Saturday, October 1, 2011

வாச்சாத்தி வன்கொடுமை


வாச்சாத்தி வன்கொடுமை





தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள ஒரு மலைக்கிராமம்தான் வாச்சாத்தி. இந்த மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த கூட்டுக் குழுவினர் 1992 ஜூன் மாதம் 20ஆம் தேதி அந்தக் கிராமத்திற்குச் சென்று திடீர் சோதனைகளை நடத்தினர்.

வனத்துறையைச் சேர்ந்த 154 பேர்கள், காவல் துறையைச் சேர்ந்த 109 பேர்கள்; வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 பேர்களும் கூட்டாகச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர்.


வீட்டுக்குவீடு புகுந்து சோதனை நடத்தியதில் 18 பெண்களைக் கூட்டுக் குழுவினர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர் என்பது குற்றச்சாற்று.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கப் பொதுச் செயலாளர் மற்றும் நிருவாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் விசாரணை நடத்தினர்.

பாதிக்கப்பட்டோர் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டு கோள் ஏற்கப்பட்டு சி.பி.அய். விசாரணையை நடத்தியது. 1996ஆம் ஆண்டு ஏப்ரலில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

2008ஆம்ஆண்டு பிப்ரவரி 17ஆம் நாள் வழக்கு விசாரணையை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிபதி  நடத்தினார்.

அதன் தீர்ப்பு கடந்த 29ஆம் தேதி வழங்கப்பட்டது. அதாவது குற்றம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதே - நியாயந்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்பது சொல்லளவில்தான் உள்ளதே தவிர, நடைமுறையில் தீர்ப்புகள் தாமதமாகத்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் குற்றஞ்சாற்றப் பெற்றவர்களில் 54 பேர் மரணம் அடைந்து விட்டனர்.
குற்றஞ்சாற்றப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 12 பேர்களுக்கு தலா பத்தாண்டு கடுங்காவல் சிறை, தலா மூவாயிரம் ரூபாய் அபராதம்; அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் 9 மாத சிறை; 5 பேர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 198 பேர்களுக்கு ஓராண்டு முதல் மூன்றாண் டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அபராதத் தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தி.மு.க. சார்பில் தலா ரூ.15 ஆயிரம் அளிக்கப்படுகிறது.



இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தகுந்ததேயாகும். பெண் ணென்றால் காம விளையாட்டுக் கருவி என்று கருதும் மனப்பான்மைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்றே இதனைக் கருத வேண்டும்.

இளம் வயதில் தங்கள் வாழ்வை பலி கொடுத்ததாக  பாதிக்கப்பட்ட பெண்கள் கதறியகாட்சி மனசாட்சி உள்ளவர்களின் மனதை நொறுக்கவே செய்தது.


குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை அளித்த தாலோ அபராதம் விதித்ததாலோ பாதிக்கப்பட்டவர் களின் துன்பத்திற்கு ஈடாக முடியாது என்பது உண்மை தான் என்றாலும் தவறுக்குத் தண்டனை என்ற கண்ணோட்டத்தில் ஓர் ஆறுதல் - அவ்வளவுதான்.

19 ஆண்டுகளாக அந்தப் பெண்கள் மன உளைச்சல் என்னும் தண்டனைக்கு ஆளாகியுள்ளார்களே - அதற்கு என்ன பரிகாரம் தேட முடியும்?

இந்த நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டியது என்ன? பெண்களைப் போகப்  பொருளாக நினைக்கும் கேவலத் துக்கு எதிராகப் போராட வேண்டும் - பிரச்சாரமும் செய்தாக வேண்டும்.

ஆண்கள் நினைத்தால் பெண்களை வேட்டையாட லாம் என்ற துணிவு எப்பொழுது வருகிறது? ஆண்கள் தங்களுக்கு இருக்கும் தசை பலத்தால் (Muscle Power) பெண்களை வேட்டையாடுகின்றனர். இதற்கு முடிவுதான் என்ன?

ஆண்களை எதிர்க்கும் மனத்துணிவும், உடல்பலமும் பெற்றாக வேண்டும்.

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மி அடிப்பது  போன்ற அடிமை வேலைக்கு தயார் செய்யா தீர்கள்! (குடிஅரசு 8.5.1936) என்றார் பெண்ணுரிமைப் போராளியாம் தந்தை பெரியார். 

குஸ்தி, மேல் குத்து போன்ற பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் என்று எத்தனை ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் கூறியுள்ளார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தக் கால கட்டத்தில் கராத்தே பயிற்சி பெண் களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். தற்காப்பு ஆயுதம்கூட வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்; அந்த  நிலைக்குப் பெண்கள் தயாராகி விட்டார்கள் என்ற நிலை வந்தாலே ஆண்களின் கொட்டம் அடங்கிப் போய்விடும்.

ஒன்றிலிருந்து படிப்பினை பெறுவதுதான் மனிதனுக் குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...