Friday, October 28, 2011

தினத்தந்தியின் பாராட்டத்தக்க தலையங்கம்


பெண்களுக்கு  சொத்துரிமை

சுயமரியாதை பகலவன் தந்தை பெரியார் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்றால், தமிழர்களின் முன்னேற்றம் மிகவும் பின்தங்கியிருந்திருக்கும். சமுதாயத்தில் இன்னும் ஒருசாரார், அவரை வெறும் நாத்திகர் என்று மட்டுமே கருதிக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று சொன்ன அவருடைய ஒரு கருத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, மற்றவற்றையெல்லாம் மறந்து விடுகிறார்கள்.

நாத்திகம் என்பது அவருடைய கொள்கை என்ற ஒரு பெரிய ஆலமரத்தில் உள்ள ஒரு கிளைதான். மற்றபடி இந்த சமுதாய சீர்திருத்தத்துக்காக அவர் ஆற்றிய தொண்டுகள், அவர் நடத்திய போராட்டங்கள், அவர் எழுதிய எழுத்துக்கள் இன்னும் இந்த சமுதாயத்தால் முழுமையாக அறியப்படவில்லை. குறிப்பாக பெண்ணடி மையை  ஒழிக்க பெரியார் எழுதிய கருத்துக்கள் சமுதாயத்தை தட்டி எழுப்பும் வகையில் உள்ளன.

பெண்கள் என்றால், வீடுகளில் ஆண்களுக்கு அடிமை வேலை செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற வகையில், எந்த வித உரிமையும் இன்றி, வாய்பேசா பூச்சிகளாக பெண்கள் வாழ்ந்து வந்த அந்த காலத்திலேயே, பெண்களின் முன்னேற்றத்துக்காக மிக தைரியமாக கருத்துக்களை வெளியிட்டவர் பெரியார். 1942 ம் ஆண்டிலேயே பெண் ஏன் அடிமை யானாள்? என்று ஒரு நூலை எழுதியிருந்தார்.

அதில், சொத்துரிமை என்ற அத்தியாயத்தில் அவர் பெண்களுக்கு சுதந்திரம் ஏற்படவேண்டுமானால், அவர்கள் ஆண்களுடைய அடிமைகள் அல்ல என்றும், ஆண்களைப்போலவே வாழ்க்கையில் சகல துறைகளிலும் சம அந்தஸ்துடைய வர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களானால், உலக செல்வங்களுக்கும், போக போக்கியங்களுக்கும் ஆண்களைப் போலவே, பெண்களும் உடைமையாளராக வேண்டும் என்பதை வலியுறுத்தவேண்டும்.

பெற்றோர் களுடைய சொத்துக்களுக்கு பெண்களும், ஆண்களைப் போலவே பங்குபெற உரிமையுடையவர்கள் ஆக வேண்டும் என்று எழுதியிருந்தார். ஆக பெண்களுக்கு சொத் துரிமை வேண்டும் என்று அந்த காலத்திலேயே பெரியார் எழுதியிருந்த அந்த கருத்தை, நமது உச்சநீதி மன்றம் இப்போது உறுதிப்படுத்தி உள்ளது.

ஒரு  இந்து  குடும்பத்தில்  பிறந்த  ஒரு  பெண்,  2005 ம்  ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு நடந்த அந்த குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், ஆண் மக் களைப் போல, சமமான சொத்துரிமை பெற உரிமை யுடையவள் ஆவாள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஜெகதீஷ்சிங் கேகர் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். குதிரை கொள் என்றால் வாயை திறக்கு மாம், கடிவாளம் என்றால் வாயை மூடிவிடுமாம். அதுபோல, சொத்துக்கு மட்டும் பெண் உரிமையுடையவள் அல்ல, ஒருவேளை அவளுடைய பெற்றோர் அந்த சொத்தின்மீது கடன் வைத்து விட்டு போனாலும், அதை ஆண் மக்களைப்போல தீர்த்துவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஆகவே, வரவு என்றாலும் சரி, செலவு என்றாலும் சரி, இனி இந்து குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு சம வாரிசு உரிமை கண்டிப்பாக உண்டு.

இந்து குடும்பங்களில் மட்டுமல்ல, மற்ற மதத்தினரும் இந்த தீர்ப்பின் அடிப்படையில், பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்கு அவர்களாகவே முன்வரவேண்டும். இந்த விஷயத்தில் இந்து குடும்பம், மற்ற மதத்தினரின் குடும்பம் என்ற பேதம் இந்தியாவில் அதுவும் மிக மிக முக்கியமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் சாதி, மத இன வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு, பெண்களை எல்லோரும் ஒன்றுபோல மதிக்க வேண்டும். இந்த தீர்ப்பை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்தினால், சமுதாயத்தில் வரதட்சணை கொடுமையை நிச்சயமாக ஓரளவு ஒழித்துவிட முடியும்.

பெண்கள், ஆண்களுக்கு சமமாக அதாவது, ஒரு குடும்பத்தில் ஆண் மகன் களுக்கு இணையாக, பெண் மக்களுக்கு சொத்துரிமை இல்லை என்ப தால்தான், திருமணத்தின்போது நிறைய பணத்தை வரதட்சணை யாகவும், நகைகளாகவும் போடச் சொல்லி, திருமண செலவுகளையும் பெண் வீட்டின் தலையிலேயே வைத்துவிடுகிறார்கள்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் படித்து, வேலை பார்த்து, இப்போது குடும்ப சொத்தில் பங்கையும் பெற்றுக் கொண்டு வரும் சூழ்நிலையில், பெண்ணை பெற்ற வர்கள் வரதட்சணை உள்பட எல்லா சுமை களையும் தலையில் தாங்கும் இந்த சமுதாய கொடுமைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிச்சயமாக வழிவகுக்கும் என்றே தமிழ்ச்சமுதாயம் எதிர் பார்க்கிறது.

அரசும், தமிழ்ச்சமுதாயமும் இதை ஒரு முக்கிய பொறுப்பாக, சமுதாய கடமையாக தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
(நன்றி: தினத்தந்தி 28.10.2011)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...