Wednesday, November 2, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நாங்கள் சொல்லாததைச் சொன்னதாக ஊடகங்கள் வெளியிடுவதா?


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நாங்கள் சொல்லாததைச் சொன்னதாக ஊடகங்கள் வெளியிடுவதா?


நடவடிக்கை எடுக்க நேரிடும்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீனில் வெளி விடுவது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லாததை சொன்னதாக நீதிபதிகள் கண்டித்ததோடு, நடவடிக்கை எடுக்கநேரும் என்றும் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்துவரும் நிலையில், அதனை விசாரிக்கும் முழுப் பொறுப்பும் நீதிமன்றங்களுடையதே தவிர - ஊடகங்களின் (ஏடுகள், நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சிகளின்) பணி அல்ல; ஆனால், நம் நாட்டில் கெட்ட வாய்ப்பாக, தாங்கள் செய்தியை முந்தித் தரவேண்டும் என்பதாலும், இந்த ஊடகங்கள் அனைத்திலும் மனுவாதிகளான உயர்ஜாதி வர்க்கத்தினரின் ஏகபோகமாகவும், முதலாளிகளுடைய ஆயுதங்களாகவும், உடைமைகளாகவுமே செயல்படுவதால், செய்திகளை சுதந்திரமாக, ஓர்ந்து கண்ணோடாமல் தருவதில்லை.
அரைவேக்காட்டுத்தனம்!
இன்னும் சில ஏடுகளால், ஊடகங்களால் அரைவேக்காட்டுச் செய்திகளைக்கூட அனுமானத்தால் உருவாக்கப்பட்டு, விசாரணை ஏடுகள் எங்களது பத்திரிகா தர்மத்தில் நடப்பவை! என்று கூறிக்கொண்டு, துரும்பைத் தூணாக்குவது, துரும்பே இல்லாதபோதுகூட தூண்களாக அவைகளை வர்ணிப்பது தங்களுக்குத் தேவைப்பட்டால், தூண்களைத் துரும்பாகக் குறைத்துக் காட்டுவது என்பது போன்று சற்றுகூட அறிவு நாணயம் இல்லாமல் நடந்துகொள்ளுகின்றன.
பத்திரிகைகள், ஊடகங்களுக்கு உள்ள பொறுப்பும், கடமையும் மிகப் பெரிது என்பதால்தான் அதனை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணித்தார்கள். மக்களின் நம்பகத் தன்மையை இழந்துவிட்டால் மதிப்பு, மரியாதை போய்விடும்.
எல்லை மீறலாமா?
ஆனால், அது தனது எல்லை மீறி, தடம் புரண்டு ஓடுவதோடு, 2ஜி போன்ற வழக்குகளில் தங்களது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப வெளியீடு செய்து, விசாரணைகளை நடத்தித் தீர்ப்பை - நீதிமன்றங்கள் தருவதற்கு முன்பே தந்து விடும் (Trial by Media) என்ற கொடுமையான நிலைக்கே சென்று இயங்கி வருகின்றன! பத்திரிகைகளை அய்ந்து நோய்களில் ஒன்று என்று கூறினார் தந்தை பெரியார்.
விற்பனைதான் ஒரே நோக்கமா?
சில வார ஏடுகள் எந்த அக்கப் போரை வேண்டுமானாலும் வெளியிட்டு, அந்த வாரம் ஒரு அய்ந்தாயிரம் பிரதிகள் பரபரப்பாக கூடுதலாக விற்றால் போதும்; கல்லா நிரம்பினால் போதும்; தவறு என்று அவதூறு நோட்டீஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வந்தால், அடுத்த வாரம் ஒரு மறுப்பை வெளியிட்டால் போகிறது என்கிற பாணியில் மிகவும் கேவலமாக நடந்துகொள்கின்றன!
உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கை!
நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுபற்றி கடுமையாகவே கூறி, இந்தப் போக்கை இவை மாற்றிக் கொள்ளாவிட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்!
எந்த ஒரு கிரிமினல் வழக்கிலும் ஜாமீன் வழங்குவது என்பது இயல்பான நடைமுறை. மறுப்பது என்பது விதி விலக்கு போன்ற ஒன்று (Bail is the rule; Jail is the exception) என்று எத்தனையோ நீதி அரசர்கள், சட்ட வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். நடைமுறையிலும் வந்துள்ளது.
இதைத்தான் இந்தியா டுடேயில் ஏ.ஜே. அக்பர் எழுதினார், மற்றும் சில கார்ப்பரேட் ஏடுகளிலும் தலையங்கமாக வந்தது!
ஏன் இன்றைய மத்திய சட்ட அமைச்சர் அவர்களேகூட விளக்கினார் -
இது சம்பந்தமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் காலவரையற்று ஜெயிலில்தான் இருக்கவேண்டும் என்பது மனித உரிமைப் பறிப்பு ஆகும்!
ஊடகங்கள் மீது நடவடிக்கை
இது சம்பந்தமாக திருமதி கனிமொழி மற்றும் நால்வர் ஜாமீன் சம்பந்தமாக பாட்டியலா (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தும் சி.பி.அய். தங்களுக்கு அவர்கள் இனி ஜாமீனில் விட எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறி மறுப்புத் தெரிவிக்காத நிலைப்பாட்டை எடுத்து விளக்கினர்; இவ்வழக்கில் உள்ள வேறு சிலர் பாதிக்கப்பட்டவர்கள். உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து வாதாடியபோது, சில விளக்கங்களை அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் கேட்டதை அப்படியே திரித்துக் கூறி, ஏன் கனிமொழிக்கு ஜாமீன் மனுக்கு சி.பி.அய். எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என்று (கோபமாக) கேட்டதுபோல எல்லா ஊடகங்களிலும் செய்திகளைப் போட்டு மகிழ்ந்தன.
இத்தகவலை அடுத்த நாள் அறிந்த நிலையில்தான், விசாரித்த நீதிபதிகள் நாங்கள் விளக்கம் கேட்டதை இப்படி திரித்து ஊடகங்கள் (Medias) போடலாமா? இது தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் வரும் என்று சரியாகவே எச்சரித்துள்ளனர்.
ஊடகங்களே மாறுங்கள்!
தங்கள் ஆசைகளைக் குதிரைகளாக்கி அதில் சவாரி செய்யும் ஊடகங்களே, தயவு செய்து உங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, உண்மையான ஜனநாயகத் தூணாக இருங்கள்!
நாளைக்கு இதே கதி உங்களுக்கும் வழக்கு நடவடிக்கை என்றால், உங்கள்மீது அனுதாபப்படவோ, ஆதரவு காட்டவோ எவரும் இருக்கமாட்டார்கள்!
நாய் விற்ற காசு குரைக்காது; கருவாடு விற்ற காசு நாறாது என்ற நினைப்பா? பத்திரிகைகளை விற்பதற்கு மலிவான முறைகளையா கையாளுவது?
உச்சநீதிமன்றம் சுட்டிய பிறகாவது மாறுங்கள்!


கி. வீரமணி
தலைவர்,   
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...