அய்யா அவர்களை நீண்டகாலம் வாழவைத்த பெருமை அன்னை மணியம்மையாரையே சாரும்! அண்ணா கூறிய கருத்தை தமிழர் தலைவர் விளக்கினார்
சென்னை, மார்ச் 19- அய்யா அவர்களை நீண்ட காலம் வாழ வைத்த பெருமை அன்னை மணியம் மையார் அவர்களையே சாரும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய செய்தியை விளக்கினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் 16.3.2011 அன்று இரவு 7.30 மணிக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
ஒரு திரைப்படம் நேற்று ஒரு திரைப்படம் போட்டு காட்டப் பட்டது. அந்தத் திரைப்படத்தை தயாரித்தவர் களுக்கு பெரியார் திடலில் அழைத்துப் பாராட்டு வதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று சொன்னோம்.
மண்வாசனையோடு ஒப்பனைகள் அதிகம் இல்லாமல் இயற்கையாக அந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கிராமங்களால்தான் நாடு வாழ்கிறது. கிராமங்களில்தான் அதிக மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. அந்த மூடநம்பிக்கை கள் எப்படியெல்லாம் மக்களை வதைத்து வருகிறது என்பதை மய்யப்படுத்தி சங்ககிரியைச் சேர்ந்த தோழர் ராஜ்குமார் அற்புதமான ஒரு படத்தை உருவாக்கியிருக்கின்றார்.
இரண்டேகால் மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படம். மிக அருமையாகச் சொல்லுகின்ற முறையிலே ஈர்ப்புள்ள ஒரு முறையாகவும் சிந்திக்கக் கூடிய திரைப்படமாக அதை எடுத்திருக்கின்றார்.
அடுத்து வெளிவரும்
அந்தப் படம் அடுத்து வெளிவரும். அதைக் காணக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். நம்முடைய பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் சொன்னதுபோல இப்படி ஒரு நான்கு திரைப் படங்கள் வந்தால் சமுதாயத்தையே புரட்டிப் போடும்; அப்பொழுதுதான் புரட்சி ஏற்படும் என்று சொன்னார்.(கைதட்டல்).
அந்தத் திரைப்படத்தை உருவாக்கி இயக்கிய ராஜ்குமார் அவர்களே, இணை இயக்குநர் அவர்களே, திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் அவர்களே! உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தை நாம் நடத்துவது தமிழுக்கு உரிய ஊக்கத்தை தமிழர்களுக்கு உள்ள ஊக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம்.
பல்வேறு சிறப்பு வாய்ந்தவர்கள்
இந்த அரங்கத்திலே அமர்ந்திருப்பவர்கள் பல்வேறு தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் சிறியதாக இருக்கும். ஆனால் இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் முத்திரை பதித்த குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கிறார்கள்.
தேவநேயப் பாவாணர் மன்றத்தை மத்திய அமைச்சர்களாக இருக்கக்கூடியவர்கள்-நம்முடைய இயக்கத்தைச் சார்ந்தவர்களேகூட வியக்கக்கூடிய அளவிற்கு தேவநேயப்பாவாணர் அரங்கத்தை புதுப்பித்து எல்லோருக்கும் வசதியாக அமரக்கூடிய அளவுக்கு நல்லவகையிலே அமைக்கக்கூடிய அளவிற்கு மாற்றி அமைத்தவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. அதற்கு மூலகாரணமாகத் திகழ்ந்தவர் கயல்தினகரன். நூலக ஆணையக் குழுத் தலைவராக இருக்கக்கூடியவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றார். இப்படி ஒவ்வொருவரும் இங்கே வந்திருக்கின்றார்கள்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் வந்திருக்கின்றார்.
அந்தத் தாய் வாங்கிய வசவுகளோ...
இப்படி எல்லா துறைகளைச் சார்ந்தவர்களும் வந்திருக்கிறார்கள். அதிக நேரம் பேசக்கூடிய வாய்ப்புகூட இல்லை. இன்றைக்கு அன்னை மணியம்மையார் நினைவுநாள். அன்னை மணியம்மையார் அவர்களைப் பற்றி எவ்வளவோ செய்திகளைச் சொல்லலாம்.
