நம்திருமணமுறைஎது? - தந்தை பெரியார்
மணமக்களே! தாய்மார்களே!! தோழர்களே!!!
இத்திருமணத்திற்கு நான் வர வேண்டும் என்று 2 மாதமாக தோழர் ஆதி நாராயணன் விரும்பினார். நான் சென்ற வாரம் முழுவதும் தஞ்சை ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செய்த அலுப்பாலும், சிறிது காய்ச்சல் இருந்ததாலும் வாராமல் நின்று விடலாம் என்று கருதினேன். ஆனால் சேலம் மாநாட்டின் தீர்மானத்தின் படி இராமநாதபுரம் ஜில்லாவின் விகிதமான குறைந்த அளவு 1000 மெம்பர்கூட திராவிட கழகத்திற்கு அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்கு சேர்க்கப்படாமல் இருப்பதால் இதைப்பற்றி கவனித்துப்போக இதை சந்தர்ப்பமாகக் கொண்டு இவ்வளவு அசவுகரியத்தில் இங்கு வந்தேன்.
நீங்கள் அது தெரிந்து நான் இங்கு வந்ததுமே 216 அங்கத்தினர்கள் இரசீதும், இதற்கு சந்தா ரூ. 27-4-0 கொடுத்து இந்த ஜில்லாவிற்கு கோட்டா சேர்க்கப்பட வேண்டிய (விகிதம்) 1000க்கும் மேலாகவே ஆக்கப்பட்டு வெளியிடும்படியாக செய்து விட்டதால், என்னுடைய சுற்றுப் பிரயாண அலுப்பும், காய்ச்சலும், பலவீனமும் எங் கேயோ போய்விட்டது. அதற்காக உங் களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இவ்வளவோடு நின்றுவிடாமல் இதை ஜில்லாவுக்கு 5000 மெம்பர்களாவது சேர்க்கப்பட வேண்டும். செட்டி நாட்டிலும் விருதுநகரிலும் தீவிரமாக அங்கத்தினர் சேர்க்கப்படுவது கேட்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மற்றும், நாம் எந்த தேர்தலில் வெற்றி பெற நினைத்தாலும், ஏன்? அபேட்சகராய் நிற்க நினைப்பதானாலும் அத்தொகுதி ஓட்டர்கள் எல்லோரும் அங்கத்தினர் களாகச் சேர்க்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதுதான் நமது கட்சியின் உண்மையான பலத்திற்கு ஆதாரமாகும். மற்றபடி பொது உடைமையும், போலி சுயராஜ்ஜியத்தையும், மதமூட நம்பிக்கை யையும் பாமர மக்களிடம் சொல்லி ஏமாற்றி ஓட்டு வாங்குவதோ அல்லது சர்க்காரைக் கெஞ்சி பதவி பெறுவதோ இனி ஆபத் தாகவும், தற்கொலையாகவும், பயனற்ற தாகவும், பரிகசிக்கத்தக்கதாகவும்தான் முடியும். அன்றியும் அதனால் சில தனிப்பட்டவர்கள் சுயநலம் அடையலாமே ஒழிய, ஓட்டுக் கொடுத்த ஓட்டர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது, ஆதலால் கூடு மானவரை வயது வந்தவர்களையெல்லாம் அங்கத்தினர்கள் ஆக்க முயற்சி செய் யுங்கள்.
திருமணம்
இத்திருமணத்தில் நான் என்ன புதிதாகப் பேசப் போகிறேன். இந்த முறை திருமணம் இப்போது நாட்டில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதிலும் இந்த நாடார் சமுதாயத்தில் இதுவே முறையும் உரிமையுமாக ஆகிவிட்டது. ஆதலால் இந்தத் திருமண முறையைப் பற்றி என்ன பேசுவது என்பது தோன்ற வில்லை. பொதுவாகவே திருமணம் என்ப தற்கு எந்த முறை தகுதியானது என்று சொல்லுவதற்கு ஒரு முறையுமே கிடை யாது. ஏதோ பழக்க வழக்கம் பெரியோர் நடத்திய என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது! அதிலும் திராவிடர் களாகிய நமக்கு எந்தமுறை இருந்தது, எது சரி என்று எடுத்துக்காட்ட ஒன்றுமே யில்லை. புலவர்கள் ஏதாவது பிதற்றலாம், ஆனால் அது அவர்களுக்கே புரியாத தாகத்தான் இருக்கும்.
