Friday, November 11, 2011

ஏமாற்று வேலை


ஏமாற்று வேலை


கோவில்களில் கருவறைக்குள் மூல விக்கிரகம் என்று கூறி பொம்மைகளை (கடவுள்களாம்!) வைத்து ஏமாற்றும் வேலை இந்த 2011ஆம் ஆண்டிலும் தொடர்கிறதே என்பதை எண்ணும்போது ரத்தம் கொதிக்கிறது.

கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்பதை ஒப்புக் கொள்வதற்குத் திறந்த மனமும், பகுத்தறிவும், துணிவும் தேவையாகும்.

ஆத்திகர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட நடைமுறையில் எந்தக் கடவுளிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைத்து நிம்மதியாகத் தூங்கச் செல்கின்றனர்? எல்லாவற்றையும் இவர்களே செய்துவிட்டு, தேவையில்லாமல் கடவுள் கருணை என்று நம்பித் தொலைக்கின்றனர். நல்லது நடந்து விட்டால் பார்த்தீர்களா? கடவுள் சக்தி என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார்கள். நல்லது நடக்காமல் வேறு விதமாக நடந்தால், அப்பொழுது என்ன சொல்லுவார்கள் தெரியுமா?

கிரகம் சரியில்லை, கோவிலுக்கு 30 நாள் எண்ணெய் ஊற்றி விளக்குப் பூஜை செய்ய வேண்டும். நேர்த்திக் கடன் கழிக்க வேண்டும் என்று நினைப்பார்களே தவிர கடவுளைக் கும்பிட்டோமே, ஒன்றும் நடக்கவில்லையே - இவ்வளவு தான் கடவுள் சக்தியோ என்று எவரும் சிந்திப்பதில்லை.

சென்றாண்டு அய்யப்பன் கோவிலுக்கு மகரஜோதியைத் தரிசிக்க புல்மேடு பகுதிக்குச் சென்ற அய்யப்ப பக்தர்கள் 104 பேர் பலியானார்கள்; 60 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மகரஜோதியே பித்தலாட்டம் செயற்கையாகக் காட்டப்படும் வெளிச்சம் என்று அறநிலையத் துறை அமைச்சர், தேவஸ்தான உறுப்பினர்கள் வரை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட நிலையில், இந்த மகரஜோதி பித்தலாட்டத்தைத் தொடரச் செய்யலாமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. நீதிமன்றம் மவுனம் சாதித்து வருகிறது. கேட்டால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமாம் - பக்தர்கள் தாராளமாக வரலாமாம்! (அப்பொழுதுதானே சுரண்டலாம்!)

நேற்று முதல்நாள் ஏடுகளில் வெளிவந்த சேதி ஹரித்துவார் அருகே புனித நதி என்று போற்று வார்களே அந்தக் கங்கை நதிக் கரையில் ஆச்சார்யா பண்டிட் சீறிராம் சர்மா என்பவரால் சர்வதேச காயத்ரி பரிவார் என்ற அமைப்பின் சார்பில் யாகங்கள் நடத்தப்பட்டன.

இமாசல பிரதேச முதல் அமைச்சர் பிரேம்குமார் துமால், மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.க., தலைவர் நிதின் கட்காரி முதலிய பிரமுகர்களும் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். வெளிநாட்டுப் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனராம். நேரம் ஆக, ஆக பக்தர்கள் அதிக அளவில் குழுமினராம்.

முண்டியடித்துக் கொண்டு யாக சாலைப் பகுதிக்குச் சென்ற பக்தர்கள் யாக சாலையில் கிளம்பிய கடுமையான புகை மூட்டத்தில் சிக்கி, பரிதாபகரமான முறையில் 50-க்கும் மேற்பட்டோர் மாண்டனர் என்பது என்ன கொடுமை!

உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், காயம் அடைந்தோர் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கிட டாக்டர் மன்மோகன்சிங் ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கோவில் விழாக்களுக்குள் சென்ற பக்த கோடிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர் மாண்டு போனார்கள் என்பது எத்தகு வேதனையான தகவல்!

அதற்குப் பிறகாவது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? தம்மை நாடி வந்த பக்தர்களையே காப்பாற்ற முடியாதவருக்குப் பெயர்தான் கடவுளா?

பொம்மை ஒன்றை அலங்கரித்து, இதுதான் சர்வ சக்தி கடவுள் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள் புரோகிதர்கள்; பக்த கோடிகளும் இந்த ஏமாற்று வேலைக்கு அரசும் பல வகைகளிலும் ஆதரவுக் கரம்  நீட்டுகின்றன.

அரசியல் பிரச்சினை என்றால் ஆயிரம், ஆயிரம் வினாக்கணைகளை வக்கணையாக ஏவும் ஆன்மீக வாதிகளும், பக்தர்களும், ஊடகத்தோர்களும் கோவில் விழாக்களில் நடக்கும் பக்தர்கள் பலி ஆவதற்கு வாய்த் திறக்காதது - ஏன்?

அந்தக் கல்லை முதலாக வைத்துதானே வயிற்றுப் பிழைப்பு நடக்கிறது? ஆய்வு என்ற பெயரில் உண்மையின் குட்டு உடைபட்டால் பார்ப்பனர்களின் ராஜ்ஜியம் குப்புறவீழ்ந்து விடுமே! அதனால்தான் பலிகளைப்பற்றிக் கண்டு கொள்ளாமல் பரிகாரப் பூஜை என்று சொல்லி அவாள் தொப்பை நிரப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன.

நல்லது நடந்தாலும் அல்லது நடந்தாலும் புரோகிதப் பார்ப்பான் வயிறு நிரம்பினால் சரி.

இந்தப் புரோகித சுரண்டல் முறையை ஒழித்துக் கட்ட வேண்டாமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...