ஏனென்றால் இந்திய வரலாற்றில் மட்டுமல்ல-உலக வரலாற்றிலே இப்படி ஒரு பெண்மணி- ஒரு தாய் ஏராளமான வசவுகளைத் தாங்கி வாழ்ந்தவர் என்று சொன்னால்-அதற்கு முதல் பரிசு யாருக்கு கிடைக்கும் என்று சொன்னால்-அன்னை மணியம்மையார் அவர்களுக்குத்தான் கிடைக்கும். அவ்வளவு வசவுகளை, அவ்வளவு ஏளனங்களை, அவ்வளவு சங்கடமான சூழ்நிலைகளை எல்லாம் அவர்கள் சந்தித்தார்கள்.
பொறுத்துக்கொண்டு தன்னுடைய பணி..
அதை எல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் பொறுத்துக்கொண்டு தன்னுடைய பணி பெரியாருக்குத் தொண்டு செய்வது, தமிழ்நாட்டு மக்களுக்கு, மனித குலத்திற்குத் தொண்டு செய்ய தன்னுடைய வாழ்வையே ஒப்படைத்துக் கொண்டவர். அய்யா அவர்களைக் காப்பாற்றினார். எல்லோரும் அறிந்தோம்.
அய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நேரத்திலே அய்ந்தாண்டு காலம் ஒரு பக்கம் நோயோடு போராடிக்கொண்டு, மற்றொரு பக்கம் சமுதாயத்தோடு போராடிக்கொண்டி ருந்தார்.
அவருடைய தலைமையிலேதான் இராவணலீலா போராட்டமே நடைபெற்றது. இந்தியாவையே உலுக்கக்கூடிய ஓர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாற்றில் பதிவான ஒரு செய்தி-நெருக்கடி காலம் இந்த இயக்கத்திற்கு வந்த ஓர் கட்டம். இப்போதும் ஒரு வகையான நெருக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.
துணிச்சலான வீராங்கனை
அம்மா அவர்கள் அன்றைக்கு ஒரு துணிச்சலோடு வீராங்கனையாகத்தான் இருந் தார்கள். அறிவு,ஆற்றல்,திறமை,சிக்கனம், எளிமை இவை எல்லாவற்றையும் தாண்டி அடக்கத்தோடும் இராணுவ வியூகத்துடன் கூடிய போராட்டங்களை எல்லாம் அவர்கள் சந்தித்தார்கள்.
எல்லாம் அறக்கட்டளைக்கே!
அப்படிப்பட்ட ஒரு தலைமைத்துவ பண்பு உடையவர்.இன்னும் சிறப்பானது. தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு காசையும், எப்படி பொதுமக்களுக்கே பயன்படும்படியாக அவர்கள் ஆக்கி வைத்துவிட்டு, எப்படி அறக் கட்டளையாக்கிவிட்டுச் சென்றார்களோ அது போல அன்னை மணியம்மையார் அவர்களுடைய சொந்த சொத்து, அன்னை மணியம்மையார் அவர்களுக்குத் தரப்பட்டது.
இந்தச் சொத்துகளை எல்லாம் தன்னுடைய உற்றார், உறவினர்களுக்கோ கொடுக்காமல் அதை மீண்டும் மக்களுக்கே பயன்படக்கூடிய அளவுக்கு அதையும் அறக்கட்டளையாக்கியதன் விளைவு தான் இன்றைக்குப் பல கல்வி நிறுவனங்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரை வளர்ந்திருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அன்னையாரது அருட்கொடை இருந்தது. அவரு டைய தொண்டறம் இவை எல்லாம் சிறப்பு களாகும். அப்படிப்பட்ட அன்னை மணியம்மை யாருடைய நினைவுநாள் இன்று.
அய்யா அவர்கள் பற்றி அண்ணா...
