அறிவு வளர்ந்தால் மடமை மறையும்
நம் மக்களின் பொருளாதார நிலை கூட கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலிலும், சினிமா தொழிலிலும், ஓட்டல் தொழிலிலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக்காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய 100-க்கு 90 பேருடைய வாழ்க்கைத் தரம் அப்படியேதான் இருந்து வருகிறது. முன்பு இரண்டு அணா சாப்பாடு சாப்பிட்டவன் இன்று ஒரு ரூபாய் சாப்பாடு சாப்பிடலாம். ஆனாலும், மூன்று அணாவுக்கு அன்று கிடைத்த அளவு உணவு இன்று ஒரு ரூபாய்க்குக் கிடைப்பதில்லையே. முன்பு ஆறு அணா கூலி சம்பாதித்தவர்கள், இன்று ஒரு ரூபாய் சம்பாதிக்கலாம். அவ்வளவுதான். ஆனால், மூன்று ரூபாய் சம்பாதித்தாலும் பழைய ஆறு அணா வசதி இல்லை. சில அணா அளவில் தான் கூலி உயர்ந்ததே யொழிய, ஏழை மக்களுக்கு, பாட்டாளிகளுக்கு வாழ்க்கைத் தரமொன்றும் உயர்ந்து விடவில்லை. ஆனால், முதலாளிகள் கோடீஸ்வரர் களாகி விட்டார்கள். இராஜபோகம் அனுபவிக்கிறார்கள். மற்ற தேசங்களில் எத்தனையோ புதுப் புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம்நாட்டில் ஒன்றுகூட கண்டுபிடிக்க வசதி ஏற்படவில்லை. மற்ற நாட்டினரின் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தியாவது அதிகமான பலன் பெற்றிருக்கிறோமா என்றால் அதுவும் பொதுமக்களுக்கு இல்லை.
அவற்றைச் சரிவர உபயோகிக்கக் கூட நம் நாட்டில் வசதி செய்து தரப்படுவதில்லை. நம் அறிவு முன்னேற்றத்துக்கும், நம் ஆட்சிக்கும் அவ்வளவு தூரம் பாமர மக்களின் நன்மையைப் பற்றி, அவர்களது வாழ்க்கையும் சிறிதாவது உயர்வடைய வேண் டும் என்பது பற்றி யாரும் கவலை எடுத்துக் கொள்வதில்லை. கோவையிலுள்ள ஒரு சாதாரண தொழிலாளிகூட தனக்குப் போதிய வருவாய் இருந்தால் தன் மகனை கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைக்க முடியும். கோவை ஜில்லாவைச் சேர்ந்த ஆனைமலையிலுள்ள பெரிய மிராசுதாரர்கூட பண வசதியிருந்தும் தன் மகனை கல்லூரிப் படிப்புக்கு அனுப்ப முடியாது. காரணம், மகனை நகரத்திற்கு அனுப்பினால் தக்க கண்காணிப்பு இல்லாததால் அவன் சிகரெட்டுக் குடிக்கிறான், சினிமா பார்க்கிறான், கண்ட பெண்களைக் காதலிக்கிறான், கடைசியில் காலியாக வீடு திரும்புகிறான். எனவே கிராமத்திய மக்களுக்குப் படிக்க வசதியில்லாமல் போய் விடுகிறது.
சுதந்திரம் எப்படி - சிலபேருக்கே சுகம் அனுபவிக்கும் வாய்ப்பாக ஆக்கப்பட்டுவிட்டதோ, அப்படியே மற்ற வசதிகளும் சில பேருக்கே உரியதாக ஆக்கப்பட்டு விட்டன. சுதந்திரம் வந்தும் இன்னும் ஒருவன் பட்டதாரியாக, 22 வயது ஆக வேண்டியிருக்கிறது.
அந்தப்படியும் அவன் செய்யப் போகும் உத்தியோகத் திற்கு எவ்வகையிலும் உபயோகப்படாத படிப்பாக இருக் கிறது. 22 வயதுவரை படிக்க வைத்தும் அது வீண் செலவாகவே ஆகி விடுகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பணம் செலவழிக்க முடியாதவனாகவே பல குடியானவர்கள் தங்கள் மக்களைக் கல்லூரிகளுக்கு அனுப்புவதில்லை. எப்படியேனும் படிப்புச் செலவு குறைக்கப்பட்டாக வேண்டும். குறைந்த செலவில், குறைந்த காலத்தில் அவனவனது வாழ்க்கைக்குப் பயன்தரத் தக்கதான படிப்பு கற்பிக்கப்பட வசதி செய்து தரப்பட வேண்டும். சாதாரணமாக ஆபீஸில் குமாஸ்தா வேலை பார்க்க வேண்டிய ஒருவனுக்குச் சரித் திரமோ, பூகோளமோ, அல்ஜிப்ரா, டிரிக்னா மெட்ரியோ தேவையில்லை அல்லவா? சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு ஒருவன் கேல்குலஸ் ஏன் படிக்க வேண்டும்? தாசில்தார் உத்தியோகத்திற்கு அகாடமி ஏன்? இருந்தாலும் எந்த உத்தியோகத்துக்கென்றாலும் குறைந்தது பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டுமாம்.
