Thursday, November 17, 2011

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை


அரசியல் சீர்திருத்தத்திற்கு அரசே இது போன்ற முக்கியத்துவத்தை அளித் திராவிட்டால்,  ஆங்கிலேய சாம்ராஜ்ய வரலாற்றின் இந்த இக்கட்டான காலகட்டத்தில், நாம்  அச்சீர்திருத்தங் களை தீவிரமாக வலியுறுத்தியிருக்கப் போவதில்லை. அயர்லாந்தைத் தவிர்த்து, ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் வேறு எந்த பகுதியிலும், போருடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத எந்த அரசியல் போராட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. போர் ஒன்றே, ஆங்கிலேய சாம்ராஜ்யத் தில் மட்டுமன்றி, உலகெங்கும் அனை வராலும் பேசப்படும், கவனம் செலுத் தப்படும் தலைப்பாக இருந்தது. ஆனால், என்ன காரணத்தினாலோ, உணர்வு மிகுந்த ஓர் அரசியல் போராட்டத்தை இந்த நாட்டில் மேற்கொள்ள இந்தக் குறிப்பிட்ட  காலத்தை நம் நண்பர்களில் சிலர் தேர்ந்தெடுத்துவிட்டனர். அந்தப் போராட்டம் நமக்கு எந்த மாற்று வழியையும் அளிக்காத காரணத்தால்,  நமது கோரிக்கைகளை நாம் வலியுறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால், அவற்றை மிகுந்த மரியாதை யுடன், அரசமைப்பு சட்டப்படியான முறையில், மற்றவர்களின் உணர்வுகள், விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் வகை யில் மட்டுமே அதனை வலியுறுத்த வேண் டுமேயன்றி,  போருடன் தொடர்புடைய மாபெரும் பிரச்சினைகளை எதிர் கொண்டு தீர்வு காணும் பணியில் தங் களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண் டுள்ள பொறுப்பு மிக்க ஆங்கிலேய ஆட்சி யாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் எதனையும் நாம் வலியுறுத் தக்கூடாது.
ஆங்கிலேய ஆட்சிக்கு நாம் ஆற்றவேண்டிய கடமை
இந்த போரினால் மனித குலம் இது வரை மிக உயர்வாக போற்றிப் பாதுகாத்து வந்த உணர்வுகள், எதிர்பார்ப்புகள் கேள்விக்குறிகளாக ஆகியுள்ளன. உண்மை, நியாயம், சுதந்திரம், சிறு தேசங்களின் உரிமைகள், பூமியில் அமைதியையும், நீதியையும் நிலவச் செய்வது போன்ற நோக்கங்களுக்காக இங்கிலாந்தும் அதன் நேச நாடுகளும் போரிட்டு வருகின்றன. இந்தப் போராட்டத்தில் நமக்கும் ஒரு மாபெரும் பொறுப்பும், பங்கும் உள்ளது. நமது எதிர்காலம் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் பலத்துடனும், நிலைத் தன்மையுடனும் பின்னிப் பிணைந்திருப்பதாகும்.  எனவே, இந்த மாபெரும் போரை விரைவில் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, நமது அனைத்துச் செல்வங் களைச் செலவிட்டும், நமது ஒவ்வொரு வரின் உடலை வருத்திக் கொண்டும் செயலாற்றுவது நமது கடமையாகும். இங்கிலாந்து நாட்டின் பலத்தின் காரண மாக, இந்தப் போரின் கொடுமைகளையும், சோகங்களையும் இன்னமும் சந்திக் காதவர்களாக, உணராதவர்களாக நாம் இருக்கின்றோம். என்றாலும், இந்தப் போர் வெற்றியுடன் முடிவடையுமேயானால், அதனால் பெரும் அளவு உயிர்களும், பணமும், பொருள்களும் மிச்சமாகும். இந்த மாபெரும் போரில் நமது உடன் பிறப்புகள் மற்றும் உறவினர்கள் இந்திய ராணுவத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் நமக்கும், நமது நாட்டிற்கும் பெருமையையும், புகழையும் தேடித் தந்துள்ளனர். ஆனால், வீட்டில் இருந்து கொண்டே அமைதியையும், நிலையான அரசினால் கிடைக்கும் பலன்களையும் அனுபவித்துக் கொண்டு இருந்தவர்களும், இந்த மாபெரும் ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு,  அத னுடன் இணைந்த ஒரு பகுதியாக விளங்கும் தங்களுக்கும்  ஒரு கடமை உள்ளதென்பதை நினைவு வைத்துக் கொண்டு உணர வேண்டும். பார்ப்பன ரல்லாத சமூக உறுப்பினர்களாகிய நாங்கள், எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவில் போர் நிதி மற்றும் போர்க் கடன் திரட்டும் செயலில் ஈடுபட்டிருக் கிறோம். ஆனால், நாங்கள் செய்ய வேண்டிய மற்றொரு கடமையும் உள்ளது. இந்திய ராணுவம் பலப்படுத்தப்பட வேண்டும். ராணுவத்தில் பெரும்பாலும், விவசாயம் மற்றும் தொழில் துறைகளைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத மக்களே  உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களும் தங்களது கடும் உழைப்பு, விசுவாசம் மற்றும் தேசப் பற்றின் மூலம் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை வளத்துடன் நீடிக்கச் செய்துள்ளனர்.  