Sunday, October 16, 2011

இழிவு போக்க வழி


பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தோழர்களே! வணக்கம்.
இந்தக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டம் ஆகும். அதனால் பெரிதும் திராவிடர் கழகத்தினுடைய கொள்கைகளையும், நடைமுறை வேலைகளையும் விளக்கிப் பேச ஆசைப்படுகிறேன்.
இன்றைய தினம் திராவிட மக்களாகிய நாம் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சலக துறைகளிலும் அடிமைகளாகவே இருந்து வருகிறோம். இந்த அடிமைத்தனம் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக ஏறக்குறைய இரண்டு, மூன்று ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலேயும் அடிமைகளாகவே, காட்டுமிராண்டி களாகவே இருந்து வருகிறோம்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், சமுதாயத் துறையில் எடுத்துக் கொண்டால் நாம் சூத்திரர்களாக, நாலாஞ்ஜாதி மக்களாக பஞ்சம அய்ந்தாம் ஜாதி இழி பிறப்பாக பார்ப்பனர்களுக்கு இழி மக்களாக மதப்படி, சாஸ்திரப்படி, சர்க்கார் சட்டப்படி இருந்து வருகிறோம். மதத்துறையிலேயும் காட்டுமிராண்டித்தனமான தன்மை யில், பல மூடப் பழக்க வழக்கங்களுக்கு, குருட்டு நம்பிக் கைகளுக்கு ஆட்பட்டுக் கிடக்கிறோம். அரசியல் துறையில் எடுத்துக் கொண்டாலும் வெளிநாட்டவர்க்கும், பாடு படாமல் பித்தலாட்டத்தையே கை முதலாகக் கொண்டு பிழைக்கிற ஒரு சின்னஞ்சிறு சமுதாயமாகிய பார்ப்பன சமுதாயத்துக்கும் உடல் பொருள் ஆவியை ஒப்படைத்த பரம்பரை அடிமைகளாக இருந்து வருகிறோம்.
உலகத்தில் மற்ற நாடுகளில் படிப்படியாக எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. முதன் முதலில் நாம் சக்கிமுக்கி கல்லில்தான் நெருப்பை - வெளிச்சத்தை உண்டாக்கி வந்தோம். 1,000 பவர், 10,000 பவர், 1,00,000 பவர் என்கிற அளவில் 25 மைல்களுக்கு அப்பால் கூடத் தெளிவாக வெளிச்சம் தெரியக் கூடிய மாதிரியில், ஒரு சிறு பொத்தானை அமுக்கினால் வெளிச்சம் ஏற்படுகிற மாதிரியில் இப்போது விளக்குகள் வந்து விட்டன. அதே மாதிரிதான் முன்பெல்லாம் நாம் கட்டை வண்டியில் மணிக்கு மூன்று மைல் என்று போய்க் கொண்டிருந்தோம். இப்போது மணிக்கு 400, 700 மைல் என்கிற அளவில் ஆகாய விமானத்தில் பறக்கிறோம். இது மாதிரியே சகல துறைகளிலும் மக்களின் அறிவும், வாழ்வும் பெரும் அளவுக்கு மாறுதல் அடைந்திருக்கிறது. இவ்வளவு மாறுதல்களும், அதிசயங்களும், அற்புதங்களும் ஏற்பட்டிருக்கிற இந்தக் காலத்தில்கூட நம்முடைய நிலைமை கொஞ்சம்கூட மாறுதல் அடையாமல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி சூத்திரர்களாய் உழைத்து பார்ப்பனர்க்குப் போட்டு விட்டு மானமற்ற இழி மக்களாய் பட்டினி கிடக்கிறவர்களாய் இருந்தோமோ அது மாதிரி யாகத்தான் இன்றும் இருந்து வருகிறோம்.
