Thursday, November 3, 2011

திசையெட்டிலிருந்து..! ஊர் சுற்றி


திசையெட்டிலிருந்து..! ஊர் சுற்றி


1. பார்ப்பனர் மாறவில்லை

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அய்.எஃப்.எஸ். அதிகாரி நீலம் சர்மா. மாஸ்கோவில் இந்திய தூதுவரகத்தில் பணிபுரியும் இந்தப் பெண்மணி டில்லியில் உள்ள அய்.ஏ.எஸ். அதிகாரியான குல்தீப் யாதவ் அவர்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இதை அறிந்த, அவ்வூர்  (அரியானா பிவானி) பார்ப்பன ஜாதியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பெண்ணின் தந்தை ராம்குமாரிடம் மிரட்டல் விடுத்தனராம். இந்த ராம்குமார் (பார்ப்பனர்) ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

நவம்பர் 8ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் இப்படி ஒரு அச்சுறுத்தல் ஜாதிக் கட்டுப்பாடு, தண்டனை தருவது அரியானாவில் மிகச் சர்வ சாதாரணம். கிராமப் பஞ்சாயத்து என்ற கட்டப் பஞ்சாயத்தே தீர்ப்பு - தண்டனை வழங்கும். பார்ப்பனர்களில் கோத்திரம் விட்டு கோத்திரம் திருமணம் செய்தால்கூட எதிர்ப்பார்களாம்! அகிர் என்ற யாதவ பிரிவைச் சார்ந்தவர் அய்.ஏ.எஸ். அதிகாரி குல்தீப் யாதவ்.

இதற்காக அவர்கள் குடும்பத்திற்குப் போதிய பாதுகாப்பினை காவல்துறை வழங்கி, கண்காணித்து வருகிறதாம்! அக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான கிராமவாசிகள் இத்திருமணத்தை எதிர்க்காததோடு, ஆதரவும் தருகிறார்களாம்!

ஆனால் பிராமண சபா கூடி இதனை எதிர்க்கிறதாம்! பார்ப்பனர்கள் மாறிவிட்டனர் இப்போதொல்லம் என்று பேசும் நுனிப் புல்லர்கள் இனியாவது மாறுவார்களா?


2. நெஞ்சு பொறுக்குதில்லையே...!

சுப்ரீம்கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் மார்க்கண்டேய கட்ஜு. இவர் அலகாபாத்தினச் சார்ந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக சில காலம் இருந்து சுப்ரீம்கோர்ட்டிற்கு  பதவி உயர்வு பெற்று சென்றவர். ஓய்வு பெற்ற நிலையில், பிரஸ் கவுன்சில் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

இவர் ஒளிவு மறைவின்றி பல உண்மைகளை நம் நாட்டு பத்திரிகை உலகின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி நன்றாகவே சாடியுள்ளார்!

மீடியாக்கள் மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றன.

தீவிரவாதிகள் என்று குறிப்பிட்ட ஒரு மதத்தையே ஒட்டு மொத்தமாக சித்திரிக்கின்றன.

அறிவியல் சிந்தனை பரவ மீடியாக்கள் ஒத்துழைப்பு உதவ வேண்டும்!

சினிமா, ஜோதிடம் என்று மக்களை திசை திருப்புகிறது என்று சக்கை போடு போட்டுள்ளார்! சி.என்.என் - அய்.பி.என். சேனலில் இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது மிகவும் துணிச்சலான, உண்மைகளை எக்ஸ்ரே எடுத்துச் சொன்ன அருமையான முத்துக்கள்! சினிமாக்காரர்களின் கர்ப்பம், குழந்தை பெறுதல், மண விலக்குதான் பல ஏடுகளுக்குக் கிடைக்கும் தீனி என்றால் அது தேசிய  அவமானம் அல்லவா? மக்களை முட்டாளாக்குவதில் போட்டா போட்டி அவைகளுக்கிடையே இருப்பது.

3. காப்பி அடித்தல் அனைவருக்கும் சொந்தம்!

அமெரிக்காவில் பிரபல ஜனாதிபதியாக இருந்து வரலாற்றுப் புகழ் படைத்தவர் ஜான் எஃப் கென்னடி. அவரது உரையிலிருந்து அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் வாசகங்கள்
நாடு உனக்கென்ன செய்தது என்று கேட்காதே!

நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்
என்று கேள்வி கேட்டுக் கொள் - செயல்படு!

-இந்த வாசகங்கள் கென்னடியின் சொந்த வாசகங்கள் அல்ல.

அவர் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது அவரது தலைமை ஆசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தின் மேற்கோளை அவர் எடுத்துக் கையாண்டாராம். அதைத்தான் ஜான் எஃ கென்னடி தனதாக்கிக் கொண்டார்! பரவாயில்லை.  அறிவு சார் சொத்தைத் தானே எடுத்துக் கொண்டார்!

பெரிய தலைவர்களும்கூட காப்பியடிக்கும் பூனைகளாக இருக்கிறார்களே என்கிறீர்களா? பரவாயில்லை. அறிவுடையார் எல்லாம் உடையார் தானே! அந்த எல்லாம் என்பதில் இந்தக் காப்பியடிக்கும் கலையும் சேர்ந்ததுதானே! இல்லையா? 4. செல்போனால் சிறுவர்களிடையே தகராறு - கொலை!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இரவல் வாங்கிய செல்போனைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்க அப்பையன் (14 வயது) மறுக்கவே - அவனை ஊருக்குவெளியே அழைத்துப் போய் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடுமையான செய்தி - பலரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது!

செல்போன் பேசிக் கொண்டே மின்சார ரயிலை, நின்ற வண்டியில் மோத விட்ட டிரைவர் கதையிலிருந்து, செல்போன் பேசிக் கொண்டே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் வருவது தெரியாது அடிபட்டுச் செத்த 100க்கு மேற்பட்டவர்களி லிருந்து, இப்படி இளைஞர்களிடையே கூட எளிதாக கொலையைச் செய்ய வைக்கும் கொடூரம் பற்றி என்ன சொல்ல முடியும்?

செல்போன் தீமைகள் என்று ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு காதல் - கத்தரிக்காய் என்று தொடங்கி கொலை வரை சென்று முடியும் இந்த கோரமுகமும் அறிவியல் வளர்ச்சியின் மற்றொரு முகம் போலும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...