அய்யா அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொன்னார்கள். அய்யா அவர்கள் சலிப்பாக ஒரு கடிதம் எழுதினார். ஓர் அறிக்கை எழுதினார். அவருடைய பிறந்தநாளை ஒட்டி, அய்யா, அவர்களுடைய அறிக்கையை விடுதலை மலரில் நாங்கள் வெளியிட்டோம்.
அண்ணாஅவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நியூயார்க் மருத்துவமனையிலே தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்ற காலகட்டம்.
அண்ணாஅவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நியூயார்க் மருத்துவமனையிலே தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்ற காலகட்டம்.
விடுதலை மலரை நான் விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு-அண்ணா அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அண்ணா அவர்கள் படிப்பார்கள் என்பது தெரியும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம்
அந்த மலரில் அய்யா அவர்கள் எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு, உடனே அய்யா அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து அண்ணா ஒரு கடிதம் எழுதினார். ரொம்ப வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கடிதம் அது.
உலக வரலாற்றிலேயே ...
உலக வரலாற்றிலேயே எந்த ஒரு புரட்சிகரமான தலைவரும் நான் பார்த்த வரையிலே, அவருடைய கொள்கை வெற்றியை வாழ்நாளிலேயே கண்ட தில்லை; சுவைத்ததில்லை.
நீங்கள் ஒருவர்தான் அதற்கு விதிவிலக்காக இருக்கிறீர்கள் என்று அய்யா அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். எனவே அவர்களுடைய வெற்றிகள் கொள்கை வெற்றிகளாக இருக்கும். அதுபோல அன்னை மணியம்மையார் அவர்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அம்மா அவர்களைப் பற்றி சந்தேகப் பட்டவர்கள்-அய்யா, அம்மா திருமணத்தை விமர்சித்தவர்கள் எல்லோரும் உண்டு.
அண்ணா அவர்கள் உள்பட அன்றைய காலகட்டத்திலே அப்படிப்பட்ட விமர்சனங்கள் தவிர்க்க முடியாது. அதைப்பற்றி இங்கு ஆய்வு செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலே ஒவ்வொரு சிந்தனை ஓட்டம் இருந்தது.
நமக்கே தெளிவு
நமக்கே தெளிவு ஏற்படுகின்ற நேரத்திலே அதற்கு வேறுவிதமான எண்ண ஓட்டங்கள் வருகின்றன. அப்படிப்பட்ட நிலையிலே முதலமைச்சர் அண்ணா அவர்களை ஒரு முறை நானும், சம்பந்தம் அவர்களும் போய் பார்த்தோம். இந்த சம்பவத்தை நான் பல முறை சொல்லியிருக்கின்றேன்.
சென்னை நுங்கம்பாக்கம் அவின்யூ சாலையில் உள்ள அண்ணா அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும்பொழுது நடந்த சம்பவம் இது. தனித்த முறையிலே நான் சந்திப்பதில்லை. அய்யா அவர்கள் ஏதாவது செய்தி சொல்லி அனுப்பும்பொழுதுதான் சந்திப்பேன்.
அய்யா அவர்களின் பணியாளனாக...!
அதைச் சொல்லுகின்ற ஒரு பணியாளாகத்தான் நான் சென்றிருக்கின்றேன். எப்பொழுது வர வேண்டும் என்று அண்ணா அவர்களைக் கேட்டபொழுது, எங்களுக்கு ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொடுத்தார்.
அவர் ஒதுக்கிக்கொடுத்த நேரத்தைக் கேட்டால் ரொம்ப வியப்பாக இருக்கும். நள்ளிரவு 1 மணி ரொம்ப வசதியாக இருக்கும் என்று சொல்லி வரச்சொன்னார்கள்.
அண்ணா அவர்கள் இரவெல்லாம் பகலாக்கிக் கொண்டு உழைக்கக்கூடியவர். அண்ணா அவர்கள் அப்பொழுதுதான் கோப்புகளை எல்லாம் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
அண்ணா மகிழ்ச்சியாகக் கேட்டார்
நாங்கள் வந்திருப்பதை அண்ணா அவர்களின் உதவியாளராக இருக்கின்ற திரு.சொக்கலிங்கம் அவர்கள் நேரே போய் சொல்லுவார்கள். அவர்களுக்குத் தெரியும் அய்யா அவர்களிட மிருந்து வந்திருக்கிறார்கள் என்று.