திருமணத்தின் அவசியம்
இந்த உலகத்தில் சொத்தைப் பற்றியும், மேல் உலகம் என்பதில் மோட்சம் என்பதைப் பற்றியும் லட்சியம் இல்லாவிட்டால் திருமணம் என்பதாக, வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகக்கூட எதுவும் தேவையில்லை. நாம் தேடிய சொத்துக்கு நாம் பெற்ற பிள்ளை இருக்க வேண்டும் என்பதே திருமணத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கும் அந்தந்த சமுதாயப்படி சொத்தை அனுபவிக்க சிலருக்கு ஆண் பிள்ளை வேண்டும், சிலருக்கு பெண்பிள்ளை வேண்டும். தேவதாசிகளும், மருமக்கட் தாயம் உள்ளவர்களும், தங்கள் சொத் துக்குப் பின் சந்ததியாக உரிமைக்கு பெண் குழந்தைகள் பெறவும், இல்லாவிட்டால் பெண்குழந்தையை தத்துக்கு எடுக்கவும் ஆசைப்படுகிறார்கள்; மற்றவர்கள் நம் போன்றவர்கள் ஆண் குழந்தை பெறவும், பிறக்காவிட்டால் ஆண்குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். இதற்காகவேதான், திருமணம் பெரிதும் சடங்காக, ஒப்பந்தமாக, பதிவாக சட்டத் திற்குள் அடங்கியதாகச் செய்ய வேண்டி யிருக்கிறது. இந்த நிலை மாறிவிட்டால் திருமணம் என்கின்ற வார்த்தையே மறைந்துபோகும்.
அதனால்தான் நான் இந்த முறைகூட முடிந்த முடிவல்ல என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். இனி 40, 50 வருஷங்கழிந்த பின்பு அதாவது இந்த சொத்து முறைகள் மாறி பொது உடைமைமுறை வந்து தாண்டவமாடும்போது இந்த முறைகூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூட நம்பிக்கை; காட்டுமிராண்டிக் காலமுறை என்று சொல்ல வேண்டி வரும் என்ப தோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகிற என்னை ஒரு மூட நம்பிக்கைக்காரனான வைதிகப்பிடுங்கல் ராமசாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள் பிள்ளைகள் பேரன்மார்கள் சொல்லும் படியான நிலைகூட வந்துவிடும் என்று நான் சொல்லுவதுண்டு.
அதனால்தான் நான் இந்த முறைகூட முடிந்த முடிவல்ல என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். இனி 40, 50 வருஷங்கழிந்த பின்பு அதாவது இந்த சொத்து முறைகள் மாறி பொது உடைமைமுறை வந்து தாண்டவமாடும்போது இந்த முறைகூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூட நம்பிக்கை; காட்டுமிராண்டிக் காலமுறை என்று சொல்ல வேண்டி வரும் என்ப தோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகிற என்னை ஒரு மூட நம்பிக்கைக்காரனான வைதிகப்பிடுங்கல் ராமசாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள் பிள்ளைகள் பேரன்மார்கள் சொல்லும் படியான நிலைகூட வந்துவிடும் என்று நான் சொல்லுவதுண்டு.
நம் திருமண முறை ஏது?
