி நீரோடை மடைதிறந்த வெள்ளம் போல் நாடெங்கும் பாய்ந்தோடியது.

ஆனாலும், நீண்ட நெடுங்காலமாக பெண்களுக்கு கல்வி என்பது கானல் நீராகவே இருந்து வந்தது. பல்வேறு காரணங்களைக் கூறி பெண் குழந்தை களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாக சமு தாயத்தில் பெண் பிள்ளைகள் கல்வி அறிவு பெற இயலாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இத்தகைய இக்கட்டான சூழ் நிலையில் தான் பெரியார் அவர்கள் 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டினை கொண்டு வருவதற்கு ஏதுவாக அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை வார்த்தெடுத்தார்.

இதனைத்தொடர்ந்து பெரியார் பெண்கல்வியின் அவசியத்தையும், அதன்மூலம் சமுதாயத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தைப் பற்றியும் பாமர மக்கள் நன்கு புரிந்துகொள்ளும்படி இரவு-பகல் பாராமல் நாடெங்கும் சூறாவளிப்  பிரச்சாரம் செய்ததின் பயனாய் மக்களிடையே போதிய விழிப்புணர்வும், புதிய எழுச்சியும், பெருத்த வரவேற்பும் ஏற்பட்டது.

இதன் விளைவாக பெற்றோர்கள் பெண்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர். இதன் பயனாய் தற்போது பெண்கள் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் செல் கின்ற நிலையினை எட்டியுள்ளனர். ஆக, வீட்டிற்குள் சிறைப்பறவைகளாய் இருந்த பெண்களை, வெளி உலகத்திற்கு சுதந்திரப் பறவைகளாகக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் என்பது காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று உண்மை நிலையாகும்.

ஆனால் தற்போதுள்ள  சில ஆசிரி யர்கள் இவ்வரலாற்று உண்மைகளை சற்றும் உணராதவர்களாகவும், ஆசிரியர் பணி என்பது அர்ப்பணிப்புப் பணி, உன்னத மான பணி, மனிதநேயப் பணி என்பதை மறந்ததின் விளைவாகவும், தற்போது கல்வித்துறை என்பது கறை படிந்த கல்வித்துறையாக மாறியுள்ளதை எண்ணி, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சமுதாயச் சிந்தனையாளர்கள், கல்வியா ளர்கள், அறிஞர் பெருமக்கள், பகுத்தறி வாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகியோர் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

நம் நாட்டில் படிப்பு என்பது வயிறு வளர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் மட்டுமே பெரும்பாலும் பயன்படுகிறது. ஆகவே, மற்ற மற்ற பணிகளைக் காட்டிலும் ஆசிரியர் பணிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர் அறிவாற்றலில் சிறந்தவரா என்று அளந்து பார்ப்பதைவிட, சமுதாயச் சிந்தனையால் மனித நேயத்தால் பண்பால், ஒழுக்கத்தால் உயர்ந்து நிற்பவரா? அர்ப் பணிப்பு உணர்வு உள்ளவரா? என்று சீர் தூக்கிப் பார்த்து ஆசிரியர் பணியில் அமர்த் தினால் மட்டுமே, நாட்டிற்கு நலம் பயக்கும் என்பது உறுதி.

தற்போதுள்ள கல்விமுறை மனிதர் களைப் பண்பாளர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக  பகுத்தறிவாளர்களாக, முற்போக்குச் சிந்தனையர்களாக உரு வாக்குவதற்கு பதிலாக, குறுக்கு வழியில் சென்று பணம் சேர்க்கும் பேராசைக்காரர் களாகவும், வக்கிரபுத்தி கொண்டவர் களாகவும், வன்கொடுமையாளர்களாகவும் மாற்றக்கூடியதாக உள்ளது! என்கின்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக தலைவாரி பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் அன்னை என்ற புரட்சிக் கவிஞரின் வைரவரிகளுக்கு ஏற்ப, தனது நான்கு வயது பெண் குழந்தையை எண்ணற்ற கனவுகளுடன் ஆசை ஆசையாய்  மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு அனுப்பிய தாய்க்கு, சில மணி நேரங்களில் மிகப் பெரிய அதிர்ச்சி நேரிட்டது.

