Wednesday, October 26, 2011

இணையதளம் - ஓர் எச்சரிக்கை!


இணையதளம் - ஓர் எச்சரிக்கை!

அறிவியல் வளர்ச்சியால் மக்கள் மிகப் பெரிய அளவில் பலன் பெற்றுள்ளனர் என்பதில் அய்யமில்லை; அணுவினால் எவ்வளவுக்கெவ்வளவு மக்கள் வளர்ச்சித் திட்டங்களை அனுபவித்து வருகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு பரிகாரம் காண முடியாத அளவுக்கு அழிவுகளையும் சந்தித்துதான் வருகின்றனர். இதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.

இணையதளம் உலகை ஒரு சுருக்குப் பைக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. இதனால் மானுடம் பெற்றிருக்கும் பலன்களை அளவிட்டுக் கூற முடியாது.

அதே நேரத்தில் அது தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குருதியை உறைய வைக்கிறது.  ஆபாசங்களை  அள்ளிக் கொட்டி இருபால் இளைஞர்களையும் தவறான திசைக்கு வெகு வேகத்தில் இழுத்துச் செல்லவும் பயன்பட்டு வருகிறது என்னும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.

தங்கள் பிள்ளைகள் கணினியில் உட்கார்ந்து விளையாடுகின்றன - கணினி பற்றிய அறிவு இந்தச் சின்ன வயதிலேயே வந்து விட்டது என்று மகிழ்ச்சிக் கூத்தாடுவதில் பயன் இல்லை. கணினியில் பிள்ளைகள் என்ன செய்கின்றனர்? எவற்றில் கவனம் செலுத்துகின்றனர் என்பது கவனிக்கப்பட வேண்டும்.

பத்து வயது பெண் பரிதாபகரமாக சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கப்பட்ட ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அந்தப் பெண் தொழில் அதிபர் ஒருவரின் மகளாம். ஆறு மாதங்களாக இச்சிறுமியின் முகவரிக்கு நட்பு நாடிய ஒரு தகவல் (Message) வந்துள்ளது. அப்படித் தகவல் அனுப்பியவரும் பள்ளி மாணவி என்றும் தெரிவிக்கப் பட்டது உண்மைக்கு மாறாக. நட்பு மலர்ந்தது. மலர்ந்து கொண்டே போனது.

இருவரும் ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொண்டனராம் (On Line). இலாவகமாகப் பேசி இந்தப் பத்து வயது சிறுமியை தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தார் எதிர்முனையில் இருப்பவர். தன் உடல் வனப்புகளையெல்லாம் காட்ட ஆரம்பித்து விட்டாளாம் - அந்த அளவுக்கு நட்பு எல்லை கடந்து விட்டது. இவை எல்லாம் எதிர்முனையில் வெப் கேமரா மூலம்  பதிவு செய்யப்பட்டு விட்டதாம்.
அதற்குப் பிறகு ஏற்பட்ட திருப்பம் தான் மிக மிக கொடுமையானது. இந்தச் சிறுமியின் பெற்றோர் பெருஞ் செல்வந்தர்கள் என்று தெரிந்துதான் தொடக்க முதல் இந்த வலை பின்னப்பட்டது. இதுபோன்ற கிரிமினல் கூட்டம் நாட்டில் நாளும் வளர்ந்து வருகிறது.

50 லட்சம் ரூபாய் கொடுக்காவிட்டால் உங்கள் மகளின் ஆபாச படங்கள் அடங்கிய குறுந்தகடுகள் (CD) வெளியிடப்படும் என்று மிரட்டல் விட்டுள்ளனர்.

தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி குறிப்பிட்டு இருப்பவை மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

இதுபோன்ற புகார்கள் எங்களுக்கு ஏராளம் வந்து கொண்டுள்ளன. பேஸ் புக்கில் முதியவர்கள்கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர்.

நட்பு வலையில் வீழச் செய்து பெண்களை ஏமாற்றி (Black Mail)பணம் பறிக்கின்றனர். இவர்களுக்கு இ- பயங்கரவாதிகள் என்று பெயராம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் எளிதாகக் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் அந்த அளவுக்குத் தொழில் நுட்பமும், பயிற்சியும் போதுமானதாக இல்லை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் இணையதளத் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்தத் தனியார் துப்பறியும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களே, பிள்ளைகள் விடயத்தில் கவனம், கவனம்! இந்தப் பிரச்சினையில் மட்டுமல்ல; வேறு பிரச்சினைகளிலும் பிள்ளைகள்மீது ஒரு கண் வைப்பது அவசியம்.

பிள்ளைகளின் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கல்விக் கூடத்தில் நம் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் - ஆசிரியர்கள் தொடர்பு நெருக்கமாக இருப்பதும் அவசியமாகும்.
கலை என்ற பெயரால் நம் பிள்ளைகளின் இளம் உள்ளம் கெட்டவைகளுக்கும் பலியானால், அவர்களின் எதிர்காலம் விபரீத இருட்டுக்குள் முடக்கப்பட்டு விடும்.

சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், ஏன் ஏடுகளும் இதழ்களும்கூட நாய் விற்ற காசு குரைக்காது என்ற மனப்பான்மையில் வர்த்தக வெறிபிடித்து அலைகின்றன.

சின்னத் திரையில் பொது அறிவை வளர்க்கும் எத்தனையோ அலை வரிசைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்குமாறு சிறு வயதிலேயே பழக்கப்படுத்தினால் இந்தக் கசுமாலங்களின் கோரப் பிடியிலிருந்து நம் பிள்ளைகளைக் காப்பாற்றலாம் - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...