Tuesday, August 30, 2011

மூவருக்குத் தூக்கு நளினிக்குக் காட்டிய அதே உணர்வை - இந்த மூவர் விஷயத்திலும் காட்டக் கூடாதா? திருத்தணி மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்


காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழக மாநாடு திருத்தணியில் 28.8.2011 மாலை 6 மணிக்கு கமலா திரையரங்கம் அருகில் சுயமரியாதைச் சுடரொளிகள் கே.பி. தேசன் - ஓவியர் வாசு ஆகியோர் நினைவரங்கில் சிறப்பாகத் தொடங்கப் பெற்றது. திராவிடர் கழகக் கொடியை கழகத் தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ் ஏற்றி வைக்க மாநாடு தொடங்கியது.

மாநாடு பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் மாநிலத் தலைவர் கவிஞர் பொதட்டூர் புவியரசன் தலைமையில் நடைபெற்றது.

அனைவரையும் வரவேற்று திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் கெ. கணேசன் உரையாற்றினார். தலைவரை முன்மொழிந்து மண்டல செயலாளர் மோகனவேலு உரையாற்றினார்.

வழி மொழிந்து செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.கோ. கோபால்சாமி அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பொ. பெருமாள்  ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மண்டலத் தலைவர் பு. எல்லப்பன் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசினார்.

மாநாட்டின் தொடக்கவுரையை அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் மா. பெரியண்ணன் நிகழ்த் தினார்.

(தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நேற்றைய விடுதலையில் வெளிவந்துள்ளது)

தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்தார்.

ஜாதி மதமற்ற சமுதாயம் என்ற தலைப்பில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ், ஆரிய ஆதிக்கத்தை அழித்தொழிப்போம் என்ற தலைப்பில் காஞ்சி மாவட்டக் கழக அமைப்பாளர் காஞ்சி கதிரவன், இனமான உரிமைகளை வென்றெடுப்போம் எனும் பொருளில் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர்.

கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், மாநில மாணவரணி துணைச் செயலா ளர் நம்பியூர் சென்னியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் வழக்குரைஞர் மா. மணி இணைப்புரை வழங்கினார்.

தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் உரை நிகழ்த்தியதற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரை - நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

அவர்தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: பொதுவாகப் பக்தர்கள் கூடும் ஊர் இது. இந்த ஊரிலே பகுத்தறிவுவாதிகள், கறுஞ்சட்டையினர் கூடி பகுத்தறிவுக் குரல் கொடுத்துள்ளனர். பக்தர்கள் பெரும் அளவு நடமாடினாலும், வழி நெடுக கோயில்கள் இருந்தாலும் எந்தவித சிறு அசம்பாவிதமும் நடைபெறாது கழகத்தின் கட்டுப்கோப்புக்குக் கிடைத்த வெற்றி.

யாரும் ஆட்சேபிக்க முடியாத கொள்கைகளைக் கொண்டது நமது இயக்கம் என்றார் தந்தை பெரியார். அதனால்தான் இந்தக் கொள்கைகளைப் பின்பற்ற முடியாதவர்கள்கூட, அதனை ஆட்சேபிக்க முடியாதவர் களாக இருக்கிறார்கள். தந்தை பெரியாரின் சுற்றுப் பயணம் தனி மனிதரின் சுற்றுப் பயணம் அல்ல. ஒரு தத்துவத்தின் சுற்றுப் பயணம்.

இந்தத் திருத்தணி பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் காலத்தில்கூட நம் இயக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகுதான் அதிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைக்கு மிகச் சிறப்பான எழுச்சியூட்டும் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் உடலால் இன்று இல்லாவிட்டாலும் அவர்களின் கொள்கைகள் நாளும் நாளும் மேலும், மேலும் வெற்றி பெற்று வருகின்றன என்பது தந்தை பெரியார் அவர்களுக்குக் கிடைத்த பெருமையாகும்.

பக்தி பெருகி வருவதாகக் கூறுகிறார்கள். உண்மை யிலே யார் கடவுளை நம்புகிறார்கள்? உண்டியலில் கூட எந்தப் பணத்தைப் போடுகிறார்கள்? செக் மூலமாகவோ, டி.டி. மூலமாகவோ முகவரியுடன் கோயில் உண்டியலில் பணம் போடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தங்கள் பாவத்தைப் போக்குவதாக நினைத்துக் கொண்டு அள்ளிக் கொட்டு கிறார்கள் (பலத்த சிரிப்பு - கைதட்டல்).

