அய்யாவின்-அடிச்சுவட்டில்-24-12-1973-காலை-7-22-மணி
19.12.1973 புதன் இரவு சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு இல்லம் திரும்பினார் தந்தை பெரியார் அவர்கள். வழக்கம்போல அய்யாவைக் கொண்டுவந்து பெரியார் திடலில் விட்டுவிட்டு விடைபெற்றுச் சென்றேன். சிரித்துக் கொண்டே வழியனுப்பினார்.
திருமதி வெள்ளையன் அவர்கள் அய்யா அம்மாவுடன் இருந்த குழு படத்தில் அய்யாவின் கையெழுத்தை வாங்கித் தரும்படி எங்களிடம் கேட்டுக்கொண்டார். அந்தப் படத்தில் அய்யா அவர்கள் கட்டிலில் அமர்ந்தவுடன் கையெழுத்து வாங்கி எடுத்துச் சென்றார். அதுதான் அய்யா போட்ட 19.12.1973 கடைசிக் கையெழுத்து.
விடியற்காலை 2.30 மணி அளவில் அய்யா அவர்கட்கு குடலிறக்க நோய்த் தொல்லைத் துவங்கியது. அய்யா அவர்களுக்கே உரித்தான இயற்கை சுபாவப்படி நோய்த் தொல்லையை காலை 4.30 மணிவரை பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அதற்குமேல் தாங்க முடியாமல் மற்றவர்களை அழைத்தார்கள்.
உடனே சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் இராமச்சந்திரா அவர்கள் அழைக்கப்பட்டு அவரும் உடன் வந்தார். ஊசி, மருந்து முதலியன கொடுத்து டாக்டரும் மேலும் ஒருமணி நேரம் தங்கி இருந்து வைத்தியம் செய்தார்கள்.
மறுபடியும் காலை 7 மணிக்கு டாக்டர் இராமச்சந்திரா அவர்கள் மீண்டும் அய்யா அவர்களைப் பார்த்துச் சென்றார்கள். மதியம் இரண்டு மணிக்கு டாக்டர் சரத்சந்திரா, அய்யா அவர்களை வந்து பார்த்தார்கள். மூத்திரம் இறங்குவதில் சங்கடம் இருந்ததை அறிந்த டாக்டர்கள் இராமச்சந்திரா, சரத்சந்திரா ஆகியோர், உடனே அய்யா அவர்களை சென்னை பெரிய அரசு (G.H) மருத்துமனையில் சேர்ப்பதாகக் கூறினார்கள். காலையில் செய்தி அறிந்து விரைந்து வந்தேன். தோழர்கள் சம்பத்தும், தியாகராஜனும் மருத்துவமனையில் இருந்தார்கள்.
3 மணி அளவில் அய்யா அவர்கள் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். ஊசி மூலம் மருந்தும் உணவும் செலுத்தப்பட்டு மூத்திரம் இறங்குவது சரி செய்யப்பட்டது.
குடலிறக்கத்திற்கு அய்யா அவர்களின் வயது காரணமாக - ஆபரேஷன் செய்ய முடியாத நிலை காரணமாக தானாகவே குடலிறக்கம் சரி செய்யப்பட என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
வலி சிறிது குறைந்த போதிலும், அய்யா அவர்கட்கு வேலூர் டாக்டர் பட் அவர்களிடம் தன்னைக் காட்டிக்கொள்ள பேரார்வம் கொண்டு இருந்தார்கள். டாக்டர் பட் அவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு விவரமும் கூறப்பட்டபோது உடன் அழைத்து வருமாறு அவரும் கூறினார். அன்றே (21.12.1973) வேலூர் மருத்துவமனைக்கு அய்யா அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
டாக்டர் பட் அவர்களிடம் வந்து விட்டோம் என்ற மனத்தெம்பு காரணமாக 22ஆம் தேதி காலை வழக்கம் போல் எழுந்து அய்யா அவர்கள் ஆர்லிக்ஸ், பழரசம் அருந்தினார்கள். பத்திரிகைகளும் படித்தார்கள். அன்று மாலைவரை வலி குறைந்தே காணப்பட்டது.