ஏனப்பா இது அவசியமா என்று கேட்க யாரும் துணிவதில்லை. ஒரு வருடத்திற்கு 365 நாள் என்றால், அதில் கல்லூரி வேலை செய்வதெல்லாம் 150 நாள் தான். மற்ற 200 நாளும் வீண்தான். ஆசிரியர் களுக்குத் தரும் சம்பளமும் வீண்தான். ஏனப்பா இப்படிப் பிள்ளைகளின் நல்ல காலத்தை வீணாக்க வேண்டும் என்று கேட்டால், கேட்பவனுக்கு ஆதரவு கிடையாது. ஓட்டும் கிடைக்காது. பி.ஏ. படித்துத்தான் என்ன லாபம்? விஞ்ஞானம் படித்த பட்டதாரியே நெற்றியில் விபூதியும், நாமமும், பொட்டும், குங்குமமும் அப்பிக் கொண்டு திரிகிறானே. அது மட்டுமா? காவடி தூக்கிக் கொண்டு குதித்தாடும் பட்டதாரிகளும் கூட இருக்கிறார்களே இன்னும். பாமர மக்கள், பாட்டாளி மக்கள் இவர்களைப் பார்த்தே இன்னும் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகி விடுவார்கள்போல் இருக்கிறதே.
எனவே தோழர்களே, தொழிலில் முன்னேற்ற மில்லை, விவசாயத்தில் முன்னேற்றமில்லை, பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை. கல்வியிலும் முன்னேற்றமில்லை. ஏன் மக்கள் முன்னேற்றத்திற்குத் தயாரிக்கப்படவில்லை? மக்கள் தயாராகாதவரை ஆட்சியும் பயன் பெறும் காரியம் செய்தல் கூடாது. எனவேதான் நாம் அன்று முதலே கூறி வருகிறோம்; நாங்கள் அரசாங்கத்திற்கு விரோதிகள் அல்ல. காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்கவும் நாங்கள் ஒன்றும் ஆசைப்படுபவர்களல்ல. ஆட்சியிலுள்ளவர்களைக் கொண் டேதான் மக்களுக்கு நலமானதைச் செய்ய விரும்புகிறோம் என்று. அரசாங்கம் நடத்துவோரும் அரசாங்கத்தின் குறை காண்போரும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பாக தேர்தலில் நிற்போரும் முதலில் மக்களின் அறிவைப் பயன்படுத்துவதில் தம் கவனத்தைச் செலுத்த வேண்டும். மக்களைத் திருத்துவதில், அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதில் முழுக் கவலையும் செலுத்த வேண்டும். படிப்பினால் மட்டுமே மக்களைத் தெளிவுள்ளவர்களாக ஆக்கிவிட முடியாது. பரீட்சையில் நல்ல மார்க் வாங்கி விட்டதாலேயே ஒருவனைப் பகுத்தறிவாளியென்று நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது. மக்களிடையே பகுத்தறிவுப் பிரசாரம் நடத்தப்பட வேண்டும். அப் பிரசாரம் மூலம்தான் ஏதேனும் இன்றைய கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியும். இன்று பெரும்பாலான மக்கள் பெரும் மனக்கஷ்டத்திற்கு பலியாகி இருக்கின்றனர். வாழ்க்கையில் எவ்வித உற்சாகமும் அவர்களால் காண முடியவில்லை. சிலர் சுகம் அனுபவிப்பதைப் பார்த்து பலர் கஷ்டப்படு கின்றனர். தங்களுக்குப் போதுமானது கிடைக்க வில் லையே என்பது மட்டுமே கஷ்டத்திற்குக் காரணம் இல்லை. பிறர் தம்மைவிட அதிகம் அடைகிறார்களே என்ற கஷ்டமும் அதிகமாக இருந்து வருகிறது. வாழ்க்கையிலுள்ள மடுவுக்கும் மலைக்கும் போன்ற அளவு வித்தியாசம்தான் பெரிதும் கஷ்டத்திற்குக் காரணமாய் அமைந்திருக்கிறது.