இந்த மாதிரியான நிலைமை இன்னும் ஏன் நீடித்து வருகிறது? என்பது பற்றிச் சிறிது கூட அறிவைச் செலுத்து வதில்லை. சில சங்கதிகளில் ஆராய்வதே பெரும் பாவம் என்று கருதி அறிவுக்குப் பார்ப்பானரால் பூட்டுப் போடப்பட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு நகை வாங்குவது என்றால் கூட நாலைந்து கடை சுற்றிப் பார்த்து நல்லதா என்று உறைத்துப் பார்த்தே வாங்குகிறோம். அதுபோலவே, துணிமணிகள் வாங்குவது என்றால் கூட நாலு பக்கம் விசாரித் துப் பார்த்து நல்ல துணியா, சாயம் நிற்குமா? என்றெல்லாம் பார்த்துத் தான் வாங்குகிறோம். இப்படிச் சாதாரண சங்கதி களில் எல்லாம் அறிவையும், ஆராய்ச்சியையும் செலுத்துகிற நாம், கடவுள், ஜாதி, மதம், சாஸ்திரம் என்கிற காரியங்களிலே செலுத்தாமல் யாரோ சொன்னதைக் கண்ணை மூடிக் கொண்டு சரி என்று ஒப்புக் கொண்டு நடந்து வருகிறோம். சாணியைக் கொண்டு போய் வைத்து, இதுதான் சோறு. இதைச் சாப்பிடு என்று சொன் னால் யாராவது சாப்பிடுவார்களா? ஏன்? அவரவர்களுடைய அறிவால் - சாணி சாப்பிட முடி யாத பொருள் என்று அறிந்து தள்ளி விடுவார்கள்.  ஆனால், அதே சாணியை சாமி என்று சொன்னால் விழுந்து கும்பிடுகிறார்கள். இது ஏன் என்றால் கடவுள் சங்கதியில் மாத்திரம் நீ உன் சொந்த அறிவை உபயோகிக் கக் கூடாது. அந்தப்படி நீ உபயோகித்தால் நரகத்திற்குத் தான் போவாய் என்று பார்ப்பனர் சொல்லி விட்டார்கள்.
இதனால்தான் நாமும் 3,000 ஆண்டுகளாக இருந்து வருகிற நம்முடைய சூத்திரப் பட்டத்தைப் பற்றியும், இழிஜாதி தன்மையைப் பற்றியும் கவலைப்படாமல், அது கடவுளாகப் பார்த்துச் செய்தது என்று சும்மா இருந்து விடுகிறோம்.
எனவேதான், திராவிடர் கழகத்துக்காரர்களாகிய நாங்கள் சொல்கிறோம், உங்களுடைய அறிவை, ஆராய்ச்சியைத் தங்கு தடையில்லாமல், தாராளமாக எதிலும், எல்லாத் துறைகளிலும், சகல சங்கதிகளிலும் செலுத்தி சிந்திக்க வேண்டும் என்று. அந்தப்படி நாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டாலே நம்முடைய இழிவும், மடமையும், ஏழ்மையும், அடிமையும் ஒழிந்து விடும். நம்மை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டமும் பட்டுப் போய்விடும். இந்த நிலைமை, அதாவது மக்களுடைய சிந்திக்கும் தன்மை வளர வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தினுடைய மூலாதாரக் கொள்கையாகும்.
எப்படி இருந்த திராவிட நாடு, எப்படி இருந்த திராவிட சமுதாயம் இன்று எப்படி ஆகிவிட்டது? உலகத்திற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் நாம்தான். நாம் உயர்ந்த நாகரிகத்தோடு வாழ்ந்த காலத்தில் வெள்ளைக்காரர்களெல்லாம் காட்டு மிராண்டிகளாக, கடற்கரையில் மீனைப் பிடித்து பச்சையாகவே தின்று கொண்டு துணி கூடக் கட்டத் தெரியாத நிலைமையிலே தான் வாழ்ந்தார்கள். இன்று அவர்களுடைய நிலைமை யைப் பாருங்கள். எவ்வளவு தூரம் முன்னேறி விட்டார்கள். அவர்கள் இவ்வளவு முன்னேற்றம் அடைந்ததற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் எல்லாத் துறைகளிலேயும் தங்களுடைய அறிவைத் தாராளமாகப் பிரயோகித்தார்கள். இது வேதம் ஆயிற்றே, கடவுளின் ஆள் கூறியதாயிற்றே என்றெல்லாம் கருதிக் கொண்டு சிந்திக்காமல் இருக்கவில்லை. சிந்தித்ததால்தான் ஒலிபெருக்கியையும், ரேடியோவையும், டெலிவிஷனையும், கப்பலையும், ஆகாய விமானத்தையும், சினிமாவையும் கண்டு பிடிக்க முடிந்தது.
இவற்றிலே ஏதாவது நாம் செய்ய முடிந்ததா? எத்தனையோ கோவில்களையெல்லாம் கட்டினோம். கடவுளுக்காக எல்லா வற்றையும் கொடுத்தோம். இத்தனை செய்தும் நம்முடைய நிலையில் குண்டூசி முனையாவது உயர்ந்தோமா? உயர முடிந்ததா? யோக்கியமான கடவுளாய் இருந்தால் நம்முடைய காசினாலே, உழைப்பினாலேயே வாழ்கிற கடவுள்கள் இந்தக் காலத்தில் கூட நம்மை சூத்திரர்களாகவே வைத்துக் கொண்டு, பாடுபடாத பார்ப் பனர்களை உயர்ந்த ஜாதிக்காரர்களாய் வைத்திருக்குமா? உலகத்தின் வேறு எந்த நாட்டிலாவது இதுமாதிரி யாக பார்ப்பனர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் வேற்று மைகள் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? இங்கிலாந் திலே இல்லை; அமெரிக்காவிலே கிடையாது; பிரான்சிலே ஒரு வனைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்று இல்லை. ஆனால், பாழாய்ப் போன இந்நாட்டிலேதான் பார்ப்பானும், அவனுக்கு உழைத்துப் போடுவதற்கு ஆக என்றே சூத்திரனும் இருக்கிறார்கள்! இது நியாயமா?