இரவு 12 மணி அளவில் மீண்டும் வலி துவங்கியதோடு மூச்சுத் திணறலும் ஏற்பட்டுவிட்டது. வேலூரிலிருந்து சென்னைக்குத் தொடர்பு கொள்ளப்பட்டு டாக்டர் இராமச்சந்திரா, உடன் இரவு 1 மணிக்கு வேலூர் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். டாக்டர் அவர்களும் உடன் வந்து சேர்ந்தார்கள். நான்கு மணிக்கு டாக்டர் பட் அவர்களைக் கலந்து கொண்டு இருவரும் வைத்தியம் துவங்கினர். 23ஆம் தேதி முழுவதும், வலி குறைவதும் மிகுவதுமாகவே இருந்தது, அய்யா கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.
23ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மீண்டும் மூச்சுத் திணறல் துவங்கிவிட்டது. இரவு ஒன்பது முப்பது மணி முதலே பிராணவாயு செலுத்தப்பட்டது. டாக்டர்கள் இராமச்சந்திரா, பட், ஜான்சன் ஆகியோர் விடியவிடிய அருகில் இருந்து எவ்வளவோ போராடியும் தோல்வியே கண்டனர்.
அய்யாவின் நிலைமை பற்றி முதல்வர் கலைஞருக்குத் தகவல் தரப்பட்டது. 24ஆம் தேதி காலை 7.22 மணிக்கு தமிழினத்தைத் துடிதுடிக்க விட்டுவிட்டு நமது சரித்திர நாயகர் அய்யா அவர்கள் நம்மை எல்லாம் விட்டு உடலால் பிரிந்துவிட்டார்கள்.
அச்சம் என்பதையே தன் வாழ்வின் அகராதியில் கண்டிராத தலைதாழாச் சிங்கம், எழுந்துவரும் எதிர்ப்புகளாலேயே உருவாக்கி எழுந்துவிட்ட இனஞாயிறு, போராட்டப் புயற்காற்று அதன் கடைசி வீச்சை 24-.12.-1973 காலை 7-.22 மணிக்கு வேலூர் மருத்துவமனையில் முடித்துவிட்டது.
24-.12.-1973 மாலை 4 மணிமுதல் 25.-12.-1973 மாலை 3 மணிவரை சென்னை ராஜாஜி மண்டபத்திலே தந்தை பெரியார் அவர்களின் பொன்னுருவம் தமிழின மக்களின் இறுதி மரியாதைக் காக வைக்கப்பட்டது.
தானைத் தலைவர் கண்துயிலும் காட்சி கண்டுபோக மக்கள் கூட்டம் கியூ வரிசையில் அலை அலையாகத் திரண்டு அய்யா அவர்களின் பொன்மேனி புகழ்வடிவைக் கண்டு கண்ணீர் மல்கிய வண்ண மாகவே இருந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள், வேன்கள், கார்கள் லாரிகள் இவைகளின் மூலம் இலட்சோப லட்ச மக்கள் திரண்டுவிட்டனர்.
சென்னை நகரில் எங்கு நோக்கினும் மக்கள் கடல். எத்தனையோ மக்கட் திரளைக் கண்ட சென்னை மாநகரம் வரலாற் றில் புதிய சாதனையை எட்டிவிட்டது. பொங்கிவந்த மக்கள் வெள்ளத்தை காவல் துறையினர், சீரணியினர், ஊர்க்காவல் படையினர், மகளிர் ஊர்க்காவல் படையி னர் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தினர். 24.-12.-1973 மாலை 4 மணிக்கு அய்யா வைக் காணத் தொடங்கிய மக்கள் சாரையாகிய கியூ 25.-12.-1973 மாலை அய்யா அவர்களின் செம்மேனி திருவுருவப் பொன்மேனியை 25-.12.-1973 பிற்பகல் 3 மணிக்கு ஏற்றும்வரை தொடர்ந்து கொண்டே இருந்ததே தவிர முடியவில்லை.
