இலங்கையின் வடபகுதியில் மன்னார் மாவட்டத் தில் அமைந்துள்ள திருக்கேதீச்சுரம் கோவிலின் புனருத்தாரண பணிக்காக, 32 கோடி ரூபாய் அளிக்க, இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் வடபகுதியின், மன்னார் மாவட்டத் தில் உள்ள பழைமையான திருக்கேதீச்சுரம் கோவில். இது கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஞானசம்பந்தரால், பாடல் பெற்ற தலம்.
இக்கோவிலின் புனருத்தாரண பணி, இந்திய தொல்பொருள்துறை மற்றும் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியால் இணைந்து நடத்தப்படுவதாக, இலங்கையில் உள்ள இந்திய ஹைகமிஷன் தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை இடையேயான ஒப்பந்தங் களின்படி, இக்கோவில் பணிக்கு இந்திய அரசு, 32 கோடியே, 60 லட்சம் இலங்கை ரூபாய் அளிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.
(தினமலர், 19.10.2011, பக்கம் 4)
இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத் தீயில் வெந்து மடிந்து கொண்டுள்ளனர். அடிப்படை வாழ்வாதாரமின்றி வாடிக்கிடக்கின்றனர்.
முள்வேலி முகாமில் முடங்கிக் கிடப்போர் இன்னும் உண்டு. சிங்களக் காடையர்களால் தமிழ் இனப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பகுதிகள் சிங்களமயமாகி வருகின்றன. கல்வியில் ஆர்வமுள்ள எம் தமிழ்க் குடும்பத்துப் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. இந்திய அரசு ஏற்கெனவே கொடுத்த 500 கோடி ரூபாய் எந்த அளவு தமிழர்களுக்குப் பயன்பட்டது என்பது வினாக்குறியே!
இந்த நிலையில், கிடந்தது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை என்ற கதையாக, இலங்கையின் வடபகுதியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பழைமையான கோவிலான திருக்கேதீச்சுரம் கோவிலின் புனருத் தாரணப் பணிக்காக இந்திய அரசு இலங்கை அரசுக்கு 32 கோடி ரூபாய் அளிக்கிறதாம்.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது! ஈழத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்விக்கு இது போன்ற உதவியைச் செய்யக் கூடாதா? வீடின்றித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு உதவிட முன்வரக் கூடாதா?
ஈழத்தில் கோவில் கட்டுவதும், புதுப்பிப்பதும்தான் இப்பொழுது அவசர, அவசியமான தேவைகளா?
ஈழத் தமிழ் மக்கள் பக்தி மிக்கவர்கள்தாம் - கோவில், குளம் என்று நாடிக் கிடப்பவர்கள்தாம். அப்படியெல்லாம் கடவுளை நம்பி அவர்கள் கண்ட பலன் என்ன?
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் சேலத்தில் தமிழ் மறவர் புலவர் அண்ணாமலை சரசுவதி இல்லத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் (27.1.2010) ஒரு கருத்தை தம் ஆதங்கமாகப் புலப்படுத்தினாரே!
எங்கள் ஈழத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் அழிக்கப்பட்டன. வீட்டுக்கு மூவர் என்று வைத்துக் கொண்டாலும் கொல்லப்பட்டவர்கள் முப்பதாயிரம் தமிழர்கள். நாங்கள் நம்பிய சாத்திர, சம்பிரதாயங்கள் எங்களைக் காப்பாற்றவில்லையே!
கந்தா, கடம்பா! என்று கதறினோமே - எந்த ஒரு கடவுளும் ஓடிவந்து எங்களைக் காப்பாற்றவில்லையே!
இரண்டரை லட்சம் வீடுகள் இடிக்கப்பட்டன. வீடுகள் எல்லாம் வாஸ்துபடியேதான் கட்டப்பட்டன. என்றாலும் இடிபட்டதே! 2076 சைவக் கோவில்கள் நொறுக்கப்பட்டன. கடவுள்கள் தங்கள் கோவில்களையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இன்னும் நாங்கள் கடவுளை நம்பவேண்டுமா? என்று கண்ணீர் வடித்துப் பேசினாரே உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.
இதுதானே ஈழத்தில் உண்மையான நிலைமை! இருக்க இடம் வேண்டும் - பசியாற உணவு வேண்டும் - உடுத்த உடை வேண்டும் - பிள்ளைகளுக்குக் கல்வி வேண்டும் - எங்கள் பாரம்பரிய பூமி எங்களுக்கு வேண்டும் - எங்கள் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும் - சுயமரியாதையுடன் நாங்கள் வாழவேண்டும் என்பதுதான் இன்றைய ஈழ மக்களின் கோரிக்கையும் விண்ணப்பமுமே தவிர கோவில்கள் அல்ல.
ஈழ மக்களின் உணர்வுகளை திசை திருப்பும் வேலை இது. உலக நாடுகள் மத்தியில் ராஜபக்சேவைக் குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தி - விசாரணை நடத்துக என்கிற குரல் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில், பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குக் கோவில் திருப்பணி என்தெல்லாம் யாரை ஏமாற்றிட?
நடந்தவைகளிலிருந்து அம்மக்கள் படிப்பினை பெற்றுள்ளனர். கடவுளும், கோயிலும், சாத்திர சம்பிர தாயங்களும் நம்மைக் காப்பாற்றாது என்பதை அனுபவம் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. மீண்டும் அந்தப் பக்திப் புதை குழிக்குள் தள்ளும் முயற்சியில் இந்தியா ஈடுபடவேண்டாம்.
அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் கிடைப்பதற்கு வழி செய்யட்டும். வாக்குக் கொடுத்தவற்றை இலங்கை அரசு நிறைவேற்றிட அழுத்தங்களைக் கொடுக்கட்டும்.
உலக நீதிமன்றத்தில் ராஜபக்சேவை நிறுத்திட பச்சைக் கொடி காட்டட்டும். இந்தியா செய்யவேண்டியது இவற்றைத்தான்! திசை திருப்பும் வேலையில் இறங்க வேண்டாம்.
No comments:
Post a Comment