Wednesday, August 31, 2011

அடுத்து என்ன?


பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத்தண்டனை தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் - ஒரு திருப்பு முனையாகவும், கொஞ்சம் நிம்மதி அளிப்பதாகவும் அமைந்திருந்தன.
8 வார காலம் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் அளித்ததன்மூலம் ஒரு இறுக்கமான நிலையிலிருந்து மக்கள் கொஞ்சம் விடுபட்டுள்ளனர் என்பதில் அய்யமில்லை.
இது ஒரு தற்காலிக நிலைதான்; நிரந்தரமான நிலை என்பது - மூவர்மீது நிலுவையில் உள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவதுதான்.
இந்த வழக்கில் ஏற்கெனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுள்ள நளினிக்குக் காட்டப்பட்ட அதே சலுகை இந்த மூவர் விஷயத்திலும் காட்டப்படவேண்டும் என்பதுதான் அனைவரின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும்.
தீர்ப்பில் ஆண் - பெண் என்ற பாலியல் வேறுபாடுக்கு இடம் இல்லை என்பதுதான் சட்டத்தின் நிலை என்பதால், இந்தத் திசையில் அழுத்தத்தைக் கொடுப்பதுதான் சரியானதாக இருக்கும்.
ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்குமேல் தண்டனையை இவர்கள் அனுபவித்துவிட்டதால் நளினி உள்பட நால்வரையும் விடுதலை செய்வதுதான் நியாயமானதாக இருக்க முடியும்.
இப்பொழுது தற்காலிகமாக கிடைத்திருக்கும் வெற்றி எந்த ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி என்று கூற முடியாது. ஒட்டுமொத்தமான இனவுணர்வும், மனித நேயமும், நியாயவுணர்வும் வெடித்துக் கிளம்பியிருக் கின்றன. திட்டமிட்ட ஏற்பாடுகள் (டீசபயளைந) ஏதுமின்றி அவரவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இயல்பான உணர்வுகள் தான் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பினை உருவாக்கிற்று.
இதன் விளைவாகக் கிடைத்துள்ள தற்காலிக வெற்றியை முழு வெற்றியாக மலர்விக்க தொய்வின்றி மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லவேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய தினம் ஒருமித்த முறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்களும் அதனை வழிமொழிகின்ற வகையிலே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுவாக அனைத்துத் தரப்பினரின் கருத்தும் இதுதான். இப்பொழுது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ்நாட்டு மக்களின் இந்த நிலையை முன்வைத்து, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும், அனுதாபத்தையும் ஒன்று திரட்டி, நல்லதோர் முடிவினை எட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான முன்மொழிவின் மீது ஒன்று திரண்டு தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுத்ததுபோலவே, இந்தப் பிரச்சினையிலும் நடந்துகொண்டால், நல்லது நடக்கும், நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கொடுத்திருக்கும் எட்டு வார காலம் இடைக்காலத் தடை என்கிற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இப்பொழுது பந்து மத்திய அரசின் உள்துறையிடம் உள்ளது. ஒரு தீர்ப்பை முன்வைத்து. இதுவரை இந்த அளவு மக்கள் எழுச்சியை, கொந்தளிப்பைக் காட்டிய தில்லை என்பது வெளிப்படை!
இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும் - உளவுத் துறை மூலமும் மத்திய அரசின் காதுகளுக்கு எட்டியிருக்கும். அதன் அடிப்படையிலும், ஒரு மாநில அரசே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு மத்திய அரசு செயல்படவேண்டும்; உள்துறை அமைச்சர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் - வேறு உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், வெகுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, மூவர்மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஏற்கெனவே அனுபவித்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் கருதி, நளினி உள்பட நால் வரையும் விடுதலை செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
எல்லா மன்றங்களையும்விட மக்கள் மன்றமே வலிமையானது. அதைக் கவனத்தில் கொள்ளவும் வலியுறுத்துகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...