Thursday, November 17, 2011

வரவேற்கத்தக்க யோசனை!


மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு தனியே இட ஒதுக்கீடு செய்வது குறித்து முக்கிய பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. அது குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பரிந்துரை செய்துள்ளது. இதனை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் வரவேற்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டிலும் இது போன்ற ஏற்பாடு நடைமுறையில் உள்ளது. பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 30 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 20 விழுக்காடும், கல்வி, வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர், வன்னியர் உள்ளிட்ட பல ஜாதியினர் பலன் அடைந்து வருவது கண்கூடு. சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் கூட ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததி யினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இத்தகைய பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம் நீண்ட காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பும் கூடுதலாகக் கிடைக்கும் என்பதில் அய்யத்துக்கு இடமில்லை.
அதே நேரத்தில் மத்திய அரசின் பிற்படுத்தப் பட்டோருக்கு வெறும் 27 விழுக்காடு மட்டுமேதான் இட ஒதுக்கீடு உள்ளது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்பு 50 சதவிகிதத்திற்கு இட ஒதுக்கீட்டின் அளவை விஞ்சக் கூடாது என்ற தடையை அகற்றுவதன் மூலம்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஓரளவு இட ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு ஏற்படும்.
மண்டல் குழு அறிக்கையில் பிற்படுத்தப்பட் டவர்கள் 52 விழுக்காடு என்று தெரிவிக்கப் பட்டுள்ள நிலையில் இப்பொழுது 27 விழுக் காட்டை 52 விழுக்காடாக உயர்த்தி அறிவிக் கப்படுவது அவசியமாகும். இது ஏதோ அதிக அளவு என்று யாரும் கருதத் தேவையில்லை. இந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மக்களான பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசுத் துறைகளின் வேலை வாய்ப்புகளில் 5 சதவிகிதம் கூட எட்டவில்லை என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்தவேண்டியதன் அவசியம் எளிதாகப் புலனாகும்.
1950 ஜனவரி 26 இல் அறிமுகத்துக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கால முதலே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கவேண்டும். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் அவர்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப் படையில் சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்த நிலை யில்தான் 1990 ஆகஸ்டில் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டது.
அதிலும் கூட கல்வி நிறுவனங்களின் கதவுகள் திறக் கப்படாத நிலை. இன்று வரை கூட முழுமையான அளவில் பிற்படுத்தப் பட்டோருக்கான  நியாயம், உரிமை கிடைக்கப் பெறவில்லை என்பது வருத்தத்திற்கு உரியதாகும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தனியாக உள் ஒதுக்கீடு அளிப்பது - பரிசீலனை என்ற கட்டத்தைத் தாண்டி செயல்பாட்டுக்கு வருவது அவசியம் அப்படி வரும்போது இந்தப் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...