ஆம், அண்மையில் (3.8.2011) கள்ளக் குறிச்சி மெட்ரிக் பள்ளி ஒன்றில்  படிக்கச் சென்ற நான்கு வயதே ஆன பச்சிளம் பெண்குழந்தையிடம் சில ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் செய்ததும், சற்றும் ஈவு இரக்கமின்றி ஈனப் பிறவிகளாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண் டதும் யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாத, மன்னிக்க முடியாத அருவருக்கத்தக்க அநாகரிகச் செயலாகும்.

இத்தகைய காட்டுமிராண்டிச் செயலை நாளிதழின் வாயிலாக அறிந்த மனிதநேயப் பண்பாளர்கள் நல் இதயம் படைத்த நல் லோர்கள் முற்போக்குச் சிந்தனையாளர் கள் பகுத்தறிவாளர்கள், ஆகியோர் மிகுந்த மன வேதனை அடைந்தனர். அவர் களால் பேசமுடியா அளவிற்கு நா தழு தழுத்தது. அவர்களின் உதிரம் உறைந்து போனது. நாம் நாகரிக உலகில் தான் வாழ்கின்றோமா? என்ற அய்யப்பாடு மனதில் எழுந்தது.

இத்தகைய வேதனை மிகுந்த சூழ் நிலையில் சற்றே ஆறுதல் தரக்கூடிய விசயமாக, தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகி யோர் இவ்வழக்கினை விசாரித்த பின்பு தான் உண்மைநிலை வெளிச்சத்துக்கு வரத்துவங்கின. அதன்பிறகு தான் இவ்வழக்கு பற்றிய விசாரணையின் மீது மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டது.

பக்தி என்பது தனிச்சொத்து- ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து என்றாரே பெரியார், அது எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை என்று கள்ளக்குறிச்சி மெட்ரிக் பள்ளியில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தை வைத்து புரிந்துகொள்ள முடிகிறது.

ஒருநாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக, விளங்குவது பெண்கள் சமுதாய மாகும். எனவேதான் மத்திய மாநில அரசுகள் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து பெண்கல்வியை மென் மேலும் ஊக்குவிக்கின்றது.

பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களைப் படிக்க வைப்போம்- நாட்டிற்குப் பெருமை சேர்ப்போம் என்றெல்லாம் ஒருபுறம் விளம்பரப் படுத்திக்கொண்டு, அதன்மூலம் கோடிக்கணக்கான பணத்தை பெண்கல்விக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் அரசுகள் செலவிட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்; கல்வி அறிவுபெற பள்ளிக்கு வருகின்ற பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆசிரியைகள் மீது கல்வித்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பதே தற்போது பெற்றோர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி ஆகும்.

மாணவர்களுக்கு நல்லொழுக்கம், நீதி, நேர்மை, நன்னடத்தை, விடா முயற்சி, தன்னம்பிக்கை, மனிதநேயம் ஆகியவற்றைப் பற்றி போதிக்க வேண் டிய ஆசிரியர்களே, நான்கு வயதே ஆன பச்சிளம் பெண்குழந்தையிடம் ஒழுக்கம் இன்றி காட்டுமிராண்டித் தனமாக, மனிதநேயமின்றி நடந்து கொண்டது என்பது யாராலும் மன் னிக்கவே முடியாத மாபெருங்குற்ற மாகும்.

இவைபோன்ற விரும்பத்தகாத ஒருசில சம்பவங்களால்தான் ஆசிரியர் கள் மீது இருந்துவந்த மரியாதை, குருபக்தி ஆகியவை பொதுமக்களிடம் மட்டுமல்லாமல் மாணவர்களிடமும் இன்றைக்கு வெகுவாகக் குறைந்து வருகின்றன என்பது கசப்பான உண்மை நிலையாகும்.

ஆகவே, ஆசிரியர் என்கின்ற போர்வையில் உன்னதமான ஆசிரியர் பணியில் இருக்கும் இத்தகைய காமக்கொடூரர்களை, கல்நெஞ்சக் காரர்களை பாலியல் கொடுமை மற்றும் பலாத்காரம் ஆகிய சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பி தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதே, அனைத்து தரப்பு மக்களின் கனிவான வேண்டுகோ ளாகும்!

மலரட்டும் மனிதநேயம்!
மாயட்டும் பாலியல் கொடுமை!
சீ.இலட்சுமிபதி,
தாம்பரம்,  சென்னை-4

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...