அண்ணா அவர்களிடம் சொல்லிவிட்டோம். அவர் தயாராக இருக்கிறார் போய் பாருங்கள் என்று சொன்னார்.
அண்ணா அவர்களிடம் சொல்லிவிட்டோம். அவர் தயாராக இருக்கிறார் போய் பாருங்கள் என்று சொன்னார்.
உடனே அண்ணா அவர்கள் என்னிடத்திலே மகிழ்ச்சியாகக் கேட்டார், என்னப்பா அய்யா அவர்களுடைய உடம்பு எப்படியிருக்கிறது? என்ன நிறைய சுற்றுபயணம் சென்று கொண்டி ருக்கிறாரே என்று கேட்டுவிட்டு, முன்னாலே அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி சங்கடம் இருக்குமே இப்பொழுது வருவதில்லைதானே? என்று கேட்டார்.
அன்னை மணியம்மையார்
நான் சொன்னேன், அய்யா அவர்கள் இப்பொழுது கூட இறைச்சி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார். நன்றாக இருக்கிறார் என்று சொன்னேன். 30 ஆண்டுகளுக்கு முன்னாலே அய்யா அவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலிப் பிரச்சினை இருக்கும். டாக்டர் சுந்தரவதனம், டாக்டர் சடகோபன், டாக்டர் கிருஷ்ணசாமி முதலியார் இவர்களிடம் செல்வார்.
இன்றைக்கு அய்யா அவர்களுக்கு அந்த அளவுக்கு உடல் உபாதை இல்லாமல் மாற்றி விட்டார்கள் என்றால் அது அன்னை மணியம்மையார் அவர்களையே சாரும் (கைதட்டல்). மணியம் மையார் அவர்கள் இல்லை என்றால் அய்யா அவர்கள் இவ்வளவு காலம் நல்ல உடல் நலத்துடன் இருந்திருக்க முடியாது என்று ரொம்ப மகிழ்ச்சியாக அண்ணா சொன்னார்.
எவ்வளவு மாற்றம்?
எவ்வளவு மாற்றம் பாருங்கள். அண்ணா அவர்களுடைய அறிவு நாணயத்தைப் பாருங்கள். கால ஓட்டத்தில் நம்முடைய சிந்தனை நம்முடைய அனுமானம், தவறு என்று நினைத்தால் நம்முடைய தீர்ப்பு தவறான தீர்ப்பு என்று நினைத்தால் அதை மாற்றிக்கொள்வதிலே, அதை உறுதிப்படுத்திக் கொள்வதிலே தெளிவாக இருப்பார்.
அம்மா அவர்களை வைத்துதான்...
அம்மா அவர்களை வைத்துதான் இயக்கமே பிரிந்தது. அப்பேர்ப்பட்ட அண்ணா அவர்கள் தன் எண்ணக் கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னார்.
அதே போல பேராசிரியர் அவர்களும் நாங்கள் அரசியலுக்காகத்தான் சென்றோம். வேறொன்று மில்லையென்று வெளிப்படையாகச் சொன்னார். நம்முடைய கவிஞர்கள் எல்லாம் எப்படிப் பட்டவர்கள் என்று சொன்னால் பாராட்டி னாலும், உச்சியின் எல்லைக்கே சென்று பாராட்டு வார்கள்.
புரட்சிக் கவிஞருக்குக் கோபம்
தாக்கினாலும் எல்லையின் கடைசிக்கே சென்று தாக்குவார்கள். நான் சொல்லும்பொழுது யார் உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறார் என்பது உங்களுக்குத் தெளிவாகவே தெரியும்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் அன்றைக்கு அய்யா அவர்களை மட்டும் தாக்கிப் பேசவில்லை. அம்மா அவர்களையும் தாக்கிப் பேசினார்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் அன்றைக்கு அய்யா அவர்களை மட்டும் தாக்கிப் பேசவில்லை. அம்மா அவர்களையும் தாக்கிப் பேசினார்.