இது மாற்றப்பட வேண்டுமானால் பகுத்தறிவுப் பிரசாரம் தான் செய்ய வேண்டும். சகல துறைகளிலும் மக்களுக்கு அறிவு புகட்டப்படல் வேண்டும் இது நம் தென்னாட்டுக்கு மட்டுமே அல்ல. அகில இந்தியாவுக்குமே தேவையான தாகும். என்றாலும் நம் தென்னாடு தான் பகுத்தறிவுப் பிரசாரம் நன்கு செழித்து வளர்வதற்கான பண்பாடு பெற்றிருக்கிறது.
எனவே முதலில் நம் தென்னாட்டைப் பற்றி கவலை எடுத்து கொள்ள வேண்டும் என்கிறோம். வடநாட்டில் பகுத்தறிவு பிரசாரம் செய்வதெல்லாம் எதிர்நீச்சல் வேலையாகும். உயர்மேடு ஏறும் வேலையாகும். நான் உலகத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்தியாவையும் இரண்டு மூன்று முறைக்கு மேலாகவே சுற்றிப் பார்த்திருக்கிறேன். அதுவும் சுமார் 40 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவைச் சுற்றிப் பார்த்து வந்திருக் கிறேன். சாதாரண மனிதனாகவே சுற்றி மக்களோ டெல்லாம் பழகியும் பார்த்திருக்கிறேன். அய்ரோப்பாவிலும், ரஷ்யா முதற்கொண்டு பல நாடுகளுக்கும் சென்று அந்தந்த நாட்டுமக்களைப் பார்த்தும் அவர்களுடன் பழகியும் இருக்கிறேன். 1903, 1904-இல் இந்தியா பூராவும் பிச்சை எடுத்துத் திரிந்து பார்த்திருக்கிறேன்.
அய்ரோப்பாவோடும், வடநாட்டோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் தென்னிந்தியாதான் அறிவில் சிறந்த நாடாக எனக்குப் படுகிறது. அதிலும் மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஆந்திரர்களையும், மலையாளிகளையும், கன்னடி யர்களையும் காட்டிலும் தமிழர்கள்தான் அறிவில் சிறந்த வர்களாக எனக்குத் தோன்றுகிறார்கள். சூத்திரர் என்றால் தமிழர்கள் ரோஷப்படும் அளவுக்கு எந்த வடநாட்டானும் எந்த ஆந்திரனும் மலையாளியும்கூட ரோஷப்படுவதில்லை.
சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுதான் போகட்டுமே. அதனால் என்ன குடிமுழுகிப் போய்விடும் என்றுதான் பம்பாய்காரன் சொல்வான். மைசூர் ராஜ்யமும் அப்படித் தான். நம் நாட்டிலோ 100-க்கு 60 பேராவது சூத்திரர் என்றால் ஆத்திரப்படுவார்கள்; கோபப்படுவார்கள். மேலும் மூட நம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதிலும் அதன் அவசியத்திலும் நமக்குத்தான் சற்று விளக்கம் ஏற்பட்டி ருக்கிறது.
பெருமை, புகழ், தொழில் வளம் முதலியவற்றைப் பற்றி எடுத்துக் கொண்டாலும் நம் மாகாண மக்கள்தான் மற்ற மாகாணக்காரர்களை விட சற்று அதிகமான கவலை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். மற்ற மாகாணக்காரர் களெல்லாம் நம் மாகாணத்தைக் கொண்டு நாம் பிழைக்கலாம் என்று ஆசைப்படுகிறார்களேயொழிய, நம்மைப் போல் நம் மாகாணத்திலிருந்தே சகலத்தையும் உண்டாக்கி தம் மக்களை வாழ்விக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அவ்விதம் நினைக்கும் அறிவும், தெளிவும், வசதியும் அவர்களுக்கு இல்லை. நமக்குத்தான் உண்டு. நம் தென்னிந்தியா இயல்பாகவே தான் பெற்றுள்ள இயற்கை வசதிகளால் பிறர் கண்களை உறுத்தி வருகிறது. அதனால்தான் வடநாட்டவர் நம்மைப் பிரிய விடாமல் கண்காணிப்பாக இருந்து வருகிறார்கள். தேசிய ஒற்றுமை பறி போய்விடும் என்று கூப்பாடு போட்டு நம்மை முன்னேற்றமடையவொட்டாமல் தடுத்து வருகிறார்கள்.
(3.8.1949 அன்று கோவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 20.8.1949)
No comments:
Post a Comment