Wednesday, September 28, 2011

கேலிவதை (ராகிங்) மீண்டும் தலையெடுக்கிறதா?



மாணவர்கள் மத்தியில் கேலிவதை என்னும் ராகிங் சிறிது காலமாக அடங்கி இருந்தாலும், சென்னையில் மீண்டும் தலைதூக்கி இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக எம்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் இது நடைபெறுவது தொடர்பாக மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்தி படத்துடன் வெளியாகியுள்ளது.

புதிய மாணவர்களை விளையாட்டாகக் கேலி செய்வது என்று தொடங்கப்பட்ட இந்தக் கதை நாளடைவில் அநாகரிகத்தின், அருவருப்பின் உச்சிக்கே சென்றுவிட்டது. மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல; மாணவிகள் மத்தியிலும் இந்த நோய் அதிகரிக்க ஆரம்பித்தது.

எந்த அளவுக்கு அது கொடூர வடிவம் கொண்டது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னுசாமி அவர்களின் மகன் நாவரசு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, உறுப்புகளை வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டதாகும்.

இப்படிக்கூட நடக்குமா? என்று கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத கொடுமை!

முன்பெல்லாம் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் தொடக்கப் பருவத்தில்தான் இந்தக் கேலி வதை நடக்கும். இப்பொழுதோ - முதலாண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் கேலிவதை செய்வது பல பருவங்களிலும் தொடர்கிறதாம்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திரைப்பட கதாசிரியரின் மகன் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்தான். விடுதியில் தங்காமல் வெளியில் அறை எடுத்துத் தங்கியிருந்த மாணவனிடம் மூத்த மாணவர்கள் மேற்கொண்ட செயல்கள் மாணவர் சமுதாயத்தின் மரியாதையையே மாசுபடுத்துவதாகும்.

தங்கள் செருப்புகளை நாக்கால் நக்கச் சொல்லியிருக் கிறார்கள். மறுத்ததால் கண்ணில் ஓங்கிக் குத்தினார்கள். மாடியிலிருந்து தூக்கி எறிய முயற்சித்தார்கள். கல்லூரி நிருவாகத்திடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கேரளா சென்று கண் சிகிச்சை பெற்று கோவை வந்த அகில்தேவ் என்ற அந்த மாணவன் காவல் துறையிடம் புகார் செய்தான். சம்பந்தப்பட்ட மாணவர் கள்மீது கொலை முயற்சி வழக்குத் தொடுக்கப்பட்டது.

ஆந்திராவில் குண்டூரில் விவசாயப் பொறியியல் கல்லூரி விடுதியில் இருந்த மூத்த மாணவிகள் 20 வயது புதிய மாணவியை நிர்வாணமாக நடனமாடப் பணித்தனர். அந்த மாணவி நஞ்சு அருந்தித் தற்கொலை செய்துகொண்டார்.

இங்கு அங்குஎனாதபடி இந்தியா முழுமையும் இந்த நச்சு நோய் பரவியுள்ளது.
நம் நாட்டுக் கல்வியின் தரமும், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும், கலாச்சாரச் சீரழிவுகளும் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதற்கு இந்தக் கேலி வதைகள் எடுத்துக்காட்டாகும்.

இதனைத் தடுப்பதற்காக சி.பி.அய். முன்னாள் இயக்குநர் ஆர்.கே. இராகவன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு பல பரிந்துரைகளையும் கொடுத்துள்ளது.

பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் ஆகிய அமைப்புகள் கேலி வதையைத் தடுத்திட கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் அதில் 15-லிருந்து 20 மாணவர்கள் இடம்பெறவேண்டும் என்றும், இந்தக் குழுவில் புதியவர்களான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளின் முதலாண்டு மாணவர்கள் பெரும்பான்மையாக இருக்கவேண்டும்; ஆண் - பெண் மாணவர்களின் எண்ணிக்கை சரி சமமாக இருக்கவேண்டும்; ஆசிரியர் ஒருவர், ஆசிரியை ஒருவர் இடம்பெறவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கேலி வதை செய்யப்பட்டால் அதனைத் தெரிவிக்க கல்வி வளாகத்தில் தனி தொலைப்பேசியை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி தகவல் சொல்லுபவர்களின் விவரம் இரகசியமாக வைக்கப்படவேண்டும் என்பதை போன்ற பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இவை எந்த அளவுக்குச் செயல்படுகின்றன என்பது கேள்விக்குறியே! தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டங்கள் இருக்கவே செய்கின்றன.

இவை ஒரு பக்கம் இருந்தாலும், கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுவது ஏதோ ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை இருக்கக் கூடாது.

தேவைப்பட்டால் படிப்பின் கால அளவைக் குறைத்து, விடுமுறைகளையும் குறைத்து, முழுநேரமும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தும் அளவுக்கு ஒரு நெருக்குதலைக் கொடுக்கவேண்டும். அப்படிச் செய்வதன்மூலம் அவர்களின் கவனம் வேறு திசையில் செலவழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஊடகங்கள் சமூகப் பொறுப்போடு கருத்துகளை வெளியிடுவதும் அவசியமாகும். கேலிவதை என்பது அநாகரிகக் காட்டுவிலங்காண்டித்தனம் என்று உணருமாறு பிரச்சாரமும் செய்யப்படவேண்டும்.

பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முக்கியமான பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...