அப்பேர்ப்பட்ட புரட்சிக் கவிஞர் சொன்ன செய்தி என்ன? இன்றைக்கு அம்மா அவர்களுடைய நினைவுநாளில் சொல்லுவது பொருத்தமானமாக இருக்கும்.
இன்றைக்கு விடுதலையில்கூட எழுதியிருக் கின்றேன். குயில், பத்திரிகையில் எழுதியிருக் கின்றார். புரட்சிக் கவிஞர் பாண்டிச்சேரியில் குயில் என்ற பத்திரிகையை நடத்தினார்.
மண்ணச்சநல்லூர் தோழர்
பெரும்பாலும் கவிதைகளாக வரும். சிலது சிந்தனைகளாக- கட்டுரைகளாக வரும். திருச்சிக்குப் பக்கத்திலே மண்ணச்சநல்லூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. இயக்கத்தில் கொஞ்சம் கோளாறு இருந்தது அப்பொழுது-அய்யா அவர்கள் சிறைச்சாலைக்குப் போய்விட்டு வந்தபொழுது-1960இல் இது நடந்தது.
அன்னை மணியம்மையார் என்று எழுதலாமா?
திராவிடர் கழக தோழர் ஒருவர் அஞ்சலட்டை யில் புரட்சிக் கவிஞருக்கு ஒரு கடிதம் எழுதினார். நீங்கள் போய் குயில் ஏட்டில் அன்னை மணியம்மையார் என்று எழுதலாமா? என்று கேட்டார்.
உடனே புரட்சிக் கவிஞருக்கு ரொம்ப கோபம் வந்தது. குயில் ஏட்டில் அந்தக் கடிதத்தை அப்படியே போட்டார். அது பெயர் போடவில்லை. வெறும் மொட்டைக் கடுதாசிதான். இருந்தாலும் அப்படியே போட்டார். அந்த கடிதத்தில் இன்னும் சில பேரையும் அவர் தாக்கி எழுதியிருந்தார்.
1.5.1960-லே குயில் ஏட்டில் போட்டுவிட்டு அதே ஏட்டிலே புரட்சிக்கவிஞர் பதில் எழுதினார். அதை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லுகின்றேன்.
இல்லை என்பேன் நானடா!
கடவுள் கருத்திலேகூட புரட்சிக் கவிஞரின் சிந்தனையைப் பாருங்கள். முதலில் முருகனைப் பாடினார்-சுப்பிரமணிய துதி அமுது. இரண்டாவது உண்டென்பார் சிலர் இல்லை என்பார் பலர் எனக்கில்லை கடவுள் கவலை என்று சொன்னார். ஆனால் கடைசிக் கட்டத்தில் குயில் ஏட்டில் எழுதினார். புரட்சிக்கவிஞர் அடுத்த கட்டத்திற்குப் போனார். இல்லை என்பேன் நானடா! அத்தில்லைகண்டு தானடா! என்று சொன்னார்.
புரட்சிக் கவிஞருக்குக் கோபம் வந்தவுடனேதான் கவிதை வேகமாக வரும். இசை அரசு தண்டபாணி தேசிகரையே பாட வைத்துவிட்டார்கள். இல்லை என்பான் யாரடா? அத்திலை சென்று பாரடா! என்று நடராஜர் பெருமானின் பெருமையைப் பாடினார். இசை அரசையே இப்படிப் பாட வைத்து சூழ்ச்சி செய்துவிட்டார்கள். அதற்குத்தான் புரட்சிக் கவிஞர் பதில் சொன்னார். இல்லை என்பேன் நானடா-அத் தில்லை கண்டு தானடா!
என்று பாடினார். நான் போய் பார்த்த பிறகுதான் இப்படி எழுதுகிறேன் என்று புரட்சிக்கவிஞர் பதில் சொன்னார்.
-(தொடரும்)
No comments:
Post a Comment