Tuesday, August 30, 2011

முதல் அமைச்சருக்குத் தமிழர் தலைவரின் வேண்டுகோள் அறிக்கை


சட்டமன்றத்தின் இன்றைய தீர்மானத்திற்கு முன்பே காலையில் எழுதப்பட்ட அறிக்கை இது!
வாதப் பிரதிவாதங்களுக்கான நேரமல்ல இது!

மனிதநேயத்தை, கருணை உள்ளத்தைக் காட்ட வேண்டிய காலம்!
மூவர் தூக்குத் தண்டனை ரத்து செய்யக்கோரி
சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம்


உலகத் தமிழர் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை எதிர்பார்க்கும் உணர்வு இது!
மக்கள் மன்றத்தின் உணர்வை சட்டமன்றம் பிரதிபலிக்க வேண்டும்


பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் சார்பாக முதல் அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வதியும் இளைஞர்கள் பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு, நாடு முழுவதும் உள்ள மக்கள் உணர்வாக - வெள்ளப் பிரவாகமாக பெருக்கெடுத்தோடும் நிலையில், நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் (காங்கிரஸார் தவிர) இம்மூவர் உயிரைக் காப்பாற்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முன்வர வேண்டும்; கருணை காட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

முதல் அமைச்சரின் அறிக்கை

நேற்று இதுசம்பந்தமாக தமிழக சட்டப் பேரவையில் விதி 110 (விவாதம் செய்ய இயலாது என்ற விதி)இன் கீழ் அறிவித்த ஓர் அறிக்கையில்,

...எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடிஅரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித ஆதிகாரமும் மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தித் தெரிவிக்க விரும்புகிறேன் என்று தமிழக முதல் அமைச்சர் தெரிவித்திருப்பது, மிகுந்த ஏமாற்றத்தையும் மன வேதனையையும் உலகமெங்கும் வாழும் கோடானு கோடி தமிழர்கள் உள்ளத்தில் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

1991 (5.3.1991)இல் மத்திய உள்துறை அமைச்சரகம் தெரிவித்த கடிதம் என்ற ஒரு கருத்துரை,

19.4.2000-த்தில் தி.மு.க. அமைச்சரவை முடிவு என்பது போன்ற சிலவற்றைச் சுட்டிக் காட்டி, தனது இயலாமையை நமது முதல் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வேண்டியது கருணை உள்ளம் - மனிதநேயம்!

மிக்க வணக்கத்துடன் நமது முதல் அமைச்சர் அவர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்ள விரும்புவ தெல்லாம்; மூன்று உயிர்கள் இன்னும் சில நாள்கள் தான் என்று ஊசலாடும் நிலையில், முன்னால் வந்து நிற்க வேண்டியது முதலமைச்சரின் கருணை உள்ளமும் மனிதநேயமும் தானே தவிர, வாதத் திறமையோ, அரசியல் சட்டம்பற்றிய பல்வேறு அம்சங்களின் விளக்கமோ அல்ல.

வீதிகளில் திரளும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், கண்ணீரும் கம்பலையுமாக அழுது புலம்பி, (காஞ்சியில் செங்கொடி என்ற தீக்குளித்த பெண்ணின் தியாகம்போல்) பலவற்றில் ஈடுபடும் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றுள்ள ஒரு மனிதாபிமான பிரச் சினையில், பரஸ்பர குற்றச்சாட்டுகளை - அரசியல் களமாக்கிக்  கூறுவதைவிட மிக முக்கியம் எந்த வகையிலாவது உதவிட வழிவகை உள்ளதா என்பதை ஆராய்வதும், அப்படி ஆராய்ந்து முயற்சி எடுப்போருக்கு உறுதுணையாக இருப்பதும்தான்!

முதல்வரிடம் கோரிக்கை விடுப்பவர்கள் எவரும் அவரையோ, அவரது அரசையோ தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு செய்யவில்லை. இயற்கை யாக எழும் மனிதாபிமானக் காரணத்தாலும், துணிச் சலுடன் முடிவு எடுக்கும் திறன் முதல்வரிடத்தில் பல நேரங்களில் உண்டு என்ற நம்பும் எண்ணத்தாலும்தான்!

விதி 161 என்ன கூறுகிறது?

நெருப்புப் பற்றி எரியும்போது முதலில் செய்ய வேண்டிய பணி, அதனை எப்படியெல்லாம் எல்லோரும் ஒத்த நிலையில் முனைந்து அணைத்து, பாதிக்கப்படுவோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை, செயலுக்குமே முன்னுரிமை தர வேண்டும் என்பதே!

இந்திய அரசியல் சட்டப்படி 161 விதியின்படி, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது சட்ட வியாக்யானத்தையும், அவரவர் தரும் விளக்கத்தையும் பொறுத்தது ஆகும்.

