Friday, November 11, 2011

என்ன விலை கொடுத்தாலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றவிடமாட்டோம்!


சென்னை சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எச்சரிக்கை!
சென்னை, நவ. 11- என்ன விலை கொடுத்தாலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற விடமாட்டோம் என்றுதிராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்று வதா? என்ற தலைப்பில் 5.11.2011 அன்று இரவு கொட்டும் மழையில் சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் ராதாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஏற்கெனவே மருத்துவமனை இருக்கிறது
ஏற்கெனவே சென்னையில் பொது மருத்துவ மனை இருக்கிறது. ஏற்கெனவே பல மருத்துவ மனை கிராமங்களில் இருக்கின்றன. அந்த மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இருக்கிறார்களா? அது மட்டுமல்ல இப்பொழுது ஆரம்பித்திருக்கின்ற மருத்துவ கல்லூரிகளுக்கு மருத்துவர்கள் கிடைத்திருக்கின்றார்களா? இதெல் லாம் மிகப்பெரிய பிரச்சினை.
அவை எல்லாம் இருக்கட்டும். ஒரு நூலகத்தை இடித்துவிட்டு மாற்றிக் கட்ட வேண்டும் என்றால் மக்களுடைய வரிப்பணம் என்னாவது? இங்கிலாந்து நாட்டில் முக்கியமாக ஆரம்பிப்பது ரேட் பெயர்ஸ் மணி என்று நம்முடைய வரிப்பணம்தானே!
பூணூல் ஏடு தினமணி மீது வழக்கு
ஆர்.எஸ்.எஸ். மாதிரி இருக்கக்கூடிய, பூணூல் பத்திரிகையான தினமணி பத்திரிகை எந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறது? கலைஞர் வழக்கு போட்டிருக்கின்றார்.
தினமணி ஏடு அதற்கு பதில் சொல்லியாக வேண்டும். அந்த மாதிரி ஏடுகளை தயவு செய்து நம்முடைய தோழர்கள் இன உணர்ச்சி அடிப்படையிலே புறக்கணிப்போம். நாங்கள் இனமணியையோ, இனமலரையோ வாங்க மாட்டோம். அது பூணூல் கூட்டத்திற்காக இருப்பது என்ற நிலைக்கு நாம் வரவேண்டும்.
நாம் இரண்டு பேர் வாங்காமல் நிறுத்தி விட்டால் நின்றுவிடுமா? என்று யாராவது பெரிதாகக் கருதாதீர்கள். சிறுதுளி பெரு வெள்ளம் அது நமது உணர்ச்சியின் வெளிப்பாடு நாம் தமிழன் என்று காட்டுவதற்காக அடிப்படை யானதாயிற்றே. நம்முடைய உணர்வு என்பது மிக முக்கிய மானதாயிற்றே. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சொல்லும் பொழுது சொன்னாரே.
ஊடகங்கள் சோவைப் பார்ப்பதா?
இந்த ஊடகங்களின் வேலையைப் பாருங்கள் ஏதாவது பிரச்சினை என்றால் இந்த சோ ராமசாமியிடம் போய்க்கேட்பது. வேறு ஆளே கிடையாது. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். அவர்  போய்விட்டார் என்றால் அடுத்தபடியாக பதில் சொல்வதற்கு ஆளே இருக்கமாட்டார்கள்.
உடனே அவரைத் தான் கேட்பார்கள். அப்பேர்ப்பட்டவரே என்ன சொல்லியிருக் கின்றார்? நான் அந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போய்ப் பார்த்ததே இல்லை.  எனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அது எங்கேயி ருக்கிறது என்று கேட்டார் என்று சொன்னார்கள்.
விவேகானந்தர் இல்லம்
விவேகானந்தர் இல்லத்தைப் பற்றி அவர் என்ன எழுதினார் என்று சொன்னார்கள். விவேகானந்தர் இல்லம் கான்ட்ராக்ட் கொடுத்த ஒப்பந்த காலம் முடிந்து போய்விட்டது. அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த இடத்தை அவர்கள் அரசுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த விவேகானந்தர் இல்லத்தில் செம்மொழி ஆய்வகம் அமைக்கக்கூடிய சூழல் வந்தது.
ஒப்பந்தம் முடிந்த நிலையிலே அதை அவர்கள் நீட்டித்துக் கொடுத்தார்கள் அவ்வளவுதான். எதற்காக இதை எடுத்துச் சொல்லுகிறோம் என்று சொன்னால் பார்ப்பனர்களுக்கென்றால் அது தனி நீதி. அதற்குத் தனியான வியாக்கியானங்கள் அவர் களுடைய இன உணர்வு. நாளந்தா பல்கலைக் கழகத்தை அழித்தார்கள். யாழ்ப்பாண நூலகத்தை அழித்தார்கள்.