பார்த்தவர் பாதிப்பேர். பார்க்க இயலாமல் திணறியவர்கள் பாதிப்பேர். நிமிடத்திற்கு 205 பேர் என்ற கணக்கீட்டில் கியூ வரிசை அய்யா அவர்களைக் கண்டு நகர்ந்த வண்ணமே இருந்தது.
சூட்டப்பட்ட மலர் மாலைகளும் வைக்கப்பட்ட மலர் வளையங்களும் மலர்களா மலைகளா என மலைக்கும் வண்ணம் குவிந்தது - குவிந்து கொண்டே இருந்தது. குடும்பத் தலைவராகவும், இலட்சியத் தந்தையாகவும் அய்யா அவர்களை ஏற்றுக்கொண்ட கருப்புச் சட்டைத் தோழன் ஒருவன்கூட வீட்டில் இல்லையென்று கூறும் வண்ணம் குடும்பம் குடும்பமாகப் புறப்பட்டு சென்னை மாநகரைக் கருஞ்சட்டைக் கடலாக்கி கண்ணீர் அலையாய் நின்றனர்.
தாழ்ந்து கிடந்த சமுதாய மக்களை எல்லாம் தலைதூக்க வைத்த தானைத் தலைவரை கடைசி ஒரு முறையாவது கண்டுவிடுவோம் எனக் காட்டாற்று வெள்ளம்போல் குவிந்தனர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள்.
அய்யா அவர்களின் அயராத அரை நூற்றாண்டுத் தொண்டாலே கல்வி உரிமையும் உத்தியோக வாய்ப்பும் பெற்று உயர்ந்த அரசு அலுவலர்கள். கைம்மாறு கருதாத காவலருக்கு, தாம் இறுதிநன்றி மரியாதையாவது காணிக்கையாகச் செலுத்துவோம் என்று குவிந்துவிட்டனர்.
ஜாதிப்பிரிவாலும் சனாதன சதியாலும் பிளக்கப்பட்டு கூறுபடுத்தப்பட்ட மக்களைக் கூட்டிவைத்து கூர்த்த பகுத்தறிவு ஒளிபாய்ச்சி ஓரினம் எனும் உணர்வை ஊட்டிய ஒரே தலைவருக்கு உயிரையே அர்ப்பணமாகக் கேட்டாலும் கொடுக்க கோடி கோடி தொகை மக்கள் இங்குண்டு.
உழைத்து உழைத்து, அதனாலே மீளா ஓய்வு எடுத்துக் கொள்வோம் என்ற உணர்வோடு கண்ணுறங்கிவிட்ட கால ஞாயிற்றின் கடைசிக் காட்சியைக் காண்போம் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தமிழினமே தலைநகரில் தேக்கம் கொண்டுவிட்டது.
பெண் என்றால் பேதை என்று கருதப்பட்ட தமிழ்க் குலப் பெண்களுக்கு பேசும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, சொத்துரிமை, விவாகரத்துரிமை இன்னபிற உரிமைகளை எல்லாம் ஓயா உழைப்பாலே வழங்கிய வள்ளலின் வாடா உடலைக் கண்டு வணக்கம் செலுத்துவோம் என்று தமிழ்க் குலப் பெண்கள் சென்னை நகரையே முற்றுகை இட்டுவிட்டனர்.
தந்தையே உங்கள் உழைப்பு வீண் போகவில்லை நாங்கள் நன்றிகொன்ற பக்தர்கள் அல்ல - உம்மடி பற்றிய வழி நடக்க இலட்சோப லட்ச மக்கள் நாங்கள் காத்திருக்கிறோம் என்று வெளிப்படுத்தும் வண்ணம் சென்னை மாநகர் எங்கும் கருஞ்சட்டை வெள்ளம், பொதுமக்கள் பிரவாகம்!
- நினைவுகள் நீளும்
No comments:
Post a Comment