அதே விதியில் உள்ள கட்டளைபற்றி நமது முதல் அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்த அந்த அறிக்கையில்,

....இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ குடிஅரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம்... என்பதே கதவுகள் முழுவதுமாக சட்டப்படி - 161 விதியின் படி மூடப்படவில்லை என்பதை வெளிச்சம் காட்டி விளக்குவதாக உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இந்தியா ஒரே நாடு, ஒருமைப்பாடு ஓங்குக என்று முழங்கிடும் நிலையில், டில்லி நாடாளுமன்றத்தைத் தாக்கியவர்களுள் ஒருவரான தீவிரவாதி அப்சல்குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றினால் காஷ்மீரமேபற்றி எரியும் என்று கூறும் ஆட்சித் தலைவர்களே கூறிடும் நிலை அங்கே!

இங்கேயோ கருணைக்குக் கசிந்துருகினாலும் கிட்டாத நிலை!

நெல்லிக்காய்  மூட்டை தமிழர்கள் நிலை கண்டு வெட்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

தீர்மானத்தின்மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு வெளியாகும்

மாநில அரசு, நல்வாய்ப்பாக தமிழ்நாடு சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், அதில் ஒரு மனிதநேயம் பொங்கும் பரிந்துரை வேண்டுகோள் தீர்மானமாக கொணர்ந்து, நிறைவேற்றிட வேண்டும் என்பது (சில வாரங்களுக்குமுன் இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடை ஏற்படுத்த போட்ட தீர்மானம் போல)  தமிழ் மக்களின், (ஒரு சில தனி மரங்களைத் தவிர) ஒட்டு மொத்த உணர்வாகும். அத்தகைய தீர்மானம் இந்தப் பிரச்சினையில் உதவிகரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மாகும்.    மனிதநேயத்தின் உச்சத்திற்கும் செல்லும்வாய்ப் பும் ஏற்படுமே. இன்னமும் காலந் தாழ்ந்துவிடவில்லை.

மாறிய சூழ்நிலைகள் பல உள்ளன என்பதை அத் தீர்மானத்திலேயே சுட்டிக்காட்டலாமே!

தடா சட்டத்தின் மூலம் தீர்ப்பு!

1. தடா சட்டத்தின்படி பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. பொதுவான குற்றவியல் நெறிமுறைக்கே தலை கீழானதடாவில் அம்மூவருக்கும் தூக்குத் தண்டனை தரப்பட் டுள்ள நிலையில், அத்தடா சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையே ஒரு மாறிய சூழ்நிலைதானே!

2. ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்த விசாரணை இன்னும் தொடரும்போது, மேலும் புதிய ஆதாரமோ, குற்றவாளிகளோ கிடைக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது என்றும் சுட்டிக் காட்டப்படலாமே!

மக்கள் மன்றத்தின் உணர்வை சட்டமன்றம் பிரதிபலிக்கலாமே!

எனவே மக்கள் மன்றம் இதில் காட்டும் உணர்வை - சட்டமன்றம் காட்டுவது மக்களாட்சியில் தவறல்ல; தேவையும்கூட
சென்னை உயர்நீதிமன்றம் அதன் கடமையைச் செய்ய முன்வரும் நிலையில், மனிதநேயம் சட்டவிதிகளை யும் தாண்டியது என்ற காட்ட வேண்டிய அரிய வாய்ப்பு இன்னமும் தமிழக அரசுக்கு குறிப்பாக நமது முதல்வ ருக்கு உண்டு. அதை அவர்கள் பயன்படுத்தி, புதிய முன்மாதிரியை ஏற்படுத்தலாம்.

அரசமைப்புச் சட்டத்தில் நூறு திருத்தங்கள் வரவில்லையா?

விதிகளும், சட்டங்களும், மரபுகளும் மக்களுக்காகத் தானே தவிர, விதிகளுக்காக, சட்டங்களுக்காக மக்கள் என்ற நிலை கிடையாது என்பதை அறியாதவரல்லவே முதல் அமைச்சர் அவர்கள்.

மாற்றப்பட முடியாத விதிகள் என்றால் இந்திய அரசியல் சட்டத்திற்கு இதுவரை 100 திருத்தங்கள் வந்திருக்க முடியாதே!

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்!

எனவே மீண்டும் மனிதநேய மலர்ச்சியைக் காட்ட வேண்டிய மகத்தான கடமையைச் செய்ய வேண்டுமென முதல் அமைச்சர் அவர்களை, உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை அனைவர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!! நன்றி கூறுகிறோம்!

மேலே காணப்படும் அறிக்கை இன்று காலை 8 மணிக்கு ஏற்கெனவே எழுதப்பட்டது. பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காலை 11 மணிக்கு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!!  தமிழக முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.
-கி. வீரமணி

1 comment:

அருள் said...

தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_30.html

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...