உலகத்தில் எங்கு பார்த்தாலும் எகிப்து நாட்டில் அலெக்சான்ட்டிரியா பல்கலைக்கழகத்தில் இருந்து பார்த்தால் நூலகத்தை அழிப்பது தான் அவர்களின் வேலை.
கோட்டையில் இயங்கி வந்த நூலகம்
அது போல சென்னை கோட்டையிலே இயங்கி வந்த பாரதிதாசன் செம்மொழி ஆய்வக நூலகம் என்ன ஆனது? தூக்கிப் போட்டுவிட்டார்கள்.
ஆகவே இது இன உணர்வுக்கெல்லாம் அறைகூவல் போலத் தான் வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் அறிஞர்கள், தமிழர்கள் என்ன செய்கி றார்கள்? தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கின்ற வர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னார்கள்.
தமிழ் தேசியத்திற்கு வாய்ப்பூட்டு...
வாய்ப்பூட்டு இருக்கும் ஒரு வேளை. ஏனென்றால் தோழர் சுப.வீரபாண்டியனுக்கும், இனனொரு வருக்கும் கலைஞர் முதலமைச்சராக இருந்த நிலையில்தான் அந்த வாய்ப்பூட்டை அகற்றி னார்கள்.
இதே மேடையில் தான் நான் சொன்னேன். கோவில் பூட்டு கதவையே உடைத்தவர் கலைஞர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற அந்த வாய்ப்பை உருவாக்கினார்.
இப்படி நான் சொன்ன பிற்பாடு அடுத்த நாள் கலைஞர் என்னை கேட்டார். என்னய்யா விடுதலையில் இப்படி நீங்கள் பேசிய செய்தி வந்திருக்கிறதே. வாய்ப்பூட்டை கலைஞர் அகற்றுவார் என்று கேட்டிருக்கின்றீர்கள். அதை நாம் செய்ய முடியுமா? அது நீதிமன்றம் போட்ட தடையாச்சே என்று சொன்னார்.
அது ஒன்றும் இல்லீங்க. தாராளமாக செய்யலாம். உங்களுடைய அரசாங்கம் நடக்கிறது. உங்கள் அரசு வழக்கறிஞர் அதற்கு ஒன்றும் அவசியமில்லை. வாய்ப்பூட்டை அகற்றலாம் என்று சொன்னால் நீதியரசர்கள் அதைத்தாண்டி செய்ய மாட்டார்கள்.
எல்லோரும் டில்லி நீதிபதியாக இருக்க மாட்டார்கள் பாருங்கள்.
அவர்தான் கலைஞர்...!
அரசு வழக்கறிஞரை உடனே கூப்பிட்டார் கலைஞர். அவர்தான் கலைஞர். அய்ந்து நிமிடத்தில் கூப்பிட்டார். மற்றவர் களுக்கெல்லாம் தெரியவே தெரியாது. இங்கே இவ்வளவு தாராளமாக பேசினாரே சுப.வீ. அவர்கள் இதற்கு முன்பு இந்த மாதிரி மேடைகளில் பேசுவாரா? வாய்ப்பூட்டு, இப்படி, இப்படித்தான் சைகை காட்டுவார்.
அப்படி வாய்ப்பூட்டு போடப்பட்ட வர்களை பேச வைத்தவர் கலைஞர். பேசாத ஆட்சியைக் கொண்டு வந்து நீங்கள் பேசாமடந்தைகள் ஆகிவிட்டீர்களே! இதை விட கொடுமை வேறு உண்டா? எதிலே யாவது ஒரு தெளிவு இருக்கிறதா?
-5.11.2011 சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து
மூன்று உயிர்கள் ஊசலாடுகின்ற
ஈழத் தமிழர் பிரச்சினையிலே இன்றைக்கு மூன்று உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அந்தப் பிரச்சினை அவசரப் பிரச்சினையா? அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டியது.
ஆனால் சட்டமன்றத்தில் முதல் நாள் ஒரு தீர்மானம். இரண்டாவது நாள் மாற்றிப் போட்டுவிட்டு மூன்றாவது நாள் அதைப்பற்றியே கவலை இல்லை.
அண்ணா நூலகத்தை உடனே மாற்ற வேண்டும் இது என்ன அவசரப் பிரச்சினையா?
நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். இரண்டையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இரண்டுக்கும் ஒரே தத்துவம். அண்ணா நூலகத்தை மாற்றுவதும் ஒரே தத்துவம்தான். அந்த மூன்று தமிழர்களின் உயிர்களைப் பற்றி கவலை இல்லை.
நூலகத்தை மாற்ற விடமாட்டோம்
எனவேதான் மீண்டும் தெளிவாக சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அது என்றைக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகமாகத் தான் இருக்கும். அதை ஒரு போதும் மாற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பதற்காக தமிழர்கள் தயாராவார்கள் (கைதட்டல்).