இந்த லட்சணத்தில் இந்த நாட்டிற்கு சுதந்திரம் வந்து விட்டதாம். அதுவும் ஜனநாயக சுதந்திரமாம். ஜனநாயகம் என்று சொன்னால் 51 பேர் சொல்லு கிறதை 49 பேர் ஒத்துக் கொள்ள வேண்டும். அதா வது பெரும் பகுதியான மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியில்தான் ஆட்சி இருக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் ஜனநாயகம் ஆகும். இன்று இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் - அதுவும் பெரும் அளவினராகிய மக்கள் நாம்தான். அதாவது இன்றைய தினம் சூத்திரர்கள் என்று யார் யார் சொல்லப்படுகிறார்களோ, அவர்கள் இந்த நாட்டில் 100-க்கு 95 பேராக இருக்கிறவர்கள் நாம்தான். அந்தப்படி இருக்கிறபோது, இந்த நாட்டு ஆட்சியில் நம்முடைய நலனை முதலில் கவனிக்கிற மாதிரியிலும், நம்மவர் களுக்கு அதிகாரமும் இருக்கிற முறையிலும் நம் இஷ்டப் படியும் தானே ஆட்சி முறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியாக இன்று ஆட்சி முறை இருக்கிற தாகச் சொல்ல முடியுமா? நாட்டின் பெரும்பகுதியான மக்கள் கீழ் ஜாதிக்காரர்களாகவும், பாடுபட்டும் வயிறார உணவு கிடைக்காதவர்களாகவும், படிப்பு இல்லாதவர் களாகவும் இருக்கிறார்கள். சுதந்திரம், ஜனநாயகம் என்ற பேரால் பார்ப்பனர்களும், அவர்களுடைய காலைக் கழுவித் தண்ணீர் குடித்துக் கொண்டு இருப்பவர்களும்தான் சுகவாசிகளாகவும், ஆதிக்கம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த இழிநிலைகள் ஒழிய வேண்டாமா? இதற்கு ஆக நீங்கள் எல்லோரும் பாடுபட வேண்டும்.
தோழர்களே, நான் கூறுகிறேன். நம்முடைய இந்த இழிவு குறித்து யாரும் கவலை எடுத்துக் கொண்டு இவை ஒழிய  வேண்டும் என்று பாடுபடுகிறதில்லை. நாங்கள்தான் பாடுபடு கிறோம். பெரிய பெரிய அறிவாளிகள், படிப்பாளி கள் என்பவர் களெல்லாம் கூட இந்தக் காரியத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எல்லாம் அவன் செயல் என்றும், சிலர் தங்கள் சுயநலமே பெரிதென்றும் கருதி சும்மா இருந்து விடுகிறார்கள். இந்தக் காலத்தவர்களை மட்டும் நான் சொல்லவில்லை. அந்தக் காலத்திலிருந்து யாரும் இதைப் பற்றிக் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ நாயன்மார்களும், ஆழ்வார்களும், பக்திமான்களும் நம்மவர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் பரமசிவனும், விஷ்ணுவும் பிரத் தியட்சமாய்க் காட்சி கொடுத்து மோட்ச சாம்ராஜ்யத்திற்கு அவர்களையெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் சூத்திரன், சூத்திரனில் நாடார், வண்ணான், குயவன், பறையர், சக்கிலியர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரிலும் யாராவது நான் ஏன் சூத்திரன்? என்று கேட்கவில்லை. ஏதாவது கேட்டிருந்தால் அவர்கள் ஆழ்வார்களாக, நாயன்மார்களாக ஆகியிருக்க முடியாது. அவர்கள் எல்லாம் இராவணனாக, நரகாசுரனாக, சூரபதுமனாக,  ராமசாமி ஆக ஆகியிருப்பார்கள்.
அசுரர்கள், இராட்சதர்கள் என்பவர்களெல்லாம் என்ன தப்பு செய்தார்கள்? பார்ப்பான் எதற்கு? அவன் எப்படி உயர்ஜாதிக்காரனாய் இருக்கலாம்? அவனும் உழைக் கட்டும் என்று சொன்னவர்களையெல்லாம் தானே அரக்கர்கள் பட்டியலில் சேர்த்து விட்டார்கள்; மற்றபடி அவர்கள் வேறு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை.
(10.3.1951 அன்று மேட்டூர் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 18.3.1951.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...