Saturday, October 1, 2011

கல்வி அரசமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலுக்கே திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும்


கல்வி அரசமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலுக்கே திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும்


நீதியரசர் ஏ.கே. ராஜன்

நேற்றைய தொடர்ச்சி...

அரசமைப்புச் சட்ட வரைவைத் தயாரிக்கும் பணி வெவ்வேறு துணைக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாகாணங்களைப் பற்றிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய துணைக் குழு, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வியை மாகாணங்களுக்கான இரண்டாவது பட்டியலில் பதிவு எண். 18 இல் சேர்த்திருந்தது. ஆனால், அம் பேத்கர் அந்தப் பதிவுக்கு ஒரு திருத் தத்தை முன் மொழிந்தார். இந்தத் திருத்தம் பற்றிய விவாதம் 1949 செப்டம்பர் 2 அன்று மேற்கொள்ளப் பட்டது. அந்த விவாதம் மிகவும் சிறிய தாகவே இருந்தது; மொஹானி, சிபென் லால் சாக்சேனா மற்றும் டி.டி.கிருஷ்ண மாச்சாரி ஆகிய மூன்று உறுப்பினர்கள் மட்டுமே அது பற்றிப் பேசினர். அனைத்து மசோதாக்களும் இந்தியிலேயே இருக்க வேண்டுமாம்

மாகாண சுயாட்சிக் கொள்கையின் ஆதரவாளராக இருந்தபோதும்,   இரண் டாம் பட்டியலில் 18 ஆம் எண் பதிவிலும், மத்திய அரசின் துறைகள் பற்றிய பட்டியல் ஒன்றிலும் இருந்த கல்வி பற்றிய சில பதிவுகள் விவாதத்துக்கு வந்த போது, கல்வி பற்றிய பதிவை முற்றிலு மாக பொதுப்பட்டியலான மூன்றாம் பட்டியலுக்கு மாற்றும்படி மொஹானி கோரினார். பள்ளிகளில் கல்வி கற்கும் ஒரே மொழியாக சமஸ்கிருதமாக்கப்பட்ட இந்தியை அய்க்கிய மாகாண அரசு ஏற்கெனவே ஆக்கியிருந்ததுதான் இதன் ஒரே காரணம். உருது பிறந்த இடம் உத்திரப் பிரதேசம்தான் என்றபோதும் அந்த மாகாணத்தின் கல்வியில் உருதுவுக்கு எந்த இடமும் இல்லை.

அவர் கூறினார்: டாண்டன் அவர்களே, முன்மொழியப்படும் அனைத்து மசோ தாக்களும் இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டமன்றத்தின் சபாநாயகர் ஆணையிட் டுள்ளார். அந்த ஆணையின் ஆங்கில நகல்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அங்கு, இந்தத் தீர்மானமே சமஸ்கிருத மாக்கப்பட்ட இந்தியில்தான் தயாரிக்கப் பட்டிருந்தது. அதே போன்று கேள்வி களின் பட்டியலும் சமஸ்கிருதமாக்கப்பட்ட இந்தியில்தான் தயாரிக்கப்பட்டிருந்தது.

யாராவது உருது மொழியில் கேள்வி களை அனுப்பினால், அவை தூக்கி வெளியில் எறியப்படுகின்றன. அது மட்டுமல்ல. மாவட்டங்களில் எவர் ஒருவராவது பதிவு செய்ய விரும்பினால், இந்தியில் அதற்கான ஆவணத்தை அளிக்க வேண்டுமென்று அறிவுரை களை அவர்கள் அளித்துள்ளனர். உருது மொழியில் எந்த ஆவணமாவது கொண்டு வரப்பட்டால்,  பதிவு மறுக்கப் படுகிறது.

இந்தச் சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று எங்களுக்கு தயவு செய்து கூறுங்கள். உருது, முஸ்லிம்களின் மொழி மட்டுமல்ல; இந்துக்களின் மொழியாகவும் அது உள்ளது. ஆங்கிலேய அரசு செய்யாமல் இருந்த செயல்களை இப்போது மாகாண அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால், 18 ஆம் பதிவில் உள்ள கல்வி என்பதற்கு பதிலாக இடை நிலைக் கல்வி வரையிலான கல்வி என்பது மாற்றப்பட வேண்டும் என்று சிப்பன்லால் சேக்சானா ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். ஒன்றுபட்ட ஒரே நாடாக இந்தியா விளங்குவதற்கு குறைந்தது, உயர் கல்வியாவது மத்திய அரசின் பட்டியலில் இருப்பது அவசியம் என்ற நம்பிக்கையை அவர் கொண் டிருந்தார்.

