சித்ரா பவுர்ணமி என்னும் மத விழா அரசு சார்பில் நடத்தப்படுமாம் - சொல்லியிருப்பவர் மதச் சார்பற்ற அரசின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா!
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் பவுர்ணமி கூடிய நாள் சித்ரா பவுர்ணமியாம்.
வண்டி வண்டியாக புராணக் குப்பைக் கதைகள் உண்டு.
அதில் ஒன்றே ஒன்று...
கஜேந்திர மோட்சம்
ஸ்ரீ மத் பாகவதத்தை முதலில் திருமால் பிரம்மருக்குச் சொல்ல, பிரம்மா நாரதருக்கும், நாரதர் வியாசருக்கும், வியாசர் சுகபிரம்மருக்கும், சுகபிரம்மர் பரீட்சித்து மன்னனுக்கும் கூறியருளியதாக புராணங்கள் இயம்புகின்றன. ஸ்ரீ மத் பாகவதத்தை நாரத முனிவர், ருக்மணி தேவிக்கும் கூறியருளினார்.
இந்த ஸ்ரீ மத் பாகவதத்தில் வரும் கஜேந்திர மோட்சக் கதை மிகவும் புனிதம் மிக்கதாகக் கருதப்படுகிறது.
திரிகூட மலையின் அழகில் கவரப்பட்ட ஹுஹு, ஹாஹா எனும் இரு கந்தர்வர்கள் தத்தம் மனைவியரோடு பூமியில் இறங்கினார்கள். இதில் ஹுஹு தன் மனைவியோடு ஓர் ஓடையில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது தேவலர் எனும் முனிவர் அங்கே வந்தார். ஹுஹு விளையாட்டாகக் கருதி ஒரு முதலையின் உருவெடுத்து முனிவரின் காலைப் பற்றியிழுத்தான். இதனால் கோபம் கொண்ட முனிவர் அவனை முதலையாகும்படி சபித்தார். ஹுஹுவும் முதலையாக உருமாறி வாழ்ந்து வந்தான்.
இதேபோன்று இன்னுமொரு சாபக் கதையும் உண்டு. இந்திரத்யும்னன் எனும் மன்னன் நாராயண பூஜையில் லயித்திருந்தான். அப்போது அங்கு வருகை தந்த அகத்தியரை அவன் கவனிக்கவில்லை. இதனால் அரசன் தன்னை அவமதித்ததாக கருதிய அகத்தியர் அவனை அய்ந்தறிவு படைத்த யானையாகக் கடவது என சபித்தார்.
யானையாக மாறிய போதும் மன்னன் தன் நாராயண பூஜையை கைவிடவில்லை. ஒரு ஏகாதசியில் கஜேந்திரனான அவன் பகவானுக்காக நீராடி மலர் பறிக்கும்போது தன் காலை ஏதோ பற்றியிழுப்பது போன்று உணர்ந்தான். ஆம் அவன் கால் ஒரு முதலையின் வாயில் அகப்பட்டிருந்தது. அம்முதலை வேறு யாருமல்ல தேவலரின் சாபத்தால் முதலையான ஹுஹு கந்தர்வனே அவன்.
எவ்வளவு முயன்றும் முதலையிடத்தினின்று தப்பிக்க முடியாத கஜேந்திர யானை நாராயணனை நோக்கி அபயக் குரல் எழுப்பியது. ஆதிமூலமே என்னைக் காப்பாற்று எனக் கதறியது. பக்தனின் அபயக் குரல் கேட்ட திருமாலும் கருட வாகனத்தில் தரிசனம் தந்து சுதர்சனத்தால் முதலையின் தலையை அறுத்து வதம் செய்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தருளினார். இதுவே தற்போதும் கஜேந்திர மோட்சமாக அனுஷ்டிக்கப்படுகிறது. திருமால் திருத்தலங்கள் அனைத்திலும் இந்த சித்ரா பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச வைபவம் சிறப்பாக நடைபெறும். சித்ரா பவுர்ணமியில் பெருமாள் கோயில் சென்று கஜேந்திர மோட்சம் காண நமக்கும் பாவங்கள் தொலைந்து மோட்சப் பேறு கிட்டும் என்று ஓர் ஆன்மீக இதழ் விவரிக்கிறது.
ஏற்கெனவே பயித்தியக்காரன்... அவன் சாராயம் குடித்திருந்த நேரத்தில் தேளும் கொட்டினால் எப்படி இருக்கும்? அதுபோன்ற உளறல்தானே இந்தக் கதையும்!
தனக்கு மாற்று, தமிழகத்தில் யாரும் இல்லை என்று பேட்டி கொடுத்த அம்மையார் இந்த அபத்தத்துக்காகத்தான் அரசு விழா எடுக்கப் போகிறாரா?
ஆட்சி செய்யும் பாவங்கள், குற்றங்களிலிருந்து கரையேறத்தான் இந்த ஏற்பாடா?
இது மதச் சார்பற்ற அரசா? இந்துத்துவா அரசா? பதில் தேவை!
No comments:
Post a Comment