நேர்மையற்ற எதிரியுடனான போரில் ஆங்கிலேய சாம்ராஜ்ய ராணுவத்திற்கு தேவையான போர் வீரர்கள் இல்லை என்ற நிலையைப் போக்க, ஆங்கிலேய அரசின் ராணுவத்தில் அதிக எண்ணிக் கையில் சேரவேண்டும் என்று அனைத்துப்  பிரிவு மக்களுக்கும் அன்பான வேண்டு கோள் விடுக்கிறோம். முறையான ராணு வத்திற்கு நியமிக்கப் படாத கல்வி அறிவும், விழிப்புணர்வும் பெற்ற பிரிவு மக்கள் இந்திய பாதுகாப்புப் படையில் சேர அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குக் கிடைத்த ஆதரவு மனநிறை வளிப்பதாக இல்லை. உங்கள் நாட்டை நீங்களே நிருவகிக்க வேண்டும் என்று விரும்பினால், உங்கள் நாட்டை நீங்களே பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். ஆனால், ராணுவத்தில் சேரும் வாய்ப்பு தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்று உரக்க புகார் கூறிக் கொண்டிருந்த பிரிவு மக்களும் இந்த அழைப்பினை ஏற்றுக் கொள்ளத்  தயாராக இருக்கவில்லை. ஆனால் அது வேறு விஷயம். பார்ப்பன ரல்லாத அனைத்து சமூக மக்களுக்கும் இன்று நான் விடுக்கும் வேண்டுகோள் ராணுவத்தில் போதுமான அளவில், எண்ணிக்கையில் மக்கள் சேரவேண்டும் என்பதேயாகும். உங்களது விசுவாசம் உதட்டளவிலானது அல்ல என்பதையும், சம்பிரதாயமான சொற்களால் ஆனதல்ல என்பதையும், சாம்ராஜ்யத்தின் பாதுகாப் பிற்காகவும், நாம்  ரத்தம் சிந்தத் தயாராக இருக்கிறோம் என்பதையும்  நீங்கள் உலகுக்குக் காட்டவேண்டும். சோதனை யும் ஆபத்தும் நிறைந்த இந்த கால கட் டத்தில் நமது கடமையில் இருந்து தவறா மல் நாம் இருந்தோமேயானால்,  நமது சமூகத்தின் முன்னோடிகள் யூனியன் ஜாக் கொடியின் கீழ் பெற்ற வீரத்தின் பேரும் புகழையும் நாமும் பெறலாம்.
முடிவுரை
அன்பர்களே,  விரைந்த மாற்றம் நிகழும் ஒரு நிலையை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். மென்மையானது, அமைதியானது என்று நீங்கள் கருதிக் கொண்டிருக்கும் இந்தியாவை இன்னும் நெருங்கி  மேலும் கவனத்துடன் ஆராயந்து பார்த்தால், பெரும் புயல்கள் வீசி கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு கடலைப் போன்று நீங்கள் காணலாம்.
கடற்பயணம் என்பது அத்தகைய தருணங் களில் மிகவும் கடினமானது. ஆனால், தளராத முயற்சி, உழைப்பு, ஆற்றல்களால் மேற்கொள்ள இயலாதவை சில விஷ யங்கள் மட்டுமே. தேசிய, சமூகவிவகாரங்களை நிருவகிக்க, தொடர்ந்து அமைப்பு ரீதியான முயற்சி தேவை.  நமது எதிர் காலத்தை வளமானதாக ஆக்கிக்கொள் வதோ அல்லது சீரழித்துக் கொள்வதோ, வரலாற்றின் சிக்கல் நிறைந்த இந்த கால கட்டத்தில், நமது கைகளில்தான் உள்ளது. சேவையும், தியாகமும் நம்மில் ஒவ்வொரு வரும் புரிய வேண்டிய அரிய தருணமிது. அய்ரோப்பாவில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.  அதை விட ஆர்வம் அளிக்கும்,
மேலும் மேம்படுத்தும், மேலும் உயர்வளிக்கும் ஒரு காட்சியைப் பற்றி வரலாறு பேசுமா? மனிதகுல முன்னேற்றத்திற்கான அடிப் படைக் கொள்கைகள் கொண்ட ஓர் அகண்ட, உறுதியான அடித்தளத்தை மீண்டும் உருவாக்க இங்கிலாந்து சாம்ராஜ்யத்தின், அதன் நேச நாடுகளின் ஆண்கள் பெண்கள் செய்யும் தியாகம் எதுவும் பெரிதாகக் கருதப்படமாட்டாது. இதே சுய உணர்வோடு, இதே நாட்டுப் பற்று உணர்வினால் ஒளியூட்டப்பட்டு,  இதே பெருந்தன்மையான முடிவுகளால் தூண்டப்பட்டு, ஒரு ஒன்றுபட்ட சமூகமாக, நமது வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்,  நமது சொந்த லட்சியத்தை அமைதியுடன் எட்டவும், நாம் வாழ்ந்து தீரவேண்டிய குளிர் கால இரவுகள் எவ்வளவுதான் கவலை அளிப்பவையாக இருந்தாலும், நாம் நமது கடமையை ஆற்றுவோம்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன் (தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...