பின்னர் இந்த விவாதத்தை முடித்து வைத்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அம் பேத்கர் முன்மொழிந்த திருத்தத் திற்கு ஆதரவு தெரிவித்தார். பதிவில் இருப் பதை இடைநிலைக் கல்வி என்ற அளவுக்கு கட்டுப்படுத்துவது,  இரண் டாம் பட்டியல் 18 ஆம் பதிவில் இருப்பதை (பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி) பொதுப் பட்டியலான மூன்றாவது பட்டியலுக்கு மாற்றுவது ஆகிய திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு அம் பேத்கர் கொண்டு வந்த திருத்தம் நிறை வேறியது. அதன்பின் அந்தப் பதிவு கீழ்க் கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டது.

18. பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி, (பட்டியல் ஒன்றின் பதிவு எண்கள் 40, 40ஏ, 57, 57ஏ மற்றும் மூன்றாம் பட்டி யலின் பதிவு எண் 17 ஏ ஆகியவைகளில் காணப்படும் விதிகளுக்கு, நிபந்தனை களுக்கு உட்பட்டு).

இந்த இரண்டாம் பட்டியலின் 18 ஆம் எண் பதிவு பின்னர் இரண்டாம் பட்டி யலின் 11 ஆம் எண் பதிவாக மாற்றி அமைக்கப்பட்டது. அது போலவே, ஒன்றாம் பட்டியலில் இருந்த பதிவுகள் 40, 40ஏ, 57, 57ஏ ஆகியவை ஒன்றாம் பட்டியலின் 62 முதல் 66 வரையிலான எண்கள் கொண்ட பதிவுகளாக மாற்றி அமைக்கப்பட்டன. 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி கல்வி என்பது மாகாண அரசுகள் மட்டுமே அதிகாரம் பெற்றிருந்த துறையாகும் என்பதை கவனிக்க வேண்டும்.

1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்திலும் கூட, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி என்பது மாகாணங்கள் அதிகாரம் பெற்ற பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருந்தது. ஆங்கிலே ஆட்சியாளரின் யதேச்சதிகார, சாம்ராஜ்ய அணுகுமுறையை விட, அரசமைப்புச் சட்டத்தை இயற்றியபோது, அதனை இயற்றியவர்கள் எந்த விதத்திலும் தாராளமானவர்களாக இருந்துவிடவில்லை; 

தேசத்தின் நலன் என்ற பெயரில், நாட்டுப் பிரிவினையைக் காரணம்காட்டி மாகாணங் களின் சுயஆட்சி அதிகாரத்தை முடமாக்கி, சீரழிக்கும் முடிவுகளை வேண்டுமென்றே அவர்கள் மேற்கொண்டனர். இவ்வாறு, உணர்ச்சிக் கொந்தளிப்பான ஒரு சூழலில், காரண காரியம்  அல்லாமல், உணர்ச்சியே மக்களை உந்தும் சக்தியாக  இருந்த ஒரு காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டம் வரையப் பட்ட போதும் கூட, கல்வி இரண்டாவது (மாகாணங்களின்) பட்டியலில்தான், உயர் கல்வி பற்றிய சில கட்டுப்பாடுகளுடன் சேர்க்கப்பட்டிருந்தது.