தமிழர்கள் மட்டுமல்ல, நியாய உணர்வு கொண்டவர்கள், மனித நேயம் படைத்தவர்கள் இன்னும் மாற்றுத் திறனாளிகள் உள்பட பார்வை யற்றவர்களுக்குக் கூட அந்த நூலகத்தில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் கலைஞர்.
பார்வையற்றவர்கள் யார்?
பார்வையற்றவர்கள் எல்லாம் அந்த நூலகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கின் றார்கள். பார்வையற்றவர்கள் என்றால் யார் என்று இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?
பார்வையற்றவர்களுக்கே ஒரு புது விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுதான் விசித்திரம் அவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல.
அவர்கள் நன்றாக நூலகத்தைப் பார்த்தவர்கள். தொடர்ந்து பார்த்தவர்கள். எனவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி, பாடம் என்னவென்றால், பார்வையற்றவர்கள் என்றால் யார்? புதுக்கேள்வி இப்பொழுது. பார்வையற்ற வர்களுக்கு வாய்ப்பு என்று சொன்னார்கள் பாருங்கள்.
மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ளவா?
பார்வையற்றவர்கள் தட்டிப் பார்த்து உள்ளே போகிறார்கள். இது என்ன என்பதே தெரியாத வர்கள். உண்மையிலேயே பார்வையற்றவர்களா? அல்லது மற்றவர்கள் பார்வையற்றவர்களா? தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் களுடைய பார்வைக்கு இதை வைப்பதற்குத்தான் இந்த கூட்டம். அவர்களுடைய பார்வையை ஈர்ப்பதற்குத்தான் இந்த கூட்டம்.
இன்னும் கேட்டால் அவர்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த கூட்டம். சட்டரீதியாக இவ்வளவு சிக்கல் இருக்கிறதே. போய் இன்னும் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே சிக்கியிருக்கின்ற சிக்கலில் இருந்து வெளியே வருவதற்கு பல சங்கடங்கள் இருக்கின்றன. ஆகவே இப்படிப்பட்ட சூழ்நிலையிலே நீங்கள் புதுப் பிரச்சினையை உண்டாக்காதீர்கள்.


வாரத்திற்கு ஏழு அமைச்சர்கள் மாற்றம்
உங்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து வாக்களித்திருக்கின்றார்கள். தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி, மைனாரிட்டி என்று சொன் னீர்கள்.
இப்பொழுது மெஜாரிட்டி ஆட்சி வந்திருக் கிறது. அதனால் வாரத்திற்கு ஏழு அமைச்சர்களை மாற்றலாம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. முழு உரிமை இருக்கிறது.
நீங்கள் நல்ல காரியங்கள் செய்யுங்களேன். இன்னும் இதைவிட பெரிய காரியங்களை செய்யுங்களேன்.

69 சதவிகித இடஒதுக்கீடு
சமூகநீதியை தாராளமாக உண்டாக்குங்களேன். முதலில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை நிலைநாட்ட வேண்டும். காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் வந்திருக்க வேண்டும். இந்த மண்ணுக்குத் தேவை என்று வரும்பொழுது அது முக்கியமல்லவா? நல்ல காரியம் செய்தால் எல்லோரும் பாராட்டுகிறார்கள்.
ஏன் கலைஞர் பாராட்டவில்லையா?
இந்த ஆட்சியைப் பொறுத்தவரையிலே முதல் மணி அடிப்பதைப் போல தெளிவாகச் சொல்லு கின்றோம். நீங்கள் தவறான முடிவை எடுத்திருக் கின்றீர்கள். அந்த முடிவை கைவிடுங்கள்.
நீங்களே கைவிடுங்கள்!
நீதிமன்றம் சொல்லித்தான் கைவிட்டோம் என்பதை விட நாங்களே அதை உணர்ந்திருக் கின்றோம். மக்கள் இந்த உணர்வை காட்டுகிறார்கள். வாசகர்கள், நூலகத்திற்குச் செல்லக் கூடியவர்கள், நூலக பயனாளிகள் அவர்கள் எல்லாம் விரும்பு கிறார்கள் என்று ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லியாவது நீங்கள் கவுரவமாக வெளியே வருவதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையானால் இன உணர்வு என்பதிலே நீங்கள் விளையாடு கின்றீர்கள்.
சிறு பொரி எரிமலையாய் வெடிக்கும்!
அந்த உணர்ச்சித் தீ என்பது இன்றைக்குப் பொரியாக கிளம்பியிருக்கிறது. பொரியாகக் கிளம்பியது எரிமலையாக வெடிக்கும். அதற்குரிய அவசியம் இல்லாமலேயே பிரச்சினை தீரவேண்டும். மக்கள் தயாராவார்கள். இதற்காக மக்களை தயாராக்குவோம். என்ன விலை கொடுத்தாலும் அண்ணா நூலகம் அந்த இடத்தை விட்டு நகராது. நகர்த்தவிட மாட்டோம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கின்றேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...