ஆகையால் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாடுதான் வேண்டியிருக்கிறதே ஒழிய, முறை ஒன்றும் இன்று தேவை யில்லை இங்கு கட்டுப்பாடே வேண்டாத காலம் வருமென்றால் முறை வேண்டிய காலம் எதற்காக வேண்டியிருக்கும்? ஒரு சமயம் கட்டுப்பாடு வேண்டியதில்லை என்கின்ற தன்மை நடைபெற, கட்டுப்பாடும் முறையும் வேண்டியதாக இருக்கலாம். இன்று நாமாகிய திராவிடர்களுக்கு நம்மைப் பற்றிய சரித்திரமும், நம் நாட்டைப் பற்றிய தன்மைகளும்கூடத் தெரியவில்லை யானால், நம் திருமணத்திற்கு என்ன முறை சிறந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அப்படித்தான் ஒன்று இருந் திருந்தாலும் அதைப் பற்றி இன்று பேசுவது எப்படி அறிவுடைமையும், பொருத்த முடையதுமாகும்? இன்று நாம் எலக்ட்டிரிக் (மின்சார) விளக்கு வெளிச்சத்தில் இருந்துகொண்டு, திராவிடர்களுக்கு முன்காலத்தில் விளக்கு எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்தால், அது பழங் காலத்து மக்களுக்கு இருந்த அறிவைப் பற்றி குறிக்க உதவுமே தவிர அதைப் பயன்படுத்த முடியுமா? நாம் ஆகாயக் கப்பலில் பறந்து கொண்டு பழங்கால திராவிடர் எப்படிப் பிரயாணம் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடத்தி னால் அது பழங்கால மக்கள் தன்மையை அறிந்து கொள்ள முடியுமே தவிர, அந்தக் காலத்து வாகனத்துக்குப் போக முடியுமா?
காலப்போக்கு
இதுபோல்தான் நம்முடைய ஒவ்வொரு பழங்கால சொந்தமும் ஆகும். நம் கடவுள், மதம், ஒழுக்கம், கடவுள், மத, ஒழுக்க நூல்கள் ஆகியவைகூட அப்படித் தானே இருக்கமுடியும்? மற்ற துறைகளில் அக்கால மக்களுக்கு என்ன அறிவு அனுபவமும் இருந்ததோ அதுதானே இந்தத் துறை களிலும் இருந்திருக்கும்? உதாரணமாக அந்தக் காலத்தில் பொய் பேசுகிற மனிதன் இருப்பது அதிசயிக்கத் தக்கதாக இருந் திருக்கும். ஆனால் இந்தக் காலத்தில் பொய் பேசாத மனிதன் இருப்பது அதிசயமாக இருக்கிறது. ஏனென்றால் காலம் மக்களை அப்படித் தள்ளிக்கொண்டு போகிறது. காலப் போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் காட்டுக்குப் போய்விடவேண்டும். அங்கும் கூட காலம் அவனை தொடர்ந்து கொண்டுதான் போகும். பள்ளத்தை நோக்கித் தண்ணீர் ஓடுவது போல் காலத்தை நோக்கி மனிதன் போய்த்தான் தீருவான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. என் பேச்சும் இந்தக் கூட்டமும் உங்கள் இருக்கையும், காலப்போக்கைப் பொறுத்ததே தவிர, என்னையோ உங்களையோ பொறுத்த தல்ல. காலப்போக்கை அறியாத பட்டிக் காட்டார், பாமரத்தனம் கொண்டவர்கள் ஆகியவர்கள்தான் மாறுதல், என்னாலும் உங்களாலும் ஆனதாகக் கருதுவார்கள். ஆனால் அவர்களும் அறிவு அனுபவம் பெற்றவுடன் காலப்போக்கு தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள். ஆனால் அதற்கு கொஞ்ச நாள் பிடிக்கும். உதாரணமாக அந்தக் கொஞ்ச நாள் பிடிக்கும் என்பதுதான் புரட்சிக்காரர்கள் என்பவர்களுக்கும், வைதிகர்கள் மாறுதல் வேண்டாதவர்கள், பழமை விரும்பிகள் என்பதற்கும் உள்ள பேதமாகும். அதுவே தான் வாலிபர்கள் என்பவர்களுக்கும், வயோதிகர்கள் என்பவர்களுக்கும் உள்ள பேதமாகும். அதாவது வாலிபர்களுக்கு புதுமை சீக்கிரம் தோன்றும், சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப் பட வேண்டுமானால் முன்னால் பதிந்தவை கள் அழிக்கப்படவேண்டும். அவை சுலபத் தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப்பதிந்து போயுமிருக்கும்.