கல்வி பற்றிய அதிகாரத்தில் மத்திய அரசுக்கே உச்சநீதிமன்றம் ஆதரவளித்தது

கல்வி என்பதில் ஆய்வுக் கூடங்கள், கட்டடங்கள், தளவாடங்கள், பணியாளர்கள் போன்றவைகளும் சேர்ந்தவை என்பதால், இரண்டாவது பட்டியலின் 11 ஆம் பதிவின் கீழ் வரும் என்ற வாதத்தை மறுத்த உச்ச நீதிமன்றம், குஜராத் பல்கலைக்கழகம் - சிறீ கிருஷ்ணா (1963) வழக்கில், இந்த அனைத்து அம்சங்களின் மீதும் இரண்டாம் பட்டியலின் 11 ஆம் எண் பதிவு மற்றும் முதல் பட்டியலின் 66 ஆம் எண் பதிவு அதிகாரங்கள் செயல்படு வதாலும்,  இரண்டு அதிகாரங்களும் ஒத்திருப்பதாலும்,  பல்கலைக் கழகத்தின் பாடமொழி பற்றிய சட்டம் இயற்றும் அதிகாரம் இரண்டாம் பட்டியல் 11 ஆம் பதிவின் கீழ் வராது என்றும், முதல் பட்டியலின் 66 ஆம் பதிவின் கீழ்தான் வரும் என்றும் தீர்ப் பளித்தது.

அதன்படி அடுத்த கட்டமாக, பல் கலைக் கழகத்தின் எந்த பாடப்பிரிவிலாவது சேர்ப்பதற்கு மாணவர்களைத் தேர்வு செய்வது,  அதற்காகப் பின்பற்றுவதற்காக கடைப்பிடிக்கப்படும் கொள்கையை முடிவு செய்வதும் முதல் பட்டியல் 66 ஆம் பதிவின் கீழ்வரும். (66 ஆவது பதிவு உயர்கல்வியில் தரத்தை நிர்ணயிப்பது பற்றியது - இரண்டாம் பட்டியலில் 11 ஆம் பதிவு, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி -பட்டியல் ஒன்றின் 64 - 66 பதிவுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது). இந்த முடிவே டி.ஏ.வி. கல்லூரி (1971) வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தால் மறுபடியும் வலியுறுத்தப்பட்டது.  1951 ஆம் ஆண்டிலேயே, பம்பாய் மாகாணம் - பல்சாரா வழக்கில்,  நல்லிணக்கத்துடன் கூடிய கட்டுமானம் என்னும் கோட்பாட்டை உச்ச நீதிமன்றம் கையாண்டது என்பது நினைவில் கொள்ளத் தக்கது. ஏ.எஸ்.கிருஷ்ணா - சென்னை மாகாண அரசு வழக்கில், ஏழாவது பட்டியலில்  காணப்படும் ஒவ்வொரு பதிவிற்கும் அகண்ட பொருள் அளிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வாறிருக்கும்போது, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1975-77 ஆண்டுகளுக் கிடையேயான காலத்தில், இந்தியா இருளில் மூழ்கி இருந்தபோது, கல்வித் துறை பற்றிய பதிவும் (மற்ற பல முக்கியமான துறைகள் பற்றிய பதிவுகளுடன்) 42 ஆவது அரச மைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இரண்டாம் பட்டியலில் இருந்து மூன்றாம் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இரண்டாம் பட்டியலில் இருந்த 11 ஆம் எண் பதிவு நீக்கப் பட்டது. மூன்றாம் பட்டியலில் தற்போது உள்ளது போல பதிவு எண் 25 மாற்றி அமைக் கப்பட்டது. 42 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான நோக்கங்கள், காரணங்கள் பற்றிய அறிக்கை குழப்பம் நிறைந்த ஒரு பொதுவான அறிக்கையாகும். அது கூறுகிறது:

அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள ஜனநாயக  அமைப் புகள் குறிப்பிடத்தக்க அளவில் அழுத்தம் தரப்படும் சூழலில் செயல்பட வேண்டி இருப்பதால், பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக சுயநல சக்திகள் தங்களின் சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன.  கல்வியை இரண்டாம் பட்டி யலில் இருந்து மூன்றாம் பட்டியலுக்கு மாற்றுவதற்கு உறுதியான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இந்த 42 ஆவது அரசமைப் புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத் தில் எந்தவித விவாதமும் மேற்கொள்ளப் படாமல் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப் பட்டதாகும்.