பொதுவாக லஞ்சம் உற்பத்தியாகும் இடமே கோயி லாகும் என்று குறிப்பிட்டார். விடுதலை ஏட்டின் சாதனைகள் குறித்து விடுதலை ஆசிரியர் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் அவர்களின் அறிவு ஆயுதமான விடுதலை ஏடு சாதித்தவை கொஞ்சமா? ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தது யார்? அந்தத் திட்டம் மட்டும் ஒழிக்கப்படாமல் இருந்திருந் தால் குப்பன் மகன் சுப்பன் இன்று அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீய ராகப் பணியாற்றுகிறானே - இது நிகழ்ந்திருக்குமா?

தமிழ்நாட்டில் எத்தனைப் பொறியியல் கல்லூரிகள்? எத்தனை பாலிடெக்னிக்குகள்? இந்தியாவிலேயே 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டில்தானே இந்தச் சாதனைகளில் விடுதலையின் பங்கு சாதாரணமானதா? என்ற வினாவைத் தொடுத்த தமிழர் தலைவர் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை மாற்றி சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றியுள்ள ஆட்சிக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.

மக்கள் நம்பிக்கையை சட்டத்தால் மாற்றக் கூடாதாம்: அப்படியென்றால் பெண்களுக்குத் திருமணத்தை எட்டு வயதிலேயே நடத்தினார்களே - அந்தச் சம்பிரதாயத்தை மாற்றி 18 வயது என்று சட்டம் செய்தார்களே, அது தவறானதா?

சம்பிரதாயத்தை மாற்றக் கூடாது என்றால் குடும்ப நலத் திட்டத்தை அரசு வற்புறுத்தலாமா?

கருச்சிதைவுக்குச் சட்ட சம்மதம் தெரிவிக்கப் பட்டுள்ளதே - அதனை மாற்றிச் சட்டம் செய்வார்களா என்ற வினாவை அர்த்தத்தோடு எழுப்பினார். இவற்றிற்கு யார்தான் பதிலிறுக்க முடியும்?

தை முதல் நாளை மாற்றி மறுபடியும் சித்திரை முதல் நாளை கொண்டு வந்தது - பச்சையான பார்ப்பனப் பண்பாட்டுப் படை எடுப்பே!

இதனை எளிதாக திராவிடர் கழகம் விட்டு விடாது! ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்றிணைத்துப் போராடுவோம்.

ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்று இருந்தால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர். அதனைப் போராடி இடஒதுக்கீட்டை மீட்கவில்லையா? அதே போல பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் என்றார். பேரறிவாளன், சின்ன சாந்தன்,  முருகன் ஆகிய மூவருக்குமான தூக்குத் தண்டனைபற்றி கருத்துத் தெரிவித்தார் கழகத் தலைவர். மூன்று பேர்கள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்களே - இவர்கள் மூவரும் பார்ப்பனர்களாக இருந்தால் இந்தப் பார்ப்பன ஊடகங்கள் இப்படி எழுதுமா?

மரணத்தைவிட கொடுமையானது மரணத்தை ஒவ்வொரு நாளும் எதிர்ப்பதாகும். இந்தத் தூக்குத் தண்டனையில்கூட நளினுக்குத் தூக்குத் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதே - வரவேற்கிறோம். அதே அளவுகோல், அதே அணுகுமுறை இந்த மூவர்கள் பேரிலும் காட்டலாமே என்பதுதான் நமது வேண்டுகோள்.

சட்டத்தில் பாலியல் பார்த்துத் தீர்ப்பு என்பது கிடை யாதே! அதே சட்டப்படி பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன்  ஆகியோர் விஷயத்திலும் நடந்து கொள்ளலாமே என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்.

காஞ்சிபுரத்திலே இது தொடர்பாக ஒரு பெண் தீக்குளித்து மாண்டார் என்ற தகவல் இப்பொழுது கிடைத்தது. இத்தகைய முயற்சிகளில் யாரும் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். தற்கொலை களால் இவற்றிற்குப் பரிகாரம் காண முடியாது. உரிய முறைகளில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
(முழு உரை பின்னர்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...