காந்தி - சங்கராச்சாரி
இதைத்தான் வைதிகம் என்றும், பிடிவாதம் என்றும், காலத்திற்குத் தகுந்த படி, மாற்றிக் கொள்ள முடியாமை என்றும் பெரிதும் சொல்லுகிறோம். உதாரணமாக காந்தியாரையோ, சங்கராச்சாரியாரையோ பகுத்தறிவுக்கும், பிரத்தியட்ச அனுபவத் திற்கும், இயற்கைக்கும் இணங்கும்படி செய்துவிட எப்போதாவது யாராலாவது ஆர்குமெண்ட் (எடுத்துச் சொல்லுவது) மூலம் முடியுமா என்று பாருங்கள். ஒரு நாளும் முடியாது. ஏன் அந்த உள்ளங்கள் பழமையினால் நிறைந்து போய்விட்டன. ஆழப் பதிப்பிக்கப்பட்டும் போய்விட்டன. அதோடு அவர்களுக்கு ஒரு அளவுக்கு அவசியமும் ஏற்பட்டு விட்டது. ஆதலால் நிர்ப்பந்தமில்லாமல் அவர்கள் பகுத்தறிவுக் கும், காலப் போக்குக்கும், முற்போக்குக்கும் சுலபத்தில் இணங்கமாட்டார்கள். அது போல்தான் அந்தத் தன்மையுள்ள மற்றவர் களும் ஆவார்கள், எனவே இந்தத் திரு மணம் இன்றைய காலப் போக்குக்கு என்பதோடு சரி.
இதுவே போதும்
இங்கு இன்று திருமணத்தில் தாலி கட்டினாலும்கூட இது பெரிதும் சுயமரி யாதைத் திருமணம் தான் என்கின்றேன். ஏன் என்றால் இத்திருமணத்திற்கு பார்ப் பான் இல்லை. குறைந்த அளவு சுயமரி யாதைத் திருமணத்திற்கு அதுவே போதும். ஏனெனில் நம்மை இழிவுபடுத்துபவனை நாம் மதிக்கவில்லை. அதோடு அவனை இன்று பகிஷ்கரித்திருக்கிறோம். நெருப்பு, விளக்கு, சட்டிபானை பொருளற்ற சடங்கு, சப்பையான காரியம் முதலியவை இல்லை. இதனால் இது பெரிதும் பகுத்தறிவு திருமணமாகும். இன்றோடு, ஒரு சிறு விருந்தோடு இத்திருமணம் தீர்ந்துவிடுவதால், இது சிக்கனத் திருமணமுமாகும். புராணக் கதை, புராணப் பாட்டு, பஜனைக் கச்சேரி முதலியவை இல்லாமல் இந்த மாதிரி பகுத்தறிவுச் சொற்பொழிவு வைத்ததால் இதை சீர்திருத்தத் திருமணம் என்றும் சொல்லலாம். மற்றும் சில காரியங்கள் அதாவது தாலி கட்டுவது, அதிக பணம் போட்டு சேலை துணி வாங்குவது முதலி யவை இன்று தவறானதாக இருந்தாலும் அவை காலப்போக்கில் அதாவது பெண் களுக்கு பகுத்தறிவும், சுயமரியாதையும், மான உணர்ச்சியும் ஏற்பட்ட உடன் தானாகவே நின்றுவிடும்.
ஆதலால் வாலிபர்களே, தாய்மார்களே, காலப்போக்கில் கலந்து உங்கள் இழிவு, ஏழ்மை (குறைபாடு), அறியாமை ஆகியவை நீங்கும்படியாக அதைப் பயன்படுத்திப் புதிய உலகை சித்தரியுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
(6.12.1944 அன்று இராமநாதபுரம் ஜில்லா ராஜபாளையத்தில் நடந்த தோழர்கள் பாலராஜு - சிவபாக்கியம் வாழ்க்கை ஒப்பந்ததிற்கு தலைமை வகித்த பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)
- குடிஅரசு - சொற்பொழிவு - 16.12.1944
No comments:
Post a Comment