இந்த திருத்தத்தின் உள்ளடக்கம், நோக்கம்  பற்றி முழுமையாக வெகு சிலரே அறிந்திருந்தனர். இவ்வாறு 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் சில 43 மற்றும் 44 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களில் செயலி ழக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட போதும், கல்வியோ,  மாநில அரசின் அதிகாரம் பற்றிய வேறு எந்த பதிவோ மாநிலங்களின் இரண்டாம் பட்டியலுக்கு மாற்றி அளிக்கப் படவில்லை. அதன் பின்னர், அரசமைப்புச் சட்டத் திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட சில நீதித்துறை விளக்கங்கள் காரணமாக, மத்திய அரசு மேலும் மேலும் அதிக அதிகாரங்களைப் பெற்றதாகவும், மாநிலங்கள் மேலும் மேலும் பலவீனமானவைகளாகவும் ஆக்கப் பட்டன.

தற்போது மூன்றாவது பட்டியலில் உள்ள 25 ஆம் எண் பதிவில் காணப்படுவது: தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி, ஒன்றாம் பட்டியலில் காணப்படும் 63, 64, 65 மற்றும் 66 ஆவது எண் பதிவுகளில் கூறப் பட்டுள்ளவைகளுக்கு உட்பட்டு ; தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிலாளர் ஆகியவையாகும். கல்வி, தொடக்க, இடைநிலை, உயர், தொழில்நுட்ப, மருத்துவ, கல்லூரிக் கல்வி ஆகியவை இன்று நாடாளு மன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் உள்ள போதும், உண்மை யில் அவை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழே உள்ளன.

எதிர் காலத்தில் என்றாவது ஒரு நாள், தொடக்க நிலை முதல் அனைத்துக் கல்வி நிலையங்கள் மீதும் கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தால்,  மத்திய சட்டத்திற்கு எதிராகவோ, ஒத்துப் போகாததாகவோ இருக்கும் இப்போதுள்ள  மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும், செல்லாதவையாக, நடைமுறைப்படுத்தப்பட இயலாதவையாக ஆகிவிடும். கல்வி மீது தங்களுக்கு என்று தனிப்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் எதையும் இரண்டாம் பட்டியலின் கீழ் மாநில அரசுகள் தற்போது பெற்றிருக்கவில்லை.

கல்வி பற்றிய எந்த அம்சத்தையாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் கருதினால், அதற்கு மத்திய அரசின் தயவைத்தான் அவை நாடவேண்டும். மத்திய அரசு முடிவு செய்து, ஒரு சட்டம் நிறைவேற்றினால், மாநில அரசி னால் நிறைவேற்றப்பட்டு தற்போது நடை முறையில் உள்ள சட்டங்கள் எதுவும்  நடை முறைப்படுத்த முடியாதவையாக ஆகிவிடும்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு

அய்க்கிய மாகாணத்தின் செயல்பாடு தனது தாய் மொழியான உருதுவுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்குமோ என்ற அச்சம் மொஹானிக்கு 1949 இல் ஏற்பட்டது. ஆனால், அத்தகைய அச்சம் இப்போது மத்திய அரசுக்கு எதிராக எழுந்துள்ளது. இரண்டாம் பட்டியலில் இருந்து கல்வி மூன்றாம் பட்டியலுக்கு மாற்றப் பட்டதன் விளைவுகள் ஏற்கெனவே உணரப் பட்டுவிட்டன. கல்வி மூன்றாம் பட்டியலுக்கு மாற்றப்பட்டவுடன், உச்ச நீதி மன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் முதுகலை மருத்துவக் கல்வி இடங்களில் 15 விழுக்காடு இடங்களை ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசின் பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்றும்,

மற்ற மாநில மாணவர்களின் சேர்க்கைக்கு அவை பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள அனைத்து இடங்களிலும், இந்தியா முழுவ திலும் உள்ள மாணவர்களைக் கொண்டு, அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஒரு பொது நுழைவுத் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், நிரப்புவ தற்கு மத்திய அரசு சட்டம் ஒன்றைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும் தோன்றுகிறது. அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால்,  மாநிலங்களுக்குள்ளே உள்ள மருத்துவ மற்றும் இதர கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக்கு தங்களின் சொந்த விதிகளை உருவாக்கி நடை முறைப் படுத்தும் மாநில அரசுகளின் அதிகாரங்கள் அனைத்தையும் அது காணாமல் போகச் செய்துவிடும்.

