மறுபரிசீலனை செய்வதே நன்மருந்து!
ஆத்திரத்திலும், வெறுப்பிலும், காழ்ப்புணர்ச்சி யிலும் செய்யப்படும் எந்த செயலும் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது பால பாடமாகும்.
இன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சரின் செயல் பாடுகள் இதற்கானதோர் அரிய எடுத்துக்காட்டாகும்.
ஒரு ஆட்சி என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சிதான் என்பதை மறந்து விட்டு, மனம் போன போக்கில் நடந்து கொள்வது உகந்தது அல்ல- மக்களின் அதிருப்தி என்னும் விளைச்சலை விரைந்து அறுவடை செய்யும் நிலையைத்தான் அது ஏற்படுத்தும்.
நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மக்களின் பணம் என்கிற பொறுப்புணர்ச்சி நம் முன்னே வந்து நின்று, அதுதான் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதாக இருக்க வேண்டும்.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், பள்ளிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கு சைக்கிள் கொடுக்கப் பட்டது என்பதற்காக - தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முதல் அமைச்சர் கலைஞர் அந்தத் திட்டத்தை ரத்து செய்யவில்லையே!
ஆனால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் வராததுமாக அடுக்கடுக்காக முந்தைய ஆட்சியின் அருமையான மக்கள் சார்ந்த செயல் பாடுகளையெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற பாணியில் கொட்டிக் கவிழ்த்து வருகிறதே!
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பது தமிழ் அறிஞர்களால் முடிவு செய்யப்பட்ட ஒன்று; திராவிடர் இயக்கத் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற பெரு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
தமிழ்நாட்டை ஆளும் ஓர் ஆட்சி பண்பாட்டு ரீதியாக சிந்தனையோடு ஒரு பிரச்சினையை அணுக வேண்டாமா? துக்ளக்கும் தினமணியும் தான் தமக்கு வழிகாட்டி என்று ஒரு முதல் அமைச்சர் கருதுவாரேயானால், அது தமிழின விரோத ஆட்சி என்ற வெறுப்புக்குத்தான் ஆளாகும். தந்தை பெரியார் சிந்தனைகள் - இந்த ஆட்சி எத்தகைய ஆட்சி? யாருக்கான ஆட்சி? என்பதை மக்களுக்கு எளிதில் அடையாளப்படுத்திக் காட்டிவிடுமே!
அந்த நேரத்தில் தினமணியோ துக்ளக்கோ என்ன முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும் பிள்ளை பிழைக்காது!
இரண்டாவதாக பலநூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, ஒரு நாட்டின் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட சட்டமன்றக் கட்டடத்தை வேறு இடத்துக்கு மாற்றியது; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் அமைந்த செம்மொழி நூலகத்தில் இடம் பெற்ற நூல்களைக் குப்பைகளாகக் கருதித் தூக்கி எறிந்ததாகும். சமச்சீர்க் கல்வி, செம்மொழிப் பூங்கா, தொல் காப்பியர் பூங்காக்கள் உருக்குலைக்கப்படுகின்றன. உழவர் சந்தையின் நிலை என்ன? பெரியார் நினைவு சமத்துவ புரங்களின் வளர்ச்சி என்ன? வாக்களித்த மக்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உச்ச கட்டமாக அறிவு சார்ந்த - அண்ணா நூற்றாண்டையொட்டி உருவாக்கப்பட்ட உலகில் குறிப்பிடத்தக்க நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது என்ற சடுதியான முடிவு!
ஒரு யோசனை, முதல் அமைச்சர் ஒரு முறை அந்த நூலகத்திற்குள் நுழைந்து பார்த்து வர வேண்டும். இரண்டு நாள்களாக அந்த நூலகத்திற்கு வரும் வாசிப்புப் பிரியர்களும், தேர்வுகளுக்காகப் படிக்கும், குறிப்பெடுக்கும் இருபால் மாணவர்களும் எந்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொள்ளவாவது முயற்சிக்க வேண்டும். அரசைக் கடுமையாக விமர்சிக்கும் போக்கு இந்த இரு நாட்களில் உச்ச டிகிரியை எட்டியுள்ளது என்பதுதான் உண்மை!
சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள வாய்தாக் காலம் வரைகூட காத்திராமல் அமைச் சரவையை அவசரமாகக் கூட்டி ஏற்கெனவே இந்தப் பிரச்சினையில் எடுக்கப்பட்ட முடிவை மாற்றி நீதிமன்றத்திற்குத் தெரிவிப்பார்களேயானால், மேலும் கெட்ட பெயர் சம்பாத்தியத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
என்பது பெரியாரைத் துணைக்கோடல் அதி காரத்தின் எட்டாவது குறளாகும்.
No comments:
Post a Comment