கலை, அறிவியல் பாடங்களில் பட்டப் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்குக் கூட மத்திய அரசு விதிகளை எதிர்காலத்தில் உருவாக்கினால் எவரும் வியப்படையத் தேவையில்லை. இவ்வாறு கல்வி நிறுவனங்களின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவது கற்பனையும் செய்து பார்க்க முடியாதவையாக உள்ளன. கின்டர் கார்டன் பள்ளிகள் முதல் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் பற்றிய அனைத்து அதிகாரங்களையும் மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றுவதில்கூட இது முடிவடையலாம். தொடக்கக் கல்வி நிலையில் இருந்து இந்தி ஒரு கட்டாய பாடம் என்றோ அல்லது அதுதான் பயிற்று மொழி என்றோ அல்லது தொடக்கக் கல்வி முதல் மேல் நிலைக் கல்வி வரை மத்திய இடைநிலைக் கல்விக் கழகத்தின் கல்வி முறை மட்டுமே இந்தியா முழுமையிலும்  நடைமுறையில் இருக்கும் என்றோ ஒரு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றினால், அந்த சூழ் நிலையில் அதற்கு எதிராக எவரும் எதுவும் செய்துவிட முடியாது.

பள்ளிகள் கல்லூரிகளில் பயிற்று மொழி மற்றும் மாநில அலுவலகங்களில் கடைப்பிடிக்கப் படும் அலுவலக மொழி ஆகியவற்றை முடிவு செய்யும் மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு அடிக்கும் சாவு மணியாக அது விளங்கும். அதன் பின்னர், மாநிலங்கள் அனைத் தும் அரசமைப்புச் சட்டம் 29 (1) மற்றும் 30 (1) பிரிவுகளில் கூறப்பட்டுள்ள மொழி சிறுபான்மையினர் என்ற நிலைக்கு தள்ளப்படுவதைத் தவிர வேறு வழி இருக்காது.  அப்பிரிவுகளில் காணப்படும், மக்களின் எந்தப் பிரிவினராவது, மதம் அல்லது மொழியின் அடிப்படையிலான அனைத்து சிறுபான்மையினரும் என்ற சொற்றொடர்கள் மாநில அரசுகளையும் உள்ளடக்கியவையாக, பொருள் கொள் பவைகளாக இருக்கும் என்ற மனநிறைவு கொள்ளும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுவிடும்.

அதன் பொருள் என்ன தெரியுமா? மாநிலத்தின் எல்லைக்குள் வாழும், மாநிலத்தின் அலுவலக மொழியைப் பேசும் மக்கள் அனைவரும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 29 மற்றும் 30 இன் கீழ் மொழிச் சிறுபான்மையினர் என்று கருதப்படுவர் என்பதும், அம் மக்களின் கோரிக்கைகளை எல்லாம் மாநில அரசுகள்தான் எடுத்து வாதாட வேண்டும் என்பதும்தான்.

இவ்வாறு ஓர் அதிசயமான, தேவை யற்ற சூழல் உருவாகும்.  இந்திய அரசு என்பது ஒன்றுபோன்ற இந்தியா அல்லது ஒன்றுபோன்ற  இந்திய சாம்ராஜ்யம் (அரசமைப்புச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரால் விவரிக்கப்பட்டபடி) என்ற நிலைக்கு மாற்றப்படக் கூடாது; மாற்றப் படவும் முடியாது. கல்வியை மூன்றாவது பொதுப் பட்டியலில் சேர்த்ததன் மூலம், கூட்டாட்சி அமைப்பு முறையுடன் ஒத்தி சைந்து செல்ல இயலாத யதேச்சாதிகாரம் கொண்டதாக  மத்திய அரசு ஆக்கப்பட்டு விட்டது.

கல்வி மூன்றாவது பொதுப் பட்டியலில் இருக்கும் வரை, மாநில அரசு களுக்கு எந்த அதிகாரமும் இருக்காது என்ற மேற்கூறிய எண்ணம் இந்திய மக்களின் மனதில் நீடிக்கவே செய்யும். அவ்வாறு நீடிப்பது இந்திய அரசின் நலன்களுக்கு உகந்தது அல்ல. எனவே 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் பாதிப்பை மாற்றியமைக்கும் வகையில், கல்வி பற்றிய சட்டமியற்றும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மீண்டும் அளிக்கும் வகையில், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண் டும் என்பது இன்றியமையாத தேவையாகும்.
(நிறைவு)
மொழியாக்கம்: த.க.பாலகிருட்டினன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...